-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஐம்பதாம் திருப்பதி...

50. ராகு – கேது தலமான திருத்தொலைவில்லி மங்கலம்
தாமரையை ஒத்த விழிகள், தரணிகாத்த கைகள், நாமகிரியாளைக் கொண்ட நல்மார்பு, நல்கீதை சொன்ன செவ்விதழ்கள், யுகங்கள் தோறும் கொண்ட நாலுவர்ணம், வேதங்களைப் போன்று ஆயிரம் நாமம், யோகங்களைச் சொல்லும் நவசயனம், பாவங்களைப் போக்கும் மலர்ப் பாதம், கோலங்கள் பல கொண்ட உன்னைக் கொள்வது அறியேன் தமிழில் கள்வனைப்போல் மனம் கவரும் திருத்தொலைவில்லி மங்கல தேவபிரானே, எல்லையில்லா அருளை என்மீது பொழிவாயே!

சோழநாட்டில் சிவன் கோயில்களில் அமைந்துள்ள நவகிரஹத் தலங்கள் போல, பாண்டிய நாட்டிலுள்ள நவ திருப்பதிகள் நவகிரஹத் தலங்களாகப் போற்றப்படுகின்றன. இத்தலத்தில் பெருமாளே நவகிரஹமாகச் செயல்படுவதால் நவகிரஹங்களுக்கு தனி சன்னிதி இல்லை. அவை:
- சூரியன்: ஸ்ரீவைகுண்டம்
- சந்திரன்: வரகுணமங்கை (நத்தம்)
- செவ்வாய்:திருகோளூர்
- புதன்: திருப்புளியங்குடி
- வியாழன்: ஆழ்வார் திருநகரி (திருக்குருகூர்)
- வெள்ளி: தெந்திருப்பேரை
- சனி: பெருங்குளம்
- ராகு: இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்)
- கேது: இரட்டைத் திருப்பதி (திருத்தொலைவில்லி மங்கலம்)
இவற்றில் ராகு, கேது தலமாக திருத்தொலைவில்லி மங்கலம் விளங்குகிறது. இரட்டைக் கோயில்கள் என்பதால் இது இரட்டைத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. தென் தென்திருப்பேரை என்ற திவ்யதேசத்தின் அருகில் இத்தலம் உள்ளது.
முதல் கோயில்:
மூலவர்: அரவிந்தலோசனன், செந்தாமரைக்கண்ணன் ( அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: கருந்தடங்கண்ணி நாச்சியார்
விமானம்: குமுத விமானம்
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி ஆறு
மங்களா சாசனம்: நம்மாழ்வார்
இரண்டாம் கோயில்:
மூலவர்: தேவபிரான், ஸ்ரீநிவாசன் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: உபய நாச்சிமார்கள்
விமானம்: குமுத விமானம்
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி ஆறு
தல விருட்சம்: விளா மரம்
மங்களா சாசனம்: நம்மாழ்வார்


திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 1.00 மணி முதல் 05.00 மணி வரை
எப்படிச் செல்வது?
ஆழ்வார் திநகரியிலிருந்து திருச்செந்தூர் பாதையில் 3 கி.மீ. தொலைவில், தாமிரபரணி ஆற்றைக் கடந்நது இத்திருத்தலத்தை அடையலாம்.
சேவிப்பதன் பலன்கள்:
தடைபட்ட நீதி கிடைக்கவும், வர வேண்டிய சொத்துக்கள் கிடைக்கவும், நோயில் இருந்து விடுபடவும் வந்து வணங்க வேண்டிய தலம் ஆகும். 2, 11, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$