சங்க செயல்முறையின் வளர்ச்சி – நூல் அறிமுகம்

-சேக்கிழான்

சங்கம்- அமைப்பு; ஸ்வயம்சேவகர் - உறுப்பினர்; ஷாகா - அடிப்படை செயல்முறை. இந்த சங்க திட்டம் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்வதை இந்நூலில் காணும் போது மகிழ்கிறோம். ஒரு மொட்டு  பூவாக மலர்வது போல,  ஒரு சிசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது போல, சங்க செயல்முறை இயல்பாக வளர்ந்தது. இதனை விவரிக்கிறது இந்நூல். ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில், இந்த நூல் வெளிவருவது மிகவும் சிறப்பு. 

சுதந்திர பாரதத்தின் மறுமலர்ச்சியில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.)  அமைப்பின் பங்கு அளப்பரியது. தேசத்தின் தேசிய, கலாச்சார, சமூக, அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கம் செலுத்தி வரும் உலகளாவிய தன்னார்வலர் அமைப்பு இது. இந்த அமைப்பு தோன்றி 98 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நூற்றாண்டை நோக்கிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயணம் தான், நமது இன்றைய பாரதத்தின் உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது. 

ஆங்கிலேயர் ஆட்சியின் போது நாகபுரியில் 1925இல் ஆர்.எஸ்.எஸ்.  தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் (டாக்டர்ஜி). அவர் மருத்துவப் பட்டம் பெற்றவர். அனுசீலன் சமிதி போன்ற புரட்சிகர இயக்கத்துடனும் காங்கிரஸ் போன்ற அரசியல் இயக்கத்துடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஆனால் அவ்விரு இயக்கங்களின் போதாமையை உணர்ந்தபோது, நாட்டின் நன்மைக்காக ஓர் இயக்கத்தை இயல்பாகத் தொடங்கினார். 

அடிமைத்தனத்தில் இருந்து நாம் விடுபட, நாம் நம்மை உணர வேண்டும்; நமது கலாச்சாரப் பெருமிதத்துடன், சுய அர்ப்பணிப்புடன், தேசபக்தியுடன் கூடியதாக சமுதாயம் மாறாத வரை, சுதந்திரம் என்பது பெயரளவிலானதாகவே இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். 

சுயமறதி, சுயநலம், தன்னம்பிக்கையின்மை, ஒற்றுமையின்மை, பலவீனம் ஆகிய நோய்களுக்கு ஒரே மருந்து தன்னலமற்ற தேசபக்தியே என்று அவர்   கண்டறிந்தார். 

தேசத்தின் நோயைக் கண்டறித்த அந்த மருத்துவர் அதற்கான சிகிச்சையாக உருவாக்கியது தான் ஆர்.எஸ்.எஸ். என்னும் பேரியக்கம்.

நாகபுரியில் நான்கைந்து சிறுவர்களுடன்  ‘விளையாட்டாக’ அவர் தொடங்கிய ஷாகா என்ற தினசரி கூடுதல் என்ற அற்புதமான  நடைமுறை, இன்று உலகளாவிய சங்க செயல்முறை ஆகி இருக்கிறது. இன்று உலகின் மாபெரும் தன்னார்வலர் இயக்கமாகவும், பாரதத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் ஆர்.எஸ்.எஸ். விளங்குகிறது. 

இந்த அமைப்பு எவ்வாறு வளர்ந்தது? ஆரம்ப காலத்தில் இதனை எவ்வாறு ஒரு சிற்பி போல டாக்டர் ஹெட்கேவார் செதுக்கினார்? அதில் சங்க உறுப்பினர்களை (ஸ்வயம்சேவகர்கள்) எவ்வாறு அவர் ஈடுபடுத்தினார்? சங்கத்தின் ஒவ்வொரு செயல்முறையும் எவ்வாறு ஸ்வயம்சேவகர்களால் வடிவமைக்கப்பட்டன? 

இந்தக் கேள்விகளுக்கான பதிலே இந்த நூல். டாக்டர்ஜி கால ஸ்வயம்சேவகரான  பாபுராவ் வராட் பாண்டே மிகவும் அற்புதமாக இந்நூலை எழுதி இருக்கிறார். 

சங்கம்- அமைப்பு; ஸ்வயம்சேவகர் – உறுப்பினர்; ஷாகா – அடிப்படை செயல்முறை. இந்த சங்க திட்டம் படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்வதை இந்நூலில் காணும் போது மகிழ்கிறோம். ஒரு மொட்டு  பூவாக மலர்வது போல,  ஒரு சிசு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வது போல, சங்க செயல்முறை இயல்பாக வளர்ந்தது. 1940இல் டாக்டர்ஜி மறைந்தார். அதற்குள் 15 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசிய இயக்கமாகி இருந்தது. இன்று உலகளாவிய இயக்கமாக உருப்பெற்று இருக்கிறது. 

இந்த மாபெரும் இயக்கத்தை நிறுவிய டாக்டர்ஜியின் சிந்தனையும், இதற்காக அவர் அளித்த கடும் உழைப்பும், இதனை நிறைவேற்ற அளித்த அர்ப்பணிப்பும், அவருடன் நின்று விடவில்லை. சங்க ஸ்வயம்சேவகர் ஒவ்வொருவரும் இதே சிந்தனை, கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார். இதுவே சங்க செயல்முறையின் வெற்றி.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அழிக்க சுயநலவாதிகளால் அரசியல் சதிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றும் சங்கத்தின் அடிப்படை அறியாது அவதூறு பேசும் கும்பல்கள் உண்டு. ஆனால் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், தேசநலனே பிரதானம் என்ற இலக்குடன் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது. 

உண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த சங்கத்தின் ஸ்வயம்சேவகர் ஆக வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஸ்வயம்சேவகர் ஆக வேண்டும் என்ற பேரார்வத்துடன்தான் சங்கம் இயங்குகிறது. 

ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டு நெருங்கும் வேளையில், இந்த நூல் வெளிவருவது மிகவும் சிறப்பு. இந்த அமைப்பின் வட தமிழக அமைப்பாளர் (பிராந்த பிரசாரக்) திரு. பிரசோபகுமார் இதனை தமிழாக்கம் செய்திருக்கிறார். இதனை விஜயபாரதம் பிரசுரம் மிகவும் சிறப்பாக வெளியிட்டிருக்கிறது. சங்க ஸ்வயம்சேவகர்களுக்கும் சங்கத்தை உணர வேண்டிய மக்களுக்கும் இனிய பாலமாக இந்நூல் திகழ்கிறது. 

***

நூல் விவரம்:

சங்க செயல்முறையின் வளர்ச்சி
மராத்தி மூலம்: பாபுராவ் வராட் பாண்டே
தமிழில்: பிரசோபகுமார்

120 பக்கங்கள்; விலை: ரூ. 100-

வெளியீடு:
விஜயபாரதம் பிரசுரம்,
12. எம்.வி.நாயுடு தெரு,
பஞ்சவடி, சேத்துப்பட்டு,
சென்னை- 600 031.

தொடர்புக்கு: +91 89391 49466

ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற:

https://vijayabharathambooks.com/books/sanga-seyilmuraiyin-valarchi/

மின்புத்தமாக (E-BOOKS) பெற: https://vbooks.in/

$$$

Leave a comment