திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -58

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பத்தெட்டாம் திருப்பதி...

58.  குபேரனுக்கு மீண்டும் நவநிதி அளித்த திருக்கோளுர்  

குழந்தைக்கு நல் குழந்தை ஆகி,
யசோதா தாயிடம் பாலுண்டு,
கோகுலத்து தெருக்களிலே மண்தின்று,
யாதவ வீட்டில் எல்லாம் வெண்ணெய் திருடி,
மாதவப் பெருமானே நீ செய்த மாயங்கள்-
யார் அறிவார், யார் சொல்வார்?
ஏழுமலை மீது நீ ஏறி
வாழும் மனிதர்களுக்கு வழிகாட்டி,
நாமகிரியாளோடு நரசிங்கமாய் அமர்ந்து,
நாடும் பக்தர்களுக்கு நலமது புரிந்து,
நெடிய உருவாகி வானளந்து,
கொடிய அரக்கர்களை எல்லாம் மல்லாண்டு
பல்லாண்டாய்க் காக்கின்ற திருக்கோளுர் பெருமாளே!
பணிகின்றேன் குபேரனைக் காத்ததுபோலக் காத்தருள்வாயே!

பார்வதியின் சாபத்தால் இழந்த நவநிதி அனைத்தையும், இங்குள்ள பெருமாளை தவம் செய்து மீளப் பெற்றான் குபேரன் என்பது தலபுராணம். எனவே வைத்தமாநிதி பெருமாள் என்று பெயர் பெற்றார். நவ திருப்பதிகளில் செவ்வாய்த் தலம் இது. மதுரகவியாழ்வார் அவதாரத் தலம். ஆச்சாரியர் ராமானுஜருடன் வாதம் புரிந்த தயிர் விற்கும் பெண்மணி கூறிய பெருமாள் அடியவர்களின் 81 அருளிச் செயல்களை ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று வழங்குவது வைணவத்தில் மரபு.

மூலவர்: வைத்த மாநிதி பெருமாள் (புஜங்கசயனம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: குமுதவல்லி, கோளூர்வல்லி
விமானம்: ஸ்ரீகர விமானம்
தீர்த்தம்: குபேர தீர்த்தம், தாமிரபரணி ஆறு
மங்களா சாசனம்: நம்மாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 8.00 மணி முதல் 12.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

இத்தலம் தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார் திருநகரி வரும் வழியில் சுமார் 3  கி.மீ. தொலைவில் தெற்கே ஒரு கிளைப் பாதையில் திரும்பினால் ஒரு கி.மீ. தொலைவில் இக்கோயிலை அடையலாம்.

சேவிப்பதன் பலன்கள்:

குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணத்தடைவிலக, வீடு மனை வாங்க, வணங்க வேண்டிய தலம் இது.  8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இதுவாகும்.

$$$

Leave a comment