உருவகங்களின் ஊர்வலம் -24

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #23

24. அதீத அவநம்பிக்கை தானே வாழ்க்கை?

நீரின் மேல் நடந்து சாதனை செய்யத்தான் விரும்புகிறோம்
கழுத்தைப் பிடித்து அழுத்தி
முக்கி முக்கி மூச்சு முட்ட வைக்கிறது வாழ்க்கை.
(நம் காலடி பதியும் நீர்நிலைகளில் எல்லாம்
தாமரை மலர்ந்து தாங்குவதான கனவுகள் மட்டும் நிற்பதே இல்லை).

காற்றில் மேகம் போல் மிதக்கத் தான் ஆசைப்படுகிறோம்.
உலர்ந்த சருகாக்கி உலகமெல்லாம் துரத்துகிறது இயற்கை.
(தேவதைகளின் சிறகுகளில் அமர்ந்து நாம்
தேவலோகத்தில் பறப்பதான கற்பனைகளுக்கு மட்டும் குறைவே இல்லை).

மண்ணில் வேரூன்றி, விண்ணில் கிளை விரித்து
பச்சைப் பசேலென்று பரவத்தான்
அரும்பாடு படுகிறோம்.
ஆழக் குழி தோண்டிப் புதைத்து
அதிலே நம் வாழ்க்கையையிட்டு
ஆயிரமாயிரம் கல்லைப் போட்டு மூடுகிறார் கடவுள் எனப்படுபவர்.
(நம் பிரார்த்தனைகளுக்கும்
ஆனந்தப் பெரு நடனங்களுக்கும் அழிவே இல்லை).

அனுதினமும் நாட்காட்டியின் தாள்களைக் கிழிப்பது நாம்தான்.
ஆனால், கசங்கிய காகிதமாக வீசப்படுவது
நம் வாழ்க்கையாகவே இருக்கிறது.

ஆசை ஆசையாக கால்பந்தாட்டக் களத்தை நாம் தேர்ந்தெடுத்தால்,
மிகுந்த ஆர்வத்துடன் நமக்குத் தரப்படத்தான் செய்கிறது
என்ன…
உதைக்கும் கால்கள் வேறெவையோ உயரத்தில் இருக்க,
ஆட்ட நேரம் முழுவதும் உதைத்து விரட்டப்படுகிறோம்.
(அதி வேகமாக உதைக்கப்பட்டாலே
வெற்றி வலைக்குள் சென்று விழுவோம்.
அதுவும் ஒரு வலைதான்.
எவ்வளவு அருமையான பிறவி பாருங்கள்).

சரி…
மகாத்மாக்களும் மகத்தான சாதனை செய்தவர்களும்
உண்டுதானே என்கிறீர்களா..?
ஜாலியன்வாலாபாக் மைதானத்தில் கோல் ஊன்றி நடக்கத் தொடங்கி,
மாப்ளா படுகொலை, நவகாளி படுகொலை வீதிகளினூடாகச் சென்று,
தேசல் பிளவுக் கொடூரத்தில் முடிந்த மாபெரும் பாத யாத்திரையை
மகத்தான சாதனையாகச் சொல்லிக்கொள்ள முடிந்தால்,
ஆம்.. அந்தக் காலத்தில் வாழ்ந்த
அத்தனை பேருமே மகா ஆத்மாக்கள் தான்.
உலகம் முழுவதும் ரத்த ஆதறைப் பெருக்கெடுக்கச் செய்யும் மதமே
நமக்கு சாந்தியும் சமாதானமும் தரும் அமைதி மார்க்கம்.

பூர்வகுடிகளை மட்டுமல்ல; சக ஜீவன்களைக் கூட அடிமைப்படுத்தும் மதமே
நமக்கு சகோதரத்துவம் போதிக்கும் அன்பு மார்க்கம்.

உயிர் காக்கும் மருந்துகளை தன் உயிரைக் கொடுத்து கண்டுபிடித்த
உன்னத மருத்துவ மேதைகள் அதிர்ஷ்டசாலிகள்தான்.
மருத்துவ மாஃபியாவின் கோட்டைகளுக்கு
மண் சுமந்த கூலிகள் அவர்கள் என்பது தெரியும் முன்பே
மறைந்துவிட்டார்கள்.

