-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பத்தெட்டாம் திருப்பதி...

38. கண்ணனே சோலை அமைத்த திருக்காவளம்பாடி
புல்லாங்குழல் ஊதி, கோபியருடன் நீராடி, பொல்லாதவர்களை வதம் செய்து, காளிங்கருடன் நதியாடி, இல்லாதவர்களுக்காக பாரிஜாத வனம் அமைத்து, கல்லாத என்னையும் கவிபாட வைத்தானே - என் காவலாம் பாடி கோபால கிருஷ்ணனே!
திருநாங்கூரில் உள்ள ஆறாவது திவ்யதேசம். சத்தியபாமை கேட்ட பார்ஜாத மலருக்காக கண்ன்னே உருவாக்கிய பொழில் (காவளம்) என்பதால் திருக்காவளம்பாடி என்று பெயர் பெற்றது. துவாரகை மன்னன் கண்ணனே இங்கு எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.
மூலவர்: கோபாலகிருஷ்ணன், ராஜகோபாலன் (நின்ற திருக்கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: செங்கமல நாச்சியார், மடவரல்மங்கை
விமானம்: வேத ஆமோத விமானம்
தீர்த்தம்: தடமலர்ப் பொய்கை
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை
எப்படிச் செல்வது?
சீர்காழி, திருவெண்காட்டிலிருந்து பஸ்வசதி உண்டு. வைத்தீஸ்வரன் கோயிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். திருநாங்கூர் அருகே 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
சேவிப்பதன் பலன்கள்:
திருமணத்தடை நீக்கும் தலம். வறுமையில் வாடியிருப்பவர்கள் வந்து தரிசிக்க சுகம் பெறலாம். மழலைப் பேறு வேண்டுவோரும் தரிசிக்கலாம். 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் வர வேண்டிய தலம் இது.
$$$