திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -43

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்து மூன்றாம் திருப்பதி...
சத்யகிரிநாதன்

43.   குடைவரைக் கோயில்கள் கொண்ட திருமெய்யம்

கல்லாத மனதை எட்டெழுத்தால் கட்டி
அடங்கா புலன் ஐந்தை ஒடுக்கி
விழியாப் பாம்பை விழிக்கச் செய்து
சுழியாப் பேரின்பம் அடைவது எப்போது?
திருமெய்யத்துப் பெருமானே திருஅருள் புரிவாயே!

திருமெய்யம் என்பதே திரிந்து திருமயம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. இங்கு சத்தியகிரீஸ்வரருக்கும் (சிவன்), சத்தியகிரிநாதனுக்கும் (பெருமாள்) குடைவரைக் கோயில்கள் உள்ளன. இங்குள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள பாம்பணை மேல் பள்ளிகொண்ட பெருமாள் சிலை, நாட்டிலேயே பெரியதாகும். இங்கு இரு மூலவர்கள்: ஒருவர் சத்தியமூர்த்தி பெருமாள், மற்றொருவர்: திருமெய்யப்பர் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள்.

மூலவர்: சத்யகிரிநாதன், சத்தியமூர்த்தி (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: உய்ய வந்த நாச்சியார்
உற்சவர்: மெய்யப்பன்
விமானம்: சத்யகிரி விமானம்
தீர்த்தம்: கதம்ப புஷ்கரிணி, சத்ய தீர்த்தம்
தல விருட்சம்: பலா
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை

எப்படிச் செல்வது?

புதுக்கோட்டைக்கு தெற்கே 24 கி.மீ. தொலைவில்  திருமயம் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

ராகு, கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், விஷ நோய்களால் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள், வியாபாரத்தில் லாபம் அடைய நினைப்பவர்கள் இங்கு வந்து இப்பெருமாளையும், ஆதிசேஷனையும் வணங்க நிவர்த்தி பெறலாம். 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment