-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #13

13. நமக்கான போர் வியூகம்
நமக்கு வீரத்துக்குக் குறைவே இல்லை
எத்தனை எதிரிகள்…
எத்தனை தாக்குதல்கள்..
எல்லாப் பக்கங்களிலிருந்தும்…
எல்லாக் காலங்களிலும் சுற்றிவளைத்தும்…
நாம் தளரவே இல்லை.
பெரிதும் தற்காப்பு; அரிதாகத் தாக்குதல் என்பதே
என்றென்றைக்குமான நம் போர் வியூகம்.
அதிக இழப்பின்மை…
அனைத்தையும் தக்கவைத்தல்.
எதிரிகளின் ராஜ்ஜியத்தை இணைப்பது அல்ல;
நம் எல்லைகளைக் காப்பது மட்டுமே இலக்கு.
அதாவது
நம்மிடையே போர்க்குணம் உண்டு
போர் வெறி கிடையாது.
இத்தனை யுகங்கள்
இத்தனை தாக்குதலுக்குப் பின்னும்
நம் தர்மக் கொடி இன்னும் சாயாமல் பறந்து கொண்டிருக்க
நம் தற்காப்புத் தடுப்பாட்டமே முக்கிய காரணம்.
புதிதாக எதையும் கவரவில்லையே என்று பார்த்தால்
தோல்வி போலத் தோன்றக்கூடும்;
இருந்த எதையும் இழக்கவில்லை என்று பார்த்தால்
மாபெரும் வெற்றியாகவே தோன்றும்.
நல்லது
நமக்கு சரியென்று தோன்றக்கூடிய…
நமக்கு நன்மை தரும் என்று நம்புகிற…
நம் அற உணர்வுகளுக்கு உகந்ததோர்
போர்முறையில் போரிட்டு வந்திருக்கிறோம்.
ஆனால்,
ஆனால்…
போரில் ஒருவர் எந்த ஆயுதத்தை ஏந்துவது என்பதை
அவருடைய எதிரியே தீர்மானிக்கிறான்
என்ற எளிய உண்மையை நாம் மறந்து விட்டோம்.
ஆதியில்
நம் போர்கள் பெரிதும்
நமக்குள்ளே நடந்தன.
யார் தோற்றாலும்
நம் தர்மமே வென்றது.
அதன்பின் போர்கள்
நம் எதிரிகளுடன் நடந்தன.
அதிலும் நம் தர்மமே வென்றது.
இப்போது நடக்கும்போர்
இரண்டும் கலந்ததாக இருக்கிறது.
இந்தப் போர் நம் எதிரிகளுடன் தான் நடக்கிறது
ஆனால் நம்மவர்களை எதிர்த்தும்
நடத்த வேண்டியிருக்கிறது.
எதிரி நம்மவர்களைக் கொண்டே நம்மைத் தாக்குகிறான்
நாம் எதிரியைத் தாக்குவதாக நினைத்து
நம்மவர்களையே தாக்க வேண்டியிருக்கிறது.
இம்முறை நம்மில் யார் வென்றாலும்
வெற்றி பெறப் போவது எதிரியே என்றாகி வருகிறது.
இன்றைய உலகில் போர்கள்
இப்படி முற்றிலும் மாறிவிட்டன.
நாம் அதைப் புரிந்துகொள்ளவில்லை;
புரிந்துகொள்ள முடியவும் இல்லை.
இன்று போர்கள் போர்க்களத்தில் மட்டும் நடக்கவில்லை.
நாடே போர்க்களமாகிவிட்டது.
எல்லைகளில் மட்டும் எதிரிகள் முகாமிட்டிருக்கவில்லை.
நம் ஊருக்குள்ளும், படைக்குள்ளும்
ஏன் வீடுகளுக்குள்ளும் ஊடுருவி விட்டனர் எதிரிகள்.
