-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது பத்தாம் திருப்பதி...

10. கம்பன் பிறந்த தெரழுந்தூர்
கம்பநாடன் பிறந்த ஊர், அம்மே காளி கம்பனுக்கு அருளிய ஊர், உபரி சரவஸின் வானத்தேரை அழுத்திய ஊர், நந்தன் யசோதா நின்ற ஊர் தேரழுந்தூரே!
தமிழுக்கு உயர்வளித்த கம்ப நாட்டாழ்வார் பிறந்த ஊர் தேரழுந்தூர். அகந்தை கொண்ட உபரிசரவஸ் மன்னனின் ஆகாயத் தேரை கண்ணன் நிலத்தில் அழுத்திய ஊர் என்பதால் ‘தேரழுந்தூர்’ என்று பெயர் பெற்றது. சிவனின் சாபத்தால் பசுவாக மாறிய பார்வதிக்கும் அவருடன் பசுக்களாக வந்த சரஸ்வதி, லட்சுமிக்கும் மேய்ப்பராக அடைக்கலம் அளித்த ஆமருவிப் பெருமாளும் இவரே. கருவறையில் 13 அடி உயரத்தில் சாளக்கிராமத்தில் வடிக்கப்பட்ட கம்பீரமான பெருமாள் அருளாசி அளிக்கிறார். பக்த பிரகலாதன், பசு வடிவில் பார்வதி ஆகியோரும் கருவறையில் உள்ளனர்.
மூலவர்: தேவாதி ராஜன் (நின்ற கோலம்)
உற்சவர்: ஆமருவியப்பன்
தாயார்: செங்கமலவல்லி தாயார்
விமானம்: கருட விமானம்
தீர்த்தம்: தர்சன புஷ்கரிணி, காவிரி நதி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார். மணவாள முனிகளால் பாடல் பெற்ற தலம்

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை
எப்படிச் செல்வது?
மாயவரம், குத்தாலம் -கோமல் செல்லும் வழியில் சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
சேவிப்பதன் பலன்கள்:
காணாமல் போனவர்கள் கிடைப்பதற்கும், காணாமல் போன பொருட்கள் கிடைப்பதற்கும், கெட்டவர்களிடம் சிக்கித் தவிப்பவர் மீள்வதற்கும் இங்கு வந்து பெருமாளை வணங்கி வேண்டியதைப் பெறலாம். திருமணத் தடை நீக்கும் தலமும் கூட. 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் வந்து வணங்க வேண்டிய தலம் இது.
$$$