திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -16

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பதினாறாம் திருப்பதி...

16. துளசியை மார்பில் ஏற்ற திருவிண்ணகர்  

உப்பு எல்லாம் வேண்டாம் என்றாய் – பூமா தேவிக்காக
தப்பே இல்லாமல் மலைமேல் நின்றாய் – திருவெள்ளறையில்
எப்பொழுதும் பின்சென்றாய் என் பெருமானே,
ஒப்பே இல்லாதஅப்பனே சீனிவாசனே – நான்
முப்பொழுதும் உனைத் தேடி வருவேனே!

திருநாகேஸ்வரமே உப்பிலியப்பன் கோயில் அல்லது திருவிண்ணகர் என்று அழைக்கப்படுகிறது. மார்க்கண்டேய முனிவரின் மகளான பூமாதேவியின் அம்சமான துளசியை பெருமாள் மணம் புரிந்த தலம் இது. ஒப்பற்ற பெருமாள் என்ற பெயரில் ‘ஒப்பிலியப்பன்’ என துதிக்கப்படுகிறார். துளசிதேவியின் உப்பிலாச் சமையலை ஏற்றவர் என்பதால் ‘உப்பிலியப்பன்’ என்றும் பக்தர்கள் துதிக்கின்றனர். பெருமாளின் மார்பில் துளசி துலங்குவதற்குக் காரணமான தலம் இது. ராகு தோஷம் போக்கும் திருநாகேஸ்வரர் திருக்கோயிலும் அருகில் உள்ளது.

மூலவர்: ஸ்ரீ ஒப்பிலியப்பன் (நின்ற கோலம்-  கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்:  பூமாதேவி நாச்சியார்.
உற்சவர்: பொன்னப்பர்
ஆகமம்: வைகானஸம்
விமானம்: சுத்த ஆனந்த விமானம்
தீர்த்தம்: அஹோராத்ர புஷ்கரிணி
மங்களா சாசனம்: பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவ 9.00 மணி வரை.

எப்படிச் செல்வது?

இத்தலம் கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ.  தொலைவில் உள்ளது. பஸ்ஸில் எளிதாகச் சென்று இத்தலத்தை தரிசிக்கலாம். நவகிரகத் தலமான திருநாகேஸ்வரம் (ராகு தலம்) இதன் அருகில் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

முன்னோர்களால் இடப்பட்ட சாபம் நீங்கவும் தோஷம் நீங்கவும், நியாயமான காதல் செய்பவர்கள் அது வெற்றி பெறவும் வந்து வணங்கி நலம் பெற வேண்டிய தலம் ஆகும். 1, 10, 19, 25 தேதிகளில் பிறந்தவர்களும், 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க நலம் விரைவில் பெறலாம்.

$$$

Leave a comment