உருவகங்களின் ஊர்வலம் -15

-பி.ஆர்.மகாதேவன்

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #15

15. எடுபிடிகளின் பாடத் திட்டம்

வாலிப வயோதிக உ.பி. அன்பர்களே…
இணையவெளி கடந்து
மைய ஊடகவெளியிலும் உங்கள் உருட்டுகளை
உலவவிட ஓர் அற்புதமான வாய்ப்பு.

யுனெஸ்கோ புகழ் உருட்டுப் பல்கலையில்
21-ஆம் பக்கப் பதக்கங்கள் பல பெற்ற
மூத்த உடன்பிறப்புகள் இளைய தலைமுறைக்கு
மரத்தடி டார்ச் லைட்டைக் கைமாற்றித் தரும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிகுந்த
கலை, ஊடகப் பயிற்சி வகுப்பு.

ஓய்வு பெறும் வயதொன்றும் ஆகிவிடவில்லை
அப்படியே வயதானாலும்
ஓய்வு பெற்று ஒதுங்கிவிடப் போவதுமில்லை.

இருந்தும்
(குடும்பத்) தொழில் வளர்ச்சி
(க்ரிப்டோ) சமூக நீதி
இவற்றுக்கெல்லாம்
ஊர் ஊராகக் கூவி
டி.வி. டி.வி.யாக உருண்டு
ஓடாய்த் தேய்வதற்கு ஈடாய்த் தருவதை
நாசூக்காகப் பெற்றுக்கொள்ள
நமக்கு நாமே கண்டுபிடித்த நாணயமான வழி.

என்ன இருந்தாலும்
கலை, இலக்கிய, ஊடக அணியினரை யாரும்
அரபு நாடுகளுக்கு அழைத்துப் போயோ,
ஆடம்பர மாளிகைகள் தந்தோ,
அழகு பார்க்கப் போவதில்லை.

குவாட்டர் பாட்டில் அடிமட்டத் தொண்டன்போல
கட்சி மாநாட்டின் வாழைத்தாரைத் திருடவும்
கண்ணியம் இடம் கொடுப்பதில்லை.
(சரி… சரி…
எல்லா இடங்களிலும் சி.சி. டி.வி பொருத்திவிடுகிறார்கள்).

அதிலும் ஆய கலைகளில்
அத்துப்படியான 69-ன்படி
நமக்குத் தரப்படும் சமோசாவில்
முந்திரிப் பருப்பு இருக்கும்படிப் பார்த்துக்கொள்பவனுக்கு
நாமும் நம்மாலான நல்லுபசாரம்
செய்யத்தானே வேண்டும்?

அப்பறம் கொள்கையைத் தாறுமாறாகப் பரப்பியும்
ஆக வேண்டியிருக்கிறது.

அதற்காகவே
கூட்டாகக் கூடிக் குலவையிடும்
இந்தப் பயிற்சி வகுப்பு.

நடப்பது நம் ஆட்சி.
நாற்பதும் குட்டிச்சுவராகப் போவதே
அதன் நற்சாட்சி.

இறைவன் மிக மிகப் பெரியவன்.
தொண்டை வறளும் முன்
கூவலுக்கேற்ற கூலி தந்துவிடுகிறான்.

*

கழகக் கண்மணிகளுக்கு
வாசிக்கக் கற்றுத் தர வேண்டியதே இல்லை.
எனினும்,
எதைச் செஞ்சாலும் பிளான் பண்ணிச் செய்யணும்
லொசக்… லொசக்…

*

முதல் பாடம் எடுக்க
முட்டி போட்டு
முண்டியடித்துக் கொண்டு வருகிறார்
ஆஸ்தான நிலைய வித்வான்.

நம் ஃபாசிஸ நடவடிக்கைகளை மறைக்க வேண்டுமா?
மிகவும் எளிது.
எதிர்த்தரப்பை எடுத்த எடுப்பிலேயே
ஃபாசிஸ்ட் என்று கூவ வேண்டும்.
அப்படியே ஷாக் ஆகிவிடுவான்.

வாங்கின காசுக்கு மேல் கூவுவது குறித்து
கூச்சமே கூடாது.
கூவல் திலகமாக வேண்டும் என்பதே
கூவல் கும்பலில் சேர்வதற்கான
அடிப்படைத் தகுதி.

