-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... படித்து முடித்தவுடன் வேதனைப் பெருமூச்சு விடச் செய்யும் இக்கவிதை: #26

26. கண்களைக் கொடுத்த காருண்யமூர்த்தி
பல வர்ணப் பறவைக்கூட்டம்
மிகுந்த நம்பிக்கையுடன்தான்
அந்த அரண்மனை நந்தவனத்தில்
கூடுகட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தது.
ஏராளமான தானியங்கள்,
ஏராளமான மரங்கள்,
ஏராளமான கனிவகைகள்,
ஏராளமான கல் தொட்டிகள்,
எல்லாவற்றுக்கும் மேலாக
அங்கு வேட்டைக்காரன் யாரும் நுழைய
அவர் அனுமதிக்கவே மாட்டார்.
பறவைகள் அங்கு மிகுந்த நிம்மதியுடன் வாழ்ந்து வந்தன.
மூக்கு வேர்த்த கழுகு ஒன்று
நந்தவனத்தை நடுவானில் இருந்து வட்டமிட்டபடியே
கூர் அம்புபோல் பாய்ந்தது ஒருநாள்.
முடிந்த வரை எதிர்த்த புறாக்களில் ஒன்று
இறுதியில் மன்னரிடம் சென்று முறையிட்டது.
துரத்தி வந்த கழுகும் பின்னாலேயே பறந்து வந்தது.
உன் ஒரு நேரப் பசிக்காக
இன்னொரு உயிரைக் கொல்லுதல் பாவம் என்றார் மன்னர்.
மென் பறவைக்கூட்டம் மட்டும் யோக்கியமா,
புழுவையும் பூச்சியையும் தின்பதில்லையா என்ன?
என்றது கழுகு.
நாங்கள் பெரிதும் தாவர உண்ணிகளே.
புரதச் சத்து அதிகம் தேவைப்படும்.
பிரசவக் காலத்தில் மட்டுமே
புழுக்களையும் பூச்சிகளையும் தின்பதுண்டு-
என்று காரணம் சொல்லியது புறா.
நோக்கம் ஏற்கும்படி இருந்தால் போதாது.
செயலும் விளையும் ஏற்கும்படி இருக்க வேண்டும்.
தாயாகும் தருணத்தின் மனதில்
தயைதான் பெருக வேண்டும்.
தன் குலம் பெருக்க
பிறர் குலம் அழிப்பது சரியா என்ன?
நாங்களும் பசியினால்தான் கொல்கிறோம்.
நாங்கள் கொல்லாவிட்டால் செத்து விடுவோம்.
தம் தரப்பு நியாயத்தை அடுக்கியது கழுகு.
இல்லை மன்னவா…
மாமிசம் தின்று பழகிவிட்டு
மாமிசத்தில்தான் எம் உயிர் இருக்கின்றன என்று சொல்கின்றன.
ரத்தம் குடித்துப் பழகிவிட்டு
தாகம் தணிக்க அதுவே ஒரே வழி என்கின்றன.
தானியம் செரிக்கும் வயிறினால்
மாமிசம் செரிக்க முடியாது.
ஆனால், மாமிசம் செரிக்கும் வயிறினால்
தானியம் செரிக்க முடியும்.
நீரைப் பருகினாலும் தாகம் அடங்கும்.
ஒரு தவறை பல தலைமுறையாக
செய்துவருவதால் சரியாகிவிடாது…
தானியம் தின்றும்
கனிகள் புசித்தும்
கருணைகொண்டு வாழச் சொல்லுங்கள் மன்னா.
என்னிடம் அடைக்கலம் நாடியவருக்கு
என்னால் இயன்ற உதவியைச் செய்வது என் தர்மம்.
நீ இந்தப் புறாவை விட்டு விடு கழுகே…
மன்னவா… நானும் உங்களிடம் உதவி கேட்டு வந்திருக்கிறேன்.
என் குறை தீர்ப்பதும் உங்கள் தர்மம் தானே?
கழுகும் தர்மம் பேசியது.
மன்னர் யோசித்தார்-
உனக்கான மாமிசம் கிடைத்தாக வேண்டும்;
உயிர்க்கான பாதுகாப்பும் தந்தாக வேண்டும்.
நல்லது-
என் தொடையில்
புறாவின் எடைக்கு சமமாக வெட்டித் தருகிறேன்.
உன் பசியும் ஆறட்டும்.
புறாவின் உயிரும் பிழைக்கட்டும்.
கொஞ்சம் வெட்டிக் கொடுப்பதால்
என் உயிர் போய்விடவா போகிறது?
