-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #30

30. ஆதி வராகனின் அன்புக்குக் காரணம்
குட்டிப் பாப்பாவுக்கு மலையை ரொம்பவே பிடித்திருந்தது.
பச்சைப் பசுமை
பரந்து விரிந்த பள்ளத்தாக்குகள்.
வீட்டுக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடந்த குழந்தைக்கு
பறக்கக் கிடைத்த வானமாக
பரந்தாமனின் மலைக்கோயில்.
அதிலும்
உச்சிக்கு நடந்தே சென்று
உம்மாச்சியை தரிசிக்கப் போகிறோம் என்றதும்
ஒரே கொண்டாட்டம்… ஒரே கும்மாளம்.
அத்தனை படிகளையும் தொட்டுக் கும்பிட்டது…
ஆடிப் பாடித் திலகம் இட்டது..
இளைப்பாறல் மையங்களிலும்
இங்குமங்கும் ஓடியது.
படிகளிலேயே பாய்ந்து ஏறியது.
சமதளப் பாதைகளில் பறந்தது.
கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிச் சாப்பிட்டது.
காட்டு விலங்குகளுக்கு ஊட்டிவிட்டது.
குட்டிகள் சகிதம் வந்த அம்மா பன்றிக்கு
தன் இலையில் இருந்த உணவு முழுவதையும்
எடுத்து எடுத்துக் கொடுத்தது.
அருகில் சென்று அம்மாவை
ஆறுதலாகத் தடவிக் கொடுத்தது.
அந்த உயிர் அதன் வாழ்நாளில்
அத்தனை வாஞ்சையுடன் வருடப்பட்ட தருணம்.
அதுவாகவே இருக்கக் கூடும்.
குட்டிப் பாப்பா
நினைத்த இடங்களில் எல்லாம் வீடு கட்டியது.
முடிந்த இடங்களிலெல்லாம் கோபுரத்தை சேவித்தது.
பரிவார தேவதைகளையெல்லாம்
பக்தியுடன் வணங்கியது.
பறிக்க முடிந்த மலர்களையெல்லாம்
பவ்யமாக சமர்ப்பித்தது.
எப்போதுமே முன்னால் ஓடியது.
திருப்பங்களில் தூண் மறைவில்
பாதி உடல் வெளித்தெரிய
பதுங்கி பதுங்கி பயமுறுத்தியது.
ஒவ்வொரு முறையும்
அப்பாவும் அம்மாவும் அண்ணாவும்
அருகில் இருந்தாலும்,
குட்டிப் பாப்பாவைக் கண்டுபிடிக்கவே முடிந்ததில்லை.
சுருள் கேசம் மென் காற்றில் அலைபாய,
குட்டிக் கண்கள் பயமுறுத்த,
கை வளைகள் கால் கொலுசு அதிர,
பாப்பா சிம்மம்
பாறைத்தூண் பிளந்து வெளிப்படும்போதெல்லாம்
பிரகலாதனாக குதூகலித்தனர் சிலநேரம்…
இரண்யனாக அஞ்சி நடுங்கினர் சில நேரம்…
தானாக ஓடி
தனியாக ஓர் திருப்பத்தில்
இன்னொரு தூணுக்குப் பின் ஒளிந்துகொண்ட
குட்டிப் பாப்பா சிம்மம் போல் கர்ஜிக்க,
தொண்டையை சரிபார்த்தபோது
நிஜமாகவே கேட்டது நடுங்கவைக்கும் ஓர் உறுமல்.
அண்ணாவின் சேட்டை என
ஆரம்பத்தில் நினைத்த குழந்தை
அடுத்தமுறை அருகில் கேட்ட உறுமலில் அதிர்ந்தது.
மெள்ளத் திரும்பிப் பார்த்த புதர் மறைவில்
நெருப்புக் கங்காய் ஜொலித்தன இரு விழிகள்.
குட்டிப் பாப்பா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
சிம்ம கர்ஜனை செய்து விரட்டப் பார்த்தது.
கைவிரல்களை விரித்து,
கண்களை உருட்டி,
பாயப் போவதுபோல பாவ்லா காட்டியது.
புதர் மறைவில் இருந்த புலியோ பாய்ந்தேவிட்டது.
