-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது அறுபத்தைந்தாம் திருப்பதி...

65. பித்ரு தர்ப்பணத் தலம் திருநாவாய்
நவயோகி கைகளால் உருவானாய்… நடுத்தேகம் மட்டும் புலனானாய்… தடுமாறும் மனதுக்கு மருந்தானாய்… திடமாக வருவோர்க்குத் துணையானாய்… திருநாவாய்ப் பெருமானே திருஅருள் புரிவாயே!
ஒன்பது யோகிகள் பெருமாளை சேவிக்க விரும்பி பாரதப்புழா நதிக்கரையில் அவரை பிரதிஷ்டை செய்தபோது, தொடர்ந்து எட்டு நாட்கள் விக்கிரஹம் மாயமானது. ஒன்பதாம் நாள் கடைசி யோகி பூமிக்குள் புதைந்த பெருமாளை அப்படியே நிறுத்தினார். அதன்படியே முழங்கால் அளவிற்கு மேலேயே பெருமாள் இங்கு சேவை சாதிக்கிறார். நவயோகிகள் என்பதே நாவாய் என்று திரிந்து திருநாவாய் ஆனது என்கிறது தல புராணம்.
கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் அளிக்கும் பிரதானமான தலமாக இது உள்ளது. இக்கோயிலில் பழமையான சுவர் ஓவியங்கள் உள்ளன.
மூலவர்: நாவாய் முகுந்தன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: மலர்மங்கை நாச்சியார்.
விமானம்: வேத விமானம்
தீர்த்தம்: கமல தடாகம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 6.00 மணி முதல் 08.00 மணி வரை
எப்படிச் செல்வது?
இத்திருத்தலம் கேரள மாநிலத்தில், மலப்பிரம் மாவட்டத்தில், ஷோரனூர் – கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் இருக்கும் குட்டிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. ஷோரனூரில் இருந்து பேருந்து மூலம் குட்டிபுரம் வந்து அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் திருநாவாய் கோயிலை வந்தடையலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
ஆன்மிக வழியில் முன்னேற்றம் அடைய விரும்புவோர், ஹோமங்கள் செய்ய விரும்புபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து ஹோமம் செய்து, பெருமாளை தரிசித்து பயன் அடையலாம்; திருமணத் தடை நீங்கப் பெறலாம். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களும், 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்களும் தரிசிக்க வேண்டிய தலம் இது. பக்தர்களுக்கு எளிதில் பெருமாள் தரிசனம் கிடைக்கக் கூடிய தலம் ஆகும்.
$$$