சங்கரநயினார் கோயில் தலபுராணம் – நூல் மதிப்புரை

-சேக்கிழான்

இந்த நூல் இதுவரை பல பதிப்புகள் கண்டிருந்தாலும் செம்மையான பதிப்புக் காணவில்லை என்ற குறையை நீக்கி இருக்கிறது குகபதி பதிப்பகம். கீழவயலி அம்பிகைதாசன் அளித்த உரையுடன் சங்கரநயினார் கோயில் புராணத்தை மீளாக்கம் செய்திருக்கும் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுபோலவே ஒவ்வொரு தலபுராணமும் முழுமையாக அச்சிடப்பட்டால், நமது தமிழ் மொழி, மாநில வரலாறு செழுமையுறும் என்பதில் ஐயமில்லை.

தென் தமிழக பஞ்சபூதத் தலங்களுள், பிருத்வித் தலமான சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநயினார் ஆலயம் முதன்மையானது. கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்கனார் கோயில் சைவ- வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன், மாலவனை உடலில் ஒருபாதியாகக் கொண்டு சங்கரநாராயணராக கோமதி அம்மைக்குக் காட்சி அளித்தார் என்பது தல வரலாறு.

இத்தலத்தில் மூலவராக சங்கரநயினார் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் காலை பூஜையின்போது துளசித் தீர்த்தம் கொடுக்கிறார்கள். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது. பூஜையின்போது சிவனுக்குரிய வில்வ மாலை, பெருமாளுக்குரிய துளசி மாலையை அணிவிக்கிறார்கள்.

‘அரியும் சிவனும் ஒன்னு’ என்ற தமிழ்ப் பழமொழிக்கு நிலைக்களனாக, இக்கோயிலின் இரண்டாம் சன்னிதியில் சங்கரநாராயணரும், மூன்றாம் சன்னிதியில் கோமதி அம்மனும் அருள் பாலிக்கின்றனர். இத்தலம், 51 சக்திபீடங்களுள் ஒன்றும் கூட.

இத்தலத்து இறைவனுக்கு பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றலான (பஞ்ச பாண்டியர்) உக்கிரபாண்டிய மன்னன் இறை அசரீரியின் உத்தரவுப்படி, புன்னைவனக் காட்டைத் திருத்தி அமைத்த ஆலயமே சங்கரன்கோவிலில் இன்றுள்ள கோயிலாகும். இந்த உக்கிரபாண்டியனின் காலம் பொ.யு. 1022 ஆகும்.

இவரது காலத்துக்கு சில ஆண்டுகள் கழித்து ஊற்றுமலை அரச குடும்பத்தில் பிறந்த சீவலமாறவழுதி பாண்டியன் (பொ.யு. 1204), சங்கரநயினார் கோயில் தல வரலாற்றை இனிய தமிழ்ச் செய்யுள் நடையில் எழுதினார். சமஸ்கிருத நூல்களை (பதினெண் புராணங்கள், பவுடியோத்திரம்) ஆதார நூல்களாகக் கொண்டு இந்நூலை இயற்றி இருக்கிறார்.

சீவலமாற பாண்டியனின் ஏட்டுப் பிரதி ஊற்றுமலை அரசின் ஆவனக் காப்பகத்தில் இருந்த்து. அதனை 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அன்றைய ராணியான, இருதயாலய மருதப்ப பூபதியின் மனைவியார் கண்டு மகிழ்ந்தார். அதனை நூலாக அச்சிட விரும்பி, அரசவைக் கவிஞரான முத்துவீரப்பக் கவிராயரிடம் ஒப்படைத்தார்.

சீவலமாற பாண்டியனின் ஏட்டுப் பிரதியில் பாயிரம் (11), புராண வரலாறு (4), சங்கரநாராயணர் சருக்கம் (70), உக்கிரபாண்டியன் வழிபாட்டுச் சருக்கம் (36), தக்கனை தவம்புரிச் சருக்கம் (16), வீரசேனன் பிணிதீர்த்த சருக்கம்  (58), சயந்தன் வினை தீர்த்த சருக்கம் (15), கானவன் வீடு பெற்ற சருக்கம் (8), கண்மாடச் சருக்கம் (43) ஆகிய பிரிவுகளில் 261 பாக்கள் (கலிப்பா, வஞ்சிப்பா) இருந்தன.

