திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -2

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். இது இரண்டாம் திருப்பதி...

2. திருப்பாணாழ்வார் அவதரித்த திருக்கோழி

தாயாராம் கமல வள்ளிக்கு இனியவனும்
காவேரி கரையோரம் கிடப்பவனும்
பூபாரம் குறைத்தவனும் பூஜைக்கு உரியவனும்
உறையூரில் உறைபவனுமான
அழகிய மணவாளனை அணுகி பணிவோமே!

சோழர்களின் ஆரம்பகாலத் தலைநகரமான உறையூர், திருக்கோழி என்று அழைக்கப்படுகிறது. சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் ‘கோழியூர்’ என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் ‘திருக்கோழி’ என மாறிற்று. இது 108 திவ்ய தேசங்களில் இரண்டாவது தலம் ஆகும்.

மூலவர்: அழகிய மணவாளப் பெருமாள் (நின்ற கோலம்)
தாயார்:  கமலவள்ளி நாச்சியார்
அமைத்தவர்கள்: சோழ மன்னர்கள்
ஆகமம்: பாஞ்சராத்ரம்
விமானம்: கல்யாண விமானம்
தீர்த்தம்: கமல புஷ்கரிணி, சூரிய புஷ்கரிணி, குடமுருட்டி நதி
மங்களா சாசனம்: திருமங்கையாழ்வார்
சிறப்பு திருவிழாக்கள்:  நவராத்திரி, கார்த்திகையில் திருபாணாழ்வார் திருவிழா 10 நாள்.

திருத்தல சிறப்புகள்:

திருபாணாழ்வார் அவதரித்த தலம்.  இக்கோயிலில் அவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது.

திருக்கோயில் நடை திறக்கும் நேரம்: 

காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரை திறந்து இருக்கும்.

எப்படிச் செல்வது?

திருச்சியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.  டவுன் பஸ்ஸிலோ ஆட்டோவிலோ சென்று எளிதாக தரிசிக்கலாம்.

சேவிப்பதன் பலன்கள்:

கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கும் தம்பதியர் இங்கு அழகிய மணவாளனை வணங்கி வேண்டினால், ஒற்றுமை அதிகரித்து சேர்ந்து வாழ்வார்கள்.

4, 22, 31 தேதிகளில் பிறந்தவர்கள் இங்கு வந்து வணங்க மனக்கவலைகள் நீங்கும்.

3, 21, 12 தேதிகளில் பிறந்தவர்கள் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னையில் அவதிப்பட்டால், இங்கு வந்து வழிபட அது இங்கு நீங்கும்.

இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லையென்பது ஐதீகம். பக்தர்கள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

$$$

Leave a comment