சொல்லியபடியே
வாளில் கை வைத்தார் தொடை வள்ளல்.
கழுகு சிறிது யோசித்தது…
மன்னா… உங்கள் கருணையே கருணை
உங்கள் தர்மமே தர்மம்.
உங்கள் தொடை எனக்கு வேண்டாம்.
எனக்கு இன்று பட்டினிதான் விதித்திருக்கிறது.
இந்தப் புறாவுக்கு இன்று தப்பித்தல் விதித்திருக்கிறது.
சென்று வருகிறேன் மன்னா…
உதவி கேட்டு வந்தவரை
வெறும் கையுடன்
வெறும் வயிறுடன் அனுப்பும் மன்னவரும்
இந்த வையகத்தில் உண்டென்பதை உணர வைத்ததற்கு நன்றி.
இளகிய மனம் கொண்ட மன்னர்
என்ன செய்வதென்று யோசித்தார்.
கழுகின் பசியும்
அதன் குழந்தைகளின் பசியும் அவரை வாட்டியது.
அதைவிட
எல்லாப் பறவையும் ஒன்றுதானே என்ற கழுகின் வாதம்
மன்னரை மயக்கியது…
நில் கழுகே…. என்று
ஆபரணங்கள் குலுங்க எழுந்து நின்றார்…
நான் தான் உன் பசியைப் போக்க சம்மதித்து விட்டேனே…
இல்லை மன்னா…
உங்கள் தொடையை அறுத்து
எங்கள் பசி போக்க வேண்டாம்…
வேறு என்னதான் வேண்டும்?
கழுகு தயங்கியபடியே
சிறகுகளைச் சுருக்கிக் கொண்டது.
மென்னடை நடந்து மன்னரை நெருங்கியது.
‘நீ எது கேட்டாலும் தருகிறேன்’ என்றபடியே
சிம்மாசனப் படிகளில் இறங்கிவந்தார் மன்னர்.
எது கேட்டாலுமா…
என்றபடியே சிம்மாசனப் படிகளில் ஏறியது கழுகு.
பிற உயிரை வருத்தாத வகையில்
எது கேட்டாலும் தருகிறேன்…
உங்களுடையதுதான்
உங்கள் சம்பந்தப்பட்டதுதான் –
மன்னர் நிற்கும் படியை எட்டியபடிச் சொன்னது கழுகு.
என் சம்பந்தப்பட்டதென்றால்
எதுவானாலும் செய்யத் தயார்…
நிச்சயமாகவா?
மன்னரைத் தாண்டி ஏறிச் சென்றது.
ஆமாம்… நிச்சயமாக…
கீழிருந்தபடிச் சொன்னார் மன்னர்.
கழுகு அரியணையை எட்டியது
வாக்கு மீற மாட்டீர்களே?
சத்தியம் செய்து தருகிறேன்-
ஒரு சொல்… ஒரு வில்…
எம் முன்னோன் எமக்கு வாழ்ந்து காட்டிய வழி…
கழுகு அரியணையைத் தன் சிறகுகளால்
மென்மையாக வருடியபடியே சொன்னது-
நல்லது…
புறாவின் எடைக்கு எடை மாமிசம் தேவையில்லை.
மிக மிகச் சிறியதான ஒன்றை…
அதாவது இரண்டைத் தந்தால் போதும்…
மன்னர் உற்சாகப் பதற்றத்துடன்
என்னது… என்னது… என்றார்.
கழுகு சிம்மாசனத்தைச் சுற்றி வந்தது.
சிம்மாசனத்தின் மறுபக்கம் இருந்தபடி
அசரீரியாக அதன் குரல் மட்டும் கேட்டது.
மிக மிகச் சிறியது போதும்
மிகச் சிறிய
உங்களுடைய இரண்டு கண்கள் மட்டும் போதும்.
சிறிதும் யோசிக்காமல்
சிறிதும் தயங்காமல்
தந்தேன் என்றார் மன்னர்.
சட்டென்று கழுகு பறந்து
சிம்மாசனத்தின் உச்சிக் குமிழில் வந்தமர்ந்தது.
அதன் கூர் நகங்கள்
சிம்மாசனக் குமிழில்
மெள்ளத் தாளம் இட்டன.
தர்ம ஆவேசத்தில் இருந்த மன்னருக்கு
தான் கொடுத்த வாக்கு மட்டுமே நினைவில் இருந்தது.
ஒரு சொல்… ஒரு வில் பரம்பரை அல்லவா?
