-கி.சாயிநாதன்
வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது ஆறாம் திருப்பதி...

6. சிபி சக்கரவர்த்திக்கு அருளிய திருவெள்ளறை
அன்பாய் அடிவாங்க வெண்ணெய் திருடி அகிலத்தைக் காட்ட மண்தின்று அன்னை செண்பகத்துக்குப் பின்தங்கி என்னையும் ஆட்கொள்ள எழுந்தருளியுள்ள திருவெள்ளறை புண்டரீகாஷனை சரண் புகுவோமே!
50 அடி உயரமுள்ள வெண்மையான குன்றின் மீது அமைதிருப்பதால் திருவெள்ளறை என்று பெயர் பெற்றது. சிபி சக்கரவர்த்திக்கு அருளிய தலம் இது. கோட்டை வடிவில் இக்கோயில் உள்ளது.
மூலவர்: புண்டரீகாஷன் (நின்ற திருக்கோலம்), தாமரைக்கண்ணன்
தாயார்: செண்பகவல்லி, பங்கயச்செல்வி
விமானம்: விமலாக்ருதி விமானம்
தீர்த்தம்: குச, மணிகர்ணிகா, சக்ர, புஷ்கல, வராஹ, கந்தஷீர, பத்ம தீர்த்தங்கள்.
மங்களா சாசனம்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார்.
தனிச் சிறப்பு:
உத்தராயண வாசல், தட்சிணாயன வாசல் என்று இரண்டு வாசல்களைக் கொண்ட கோயில். பெருமாளைத் தரிசிக்க தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் செல்ல வேண்டும். இங்குள்ள ஸ்வஸ்திகா குளம் சிறப்பு வாய்ந்தது. பெரிய பிரகாரத்தின் தென் பகுதியில் கல் அறைகள் உள்ளன.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை.
பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
எப்படிச் செல்வது?
திருவெள்ளறை, திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் சமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது.

சேவிப்பதன் பலன்கள்:
ராகு, கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள், மன நிம்மதி தேடி அலைபவர்கள் இங்கு வந்து பெருமாளைத் தரிசிக்க நலம் பெறலாம்.
கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள தீர்த்த்த்தில் நீராடி, பெருமாளின் திருவமுதை உட்கொண்டால் மக்கட்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்களும், 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களும் இங்கு வந்து புண்டரீகாஷனை வணங்கி தங்கள் இடர்களைப் போக்கிக் கொள்ளலாம். தோஷம் இருந்தால் நீங்கப் பெறலாம்.
$$$