உருவகங்களின் ஊர்வலம் – 18

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #18

18. புள்ளைக் குட்டிங்களையும் குடிக்க வையுங்கடா!

போதை வஸ்துகளைக் கைவிடு என்றார் புத்தர்.
மதுவையும் விட்டொழி என்றார் வள்ளலார்.

ஆச்சார்யர் வள்ளுவரும் இதையே சொன்னார்.
அண்ணல் அம்பேத்கரும் இதையே சொன்னார்.

இத்தனைக்குப் பிறகும் எதனால்
அரசே நடத்துகிறது அழிவுத் தொழிற்சாலைகளை?

அறவாழி அந்தணரும் அதைப் பருகாதே என்பதாலா
அரக்கர் அரசு அதை அமல்படுத்தி வருகிறது?

‘என் தட்டு என் உரிமை’
‘என் பாட்டில் என் திராவகம்’ என்று
திமிறுகிறதா திருட்டு திராவிடக் கும்பல்?

கடின உழைப்பில் ஈடுபடுபவர்
களைப்பைப் போக்கக் குடிப்பது தவறா என்ற
கம்யூனிசக் கொள்கையா?

கலை கலைக்காகவே அதுபோல்
குடி குடிக்காகவே என்னும்
இலக்கியக் கேளிக்கைந் கும்பலா?

பனிப் பிரதேச மக்களின் பண்பாட்டில்
மதுவுக்கும் இடம் உண்டு.
அளவோடு குடிக்கத் தெரிந்த அவர்களைப் பார்த்து
அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கிறதா அல்பக் கும்பல்?

*
மது அருந்தும் பிராமணர்கள்
மற்றவரைவிட மிகக் குறைவு .
மது அருந்தும் மஹமதியர்கள் அனைவரிலும் குறைவு.

புனிதப் போரின் அங்கமாகப்
போதைப்பொருள் கடத்தக் கூடும்.

மலையெனக் குவியும் பணத்தையெல்லாம்
மார்க்கத்தின் வளர்ச்சிக்கே மடைமாற்றவும் கூடும்.

ஆனால், மது, போதை வலையில்
அவர்கள் சிக்குவதில்லை.
(அவர்களுக்கான போதை
வேறு இடத்தில் இருந்து கிடைக்கிறது).

மறையோர் சொல்வதைத் தான் கேட்பதில்லை.
மஹமது சொன்னதையாவது கேட்கக் கூடாதா?
மது விஷயத்தில் மட்டும்.

கூடவே இருக்கியே செவ்வாழை
நீயாவது புத்திமதி சொல்லக் கூடாதா?

*

இன்னிக்குப் பார்த்துக் குடிக்காமற்ஹ் தப்பின
மொடாக் குடியரும் உண்டு.
இன்னிக்குப் பார்த்துக் குடித்த அப்பாவியும் உண்டு.

காய்ச்சியவர் மீது தவறில்லை-
ஏனென்றால்
அவர் மிக நீண்ட கால அனுபவம் கொண்டவரே.
குடித்தவர் மீதும் தவறில்லை-
ஏனென்றால்
அவரும் குடித்துக் குடித்துப் பழகியவரே.

மெத்தனாலின் மிக்ஸிங் ரேஷியோவில்தான்
ஏதோ கோளாறு இருக்க வேண்டும்.

அதுவுமே கலந்தவரின் தவறாக இருக்க முடியாது-
ஏனென்றால்
அவர் கழகத்தின் கலக்கல் கண்மணி.

மெத்தனாலின் மெத்தனம்தான் காரணமாக இருக்கும்.
விசாரணைக் குழு கண்டறிந்து சொல்ல வேண்டிய
விஞ்ஞானபூர்வ ஆய்வறிக்கை
ஏற்கெனவே தயாராகியிருக்கும்.

கொஞ்சம் சுற்றுப் பயணங்கள் செய்து
கொஞ்சம் பேரைச் சந்தித்து முடித்துவிட்டு
கையெழுத்துப் போட வேண்டியது தான் பாக்கி.
அனைத்திலும் அட்வான்ஸ்டான அரசல்லவா ஆண்டுகொண்டிருக்கிறது?

*

கள், வெற்றிலை, புகையிலை
நம் கலாசாரத்தின் பெருமை மிகு அங்கம்.

நேற்றுவரை நமக்கும்
கண்ணியமாகக் குடிக்கத் தெரிந்திருந்தது.

மித போதை போதாதென
மெத்தனால் வரை இழுத்துவந்து
நடுத்தெருவில் ஆடை அவிழ்ந்து உருள வைத்த
திருடர் கூட்டம்
முழுபோதையில் மூழ்கடிக்கவும்
திட்டமிட்டுவிட்டதா?

அல்லது
டாஸ்மாக் விற்பனையைப் பெருக்குவதற்கான
டூல் கிட்டா?

எதுவானால் என்ன?
அரசியல் கட்சிகளுக்கு நஷ்ட ஈடு கொடுத்து
நற்பெயர் சம்பாதிக்க ஒரு நல்வாய்ப்பு.

ஊடகங்களுக்கு
ஒரு வார கால பரபரப்புச் செய்தி.

மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.

போராளிகளுக்கு
பக்குவமாக வாசிக்கக் கிடைத்த வாய்ப்பு.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு.?
உற்றாரை இழந்த உறவினருக்கு?

*

குடிக்காவிட்டால் மட்டும்
சாகாமலா இருக்கப் போகிறார்கள்?

குடிகாரர்கள் மட்டும்தான்
குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துகிறார்களா என்ன?

திராவிட மாடல் அரசு நல்ல சாராயம் விற்றால்
கட்சித் தொண்டர் கள்ளச் சாராயம் விற்பார்.

தலைமைக் கழக டாஸ்மாக் சரக்கின் விலை
அதிகமாக இருப்பதால்
கிளைக் கழகம் கள்ளச் சாராயம் காய்ச்சி
கடைநிலை மக்களுக்கு
கட்சிப் பணி ஆற்றத்தான் செய்வார்கள்.

அரசின் நலத் திட்டங்கள்
ஏழை எளியவர்களுக்குக் கிடைப்பதில்லை
அதனால்தான் கள்ளச்சாராயம் குடித்து
கவலையை மறக்கிறார்கள்.

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும்
உங்களுக்குத்தான் ஒரு கவலையும் இல்லையே.

போய் புள்ளைக்குட்டிங்களையும்
குடிக்க வையுங்கடா…

$$$

Leave a comment