-மோகன் பாகவத்
திருவாளர்கள் உதய் மஹூர்கர், சிராயு பண்டிட் ஆகியோர் எழுதிய ‘Savarkkar: The man who could have prevented partition’ என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் ப.பூ. மோகன் பாகவத் அளித்துள்ள அணிந்துரையே இக்கட்டுரை….

ஒரு தனி மனிதரின் உயர்வை, அவரது நிழல்/ நினைவு எதிர்கால சந்ததியினரின் மீது எவ்வளவு தூரம் விழுகிறது என்பதைக் கொண்டு கணக்கிடலாம் என்று சொல்வார்கள். அப்படிப் பார்க்கும்போது, விநாயக தாமோதர சாவர்க்கர் சிறந்த தேசபக்தர் மட்டுமல்ல, நம் தேசிய நெடுநோக்கின் மைல்கல் என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
இன்றைய பாரதம் அவரது தீர்க்க தரிசனத்தின் அடிப்படையிலேயே உயர்ந்து நிற்கிறது. கடந்த எழுபது ஆண்டுகளாக பல்வேறு கொள்கைகள், முரண்பாடான கருத்தியல்களின் மோதல்கள், நம் சமுதாயத்திலும் தேச விவகாரங்களிலும் சோதித்துப் பார்க்கப்பட்ட பின், இன்று அவரது வாக்கைப் பின்பற்றி தேசம் உயர்ந்து நிற்கிறது.
சாவர்க்கர் குடும்பம் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் தங்களது ஒரே குறிக்கோளுக்காக அர்ப்பணித்தது. ‘சுதந்திரமான, வலிமையான, வளமான பாரதம்’ என்பதே அந்தக் குறிக்கோள். தேசத்திற்காக சாவர்க்கர் சகோதரர்கள் – பாபா ராவ், விநாயக் ராவ், நாராயண ராவ் – செய்த தியாகங்களுக்கு நவீன வரலாற்றில் இணை இல்லை. மூத்த சகோதரர்களான பாபா ராவும் விநாயக் ராவும் நீண்ட, மிகக் கடுமையான சிறைவாசத்தையும், முதுகெலும்பு முறியும் உடல் வதையையும், மனதை நொறுக்கித் தகர்க்கும் அவமானங்களையும் தேசத்திற்காக எதிர்கொண்டார்கள்; தாங்கி நின்றார்கள்.
இந்த நூல் சாவர்க்கர் என்ற புரட்சியாளரைத் தவிர்த்துவிட்டு, பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திர பாரதத்தைப் பற்றிய சாவர்க்கரின் நெடுநோக்கை முன்வைப்பதன் மூலம் தேசத்திற்கு பெரிய தொண்டு செய்துள்ளது. தேசத்திற்கு அவரை புரட்சியாளராக நன்கு தெரியும். ஆனால் தேசம் குறித்த அவரது நெடுநோக்கு பலரும் அறியாதது.
தேசப் பிரிவினைக்கு வித்திட்ட பிரிவினைவாத சக்திகள், ஓட்டுக்காக தாஜா செய்யும் பலவீனமான கொள்கைகள் ஆகியவை இன்றும் உள்ளன. பாரதம் ஒரே தேசமாக எழுச்சி பெற அவை பெரும் தடையாக உள்ளன. அவற்றை எதிர்த்துப் போராட சாவர்க்கரின் நெடுநோக்கு இன்று தேவைப்படுகிறது.
‘வீர சாவர்க்கர்: இவரால் பிரிவினையைத் தடுத்திருக்க முடியும்’ என்ற இந்த நூல், பிரிவினைக்குப் பின்னால் இருந்த உண்மையான காரணங்கள் எவை, காங்கிரசின் தாஜா செய்யும் கொள்கைகளுக்கு எதிராக சாவர்க்கர் எழுப்பிய எச்சரிக்கைகளை நாடு பின்பற்றி இருந்தால் பிரிவினையை எப்படி தடுத்திருக்க முடியும் ஆகிய விஷயங்களைப் பற்றி மிக ஆழமாக அலசி ஆய்வு செய்கின்ற அரிய நூல்.
சுதந்திர பாரதத்திலும் சாவர்க்கருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. சாவர்க்கர் தனக்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. உண்மையில், தேசத்திற்காக தன்னலமற்று சேவை செய்த ரிஷி அவர். வேறு பலரும் இவரைப் போலவே திட்டமிட்ட ரீதியிலோ அல்லது தெரியாததாலோ மறக்கடிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம் என்பது, நாம் பெற்ற சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பதும், எதிர்கால சந்ததியினர் நடை போடுவதற்கு சீரிய பாதையை அளிப்பதும் ஆகும்.
