-சேக்கிழான்

சங்கரன்கோவில் திருத்தலத்தில் உறையும் தேவி கோமதி அம்மன். சீராசை நகர் என்று அழைக்கப்படும், சைவ – வைணவ ஒற்றுமைக்குப் பாலமாகத் திகழும் இத்தலத்து அம்மையை தமது செந்தமிழால் பாடிப் பரவுகிறார், சென்ற நூற்றாண்டின் மையத்தில் சைவத்தமிழ் வளர்த்த சைவ சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளையவர்கள்.
அவர் இயற்றிய ‘கோமதி சதரத்ன மாலை’ என்னும் சிற்றிலக்கியம், நாலடிப் பாக்களால் ஆனது. கோமதி அம்மனின் பெருமைகளை விவரிக்கும் இந்த நூறு பாடல்களும் ரத்தினம் போல மிளிர்கின்றன.
இந்நூலுக்கு சைவ சித்தாந்த நன்மணி ச.ரத்னவேலன் அளித்த உரையும் ஒவ்வொரு பாடலுடனும் இடம் பெற்றுள்ளது. அமரர் பழனி ஈசான சிவாசாரிய சுவாமிகளின் ஆசியுரை நூலுக்கு மகுடமாக இலங்குகிறது. இந்நூலின் தொகுப்பாசிரியர் திரு. கரிவலம் பா.ஸ்ரீராமகிருஷ்ணன்.
இந்நூலின் சிறப்புக்கு, ஒரு சோறு பதமாக ஒரு பாடல்…
ஆறாறு தத்துவமும் ஆகிநிற்கும் பேரருளே
ஆறாறு தத்துவமும் அடக்கிநிற்கும் பேரொளியே
ஆறாறு தத்துவமும் அலைத்திடவிங்(கு) உனைமறந்தேன்
ஆறாறும் கடத்தியெனை ஆட்கொள்வாய் கோமதியே!
(பாடல்- 21)
பொருள்:
ஆத்ம தத்துவம்-24, வித்யா த்த்துவம்- 7, சிவ தத்துவம்- 5 ஆக முப்பத்தாறு தத்துவங்களை ஆக்கி அவற்றில் வியாபித்து நிற்கும் பெருங்கருணையுடைய கோமதியே! அம் முப்பத்தாறு தத்துவமும் என்னை அங்குமிங்கும் அலைத்திட அதனால் அடியேன் உன்னை மறந்தேன். ஆதலால் இத் தத்துவக் கூட்டத்தினின்றும் அடியேனை விலக்கி, என்னை உனது அடிமையாக்கிக் கொள்வாய்.
சித்தாந்த பூஷணமான பிள்ளையவர்கள், மனமுருகி, தத்துவத் தளைகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி அம்மையிடம் இறைஞ்சுவதை இப்பாடலில் காண முடிகிறது.
ஆன்மிகத் தமிழ் வளர்க்கும் கரிவலம் தோழர்களுக்கு பாராட்டுகள். இந்நூல் தமிழக மக்களின் மனம் கவர வேண்டும். இதுபோன்ற நூல்கள் புதுப்பொலிவுடன் வெளிவர வேண்டும். அதற்கு ஈசன் திருவுளம் கனிய வேண்டும்.
***
நூல் குறித்த விவரம்:
கோமதி சதரத்ன மாலை
ஆசிரியர்: பேட்டை ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை
தொகுப்பாசிரியர்: பா.ஸ்ரீராமகிருஷ்ணன்
முதல் பதிப்பு: டிசம்பர் 2020.
36 பக்கங்கள்; விலை: ரூ. 60-
வெளியீடு:
குகபதி அச்சகம், 8/148, சந்தைத் தெரு,
வடக்கத்தி அம்மன் கோயில் அருகில்,
கரிவலம் வந்த நல்லூர் (அஞ்சல்)
சங்கரன்கோவில் (வட்டம்)
தென்காசி (மாவட்டம்)
தொடர்புக்கு: 97870 19109 / 63840 61936
$$$
One thought on “கோமதி சதரத்ன மாலை- நூல் அறிமுகம்”