-சேக்கிழான்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென்திருப்பேரை, 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இங்கு புலவர் பெருமக்கள் பலர் வாழ்ந்து இலக்கியங்கள் பலவற்றைப் படைத்துள்ளனர். அவற்றுள் ஒன்று, நாராயண தீட்சிதர் இயற்றிய ‘மகரநெடுங்குழைக்காதர் பாமாலை’ நூலாகும்.
சொக்கநாத நாயக்கர் மதுரையை ஆண்டபோது, அவரது பிரதிநிதியாக நெல்லையை ஆண்டவர் வடமலையப்ப பிள்ளை. அவரது ஆட்சிக்கு உள்பட்ட தென்திருப்பேரையில் வாழ்ந்த நாராயண தீட்சிதர், தனது நிலங்களில் கிடைத்த வருவாயைக் கொண்டு தெய்வப்பணி ஆற்றிவந்தார். ஓராண்டு வறட்சி காரணமாக அவரால் நிலவரி செலுத்த இயலவில்லை. அதையடுத்து, வடமலையப்ப பிள்ளையின் கீழ் செயல்பட்ட அதிகாரி தீட்சிதரைக் கைது செய்து நெல்லை சிறையில் அடைத்தார்.
சிறைப்பட்ட தீட்சிதர், தனது விதியை நொந்தவராய், தென்திருப்பேரை பெருமாளை வழிபட முடியவில்லையே என்று வருந்தி, சிறைக்குள் இருந்தபடியே ‘மகரநெடுங்குழைக்காதர் பாமாலை’ என்ற நூலை இயற்றினார். இப்பாடல்களில், இறைவனின் பெருமைகளைப் போற்றி, சரணாகதி தத்துவத்தின் அடிப்படையில், தன்னைக் காத்தருளுமாறு வேண்டுகிறார் தீட்சிதர். இறையருளால், தீட்சிதர் சிறையிலிருந்து விடுதலையும் ஆனார்.
இந்த நூலுக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் பதவுரை எழுதி இருக்கிறார். அவர் இந்நூலை ‘சிறை மீட்ட செய்யுள்’ என்று குறிப்பிடுவதிலிருந்து நூலின் பெருமை புலப்படும்.
மேலும் பலர் இந்நூலின் சிறப்புக் கருதி உரையுடன் வெளியிட்டுள்ளனர். நூறு பாடல்கள் கொண்ட இப்பாமாலை நூலை, தற்காலத்திற்கு ஏற்ற வகையில், பிழையின்றியும் திருத்தமாகவும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் நூலாசிரியர் மகர சடகோபன்.
ஒவ்வொரு பாடலுக்கும், பதவுரை, விளக்கவுரை ஆகியவற்றுடன், ஆழ்வார்கள் வாக்கு என்ற ஒப்பீடுப் பகுதியையும் இணைத்து, முப்பரிமாணத்தில் நூலைத் தொகுத்திருப்பது மிகவும் சிறப்பு. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நூலாசிரியரின் தேர்ச்சி ஒப்பீடுகளில் வெளிப்படுகிறது. அந்த வகையில், ‘தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்’ என்ற இந்நூல், ஆழ்வார்களின் பாசுரங்களின் துணையுடன் மிளிர்கிறது.
தனது சொந்த ஊரின் பெருமையையும், அங்கு எழுந்த இலக்கியங்களின் சிறப்பையும் மறவாத நூலாசிரியரின் பெரும் முயற்சியே இந்நூல். வருங்காலத் தலைமுறைக்கு நமது ஞானச் செல்வத்தை பத்திரமாகச் சேர்த்து வைக்கும் இவரது கைங்கர்யம் மிகவும் போற்றுதற்குரியது.
***
நூல் குறித்த விவரம்:
தமிழ் வளர்த்த ஆழ்வார்கள் வழியில் தமிழ்ப்பேரை தீட்சிதர்
ஆசிரியர்: மகர சடகோபன்
முதல் பதிப்பு: ஜனவரி 2023
252 பக்கங்கள், விலை: ரூ. 200
வெளியீடு:
ஆர்.என்.ஆர். பிரின்டர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ்,
திருவல்லிகேணி, சென்னை- 5
தொடர்புக்கு:
பதிப்பகம்: 044- 2844 1856
திரு. மகர சடகோபன்: 97911 62595.
$$$