ஆனால் சாவர்க்கர் விஷயத்தில் இதற்கு மாறாக நடந்துள்ளது. அவர் மதவாதியாக சித்தரிக்கப்பட்டார். அவரது ஹிந்துத்துவக் கொள்கை வெறுப்பை உமிழ்வது, பிரிவினையை ஏற்படுத்துவது, ஒரு சாராரை உயர்த்தி மற்றவர்களை இரண்டாம் தரமாக்குவது – என்றெல்லாம் பிம்பம் கட்டமைக்கப்பட்டது. மகாத்மா காந்தி கொலைச் சதியில் அவரை சிக்க வைக்கும் கொடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எந்த பாரதத்தின் சுதந்திரத்திற்காக சாவர்க்கர் தன்னிடம் இருந்த அனைத்தையும் அர்ப்பணித்தாரோ, அந்த சுதந்திர இந்தியாவில்தான் மேற்சொன்ன அனைத்தும் நடந்தன.
அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தங்கள் பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தினாலும், தேவையற்ற வேறு பல காரணங்களாலும் கம்யூனிஸ்ட்களுடன் சேர்ந்துகொண்டு சாவர்க்கர் மீது இத்தனை கீழ்த்தரமான அவமதிப்புகளையும் செய்தனர். பண்பாடு, பாரம்பரியம், மரபு என இந்த தேசம் தொடர்புடைய எல்லாவற்றையும் வெறுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.
‘சாவர்க்கர் வெறுப்புப் பிரசார’த்திற்கான உண்மையான பின்னணி காரணங்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அவரும் அவரது தொலைநோக்கு சிந்தனைகளும், பிரிவினைவாத சக்திகளுக்கு, மதமாற்ற சக்திகளுக்கு, சிறப்பு உரிமை கோருபவர்களுக்கு எதிராக இருந்தன; இருக்கின்றன. எனவே அந்த பிரிவினை சக்திகள் ஒன்று சேர்ந்து தங்கள் முழு பலத்துடன் சாவர்க்கரை வீழ்த்த செயல்படுகின்றன.
இந்த நூல் ஆசிரியர்களான உதய் மஹூர்கரும் சிராயு பண்டிட்டும் சாவர்க்கரைப் போற்றுபவர்கள். ஆனால் அவர்கள் எந்த சாய்வுமற்ற ஆய்வின் மூலம் ஹிந்துத்துவத்தின் உண்மையான விளக்கத்தை – அது எந்த விதமான கலப்படமும் இல்லாத தூய தேசியவாதம் அல்லது தேசத்துகே முதன்மை; மதம், ஜாதி அல்லது மாநிலப் பெருமை போன்ற அனைத்தும் தேச நலனுக்கு அடுத்த இரண்டாம் இடம் தான் என்பதை – தெளிவாக தேசத்தின் முன்பு வைத்துள்ளனர். ஹிந்துத்துவா என்பது இயல்பாகவே அனைவரையும் அரவணைக்கக் கூடியது, யாரையும் பிரித்து விலக்கி வைப்பதல்ல என்பதை இதன்மூலம் நிரூபித்துள்ளனர். வரலாற்று உண்மைகளை பல்வேறு கோணங்களில் ஆழ்ந்து ஆராய்ந்து, இதை இந்த நூலை இவர்கள் வெளிக் கொணர்ந்துள்ளனர்.
ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த சிம்மன் போன்றோரின் வரிசையில் அவர்களது வாரிசாக வந்தவர் சாவர்க்கர். அந்த தேச பக்தர்களின் வரிசையில் வந்தவர்கள்தான் 1947இல் நடந்த பாரத பாகிஸ்தான் போரின் கதாநாயகரான மகாவீர் சக்ரா விருது பெற்ற பிகேடியர் முஹம்மது உஸ்மான், அஸ்பகுல்லா கான் மற்றும் 1857 யுத்தத்தின் நாயகரான அஸிமுல்லா கான் ஆகியோரும் கூட. இன்றும் காஷ்மீரில் வீர மரணம் எய்திக் கொண்டிருக்கும், மதச் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைத்து சமூகத்தைச் சேர்ந்த, தேச பக்தர்கள் எல்லோரும் அதே வீரப் பரம்பரையில் வந்தவர்களே. சாவர்க்கரின் சிந்தனையின்படி தேசம் அவர்களுக்கு கடன் பட்டிருக்கிறது.
இந்த நூல் சாவர்க்கர் எவ்வளவு உயர்ந்த ‘பவிஷ்ய வாக்தா’ (தீர்க்க சொல்லர்), தேசப் பாதுகாப்பு தொடர்பாக பாரதம் எதிர்கொள்ள வேண்டி வரும் எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் வெகு காலத்துக்கு முன்பே எடுத்துக் கூறி எச்சரித்த தீர்க்கதரிசி என்பதை புரியும்படி எடுத்துரைக்கிறது.
