உருவகங்களின் ஊர்வலம் -16

பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #16

16. வீரவாஞ்சியின் நினைவுக்கு…

நீ நினைத்திருந்தால்
துரையம்மாவையோ
அவர்தம் குழந்தைகளையோ
பிடித்துத் தப்பியிருக்கலாம்.
ஆனால்,
அதர்மத்தை அழிக்க
ஆயுதம் தூக்கக் கற்றுக் கொடுத்த நம் தர்மம்
பெண்டிரை, பிள்ளைகளை
பிணைக்கைதியாக்குவதுகூடப்
பெரும் பாவம் என்றல்லவா போதித்திருக்கிறது…

தம்பி போல்
தப்பிச் செல்ல ஒரு வாகனத்தில் வந்து சுட்டுச் செல்லும்
தந்திர வியூகம் வகுத்துத் தர உனக்கு
அருட் தந்தையர் யாரும் அருகில் இருந்திருக்கவில்லையா?

நீர் நிறை பாலமருகில் சுட்டுவிட்டு
நீந்தித் தப்பும் சாதுரியமும்
நினக்கு இருந்திருக்கவில்லை.

பிடிபட்டால் என்னாகும் என்றஞ்சி
இன்னுயிர் மாய்த்துக் கொண்டாய்.
பிடிபடாமல் தப்பினால்
என்னவெல்லாம் செய்யமுடியுமென
எடுத்துக்கூற யாரும் இருந்திலையோ?

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
தர்மத்தின் காவலனுக்குமா..?

நிராயுதபாணிக்கு ஓர் ஆயுதத்தை நீயே கொடுத்து
நேருக்கு நேர் நிமிர்ந்துநின்று போரிட்டிருக்கலாமோ?
தர்மத்தைக் காக்க ஆயுதம் ஏந்தலாம்.
ஆனால் தர்மம் காட்டிய வழியில் அல்லவா
அதைச் செய்திருக்க வேண்டும்?

ஆனால் ஒன்று நிச்சயம்!
உன் துப்பாக்கிக் குண்டு
யாரையும் மகாத்மா ஆக்கித் தொலைக்கவில்லை.
அந்த வகையில் உன் ஆத்திரம்
அளவோடே வெளிப்பட்டிருக்கிறது.

உண்மையில்
நீ எதிர்த்த ஜார்ஜ் மன்னனைப் பார்
ஜாலியன் வாலாபாகில்
ஒரு துப்பாக்கிகூடத் தூக்காமல்
ஆப்ரஹாமிய மத போதனைகளின்படி
நிராயுதபாணிகளை
ஆள்வைத்துக் கொன்று குவித்தான்.

அவன் மட்டுமல்ல
தப்பித்தலுக்கான ஒற்றை வாசலை அடைத்தபடி நின்று ஆணையிட்ட
காட்டுமிராண்டி டயருமே இயற்கை மரணமே அடைந்தான்.

இந்தக் கேடுகெட்ட உலகில்
அவன்களுடைய கர்த்தன் அவன்களுக்கும்
நியாயத்தீர்ப்பு நாளில் சொர்க்கமே அருளுவான்.

அந்த நம்பிக்கையில்தானே அரக்கன்கள்
அத்தனை உலகையும் அழித்து வருகிறான்கள்?

அதர்மத்தை அதர்ம வழியில்தான் அழிக்க முடியும்.
உன் வழியில் செல்ல நம் மாநிலத்தில்
உப்புப் போட்டுத் தின்ன ஒருவனும் பிறக்கவில்லை.
ஆஷ் துரையின் அந்தப்புரவாரிசுகள்தான்
அதிகரித்துக் கொண்டிருக்கிறான்கள்.
முழுக்கிணறு தாண்டும்படியாக
அடுத்த பிறவியை
அதி சீக்கிரமே எடுத்து வாருங்கள் அண்ணலே!

செங்கோட்டை வாஞ்சிநாதனின் பலிதான தினத்தில் திரு. பி.ஆர்.மகாதேவன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய கவிதை இது...

$$$

Leave a comment