பதிலுக்கு அவன் சுதாரித்துக்கொண்டு
‘நீ தான் ஃபாசிஸ்ட்’ என்று உண்மையைச் சொன்னால்
நம்மை காப்பி அடிப்பதாக ஆகிவிடும்
வீம்புக்குச் சொல்வதாக ஆகி
முனை மழுங்கிப் போய்விடும்.

ஆக, முதல் பாடம்-
நாம் செய்யும் தவறுகளை
எதிரி செய்வதாக முத்திரை குத்த வேண்டும்.

அடுத்ததாக,
ஒரு தவறு செய்பவனை
ஒன்பது தவறு செய்ததாக ஓங்கி அடிக்க வேண்டும்
அந்த ஒன்பதுக்கும் அவன் பதில் சொல்லி முடிப்பதற்குள்
அடுத்த ஒன்பதை உருட்டிவிட வேண்டும்.

அவன் நம்மை அடிப்பதையெல்லாம்
அவுட் ஆஃப் ஃபோகஸ் ஆக்க வேண்டும்.

விழற அடியெல்லாம்
மசாஜ் பண்ணுவது போல் இருப்பதாகவே
புன்முறுவல் பூக்க வேண்டும்.

செவுளில் அறை விழும்போதெல்லாம்
செல்போனை நோண்டுவதாக சீன் போட வேண்டும்.

அடி வாங்கினவனுக்குத் தான் கப்பு என்று
அலப்பறை செய்ய வேண்டும்.

வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது நம் கூவலாக இருக்க வேண்டும்.

*

அடுத்த பாடம் எடுக்க வருகிறார்
காட்சி ஊடக நெறியாளர் கண்ணடிச்சான்.

ஓநாயைவிட நாய்தான் மோசம் என்று
உருட்டுவது எப்படி?

நாய்க் கடிக்கு ஊசி இருக்கிறது.
ஓநாய்க் கடிக்கு ஊசி இல்லை.
அப்படியானால்,
நாய்தான் மோசமானவை;
ஓநாய்கள் எல்லாம் பாசமானவைதானே?
எப்பூடி…?

ஓநாய் கடித்தால் மிச்சம் வைக்காது.
எனவே
மருந்தே தேவைப்படாது.
பெரும்பாலான நாய்களுக்கு கடிக்கவே தெரியாது
கடித்தாலும் குணப்படுத்திவிட முடியும்.
அப்படியானால்
ஓநாய் தானே மோசமானது ஐயா?

இந்த நாயைத் தூக்கி வெளிய போடு…
(கறுப்புக் கூலிப் படை
உத்தரவை நிறைவேற்றுகிறது).

நம் வகுப்புகளில் கண்ணியம் முக்கியம்.
முட்டாள்கள் மட்டுமே என் பக்கம் இருந்தால் போதும்.
இதுவே நம் ஆசான் .
நமக்கு – நம்மால் -நமக்காகவே
உருவாக்கித் தந்த ஒப்பற்ற கொள்கை.

ஆக
நாய்க்கடிபட்டுத் தானே
மருத்துவமனையில் சேர்கிறார்கள்?
அப்படியானால்
நாய்தான் கடிக்கிறது.
நாய் மட்டுமே கடிக்கிறது.
எனவே ஓநாயைவிட அதுவே மோசம்.

அரைபாடி வண்டில ஏறினாலும்
கம்பியைப் பிடிக்காமல்
ஸ்டெடியா நிண்டு இதையே சொல்லணும்.

*

அடுத்ததாக
கூச்சப்படாமல் கை நீட்டுவது எப்படி?
கற்றுத் தர வருகிறார் தோழர் எல்.
(எல் ஃபார் லூசு).

தொழில்னு வந்துவிட்டால்
கூச்சமே பார்க்கக் கூடாது.

ஏற்கெனவே உண்டியல் குலுக்கி அனுபவம் இருந்தால்
இந்தக் கேள்வியே வராது.

எனவே முதலில்
அண்டர் கிரவுண்ட் சப்வேக்களில்
இருள் மூலைகளில் நிற்பவர்களுக்கு இடம் விட்டு
சற்று தள்ளி நின்று
மய்யமாக டார்ச் லைட் அடித்தபடி
கொஞ்சம் உண்டியலும் குலுக்கிவிட்டு வந்தால்
கூச்சம் போய்விடும்.

