நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்- நூல் அறிமுகம்

-சேக்கிழான்

வைணவர்கள் போற்றி வழிபடும் தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்டவை (மங்களா சாசனம் செய்யப்பட்டவை) 108 திவ்ய தேசங்களாகும். இந்த 108 திருப்பதிகளுக்கும் சென்று வழிபடுவது ஒவ்வொரு வைணவரின் லட்சியக் கனவாகும். இந்த தலங்கள் பற்றி தமிழில் பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல், அவற்றிலிருந்து வேறுபட்டது. 108 திவ்ய தேசங்கள் குறித்த இலக்கியப் பதிவுகள் அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்திருக்கும் அற்புத முயற்சி இது.

ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த 108  திருப்பதிகள் தேசம் முழுவதும் அமைந்துள்ளன. இவற்றில் பெருவாரியானவை தமிழகத்தில் அமைந்திருப்பது நமது பெருமிதத்துக்குரியதாகும். அந்தக் கால மன்னராட்சியின் அடிப்படையில் 108 திவ்ய தேசங்களை கீழ்க்கண்டவாறு தொகுப்பது மரபு:

  • சோழ மண்டலம்– 40
  • பாண்டிய நாடு- 18
  • மலைநாடு (கேரளம்)– 13
  • நடுநாடு– 2
  • தொண்டை நாடு– 22
  • வடநாடு– 11
  • திருப்பாற்கடல்– 1
  • திருநாடு (பரமபதம்)- 1
  • மொத்தம்- 108

இவற்றுள், திருப்பாற்கடலும், திருநாடும் மண்ணுலகில் பெருமாள் மீதான பக்தியால் நாரணனின் அருள்பெற்று விண்ணுலகில் ஏக வேண்டியவை. மீதமுள்ள 106 திருப்பதிகளும் நாம் வாழ்நாளில் தரிசிக்க வேண்டியவை.

இந்த திவ்ய தேசங்கள் குறித்து தமிழ் இலக்கியத்தில் பல்வேறு செய்யுள் நூல்கள் காலந்தோறும் வெளியாகி வந்துள்ளன. அவை அனைத்தையும் ஒரே நூலில் தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர் திரு. மகர சடகோபன்.

“பிள்ளை பெருமாள் அய்யங்கார் எழுதிய 108 திருப்பதி அந்தாதி மாதிரியான  திவ்ய தேசங்கள் குறித்த நூல்கள் எத்தனை உள்ளன என்று ஆராய்ந்த பொழுது 15 நூல்களுக்கு மேல் இருத்தாக தெரியவந்தது. அவை எளிதில் கிடைக்கும் நிலையில் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கும்பொழுது, அங்கங்கே மறுபதிப்பு செய்யாமல் காலத்தால் அழியும் நிலையில் இருப்பதை உணர்ந்தேன். மேலும் தமிழ் எழுத்துகளின் சில வடிவங்கள் பழைய நிலையில் இருப்பதால் 1980க்குப் பிறகு பிறந்தவர்கள் படிப்பது கடினம் என்பதனையும் உணர்ந்தேன்….. எனவே, திவ்ய தேசங்களைப் பற்றிய அனைத்து செய்யுள் நூல்களையும் தொகுத்து, திவ்ய தேச எம்பெருமான்களின் படங்களுடன், திவ்ய தேசங்கள் குறித்த அறிமுகக் குறிப்புடன், 108 திவ்ய தேசங்களின் களஞ்சியமாக ஒரே நூலில் கொண்டுவரலாம் என்ற எண்ணத்தின் வடிவமாக உருவாக்கப்பட்டதே இந்த தொகுப்பு நூல்”

– என்று முன்னுரையில் தொகுப்பாசிரியர் குறிப்பிட்டிருப்பது அவரது நல்நோக்கை வெளிப்படுத்துகிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்யுள் நூல்கள்:

