திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -30

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது முப்பதாம் திருப்பதி..

30. பத்ரிநாராயணன் அருள்புரியும் திருமணிமாடக்கோயில்

யாதிலும் உள்ளார், யாதிலிலும் இல்லை யாதவனே!
ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை மாதவனே!
தேடியும் அலைந்தும் பாடிய அடியவர்களுக்கு எல்லாம்
மாயவன் நீ அருள்புரிவாய் என அறிந்து,
மணிமாடக் கோயில் வந்து சொன்னேன்
நமோ நாரயணாயா எனும் சொல்.

சீர்காழி அருகிலுள்ள திருநாங்கூரில் 11 திவ்யதேசங்கள் உள்ளன. பரமசிவன் பிரம்மஹத்தி தோஷம் போக்க 11 உருவங்களை எடுத்து தவம் புரிந்ததாகவும், அவருக்கு பெருமாள் 11 உருவங்களுடன் காட்சி அளித்ததாகவும் தல புராணம் கூறுகிறது. ஐராவத யானை தவம் புரிந்ததால் இத்தலம் திருநாங்கூர் எனப் பெயர் பெற்றது. பத்ரிகாசிரமத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளே திருமணிமாடக்கோயிலில் எழுந்தருளியுள்ளதாக ஐதீகம்.

மூலவர்: பத்ரிநாராயணன், நந்தாவிளக்குப் பெருமாள் (அமர்ந்த திருக்கோலம்- கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  புண்டரீகவல்லி தாயார்
உற்சவர்: அளத்தற்கரியான்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: பிரணவ விமானம்
தீர்த்தம்: இந்திர புஷ்கரிணி, ருத்ர புஷ்கரிணி
தல விருட்சம்: பலா
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை

எப்படிச் செல்வது?

சீர்காழியிலிருந்து 8 கி.மீ.  தொலைவில் உள்ளது இத்திருத்தலம் (திருநாங்கூர்).

தனிச் சிறப்பு:

இந்தக் கோயிலில் முக்கிய வைபவம் என்பது தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடக்கும் பதினொருவர் கருட சேவைதான். இந்தக் கோயிலில் மட்டுமன்றி திருநாங்கூரில் மற்ற பெருமாள் கோயிலிருந்தும் பெருமாள் கருட வாகனங்களில் வந்து ஒன்றாக இங்கு சேவை சாதிப்பார்கள். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் அவர்தம் தர்மபத்தினியான குமுதவல்லியுடனும், அவர் ஆராதித்த பெருமாளுடனும், பெருமாளின் சக தர்மபத்தினியான உபய நாச்சியாருடனும் பல்லக்கில் மேலேறி 11 ஷேத்திரங்களுக்கும் வயல்வழியாக  அங்காங்கே மங்களா சாசனம் செய்துகொண்டே தை அமாவசைக்கு மறுநாள் திருநாங்கூர் நாராயணப் பெருமாள் கோயில் வாசலில் வந்து சேர்வார். பிறகு அங்கு கருட வாகனத்தில் நிற்கும் 11 திவ்யதேசப் பெருமாளையும் ஆழ்வார் பிரதானமாக வந்து மாலை மரியாதைகள் செய்தபின் வீதிப் புறப்பாடு நடக்கும். பயிரை ஆழ்வார் மிதித்ததால் பயிர் நன்றாக வளரும் என்பது ஐதீகம்.

சேவிப்பதன் பலன்கள்:

இந்த கருட வாகன தரிசனமே நமது அனைத்துப் பாவங்களையும் தோஷங்களையும் போக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் நோய் நீங்கப் பெறலாம். 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் வரவேண்டிய தலம் இது.

$$$

Leave a comment