-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து ஆறாம் திருப்பதி...

46. மோகினியாய் காட்சி அளித்த திருமோகூர்
நாமகிரித் தாயாருக்கு உரியவனும், நரசிங்கப் பெருமானும் ஆலிலையில் கிடந்தவனும், ஆகமங்களைக் காத்தவனும், பேரழகில் மோகினியாய் மறு உருவம் எடுத்தவனும், பாற்கடலின் அமிர்தத்தைப் பகிர்ந்தவனுமான திருமோகூர் காளமேகப்பனைக் கண்டு பணிவோமே!
கருமேகமானது மழையை தனக்குள் வைத்துக்கொண்டு மழையாக மக்களுக்கு நலம் அளிப்பது போல இத்தலப் பெருமாள் பக்தர்களை உய்விக்கிறார். இங்குள்ள சக்கரப் பெருமாள் மிகப் பழமையானவர்; பதினாறு கரங்களுடன் ஓடிவரும் நிலையில் அருள் பாலிக்கிறார்.
பாற்கடல் அமுதத்தைப் பங்கிட்டுக் கொடுக்க மோகினி அவதாரம் எடுத்த நாராயணன், புலஸ்திய முனிவரின் பிரார்த்தனைக்காக அதே வடிவில் காட்சி அளித்த தலம் இது என்பதால் மோகூர் என்று பெயர் பெற்றது. வழிபடும் பக்தர்களுக்கு உற்ர துணைவராக விளங்குவதால் இத்த இறைவனின் உற்சவர் திருமோகூர் ஆப்தன் என்று பெயர் பெற்றுள்ளார்.
மூலவர்: காளமேகப் பெருமாள் (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: மோகூர்வல்லி, மோகனவல்லி
உற்சவர்: திருமோகூர் ஆப்தன்
விமானம்: கேதகி விமானம்
தீர்த்தம்: ஷுராப்தி புஷ்கரிணி (பாற்கடல் தீர்த்தம்)
தல விருட்சம்: வில்வம்
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்
திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை

எப்படிச் செல்வது?
மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை நிறுத்தத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் நகரப் பேருந்துகள் திருமோகூருக்கு செல்கின்றன.
சேவிப்பதன் பலன்கள்:
பில்லி, சூனியம், ஏவல் பேய், பிசாசு போன்ற துர்தேவதைகளால் பாதிக்கப்பட்டு நொந்து போனவர்கள் இங்கு வந்து தங்கி பரிகாரம் செய்து வர நிவர்த்தியாகும். 4, 11, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் வரவேண்டிய தலம் இது.
$$$