சங்கொலி முழங்காமலே போர் ஆரம்பித்து விடுகிறது
சக்கரங்கள் உருளும் சத்தம் கேட்காமலேயே தேர்கள் விரைகின்றன
நாம் சுதாரிப்பதற்குள் அவை
நம் முன்னால் வந்து நின்று விடுகின்றன.
அல்லது
பின்னால் இருந்தும் அம்புகள் எய்யப்படுகின்றன.
தூக்கத்திலேயே நம்மவர்கள் கொல்லப்படுகிறார்கள்.
துளி ரத்தக்கறைகூட வெளியே தெரியாதவண்ணம்
துடைத்து அப்புறப்படுத்தியும் விடுகிறார்கள்.
நம் படைக்குள் எதிரி ஊடுவுவதைத் தடுக்க
நாழிகைக்கொரு கடவுச் சொல்லை நாம்
இப்போதும் உருவாக்கிக் கொண்டுதான் வருகிறோம்.
ஆனால் அவை நம் வீரர்களைச் சென்று சேர்வதற்குள்
எதிரியின் தலைவிக்குச் சென்று சேர்ந்துவிடுகிறது.
ஒவ்வொரு கடவுச் சொல் மாற்றத்தின்போதும்
ஒருபாடு எதிரிகள் நம் படைக்குள் ஊடுருவி விடுகிறார்கள்.
நம் வியூகமே நமக்குக் குழி பறிக்கிறது.
நம் பலமே நம் பலவீனமாகி வருகிறது.
நாம் வழக்கம் போல
நம் தரப்பின் ஆகச் சிறந்த போர்வீரரை
சாரதியாக்கி விட்டிருக்கிறோம்.
அவரால் அதிகபட்சம் தேரைப்
புதைகுழியில் விழாமல் தடுக்கவும்,
பரம எதிரியின் நேர் முன்னே
பாதுகாப்பான தொலைவில் நிறுத்தவும்,
கழுத்துக்குக் குறிவைக்கப்படும் பிரம்மாஸ்திரங்களில் இருந்து
காலால் அழுத்திக் காப்பாற்றவும் மட்டுமே முடிகிறது.
அவர் கையில் ஆயுதங்கள் இருந்திருந்தால்
அரை நாழிகையில் போரை முடித்துக் காட்டியிருப்பார்.
அவரை நாம் தான்
அதி துல்லியமாகத் தேர்ந்தெடுத்து
தேரோட்டியாக உட்கார வைத்துவிட்டோம்.
இடது பக்கமாகவே இழுத்துக்கொண்டு செல்லும் தேரை
வலது பக்கம் திருப்புவது மட்டுமே அவருடைய ஒரே இலக்கு.
சுற்றி வளைத்து எதிரி போர் வெறியில் முழங்க,
கிடைக்கும் ஓய்வு நேரத்திலெல்லாம் அவர் நமக்கு
பக்கம் பக்கமாக பஞ்ச சீலத்தைப்
போதித்துக் கொண்டிருக்க வேண்டி வந்துவிட்டது.
இதுகூடப் பெரிய பின்னடைவு அல்ல.
அம்பு மழை பொழிய வேண்டிய அர்ஜுனர்
அன்பு மழை பொழிந்து கொண்டிருக்கிறார்-
போர்க்களத்தின் அதி மையத்தில் நின்றுகொண்டு!
‘அனைவருடனும் சேர்ந்து
அனைவருடைய நம்பிக்கையையும் பெற்று
அனைவருக்குமான வளர்ச்சி’.
*
எதிரி வெகு சாமர்த்தியமாக
அவனுடைய அத்தனை ஆயுதக் கிடங்குகளின் முன்பாகவும்
அப்பாவிகளைக் கேடயமாக அமர வைத்திருக்கிறான்
நம் போதிசத்வ அர்ஜுனரின் எரியம்புகள்
அவர்களைப் பார்த்ததும் தாழ்ந்து விடுகின்றன.
அடுத்த நொடியே அந்த ஆயுதக் கிடங்கிலிருந்து
சீறிப் பாய்கின்றன தொடர் ஏவுகணைகள்-
நம் கோட்டைகளை நோக்கி.