பாகிஸ்தான் அச்சுறுத்தலுக்கு சற்றும் குறையாத சீனாவின் அச்சுறுத்தல் பற்றி, இன்று அஸ்ஸாமில் நடப்பது, இதர பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு காரணமான சீனா பற்றி, சாவர்க்கர் முன்கூட்டியே கணித்துள்ளார். ‘தேசப் பாதுகாப்பின் தந்தை’ என்று சாவர்க்கரை இந்நூல் ஆசிரியர்கள் மதிப்பிட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
கடந்த ஏழு ஆண்டுகளாக (இந்த அணிந்துரை 2021 இல் எழுதப்பட்டது) தேசம் சாவர்க்கர் கூறியபடி தேசமே முதல் என்ற கண்ணோட்டத்தை எல்லைப் பாதுகாப்பு விஷயத்தில், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் அயலுறவு விஷயங்களில் செயல்படுத்தி வருகிறது என்பதை சாவர்க்கரின் அயலுறவு மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிந்தனைகளுடன் ஒப்பிட்டு சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பாரதம் உலகின் குருவாக வேண்டுமென்றால் அது ஒன்றுபட்ட, வலிமையான தேசமாக இருக்க வேண்டும். இதற்கு மாறான பிரிவினைவாத சக்திகளை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதை அறிய இந்த நூல் வழிகாட்டுகிறது. உண்மையின் உரைகல்லில், எந்தவிதமான மனச்சாய்வுமின்றி, சொல்லப்போனால் விமர்சனபூர்வமாக சாவர்க்கரை நூலாசிரியர்கள் அணுகியுள்ளனர்.
அதேபோல காந்திஜி, சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அப்போதிருந்த தலைவர்கள் கருத்தியல் வேறுபாடுகளை மீறி எவ்வாறு மற்றவர்களை மதித்தனர் என்பதையும் இந்நூல் கவனப்படுத்துகிறது. இன்றைய அரசியல் சூழ்நிலையில் நாம் கற்க வேண்டிய விஷயமிது.
தேசப் பாதுகாப்பு விஷயத்தில் சாவர்க்கருக்கும் பாபாசாகேப் அம்பேத்கரும் எவ்வாறு ஒத்த கருத்து உள்ளவர்களாக இருந்தனர், எப்படி ஒருவரை ஒருவர் மதித்தனர், காந்தி கொலை விசாரணை என்ற சாவர்க்கரின் வாழ்வில் துன்பமான, கடினமான காலகட்டத்தின் போது பாபா சாகேப் எப்படி அவருக்கு உதவியாக இருந்தார் என்ற முக்கியமான விஷயங்களை நூலாசிரியர்கள் இதில் ஆராய்ந்துள்ளனர்.
ஒவ்வொரு பாரதீயனும் சாவர்க்கர் பற்றி பெரும் மதிப்பும் மரியாதையும், இன்று மட்டுமல்ல என்றும் தங்கள் உள்ளத்தில் கொண்டிருப்பார்கள். அவரது தலைமுறையைச் சேர்ந்தவர்களும் அவரைப் பார்த்த அடுத்த தலைமுறையினரும், விடுதலைப் போராட்டத்தில் அவர் எவ்வளவு அர்ப்பணிப்போடு செயல்பட்டார், ஹிந்துத்துவ சிந்தனையின்படி சமத்துவம், சகோதரத்துவத்தை அவர் எவ்வளவு உறுதியோடு கடைபிடித்தார், அதற்காக அவர் எவ்வளவு தியாகங்களைச் செய்தார் என்பதை கண்டும் உணர்ந்தும் இருந்தார்கள். கேட்பவர்களை ஏற்கச் செய்யும் அவரது வீராவேச உரைகளை அவர்கள் கேட்டார்கள். அவரது தலைசிறந்த எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் நாடகங்களையும், கவித்துவம் மிக்க இனிய கவிதைகளையும் நேரில் கேட்டனர். அவரது செம்படைப்புகளில் உள்ள உணர்வுடன் அவரது தியாகமயமான வாழ்க்கையையும் இணைத்துப் பார்த்து தங்களது வாழ்க்கையை அவர்கள் மாற்றிக் கொண்டனர்.
சாவர்க்கர் உயர்ந்த இலக்கியவாதி. எனவே ‘செம்படைப்புகள்’ என்ற வார்த்தை அவரது எழுத்துக்களுக்கு மிகவும் பொருந்தும். அவர் தனக்கே உரிய தத்துவ சிந்தனைகளைக் கொண்ட, நெடுநோக்கு உடைய, மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பிரபல வசீகரமான தலைவர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.