பிணமானாலும் நெற்றியில்
ஒரு ரூபாய் காயினுக்குப் பதிலாக
200 ஓவா தாளைத்தான் ஒட்ட வேண்டும்
என்ற கொள்கைப் பிடிப்பு
இதில் மிக மிக அவசியம்.

*

அடுத்ததாக
ஒரு செய்தியை எப்படி வழங்க வேண்டும் என்று
எடுத்தியம்ப வருகிறார் எல்லாம் தெரிந்த எடுபிடி.

செய்தி எதுவானாலும்
செய்தது யார் என்று பார்…

ஹிந்து செய்த நல்ல விஷயம் என்றால்
ஈ.வெ.ரா.வே காரணம் என்று சொல்ல வேண்டும்.

இஸ்லாமியர் / கிறிஸ்தவர் செய்த தீமை என்றால்
ஹிந்துப் பெயர் போட்டுச் சொல்ல வேண்டும்.
அல்லது மர்ம நபர் என்று உருட்ட வேண்டும்.

நம்மவர் செய்த தவறு அம்பலமானால்,
ஆகாய விமான நிலைய ஹிந்தி திணிப்பு தொடங்கி
ஆரிய ஊடுருவல் வரையான
டெம்ப்ளேட் திசை திருப்பல் மூலம்
சற்றும் மனம் தளராமல் சதிராட வேண்டும்.

60 %க்கு மேல் கல்வி கொடுத்த
காமராஜரைத் தோற்கடித்ததை மறைத்து
18 % பேருக்கு மட்டுமே கல்வி தந்த
பிரிட்டிஷாரைப் புகழ வேண்டும்.

கச்சத்தீவைத் தாரை வார்த்ததை மறைத்து
‘மீட்டுக் கொடு’ என்று முறுக்கிக்கொள்ள வேண்டும்.

காவிரி உரிமையை கைவிட்டுப் போகவைக்க வேண்டும்.
கடைமடை விவசாயியின்
கண்ணீரைக் காட்டிக் காட்டிக் காசாக்க வேண்டும்.
அதன் பின் கலவரமூட்ட வேண்டும்.

கடன்களை வாங்கிவிட்டு திருப்பிக் கட்ட மறுத்து
காபரே டான்ஸ் ஆடும் பண்ணையார்களுக்கு
கவரேஜ் கொடுக்க வேண்டும்.
காசு தராத கார்ப்பரேட்களைக்
கண்டபடித் திட்ட வேண்டும்.
சமோசா, டீ தருபவனுக்கெல்லாம்
‘லால் சலாம்’ போட வேண்டும்.

*

அடுத்ததாக வருகிறான்
அறிவாலய அடைப்பு எடுப்புக்காரன்.

பூஜ்ஜியங்களால் – பூஜ்ஜியங்களுக்காக
பூஜ்ஜியமாகவே உருவான கொள்கையை
கோடி மதிப்புக்கு கோபுரத்தில் ஏற்றுவது எப்படி?

ஒரு சாதனை செய்தவருக்கு
அந்தச் சாதனை மட்டுமே சொந்தம்.
ஒன்றுமே செய்யாதவனுக்கோ
அத்தனை சாதனைகளும் சொந்தம்!

ஒரு வீடு உள்ளவரின் தட்டில்
ஒரு வீட்டுச் சமையல்.
ராப்பிச்சைக்காரனின் தட்டில்
அத்தனை வீட்டின் அவியல்!

ஒற்றை மேல்ஜாதி ஆலய நுழைவுப் போராட்டத்தையும்
உள்ளூரில் தலைமை தாங்கி நடத்தியதே இல்லை.
அதனால் என்ன?
அண்டை மாநிலத்தினர் நடத்திய போராட்டத்தில்
அரைநாள் தலையைக் காட்டிவிட்டு
நமக்கு நாமே வீரர் என்று
பட்டம் சூட்டிக் கொண்டால் போதுமே!
போராடுவது முக்கியமா?
பட்டம் முக்கியமா?

