திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -12

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பன்னிரண்டாம் திருப்பதி...

12. காவிரி தவம் செய்த தலம் திருச்சேறை

காவேரிக்காக மடியில் தவழ்ந்தாய்!
கைகேயிக்காக காட்டுக்குச் சென்றாய்!
தேவகிக்காக கம்சனைக் கொன்றாய்!
யசோதையின் நந்தனே உனை தேடாதோர்
யார் உள்ளார் இவ்மூவுலகில்?
யானும் உனைத் தேடி திருச்சேறை வந்தேன்
ஞானம் அளிப்பாயே சாரநாதப் பெருமாளே!

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான போட்டியில் தோல்வியடைந்ததால் சினம் கொண்ட காவிரி தவம் செய்து பெருமாளின் அருள் பெற்ற தலம் இது. இத்தலத்தில், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஸாரநாயகி, மஹாலட்சுமி ஆகிய ஐந்து நாச்சிமார்கள் அருள் பாலிக்கின்றனர். திருச்சாரம் என்பது மருவி திருசேறை ஆகிய ஊர்.

மூலவர்: ஸ்ரீ சாரநாதன் (நின்ற கோலம் – கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்: சாரநாயகி
விமானம்: ஸார விமானம்
தீர்த்தம்: ஸார புஷ்கரிணி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை

எப்படிச் செல்வது?

கும்பகோணம் – குடவாசல்- திருவாரூர் செல்லும் வழியில், குமபகோணத்திலிருந்து  சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம். நாச்சியார்கோவிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:

ஆரோக்கியமாக இருக்கவும், பிரிந்த குடும்பம் சேரவும், வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கவும், தடங்கல் நீங்கவும், இங்கு வந்து சாரநாதப் பெருமாளை தரிசிக்க நலம் கிடைக்கும். 16, 7, 25 தேதிகளில் பிறந்தவர்களும், 2, 11, 20, 28 தேதிகளில் பிறந்தவர்களும் வந்து வணங்க வேண்டிய தலம் இது.

$$$

Leave a comment