அவற்றுடன் மேலும் பாயிரம் (3), நதிச் சருக்கம் (21), நாட்டுச் சருக்கம் (51), நகரச் சருக்கம் (82), புராண வரலாறு (2), தல விசேடச் சருக்கம் (29), தீர்த்த விசேடச் சருக்கம் (27), மூர்த்தி விசேடச் சருக்கம் (33) என 248 புதிய பாக்களை இயற்றி, தல வரலாற்றை முழுமை செய்தார் முத்துவீரப்பக் கவிராயர். இந்நூல் 1884ஆம் ஆண்டு முதன்முதலாக அச்சிடப்பட்டுள்ளது.

இந்த நூல் இதுவரை பல பதிப்புகள் கண்டிருந்தாலும் செம்மையான பதிப்புக் காணவில்லை என்ற குறையை நீக்கி இருக்கிறது குகபதி பதிப்பகம். கீழவயலி அம்பிகைதாசன் அளித்த உரையுடன் சங்கரநயினார் கோயில் புராணத்தை மீளாக்கம் செய்திருக்கும் நண்பர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சென்ற நூற்றாண்டில்  வாழ்ந்த மதுரை தமிழ்ச் சங்க பெரும்புலவர் மு.ரா. அருணாசலக் கவிராயர் அளித்த அரும்பதவுரை (சில சருக்கங்கள் மட்டும்) இந்நூலில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. செய்யுள் முதற்குறிப்பு அகராதி நூலின் இறுதியில் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

பழைய செய்யுள் நடையிலான இலக்கியங்கள் அருகி வருகின்றன. தமிழ் மொழியின் சிறப்புக்கு அடிகோலிய யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் அமைந்த முந்தைய தலைமுறை இலக்கியங்களின் தொடர்ச்சி அறுபடுவது, நமது தொன்மையான தமிழின் நலிவே ஆகும்.

இன்றைய கல்வித் துறையினரும் எழுத்த்தாளர்களும் யாப்பிலக்கண அடிப்படையில் செய்யுள் புனைய விரும்புவதில்லை என்பதை விட, அதற்கான தகுதி அற்றவர்களாகவும், யாப்பிலக்கணத்தை அறிய விரும்பாதோராகவும் இருக்கின்றனர் என்பதே உண்மை. இந்நிலை மாற வேண்டும்.

அதற்கு, இதுபோன்ற நூல்களின் மீள்பதிப்புகள் தூண்டுதலாக இருக்கும் என்பது சிறிய நம்பிக்கை. இதுபோலவே ஒவ்வொரு தலபுராணமும் முழுமையாக அச்சிடப்பட்டால், நமது தமிழ் மொழி மற்றும் மாநிலத்தின் வரலாறு செழுமையுறும் என்பதில் ஐயமில்லை.

***

நூல் விவரம்:

சங்கரநயினார் கோயில் தலபுராணம்
உரையாசிரியர்: கீழவயலி அம்பிகைதாசன்
பதிப்பாசிரியர்: சிவ.மணிகண்டன்

முதல் பதிப்பு: 2022
230 பக்கங்கள், விலை: ரூ. 300-

வெளியீடு:
குகபதி அச்சகம்,
8/148, சந்தைத் தெரு,
வடக்கத்தி அம்மன் கோயில் அருகில்,
கரிவலம் வந்த நல்லூர் (அஞ்சல்)
சங்கரன்கோவில் (வட்டம்)
தென்காசி (மாவட்டம்)

தொடர்புக்கு: 97870 19109 / 63840 61936 / 97872 37800

$$$

One thought on “சங்கரநயினார் கோயில் தலபுராணம் – நூல் மதிப்புரை

Leave a comment