ஒற்றை சமபந்தியைக்கூட நடத்திராத ஈ.வெ.ரா.வை
ஒப்புயர்வற்ற ஜாதி எதிர்ப்புப் போராளியாக்க வேண்டுமென்றால்
முதன்முதலில் நம் தேசத்தில் சமபந்தி நடத்திய
ஹிந்துத்துவர்களெல்லாம் ஜாதி வெறியர்கள் என்று
முத்திரை குத்தியாக வேண்டுமன்றோ?

அரசியல் சிறைக்கைதிகள்
அனைவருக்கும் விடுதலை கேட்டவரும்
கண்காணா தேசத்தில்
கடுஞ்சிறைவாசம் அனுபவித்தவரும் எல்லாம்
சர்வாதிகாரியிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டவர் என்று
சளைக்காமல் உருட்டினால்தானே,
ஒரு நாள் விசாரணைக்கே மூத்திரம் முட்ட
மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தவனை
ஒப்பற்ற தலைவனாகக் கொண்டாட முடியும்?

நம் கண் முன்னேதான்
மேல்ஜாதித் தெருக்களுக்குள்ளும் நுழைய விடவில்லை.
செருப்பைக் கையில் ஏந்திக் கொண்டு செல்ல வைத்தனர்.
சைக்கிளில் இறங்கிச் செல்ல வைத்தனர்.
இரட்டைக் குவளையில் குடிக்க வைக்கின்றனர்.
தனித்தனிக் கல்லறைத் தோட்டம்,
தனி மய்யத் ஜனாஸா தொழுகை.

ஆனால்,
தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த
2000 ஆண்டுகளாக இல்லாத சமத்துவத்தை
திராவிடர் தாங்கள் மட்டுமே கொண்டுவந்ததாக
அத்தனை தமிழரையும் கும்மியடிக்க வைப்பது மிக எளிது.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடிக்கு
தான் செய்யும் தவறை
மறைக்கவும் மறுக்கவும் ஒரு தத்துவம்.
பிறர் செய்யாத தவறைப்
பெருக்கவும் வெறுக்கவும் ஒரு கொள்கை.

நாம் சொல்வதை ஏற்றுக்கொண்டாலே
உயிர் முதல் தொழில்வரை பிழைக்கும்.
எதிர்த்து நின்றால்
எந்தக் கொம்பனானாலும் ஒரே முடிவுதான்.

பெண் விடுதலைப் போராளிகளான
நம் கண் முன்னேதான்
கள்ளிப் பால் ஊற்றிப் பெண் சிசுக்கள் கொல்லப்பட்டன;
நெல் மணி புகட்டப்பட்டுக் கொல்லப்பட்டன.

கன்யா ஸ்த்ரீகளின் கண்ணீர் துளிகள்
கன்னத்தில் உருளக்கூட அனுமதிக்கப்படவில்லை.

கறுப்பு பர்தா போர்த்தப்பட்டு
பொந்துக்குள் ஒளிந்துகிடக்கும் எலியைப் போல
வெளிச்சம் மிகு உலகில் இருளுக்குள்
புதையுண்ட வாழ்க்கை இன்றும் தொடரத்தான் செய்கிறது.

ஆனாலும்
கிராப்பு வெட்டு…
கருப்பையை வெட்டு என்றவனே,
பெண் விடுதலைக்கும் போராடியதாக
பொன்னெழுத்துகளில் பொறித்து வைத்திருக்கிறோம்!

காசிக் கோயிலை மீட்டுக் கட்டியதே
ஒரு கைம்பெண் தான்.
காலனிய ரெளடிகளை முதலில் எதிர்த்ததுமே
ஒரு கைம்பெண் தான்.
ஆதி கவியில் ஒருத்தி நம் ஒளவைப் பாட்டி
ஆனால்,
காலனிய தேசத்துப் போராளிகளை வீழ்த்த
கால் கேர்ள்களை அழைத்துவந்த
ஏகாதிபத்திய அங்கிள்களுக்கு
எடுபிடியாக இருப்பதில்தான் எல்லையற்ற ஆனந்தம்!

3 % பிராமணர்களுக்கு
60 % அரசு வேலை கொடுத்த பிரிட்டிஷ்காரன்தான்
பிராமணரல்லாதாரைப் புறமொதுக்கினான்.
ஆனால் அவனை எதிர்த்தால்
அந்தமானுக்கு அல்லவா அனுப்பி விடுவான்?