(அது பாயும் நேரத்தில் அந்த அப்பாவிகள்
வெகு அருமையாக விலகி நின்று வழிவிடுவதையும்,
ஏன், அவர்கள் பின்னால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும்
ஏவுகணைத் திரியை சின்னஞ்சிறிய மெழுகுத் திரியால்
அவர்களே பற்றவைப்பதையும்
கண்டுணர்ந்து சொல்பவர்கள் மீதுதான் அது
முதலில் குறிவைக்கப்படவும் செய்கிறது).
கண்டவர் அதன் பின் விண்டிலர்.
ஒரு பக்கப் போர் தொடர்கிறது.
நம் கொடி உயரப் பறந்து கொண்டிருக்கிறது.
அதன் நிழலில் நடப்பவை
மங்கலாகத் தெரிகிறது.
இருள் போல அச்சுறுத்தும்
அந்த பிரமாண்ட நிழலில் நடந்துவருபவை
நல்லவை தானா
நமக்கானவை தானா?
*
கடிவாளத்தைக் கீழே போட்டுவிட்டு
கைக்குக் கிடைக்கும் சக்கரத்தை ஏந்தி
சாரதி களம் புக வேண்டியதில்லைதான்
ஆனால்,
எதிரியைக் காக்கும் கவச குண்டலங்களை
எதிரியாகி விட்டிருப்பதால்
அந்த சகோதரனின் கவச குண்டலங்களை
இனியும் அவன் காதில் விட்டு வைத்திருப்பது நல்லதல்ல.
அவன் தேரை இனியும்
புதைகுழியில் தள்ளாமல் இருப்பது சரியே அல்ல.
அவன் நம்மவன் என்று கருணை காட்டினால்
அவன் முதலில் அழிப்பது
நம் நாயகனாகத்தான் இருக்கும்.
அவன் நம்மவன் என்று அவனுக்குத் தெரிந்த பின்னும்
அவன் நம் பக்கம் வரப்போவதே இல்லை
அன்றைய போரிலும்
பாண்டவர்கள்தான் உண்மையில் சிறுபான்மை;
கெளரவர்கள் அல்ல.
சாரதி என்றும்
தர்மத்தின் வழி நிற்கும் சிறுபான்மைக்குத்தான்
இன்றும் வழிகாட்ட வேண்டும்.
நம் தர்மத்தை எதிர்க்க நினைக்காத
அனைவருடன் சேர்ந்து,
நம் தர்மத்தை அழிக்க நினைக்காத
அனைவருக்காகவும்
நாம் போரிடலாம்.
சாரதி ஆயுதமேந்தத் தேவையில்லை.
ஆனால்,
அர்ஜுனன் அஹிம்சையை போதிக்கக் கூடாது.
தர்மத்தின் வழி செல்லாதவரின் கழுத்தை
அவன் அறுத்தெறிந்துவிட வேண்டும்
இல்லையெனில் தர்மத்தின் கழுத்து
அறுத்து எறியப்பட்டுவிடும்.
பஞ்ச சீலம் போதிக்கப்படவேண்டிய இடம்
படுபாவிகள் கொக்கரிக்கும் போர்க்களம் அல்ல.
அதீத சலுகை பெற்ற எதிரியிடமிருந்து
அறவோன் ரூபத்தில் கவச குண்டலங்களை மீட்டாக வேண்டும்
அர்ஜுன ரூபத்தில் கழுத்தை
அறுத்து எறிந்தாக வேண்டும்.
அனைவர் என்றால்
தர்மத்தின் வழி செல்லும் அனைவர் மட்டுமே.
அடுத்தவரை அழிக்கும் அதர்மத்தைத்
தன் தர்மமாகக் கொண்டவர்
அதில் அடங்கவே மாட்டார்.
எனவே அவரை அவர் வழியிலேயே சென்று
அடக்கியாக வேண்டும்.
$$$