உருவகங்களின் ஊர்வலம் -19

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #19

19. சங்கே முழங்கு!

இறந்தவர்கள் அனைவருக்கும்
ஒரே எண்ணிக்கையிலான விறகுகள் அடுக்கி,
ஒரே அளவு எண்ணெய் ஊற்றி எரிக்க
சமத்துவ மாடல் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

இறந்தவர்கள் குடும்பத்துக்கு
பரிவுத் தொகையாக பத்து லட்சம் கொடுக்கவும்
தாயுள்ளத்துடன் உத்தரவிட்டிருக்கிறார்.
(உயிர் பிழைத்த குடும்பத்தினர் இனிமேல்
விஷ சாராயத்தை நாட வேண்டிய அவசியம் இருக்காது).

டாஸ்மாக்கில் அவர்களுக்கும்
இன்ன பிற குடிமக்களுக்கும்
நிரந்தர அக்கவுண்ட் திறந்துகொடுக்க
திராவிட பொருளாதார நிபுணர் குழுவினர் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

திட்டம் விரைவிலேயே
திருவள்ளுவர் தினத்தன்று அறிமுகப்படுத்தப்படும்.

கடமை, கண்ணியம், முக்கியமாக கட்டுப்பாட்டுடன்
செய்திகளை வெளியிடும் முன்களப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில்
மத்திய அரசு போல நேரடிப் பணப் பரிமாற்றம்,
போனஸ், பஞ்சப் படி, பயணப்படிகளுடன் .
டகா டக் டகா டக் என கொடுத்துவிடவும் ஏற்பாடுகள் செய்துவிட்டிருக்கிறார்.

ஒரு ட்வீட்டுக்கு இன்ன ரேட்,
இத்தனை பைட் டயலாகுக்கு இன்ன ரேட் என
களமாடும் பிரபலப் போராளிகளுக்கு
இம்முறை மெளனமாக இருப்பதற்கு இன்ன ரேட் என
புதிய ஸ்மார்ட் திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்திருக்கிறது
உலகுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் அரசு.

அடுத்த மழை வரும்போது ஒன்றிய நிதி அமைச்சர்
அவசியம் தர வேண்டிய பாக்கித்தொகை ஒன்றும் இல்லை என்று சொல்வதை
பாக்கித்தொகை தர வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை என்று சொன்னதாக
டெம்ப்ளேட் தலைப்புச் செய்திகளை முன்கூட்டியே
நம் வெதர்மேன் டிப்பார்ட்மெண்ட்
தயாரித்து வைத்திருக்கிறது.

வீர வெங்காயக் கூட்டமே வெறி கொண்டு கூத்தாடு.

விஷச் சாராயச் சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப் போல, காவிரி போல கள்ளச் சாராயம்
ஊறும் மாநிலம் எங்கள் மாநிலம்!
பொங்கு குடியர்க்கு இன்னல் விளைந்தால்
சன்மானம் நிஜமென்று சங்கே முழங்கு!

$$$

Leave a comment