துணிப் பொம்மையைத் தூக்கிச் செல்வதுபோல
துவண்ட குட்டிப் பாப்பாவைக் கவ்விக்கொண்டு
அடுத்த பாய்ச்சலில் அடர்ந்த வனத்துக்குள் மறைந்தது.
குட்டிப் பாப்பாவின் கதறல்
தூணைப் பிளக்கும் கர்ஜனையாக இல்லாதது கண்டு
அதிர்ந்த பெற்றோருக்கு அடுத்த நொடியே
நடந்த விபரீதம் நாடி நரம்பெங்கும் ஊடுருவியது.
பாய்ந்து பதறியபடி ஓடினர்
உதிரத் துளிகளைப் பின்தொடர்ந்தபடி…
சம தளம் முடிந்து காடு ஆரம்பித்தது.
கூக்குரல் கேட்கும் திசையில்
ஏழுமலையானைக் கும்பிட்டபடியே ஓடினர்.
உன்னைப் பார்க்க
ஒவ்வொரு படியாக ஏறி வந்ததற்கு இதுவா பரிசு?
உன்னைத் தேடி ஓடிய குழந்தைக்கு
இதுவா நீ காட்டும் கருணை ?
அழுதபடியே அங்குமிங்கும் அலை பாய்ந்தார் அப்பா.
வன் புலியே என் உயிரை எடுத்துக்கொள்
என் குழந்தையை விட்டுவிடு என்று
கண்ணீர் மல்கக் கதறியபடியே
அசையும் புதர் முன்னாலெல்லாம் அரற்றினாள் அம்மா.
மலை உச்சியில்
இனிய ஒலிபெருக்கிக் குரல்
முடிவற்ற சுழலில் மெள்ள
மந்திர உச்சாடனம் செய்துகொண்டிருந்தது.
அஸ்தமன சூரியன் அஞ்சி நடுங்கியோ என்னவோ
கரு மேகக் கூட்டங்களுக்குள் ஒளிந்து கொண்டான்.
மெள்ள மெள்ள கூக்குரல் வலுத்த இடம் நோக்கி
முழு வலுவையும் கூட்டியபடி ஓடினர் பெற்றோர்.
அந்தி படர்ந்த அடர் புதருக்குப் பின்னால்
ஆவேசமான அசைவுகள்.
பிஞ்சுக் குழந்தையின் கைகளைக் கடித்து எறிகிறதா?
முயல் குட்டி என நினைத்து மென் வயிறு கிழிக்கிறதா?
குழந்தையின் கதறல் கார்மேக வண்ணனை எட்டுகிறது.
கருமேகக் கூட்டத்தைக் கிழித்தபடி
கதிரொளி பாய்கிறது புதர் மீது.
புதர் அசைவு உச்சத்தை எட்டுகிறது.
புள்ளினங்கள் கதறி அலைகின்றன.
மெள்ள மெள்ளப் புதர்
மோன நிலைக்குத் திரும்புகிறது.
கால் துவண்டு
கண் மயங்கி
கதறியபடி விழுகிறார்கள் பெற்றோர்.
அப்போது-
அந்தகார இருள் விலக்கி
அந்திப் பொன் அங்கி சாத்திய வராகம்
மெள்ள முன்னால்
மென் நடைபோட்டு வருகிறது.
அதன் மீது பாதி மயங்கிய நிலையில் குட்டிப் பாப்பா.
‘ஓம் நமோ நாராயணாய… ஓம் நமோ நாராயணாய’ என
உள்ளம் கசிந்து உருகிக் கொண்டிருக்கிறது.
திருமண் தீற்றலாக ரத்தக் கீறல்கள் மின்ன
குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைக்கிறது ஆதி வராகம்.
கையெடுத்துக் கும்பிட்டு
காலி விழுந்து வணங்குகின்றனர் பெற்றோர்.
குழந்தையின் பிஞ்சுக் கரம்
இன்னொரு முறை வருட என்று
தலையைக் காட்டியபடி நிற்கிறது ஆதி வராகம்.
ஓங்கி உலகம் அளந்த உத்தமனைத் துதித்தபடியே
குழந்தை மெள்ள வருடிக் கொடுக்கிறாள்.
உடல் சிலிர்க்க உள்ளம் நிறைய
மலைக்கோவில் திசையில் ஓடி மறைகிறார் ஆதி வராகர்.
பிரகலாத பக்திக்கான ஏக்கம்
பெருமாளுக்கும் இருக்கும்தானே ?
$$$