திருமால் அருளும் திவ்ய தேசங்கள் -1

-கி.சாயிநாதன்

வைணவர்கள் போற்றி வழிபடும் 108 திவ்ய தேசங்கள் குறித்த இனிய தொடர் இது. அன்பர் திரு. கி.சாயிநாதன், ஒவ்வொரு திவ்யதேசம் குறித்தும் சிறிய பாடல் புனைந்திருப்பதுடன், இந்தத் தலங்கள் குறித்த சுருக்கமான குறிப்புகளையும் வழங்குகிறார். காக்கும் கடவுளான பெருமாளின் இனிய வடிவங்களை சேவிக்க இந்தத் தொடர் உதவும் என்று நம்புகிறோம்.

(சோழ மண்டல திவ்ய தேசங்கள்)

1. பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம்


ஆசிரியர் முன்னுரை

‘ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்லி, என் தாயாரான துர்கா பரமஸ்வரியை மனதார வணங்கி இத்தொடரைத் தொடங்குகிறேன்.

இவ்வுலகில் மனிதன் பக்தியை வளர்த்துக் கொள்ளாமல் ஞானத்தை அடைந்துவிட முடியாது. ஆண்டவன் மீது வளர்த்துக் கொள்ளும் பக்தியானது அவனுக்கு ஆண்டவனின் அருளை பெறச் செய்கிறது. அந்த அருளால் மனிதன் ஞானத்தை அடைகிறான். ஞானத்தை அடைந்த மனிதன் அவனுள்ளே ஆண்டவனைக் காண்கிறான். இதற்கு சிறந்த உதாரணங்கள், பன்னிரு ஆழ்வார்களின் வாழ்கையும் அவர்கள் சென்று பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் அந்தப் பாடல்களில் பாடப்பட்ட 108 திவ்ய தேசங்களும் ஆகும்.

இதனைக் கருத்தில் கொண்டே, நமது முன்னோர் ‘நீங்கள் பக்தியோடு சென்று 106 திவ்ய தேசங்களை தரிசித்தால் மீதம் இருக்கும் இரண்டு திவ்ய தேசங்களை அடையலாம்’ என்கிறார்கள். எனவே பக்தியை வளர்த்துக் கொள்ள காக்கும் கடவுளான எம்பெருமாளை தரிசிக்க அவருடைய நின்ற, அமர்ந்த, கிடந்த, அளந்த கோலங்களைக் காண இந்தத் தொடர் ஓர் எளிமையான வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

108 திவ்ய தேசங்கள் பற்றி பல நூல்கள் இருந்தாலும், இத்தொடரில் எந்தக் கோயிலுக்குச் சென்றால் என்ன பலன், எந்த எண்ணில் பிறந்தவர்கள் எங்கு செல்ல வேண்டும் என எழுதியுள்ளேன். மேலும் அந்த திருவேங்கடமுடையான் அருளால், ஆழ்வார்களின் வழியில் அவர்களின் ஆசியோடு 108 திவ்ய பாடல்களும் எழுதியிருக்கிறேன். இத்தொடர் குறித்த அன்பர்களின் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்…


மலர்விழிகள் தெற்கே மலர்ப் பாதம் கிழக்கே
அழகிய மணவாளன் அருள்கின்ற ஸ்ரீரங்கமே!
உலகெல்லாம் காக்க அருள் புரிந்த பின்னே
உலகளந்த ரங்கன் கிடக்கின்ற ஸ்ரீரங்கமே!

காவேரி கரை தாண்டா ரங்கன்
படிதாண்டாத் தாயார்
பரமபத வாசல் பூலோக வைகுண்டம் எல்லாம்
அழகிய மணவாளன் அருள்கின்ற ஸ்ரீரங்கமே!

திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலம்; இத்தலம் ‘பூலோக வைகுண்டம்’ என அழைக்கப்படுகிறது. அயோத்தி ஸ்ரீராமனின் குலதெய்வம் ஸ்ரீரங்கநாதரே. காவிரி ஆற்றின் இடையே அமைந்த தீவு நகரம் இக்கோயில் நகரம். சோழ மண்டல திவ்ய தேசங்களில் ஒன்று இது…

மூலவர்:  ஸ்ரீ ரங்கநாதர் (சயனத் திருக்கோலம்).
தாயார்:  ஸ்ரீரங்க நாச்சியார்
உற்சவர்: நம்பெருமாள், அழகியமணவாளன்
அமைத்தவர்கள்: சோழ மன்னர்கள்
ஆகமம்: பஞ்சராத்திரம்
விமானம்: பிரணவாகார விமானம்
தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரிணி, காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட 8 தீர்த்தங்கள்
தல விருட்சம்: புன்னை
மங்களா சாசனம்: பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், பொய்கையாழ்வார்.

சிறப்பு திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதேசி, பிரமோற்சவம்.

திருத்தல சிறப்புகள்:

7 மதில்கள்  சூழ்ந்த பிரமாண்டமான திருக்கோயில்.

7 நாச்சியார்கள் – ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார்.

7 உற்சவங்கள், 7 திருவடிசேவைகள், 7 கண்டுகளிக்கும் சேவைகள் என எல்லாம் ஏழு ஆகும்.

ரங்க விமானம், அசையும் கொடிமரம்:, ஸ்ரீ ராமானுஜரின் திருமேனி, தேயும் அரங்கன் செருப்பு, அரங்கனின் ஜொலிக்கும் திருக்கண்கள், வளரும் நெற்குதிர்கள்,  ஐந்து குழி மூன்று வாசல் ஆகியவையும் ஸ்ரீரங்கத்தின் 7 அதிசயங்கள்.

கம்பரால் ராமகாதை (கம்ப ராமாயணம்) அரங்கேற்றப்பட்ட இடம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் 7.15 வரை;
9.30 முதல் 12.30 வரை;
பகல் 2.30 முதல் 5.30 வரை;
இரவு 7.00 முதல் 9.00 மணி வரை.

எப்படிச் செல்வது?

திருச்சியில் இருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியில் இருந்து பஸ்ஸில் சென்றால் கோயிலின் தெற்கே கோபுர வாசலில் இறங்கிக் கொள்ளலாம்.

சேவிப்பதன் பலன்கள்:

நினைத்ததை நடத்திக் கொடுக்கக் கூடிய  தெய்வம் ஸ்ரீ ரங்கநாதர் ஆவார்.

வெள்ளியன்று சென்று விஸ்வரூப தரிசனம் செய்து வேண்டுதல் செய்தால், திருமணத் தடை நீங்கும்.

சுக்கிர தோஷம் உடையவர்கள் செல்ல வேண்டிய தலம் இது.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் அடிக்கடி ஸ்ரீரங்கரைத் தரிசிக்க தடைகள் நீங்கி வளம் பெறலாம்.

வேலையில் முன்னேற்றம் அடைய, பெரும் புகழ் பெற, பணக் கஷ்டம் நீங்க, இங்கு வந்து வணங்கி வாழ்க்கையில் திருப்பத்தைக் காணலாம்; சுகம் பெறலாம்.

$$$

எழுத்தாளர் அறிமுகம்

திரு. கி.சாயிநாதன், திருவாரூர் மாவட்டம், சிக்கலில் பிறந்தவர் (1965); பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்றவர்; தற்போது சென்னையில் வசிக்கிறார்; தனியார் நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார்; தனது பணி அனுபவம் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலும், ஆன்மிகம் தொடர்பாக தமிழில் ஒரு நூலும் எழுதியுள்ளார்; ஜோதிடம், எண்கணிதம், இலக்கியத்தில் ஆர்வம் உடையவர். தொடர்புக்கு: +91 99624 71069.

Leave a comment