மரண ஓலங்களுக்கும் மயான அமைதிக்கும் இடையில்தான்
உலக அமைதிக்கான உன்னதப் பதக்கங்கள்
நம் கழுத்தில் நம்மாலேயே அணிவிக்கப்படுகின்றன.

ஒரு எரிமலை வெடித்து
தாழ்வாரக் கிராமம் முழுவதும்
தணல் குழம்பில் உருகி அழிந்த காலங்களில்,
சற்று தள்ளி நாற்காலியில் அமர்ந்துகொண்டு
எரிமலைக் காட்சியை கேன்வாஸ் மறைக்க
அத்தனை வண்ணங்கள் கொண்டு
அநாயாசமான தூரிகைத் தீற்றல்களால் தீட்டப்பட்டதுதானே,
நம் கலை நந்தவனக் காட்சிகள் எல்லாம்?
(ஒற்றை ஓலம் கூடக் காதில் விழாமல் வரைபவரே
நமக்கு உன்னதக் கலைஞர்கள்).

அத்தனை தேவர்களும்
அரும்பாடுபட்டுக் கடைந்து கொடுக்கும் அமுதத் துளிகள் எல்லாம்
அரக்கர்கள் கைக்குப் போவது தெரியாமல்தான்
மந்தார மலைகள் கடையப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

மறுபக்கம் அமர்ந்து கடைவது அரக்கர்கள் என்றானபின்
கிடைப்பது அமுதமாக இருந்தாலும் அழிவுதானே சாத்தியம்?
தேவர்கள் கைகளுக்குக் கிடைப்பதாக எழுதிவைத்த புராணத்திலேயே
இரண்டு அரக்ககளுக்கு அது கிடைத்துவிட்டது.
அந்த இரண்டு ஆப்ரஹாமிய அரக்கர்கள் ஆளும் நிஜ உலகில்
ஒற்றை தேவருக்கு ஒரு துளிகூடக் கிடைக்காது.

ஆனால்-
நமக்கு நல்லதை போதிக்கும் புராணங்கள் போதும்.
தன்னம்பிக்கையை ஊட்டும் சாதனை வரலாறுகள் போதும்.
உற்சாகமூட்டும் மேற்கோள்கள் போதும்.
பொய்யையே போதிக்கும் புனித வசனங்கள் போதும்.
வேறென்ன?
கடவுள் இல்லாத உலகில் பக்தர்கள்
இப்படித் தானே வாழ்ந்தாக முடியும்?

அத்தனை பகல்களின் நுனியிலும் மலர்வது
அடர்ந்ததோர் இரவுவாகும் காலவெளியில்
அத்தனை முட் செடிகளிலும்
ஒரு மலரைக் கற்பிதம் செய்துகொண்டுதானே வாழ முடியும்?

அதீத அவநம்பிக்கை என்கிறீர்களா?
அவசியமற்ற பயம் என்கிறீர்களா?

மானாக ஒரு நொடி வாழ்ந்து பாருங்கள்…
புதர் மறைவுகள் சூழ்ந்த,
பச்சைப் புல்வெளியும் நீர் நிலைகளும் நிறைந்த
கானகம் எதுவென்று புரியும்.

மீனாக ஒரு நொடி நீந்திப் பாருங்கள்…
வலை கவிழும் கடல் எத்தனை குறுகியதென்பது புரியும்.

ஆடாக அரை நொடி வாழ்ந்து பாருங்கள்…
கொழைகள் நீட்டப்படும் கருணையின்
அடுத்த நொடி என்னதென்பது புரியும்.

பரண் மேல் அமர்ந்திருக்கும் காவலனாக இருந்து பாருங்கள்..
சுற்றி வளைத்திருக்கும் பகைமைகள் புரியும்.

வான் பார்த்து கைவிரித்துப் பிரார்த்தியுங்கள்
எவ்வளவு கைவிடப்பட்டிருக்கிறோம் என்பது புரியும்.

$$$

Leave a comment