-சேக்கிழான்
தென்திருப்பேரை தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த தலம். இத்தலத்து இறைவனான மகரநெடுங்குழைக்காதரை அவர்கள் பலரும் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு எழுதப்பட்ட பல தமிழ் இலக்கியங்களையும் மிகவும் கடினமாக உழைத்து, ஒன்றுசேர்த்து, அரிய, புனிதமான படையலாக அளித்திருக்கிறார் திருவாளர் மகர சடகோபன்.

108 திவ்ய தேசங்களுள் ஒன்றான தென்திருப்பேரை என்னும் பேராபுரி நகர் குறித்த இலக்கியங்களின் செறிவே இந்நூல். இந்த்த் தலத்தில் வாழும் தலவகார ஜைமினீய சாமவேத வைஷ்ணவர்கள், முகில்வண்ணப் பெருமாளை தங்கள் குடும்பத்தில் ஒருவராகப் போற்றி மகிழ்கின்றனர்.
தென்திருப்பேரை தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த தலம். இத்தலத்து இறைவனான மகரநெடுங்குழைக்காதரை அவர்கள் பலரும் பாடி மகிழ்ந்திருக்கின்றனர். அவ்வாறு எழுதப்பட்ட பல தமிழ் இலக்கியங்களையும் மிகவும் கடினமாக உழைத்து, ஒன்றுசேர்த்து, அரிய, புனிதமான படையலாக அளித்திருக்கிறார் திருவாளர் மகர சடகோபன்.
வளைகுடா நாடுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உயர்பதவிகளில் பணி புரிந்துள்ள மகர சடகோபனுக்கு, தனது பூர்வீக வாசம் மறக்கவில்லை. தனது சொந்த ஊரான தென்திருப்பேரையில் உள்ள திருக்கோயிலுக்கு பல திருப்பணிகளைச் செய்ததுடன் அவர் மனம் திருப்தி கொள்ளவில்லை. தனது பூர்விகமான திருத்தலம் குறித்த அற்புதமான நூலை அளித்திருப்பதே இவருக்கு பெரும் ஆன்ம திருப்தி அளிக்கும் தெய்வீகச் செயலாக இருக்கிறது.
தனது நூலை மூன்று பாகங்களாகப் பகுத்துக்கொண்டு, 28 அத்தியாயங்களில் இலக்கியக் கதம்ப மாலையாகத் தொகுத்திருக்கிறார். வைஷ்ணவப் பெரியார்கள் பலரது ஸ்ரீமுகங்கள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. பிரம்மோற்சவ நிகழ்வுகள், ஸ்ரீ கிருஷ்ண கெருடன் தல வரலாறு உள்ளிட்ட திருத்தலம் குறித்த நூலாசிரியரின் தகவல்கள் நிறைவை அளிக்கின்றன. நூலின் இடையிடையே அற்புதமான வண்ணப் படங்கள் கண்களுக்கு விருந்தாகவும் பக்திமணம் கூட்டுவதாகவும் காட்சி அளிக்கின்றன.
இந்த நூலின் முதலிரு பாகங்களில் இடம் பெற்றுள்ள தமிழ் இலக்கியங்கள்:
- தென் திருப்பேரை திருவாய்மொழிப் பாசுரம்
- மகரநெடுங்குழைக்காதர் பாமாலை
- மகரநெடுங்குழைக்காதர் சந்தானப்பத்து
- மகரநெடுங்குழைக்காதர் இதர பாடல்கள்
- மகரநெடுங்குழைக்காதர் கலம்பகம்
- மகரநெடுங்குழைக்காதர் பிள்ளைத்தமிழ்
- மகரநெடுங்குழைக்காதர் திருப்பணி மாலை
- திருப்பேரைக் கலம்பகம்
- அம்மானை
- திருப்பேரை நாச்சியார் சோபனம்
- மகரநெடுங்குழைக்காதர் பதிகம்
- மகரநெடுங்குழைக்காதர் இரதபந்தன கவி
- மகரநெடுங்குழைக்காதர் அருளப்பாடு
- மகரநெடுங்குழைக்காதர் கீர்த்தனைகள்
- மகரநெடுங்குழைக்காதர் நாட்டுப் பாடல்கள்
- மகரநெடுங்குழைக்காதர் ஊஞ்சல் பாடல்கள்
- மங்களங்கள்
இவை அல்லாது தென் திருப்பேரை அபிநவ காளமேகம் ஸ்ரீ அனந்த கிருஷ்ணய்யங்கார் இயற்றிய, திவ்யதேசப் பாமாலை உள்ளிட்ட எட்டு படைப்புகளும் மூன்றாவது பாகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒரு திருத்தலம் குறித்தே இத்தனை புலவர்கள் இயற்றிய இலக்கியங்கள் கிடைக்கப் பெறுவதென்பது, தமிழ் மொழியும் பக்தி இயக்கமும் இணைகோடுகளாக விளங்கியதற்குச் சான்றாகும். இதேபோல அனைத்து திருத்தலங்கள் குறித்த தமிழ் இலக்கியங்கள் தொகுக்கப்படுவது காலத்தின் தேவையாகும். அதற்கான முன்னுதாரணமான நூலாகத் திகழ்கிறது ‘பேராபுரி மஹாத்ம்யம்’ நூல்.
***
நூல் குறித்த விவரம்:
பேராபுரி மஹாத்ம்யம்
தொகுப்பாசிரியர்: தென்திருப்பேரை மகர சடகோபன்
முதல் பதிப்பு: ஆகஸ்ட் 2021
400 பக்கங்கள், விலை: ரூ. 250-
வெளியீடு:
ஆர்.என்.ஆர். பிரின்டர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ், திருவல்லிகேணி, சென்னை.
தொடர்புக்கு:
பதிப்பகம்: 044- 2844 1856
திரு. மகர சடகோபன்: 97911 62595.
$$$