இன்றும் அந்த மாமன்னரின் கைதான் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது.
மாமன்னரின் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது.
ஆனால் கண்கள் மட்டும் கழுகின் கண்கள்.
கழுகு பார்த்துச் சொல்பவையே அவரின் காட்சிகள்.
கழுகின் பார்வைக்கு குறையே சொல்ல முடியாது
மன்னரின் கண்களைவிட அதி கூர்மையானவை.
ஆனால்
அவை கழுகின் கண்கள்…
அதற்கு கழுகின் நியாயம் மட்டுமே
கண்ணில் தென்படும்.
கழுகு முதல் வேலையாக
ராஜ குருவைச் சிறையில் அடைத்தது.
அடுத்ததாக,
தளபதியை நாடுகடத்தியது.
எல்லாம் மன்னரின் உத்தரவின் மூலம்தான்.
நந்தவனத்தில் கழுகின் கூட்டமே பல்கிப் பெருகிவருவதை
மன்னரின் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும்
காதால் கேட்க முடியும் தான்…
ஆனால்
கழுகு – புறா சம்பவத்துக்குப் பின்னர்
கருநாகம் – தவளை சம்பவம் ஒன்று நடந்தது.
காருண்ய மூர்த்தி
தவளையின் உயிரைக் காக்கத் தன்
காதுகளை கருநாகத்திடம் கொடுத்துவிட்டார்.
செவ்வரியோடிய கழுகுக் கண்களும்
கறுத்த உடல் கொண்ட கருநாகமும்
அரண்மனையைக் கைப்பற்றின.
மன்னரில் காலில் மிதிபடாமல்,
மன்னரின் கைகளில் சிக்காமல்,
அரண்மனை நந்தவனம் முழுவதும் மட்டுமல்ல,
அத்தனை இடங்களிலும் பெருகிவிட்டன.
கருநாகக் குட்டிகளைக் கழுகு கொத்தும் நாளில்…
கழுகுக் குஞ்சுகளை கருநாகம் விழுங்கும் நாளில்…
இந்த ராஜ்ஜியத்துக்கு விடுதலை கிடைக்குமாம்!
அதற்குள் கழுகையும் கருநாகத்தையும் தவிர
அத்தனையும் அழிந்துவிட்டிருக்கும்.
அதன்பின் உருவாவதும்
கழுகின் மலையாகவோ
கருநாகத்தின் காடாகவோதான் இருக்கும்.
உடல் நகைகள் குலுங்க
பட்டாடைகள் காற்றில் அலைபாய
உப்பரிகையில் மன்னர் நின்று ஆழ முகர்கிறார்
நந்தவனக் காற்றை.
ஏதோ ஒரு வித்தியாசம்
ஏதோவொரு மாற்றம்…
ஏதோவொரு மாமிச நாற்றம்.
அவருடைய நெற்றி மெள்ளச் சுருங்குகிறது.
கழுகும் கருநாகமும் பார்ப்பதற்குள்
சுதாரித்துக் கொள்கிறார்.
அவருடைய கை மெள்ள வாளை உருவுகிறது…
பாவம் அவருக்குத் தெரியவில்லை-
கைப்பிடி மட்டுமே அந்த உறைமேல் அலங்காரமாக
அதுவரை இருந்தது என்பது.
ராஜ குருவைச் சிறையில் அடைக்கும் முன்பே
கழுகு செய்த முதல் காரியம் அது.
கழுகின் கண்கள்
அந்த நேரம் முன்னால் இருப்பவற்றை மட்டுமல்ல,
ஐம்பது ஆண்டுகள் அப்பால் இருப்பவற்றையும்
பார்க்கும் சக்தி படைத்தவை.
எல்லா பறவையும் ஒன்றல்ல என்பது
எல்லாப் பறவைகளுக்கும் புரிந்த பின்னரே
மன்னருக்குப் புரிந்தது.
தர்மம் இரண்டு வாக்கியங்கள் கொண்டது.
அவர் ஒன்றை மட்டுமே புரிந்துகொண்டிருந்தார்.
உடைவாள் என்பது
உறையும் வாளும் கொண்டது.
ஒன்றுமட்டுமே இருந்தால்..?
ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு
இன்னொரு கன்னத்தை காட்டினால்
அதிலும் அறையத்தானே செய்வான்?
கதையின் நீதி:
கழுகுக்குத் தொடைச் சதையைக் கொடுக்கத் தயாராக இருந்தால்
அது கண்களையும் கேட்கத்தான் செய்யும்.
$$$