அரசு வேலையில் சேர்ந்த ‘ஐயரை’ எதிர்த்தாலும்
அரசு எந்திரம் அண்டர்வேரைக் கழற்றிவிடும்.
எனவே
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.

அந்த மணி அடிக்கும் பார்ப்பானே
நம் தலையில் மண் அள்ளிப் போட்டான்.
அந்த அர்ச்சனைகள் செய்யும் ஆகமக்காரனே
நம்மை அடிமைப்படுத்தினான்.
ஸ்கிரிப்ட் மாதிரி தெளிவாகிவிட்டதா,
அடிவாங்காமல் அறச்சீற்றம் கொள்வது எப்படி?

ஹிந்துக்களைப் படையெடுத்துக் கொன்ற இஸ்லாமியரெல்லாம்
ஜாதிக் கொடுமையில் இருந்து மீட்ட சமத்துவர்கள்.

மன்னரையும் செல்வந்தரையும்
கோயில் கட்டி, குளம் வெட்டி,
குடிநலன் காத்து வாழச் சொன்னவர்கள் எல்லாம்
குடி அழித்த குல்லுகப் பட்டர்கள்.

கொள்ளையடித்த வெள்ளைக்காரன்
காட்டிக் கொடுக்காமலிருக்கவும்
கடித்துக் குதறாமலிருக்கவும்தான்
நமக்குத் துண்டு பிஸ்கெட் வீசினான் என்றாலும்,
தின்ன சோத்துக்கு
நன்றி காட்டுவதுதானே நாய்களுக்கு அழகு?
அவர் குரலில் குரைப்பதுதானே நம் குலப் பெருமை!

பிராமணர்களைப் பழிக்கலாம்…
ஹிந்துக்களை இழிவுபடுத்தலாம்…
சீக்கியர்களைக் கொல்லலாம்…
நாம சூத்ரர்களைக் கொன்று குவிக்கலாம்…
தமிழர்களையும் கொல்லலாம்…
முஸ்லிம்களையும் கொல்லலாம்…
ஊழலில் திளைக்கலாம்…
கொலைகாரனுக்குப் பொன்னாடை போர்த்தலாம்….
சாராயக்கடை நடத்தலாம்.

பஞ்சமா பாதகம் செய்தாலும்
அத்தனை பேரையும் ஆதரிக்கலாம்.
ஆனால்,
கிறிஸ்தவ மத மாற்றத்தை மட்டும் தப்பு என்று
வாய் வார்த்தையாகச் சொன்னாலும்
அதோடு அவனும் காலி.
அவன் கட்சியும் காலி.

ஒரு நாய் தெரிந்துகொள்ள வேண்டிய
ஒரே விஷயம்,
எஜமானர் யார் என்பது மட்டுமே!

*

தமிழர்கள் வாளோடு பிறந்தனர்.
போலி திராவிடரான நாம்
வாலோடு பிறந்திருக்கிறோம்.

நிமிர்த்தமுடியாத நம் வாலை
எஜமான விசுவாசத்துடன்
ஆட்டிக்கொண்டேதானே இருந்தாக வேண்டும்.

நம் வாலே நம் பெருமை.
நம் பிஸ்கெட் நம் உரிமை.
நம் எஜமானர் மட்டுமே நல்ல எஜமானர்.

தெருவின் நான்கு மூலைகளில்
சிறுநீர் கழித்து வைத்து
எல்லை வகுத்திருக்கும் நம் ராஜ்ஜியத்துக்குள்
எவன் வந்தாலும்
ஒன்றாகக் கூடிக் குரைக்க வேண்டும்.
ஒன்றாகக் கூடிக் கடிக்க வேண்டும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
நம்மில்
ஒற்றுமை நீங்கிடில்
ஓட ஓட விரட்டி அடிப்பார்கள்.

எனவே
ஒன்றாகக் கூடிக் குரையுங்கள்.

ஏ… ஒன்றிய அரசே…
எங்கள் சாராய நாட்டில்
சங்கத்துக்கும் இடமில்லை…
தமிழுக்கும் இடமில்லை….

$$$

Leave a comment