-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்திரண்டாம் திருப்பதி...

42. ராமானுஜரை உலகறியச் செய்த திருக்கோஷ்டியூர்
எட்டாதது எட்டெழுத்து மந்திரம்! கிட்டாதது பாற்கடலில் கிடப்பவனின் தரிசனம்! உற்றானது உறவானது நீயே என்றான பின்னே, பற்றானது என எதுவுமில்லை, திருகோஷ்டியூர் மெல்லனையானே!
சிவனும் விஷ்ணுவும் பிரமனும் ஒருங்கே எழுந்தருளிய திருத்தலம் இது. கதம்ப மகரிஷியின் ஆசிரமத்திற்கு முப்பெரும் தேவர்களும் ஒருங்கே வந்து, அசுரன்ஹிரண்யகசிபுவைஅழிக்க ஆலோசனை நடத்திய தலம் இது; அதன் பின்னரே நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் திருக்கோஷ்டியூர் என்று காரணப் பெயர் பெற்ற தலம் இது.
இக்கோயிலின் அஷ்டாங்க விமானத்தில் நான்கு அடுக்குகளில் பெருமாள் அருள் பாலிக்கிறார். கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணன் (பூலோகப் பெருமாள்), முதல் அடுக்கில் சயனக் கோலத்தில் சௌமிய நாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாம் அடுக்கில் நின்ற கோலத்தில் உபேந்திரநாதர் (தேவலோகப் பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த நிலையில் பரமபதநாதர் (வைகுண்டநாதர்) ஆகிய நான்கு நிலைகளில் பெருமாள் தரிசனம் தருகிறார்.
கீழ்த்தளத்தில் சுயம்பு வடிவில் லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். சௌமிய நாராயணர் சன்னிதியில் பிரம்மனும் உடன் அருள்கிறார். சமய ஒருமைப்பாட்டுக்காக நமது முன்னோர் உருவாக்கிவைத்த அற்புதமான ஆலயம் இது.

ஸ்ரீவைணவத்தை நிலைநிறுத்த வந்துதித்த ஆச்சாரியர் ராமானுஜர் தனது குரு உபதேசத்திற்காக, இங்கிருந்த திருக்கோஷ்டியூர் நம்பியை நாடி 18 முறை நடையாய் நடந்தார், 18வது முறை, அவருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த குரு, இந்த ரகசியத்தை யாருக்கும் கூறக் கூடாது என்று பணித்தார். குரு அறிவுரையை மீறுவதால் தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, மானுட குலம் உயர்வடைய வேண்டும் என்ற பெருநோக்கில், எட்டெழுத்து மந்திரத்தை இக்கோயிலின் அஷ்டாங்க விமானம் மீதேறி உலகிற்கு வெளிப்படுத்தி, எம்பெருமானார் என்று பெயர் பெற்றார் ராமானுஜர். அது மட்டுமல்ல, குருவையே சீடனாகவும் பெற்றார். அவரது அவதார மகிமை இத்தலத்தில்தான் பூரணமாக வெளிப்பட்டது.
இத்தலத்தில் உள்ள தேவபுஷ்கரிணி தீர்த்தத்தில் மாசிமக தீர்த்தவாரி விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பல்வேறு வேண்டுதல்களுடன் திருவிளக்கேற்றி (திருவிளக்கு நேர்த்திக்கடன்) வழிபடுவது பாரம்பரிய நிகழ்வாகத் தொடர்கிறது. இங்கு பிரார்த்திப்பவர்கள் ஒரு அகல் விளக்கை வாங்கி தங்கள் இல்லங்களுக்கு கொண்டுசென்று பூஜையில் வைத்து வழிபடுகின்ரனர். ஓராண்டில் பிரார்த்தனை நிறைவேறியவுடன் அந்த அகல் விளக்கை தீர்த்தக்குளக் கரையில் தீபமாக ஏற்றுவதுடன், புதிய பிராத்தனைக்காக புது அகல்விளக்குகளைக் கொண்டு செல்கின்றனர். முதல் முறை பிரார்த்தனை செய்வோர், குளக்கரையில் உள்ள எரிந்து முடிந்த அகல்விளக்குகளை எடுத்துச் செல்வது, சமூக ஒருமைப்பாட்டை சாதிக்கும் அம்சமாக மிளிர்கிறது.



மூலவர்: ஸ்ரீ உரக மெல்லணையான் – சௌமிய நாராயணர் (புஜங்க சயனம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: திருமாமகள் நாச்சியார்
விமானம்: அஷ்டாங்க விமானம்
தீர்த்தம்: தேவ புஷ்கரிணி (மகாமக தீர்த்தம்)
மங்களா சாசனம்: பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார்.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 7.30 மணி வரை
எப்படிச் செல்வது?
திருப்பத்தூர்- சிவகங்கைமார்க்கத்தில் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:
தீராத வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளவர்களும், வல்ல வழிகாட்டி இல்லாமல் தேடிக் கொண்டிருப்பவர்களும், மனநிம்மதி தேடி அலைபவர்களும் இங்கு வந்து வணங்க நிவர்த்தி அடையலாம். திருவிளக்கு நேர்த்திக்கடன் இத்தலத்தின் சிறப்பம்சம். 5, 14, 23தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$