  1. நாலாயிர பாசுரப்படி நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை –வங்கிபுரத்தாய்ச்சி
  2. திருப்பதிக் கோவை – திருவரங்கத்தமுதனார்
  3. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி – பிள்ளை பெருமாள் அய்யங்கார்
  4. 108 திருப்பதி திருப்புகழ் – பிரபந்த வித்துவான் குரவை இராமானுஜதாசர்
  5. நூற்றெட்டுத் திருப்பதியகவல் – தசாவதானம் முத்துசாமி அய்யங்கார்
  6. நூற்றெட்டுத் திருப்பதிப் பாடல்கள் – மகா வித்துவான் ரா. இராகவையங்கார்
  7. திவ்யதேச பாமாலை – அபுநவ காளமேக ஸ்ரீ அனந்த கிருஷ்ணய்யங்கார்
  8. நூற்ரெட்டுத் திருப்பதி தாலாட்டு – உபயகவி அப்பா
  9. நூற்றெட்டுத் திருப்பதி கோவை – ந.சுப்பராயப் பிள்ளை
  10. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி – திருநின்றவூர் திருமலை அத்தங்கி தாதாரியர் தொண்டன்
  11. 108 திருப்பதி வண்ண விருத்தம் (உவேசா நூலகம்)
  12. விஷ்ணுஸ்தல மான்மியம் சுருக்கம் – காசிவாசி பேரி சிவராம சாஸ்திரிகள்
  13. நூற்றெட்டு திவ்யதேசக் கீர்த்தனைகள் – மன்னார்குடி உ.வே.ஆர்.பார்த்தசாரதி அய்யங்கார்.

மேற்கண்ட நூல்கள் அனைத்தையும் அரிதின் முயன்று, பலரது அனுமதி பெற்று தொகுத்திருப்பதில் திரு. மகர சடகோபனின் கடின உழைப்பு புலப்படுகிறது. இந்நூல் மிக முக்கியமான வைணவ சமயம் சார்ந்த ஆவணமாகத் திகழ்கிறது. இவை அல்லாது, ஸ்ரீ. உ.வே.பார்த்தசாரதி அய்யங்கார், பெங்களூர் அவர்கள் தொகுத்து, மாறன் பதிப்பகம் வெளியிட்ட ‘108 திவ்யதேச ஸ்தல வரலாறு’ என்ற நூலும் 108 வண்ணப் பக்கங்களாக நூலின் இறுதியில் இணைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு. அதில், ஒவ்வொரு திருப்பதியிலும் கோயில் கொண்டுள்ல மூலவர், தாயார், கோயில் விமானம், தீர்த்தம், மங்களா சாசனம் செய்த ஆழ்வார்கள், ஸ்தலப் பெருமை ஆகியவை சுருக்கமாக தொகுக்கப்பட்டிருக்கின்றன.

நான்குனேரி ஸ்ரீ வானமாமலை மடத்தின் ஸ்ரீ மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள், திருக்குறுங்குடி திருஜீயர் மடத்தின் ஸ்ரீ ஸ்ரீ பேரருளாள ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகள் நூலுக்கு மகுடம் சூட்டுகின்றன.

இதனைப் போன்ற நூல்கள் தான் நமது பொது நூலகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் இருக்க வேண்டியவை; அரசு மனம் வைத்தால் மார்க்கமுண்டு.

நமது ஆன்மிகத் திருத்தலங்கள் அனைத்திற்கும் இதுபோன்ற இலக்கியப் பதிவுகள் தொகுக்கப்பட வேண்டும். அதற்கு இந்நூல் ஒரு முன்னுதாரணமான படைப்பாக விளங்குகிறது.

***

நூல் விவரம்:

நூற்றெட்டு திருப்பதி களஞ்சியம்
தொ.ஆ: மகர சடகோபன், தென் திருப்பேரை

முதல் பதிப்பு: ஜனவரி 2023
பக்கங்கள்: 376 + 108
விலை: ரூ. 515-

வெளியீடு:
ஆர்.என்.ஆர். பிரிண்டர்ஸ் 2& பப்ளிஷர்ஸ்,
8, தாண்டவராயன் தெரு,
திருவல்லிகேணி,
சென்னை- 5
தொலைபேசி எண்கள்: 044 - 2844 7071 / 2844 1856
(ஆசிரியரிடம் நூலைப் பெற...) திரு. மகர சடகோபன்: 97911 62595.

$$$

Leave a comment