திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -44

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து நான்காம் திருப்பதி...

44. ஸ்ரீராமர் சயனித்த திருப்புல்லாணி  

கல்லிலே அணையைக் கட்டி, கடலிலே பாலம் செய்தாய்!
வில்லிலே வீரம் செய்து, விபீஷணனை ஆளச் செய்தாய்!
புல்லிலே படுக்கச் செய்து நீ தர்பசயனம் கொண்டாய் – திரு
புல்லாணியில் கிடப்பவனே, கல்லாதவனைக் காத்தருள்வாயே!

சீதையை மீட்க இலங்கை செல்வதற்கு முன் சேது அமைக்க கடலரசனிடம் அனுமதி கேட்டு இங்குதான் ஸ்ரீராமர் காத்திருந்தார். அப்போது தர்ப்பைப் புல்லில் படுத்திருந்ததால் இந்த இடத்திற்கு திருப்புல்லாணி என்று பெயர் ஏற்பட்டது.

ராம அவதாரத்துக்கு முன்னரே, இங்குள்ள பெருமாளை வணங்கி புத்திர பாக்கிய மூலமந்திரத்தை தசரத மகராஜா பெற்றார் என்று தல வரலாறு கூறுகிறது.

இத்தலத்தில் ஆதி ஜகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயன ராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரச மரம் (கருவறையின் பின்னால்) என நான்கு வடிவங்களில் பெருமாள் காட்சி அளிக்கிறார்.

மூலவர்: ஆதிஜகந்நாதர் (வீற்றிருந்த திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  கல்யாணவல்லி, பத்மாஸனித் தாயார்
உற்சவர்: கல்யான ஜகந்நாதர்
விமானம்: கல்யாண விமானம்
தீர்த்தம்: ஹேம, சக்கர தீர்த்தம், ரத்னாகர சமுத்திரம்
தல விருட்சம்: அரச மரம்
மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.30 மணி முதல் 12.15 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

ராமநாதபுரத்திற்குத் தெற்கே 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருப்புல்லாணி.

சேவிப்பதன் பலன்கள்:

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், புத்திரர்களால் கஷ்டப்படுவர்கள், நாக தோஷத்தால் அவதிப்படுபவர்கள், திருமண வாழ்கையில் நிம்மதி இல்லாதவர்கள், ஆண் வாரிசு இல்லாதவர்கள், பிரம்மஹத்தி தோஷம்  உடையவர்கள் இங்கு வந்து நாக பிரதிஷ்டை செய்து, கோயிலில் பால் பாயசம் உண்டு, சர்பசாந்தி ஹோமம் செய்தால் முன்வினைப் பாவம் நீங்கி, வேண்டிய யாவும் பெறலாம். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள், 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment