-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது நாற்பத்தொன்றாம் திருப்பதி...

பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்
41. கள்ளழகர் வீற்றிருக்கும் திருமாலிருஞ்சோலை
கள்ளழகனே, கீதை சொன்ன சொல்லழகனே, குழல் ஊதும் கருமேக நிறத்தழகனே, மல்லழகனே, மல்லாண்ட தோளழகனே - அழகிய கழல் அணிந்த காலழகனே, அழகர் கோயில் பேரழகனே - உன்னை தாள் பணிந்து காலமெல்லாம் நான் கிடப்பேனே!
சங்கத் தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள திருத்தலம் இது. 108 திவ்ய தேசங்களுள் வைணவர்களால் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரத்திற்கு அடுத்த தலமாக மதிக்கப்படுவது அழகர் கோயிலே.
மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் ஓர் அம்சமாக, மீனாட்சி அம்மையின் திருமணத்திற்கு சகோதரனான கள்ளழகர் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உலகை பெருமாள் மூவடியால் அளந்தபோது பிரம்ம கமண்டலத்திலிருந்து சிந்திய ஒருதுளி தீர்த்தமே இங்குள்ள மலையில் நூபுர கங்கையாக (சிலம்பாறு) பிரவஹிக்கிறது. மலை மீதுள்ள பழமுதிர்சோலை அறுபடை வீடுகளுள் ஒன்று. அங்கு செல்பவர்கள் நூபுர கங்கையில் தீர்த்தமாடலாம்.
இக்கோயிலின் காவல் தெய்வமாக பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி உள்ளார். இங்குள்ள உற்சவர் திருமேனி சொக்கத் தங்கத்தால் செய்யப்பட்டது. இக்கோயிலின் தோசை பிரசாதமும், இக்கோயிலின் கருவறையில் எரியும் அணையாவிளக்கும் புகழ்பெற்றவை. பீஷ்மரும் பஞ்சபாண்டவர்களும் தரிசித்த தலம் இது. யமதர்ம ராஜன் தவம் புரிந்த தலம் என்பதால் ‘வ்ருஷபாத்ரி’ என்று பெயர் பெற்றது. யமனுக்கு பெருமாள் காட்சி அளித்த தலம் என்பதால், இங்கு அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

மூலவர்: கள்ளழகர், பரமசுவாமி (நின்ற திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: ஸ்ரீதேவி – பூதேவி
உற்சவர்: சுந்தர்ராஜப் பெருமாள்- கல்யாணசுந்தரவல்லி
விமானம்: சோமசுந்தர விமானம்
தீர்த்தம்: நூபுர கங்கை, சிலம்பாறு
தல விருட்சம்: சந்தன மரம்
மங்களா சாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார். (மணவாள மாமுனிகளும் பாடியுள்ளார்).

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
மதுரை மாநகரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம். (அழகர் கோயில்).
சேவிப்பதன் பலன்கள்:
எதிரிகள் பயம் விலகவும், நோய் நொடிகள் தீரவும், 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலமாகும்.
$$$