அவர் போன்ற தலைவர்கள் மறைந்து விட்டனர்; அருகி விட்டனர். இன்றைய தலைமுறையினருக்கு சாவர்க்கரின் ஆளுமையும் சிந்தனைகளும் குறிக்கோள்களும் தெரியவில்லை. ஆனால் அவரை எதிர்ப்பவர்களும் வெறுப்பவர்களும் மட்டும் தொடர்ந்து உருவாகி வருகின்றனர். அவர்கள் சாவர்க்கரையும் ஹிந்துத்துவ தத்துவத்தையும் தொடர்ந்து அவமதித்தும் சிறுமைப்படுத்தியும் வருகின்றனர்.
இதற்கு எதிராக சாவர்க்கரை, உறுதியாக ஆனால் கண்மூடித்தனமாக நம்புபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் சாவர்க்கரைப் புகழ்கிறார்கள், வணங்குகிறார்கள். இந்த எதிர் துருவக் கருத்துக்கள், பிரசாரங்களுக்கு இடையே உண்மையைத் தெரிந்துகொள்ள சற்று முயற்சி எடுத்துத்தான் ஆக வேண்டும். தெளிவான, சரியான, சாய்வுகள் அற்ற, உண்மையான சித்திரத்தை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொண்டால்தான் சாவர்க்கரின் ஒளிப்பிழம்பை அவர்களால் தொடர்ந்து உயர்த்தி எடுத்துச் செல்ல முடியும்.
நம்மை வழி நடத்தியவர்கள் யார்? அவர்களின் தரம், குணங்கள் என்ன? அவர்களது போதாமைகள் என்ன? அவர்களது செயல்கள் என்ன? அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? அவர்களுக்கிடையேயான உறவு எப்படி இருந்தது? கருத்து வேறுபாடுகளை அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள்? சமுதாயத்தின் மீது அவர்களது உண்மையான தாக்கம் என்ன? இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சாவர்க்கரின் கண்ணோட்டமும் கணிப்பும் சரியானவை என்பது, இன்று நம் நாடு இதுவரை எட்டாத வெற்றிகளை எல்லாம் அடைவதன் மூலம் நிரூபணமாகி உள்ளது. இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல சாவர்க்கரின் காலம் (அவரது கருத்தியலின் வெற்றி) இப்பொழுது வந்துள்ளது. இது நீடித்து நிற்கும்.
இந்நூல் ஆசிரியர்கள் தங்களது விரிவான ஆய்வுகளின் மூலம் சாவர்க்கரின் ஹிந்துத்துவம் பற்றியும், ஹிந்து ராஷ்ட்ரம் குறித்த அவரது கண்ணோட்டம் பற்றியும், முஸ்லிம் பிரச்னை பற்றிய அவரது தெளிவான, சரியான மதிப்பீட்டைப் பற்றியும், அவரது கணிப்புகள் எச்சரிக்கைகளுக்கு பின்னணியில் இருந்த சிந்தனையோட்டத்தைக் குறித்தும், காந்திஜி போன்ற அவரது சமகாலத் தலைவர்களுடன் அவருக்கு இருந்த உறவு மற்றும் வேறுபாடுகள் பற்றியும், இதுவரை தெரியாத மற்றும் மிகக் குறைவாகவே அறியப்பட்ட பல உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். சாவர்க்கர் பற்றிய குழப்பங்களுக்கு முழுமையான தெளிவையும், திசை திருப்புவோரின் கேள்விகளுக்கு சரியான பதில்கலையும் இந்நூல் கொடுக்கிறது.
இன்றைய தலைமுறையினருக்கு நம் நாட்டின் அண்மை வரலாற்றை உள்ளபடி உண்மையாகவும், இன்றைய பாரதத்தின் பின்னணியை எந்தவிதமான சாய்வுகளும் இன்றி தெரிந்து கொள்ளும் வழிமுறையைக் காட்டுகிறது இந்த நூல்.
நூலாசிரியர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் மற்றும் இதற்கு பல வகையிலும் உதவியவர்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீரிய நூல் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
மோகன் பகவத்
1 ஜூலை 2021
***
நூல் குறித்த விவரம்:
VEER SAVARKAR: THE MAN WHO COULD HAVE PREVENTED PARTITION
Authors: Chirayu Pandit, Uday Mahurkar
First Edition: 2021
352 pages; Price: Rs. 565-
Publisher: Rupa Publications.
You shall buy this book at: Panuval
(https://www.panuval.com/veer-savarkar-the-man-who-could-have-prevented-partition-10018813)
$$$