வந்தே பாரத் வரலாறு- நூல் அறிமுகம்

-பி.ஆர்.மகாதேவன்

வந்தே பாரத் ரயிலின் சிற்பியான சுதாஷு மணி எழுதிய நூல் இது. இதனை சிறப்புற தமிழாக்கம் செய்துள்ள திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதிய அறிமுக உரை இது…

இந்திய ரயில்வே துறையின் மகத்தான சாதனை வந்தேபாரத்.

அதிக ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யும் தேசங்களில் ஒன்று இந்தியா.

ரயில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையில் உலக அளவில் முதலிடம் வகிப்பவர்களும் நாமே.

அதிக ரயில் தடங்கள் (நீளம்) அளவில் உலகில் 4வது இடமும் நாமே.

அதிக அளவு சரக்குப் போக்குவரத்தை முன்னெடுக்கும் துறை இந்திய ரயில்வே துறை.

அதிக பணியாளர்களைக் கொண்ட துறை பட்டியலில் முன்னணி வரிசையில் இந்தியாவுக்கு இடம்  

-என நம் தேசம் பல சாதனைகளைச் செய்துவந்திருக்கிறது / செய்யவும் போகிறது.

இவையெல்லாம் ஒருவகையில் அதிக மக்கள்தொகை என்ற விஷயத்தின் அடிப்படையில் நம் தேசத்துக்கு எந்த அதிக முயற்சியும் எடுக்காமலே கிடைத்துவிடும் பெருமைகள்.

இந்தியா, தானாக தனது தொழில்நுட்ப நிபுணத்துவம், அதி குறைந்த செலவில் அதிஉயர் தரம், தற்சார்பு என செய்து வருபவையே நம்முடைய உண்மையான சாதனை என்று சொல்லத் தகுந்தவை.

அப்படியான சாதனைகள் நம் தேசத்தில் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசு அமைந்த பின்னரே முழு வீச்சில் முன்னெடுக்கப்படுகின்றன.

‘ஆத்ம நிர்பார் – தற்சார்பு பாரதம், புதிய பாரதம்’,  ‘ஒரே தேசம் –  உன்னத தேசம்’ என்ற முத்திரை முழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த தேசமும் அவர் வந்த பின்னரே சிலிர்த்தெழுந்து, சாதித்துக் காட்டுவருகிறது.

யதா ராஜா… ததா ப்ரஜா…

மன்னன் எவ்வழி… மக்கள் அவ்வழி.

வந்தே பாரத் அப்படியான சாதனை கிரீடத்தில் ஒளிரும் வைரக்கல்.

உலக நாடுகள் பலவற்றிலும் இப்படியான ரயில்கள் 20-30 வருடங்களுக்கு முன்பே வந்துவிட்ட நிலையில், நம் தேசத்தில் இந்த அதிவேக, அதி நவீன, அதி செளகர்ய ரயில் ஓட நரேந்திர மோதிதான் வந்தாக வேண்டியிருந்தது.

கலாசார- பக்தி மார்க்க – வரலாற்றுச் சாதனையான ராமர் கோயில் கட்டவும் அவர்தான் வர வேண்டியிருந்தது.

தேச ஒற்றுமையைப் பலப்படுத்தும் காஷ்மீர் இணைப்பையும் அவர்தான் செய்ய வேண்டியிருந்தது.

உலகுக்கான உயிர் காக்கும் மருந்தையும் அவர் தலைமையிலான அரசினால்தான் உற்பத்தி செய்துகாட்ட முடிந்தது.

அவற்றைப் போலவே இந்த ரயில்வே துறை சார்ந்த சாதனையையும் அவர் தலைமையிலான குழுவே செய்து முடித்திருக்கிறது.

முன்னெல்லாம் ஒரு திட்டத்தை துறை சார்ந்த அதிகாரிகள் முன்வைத்தால் கொள்கை அளவில் ஒப்புதல் பெறவே குறைந்தது நாலைந்து வருடங்களாவது ஆகும். வந்தே பாரத் திட்டம் கருவாகி உருவாகி உயிராக வர வெறும் 18 மாதங்களே ஆனதென்பது, இந்திய சாதனை மட்டுமல்ல – உலக சாதனையும் கூட.

இதற்கான செலவுக்கான ஒப்புதல் என்பது, ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் கையெழுத்திடப்பட்டதென்பது பிரபஞ்சத்தில் எத்தனை உலகங்கள், அயல் கிரஹவாசிகள் இருந்தாலும் நடந்திருக்க முடியாத சாதனை (ஒருவேளை அங்கும் நரேந்திர மோதிகள் இருந்தாலொழிய).

இவ்வளவு வேகமும் தரமும் கொண்ட ஒரு ரயிலை இறக்குமதி செய்திருந்தால் இதைவிட மூன்று மடங்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அதாவது முன்னணி நாடுகளில் (லாபத்தைக் கணக்கில் கொள்ளாமல் பார்த்தால்) தயாரிப்புச் செலவுக்கு ஆகும் தொகையைவிட மிக மிகக் குறைவான தொகையில், அதே தரத்துடன் செய்துகாட்டி விட்டோம்.

அதி வேகம்…

ஒரு பெட்டிக்கும் அடுத்த பெட்டிக்கும் இடையில் சென்று வர தாராளமான இட வசதி…

அதி வேகத்தில் சென்றாலும் பயணிகளுக்கு சிறு அதிர்வோ குலுங்கலோ கூட தெரியாத வண்ணம் அற்புதமான ஷாக் அப்ஸார்பர் தொழில் நுட்பம். (முழுவதும் தண்ணீர் நிரம்பிய டம்ப்ளரை வைத்தால் கூட ஒரு சொட்டு கூட வெளியே சிந்தாத வண்ணம் அதிர்வு கட்டுப்பாடு)….

பயண நேரம் பாதியாகக் குறைப்பு….

விமானத்துக்கு இணையான அலுப்பற்ற பயண அனுபவம்…

உயர்தர கழிப்பறை வசதிகள் (பிற காங்கிரஸ் கால ரயில்களோடு ஒப்பிட்டால் இதன் அருமை புரியும்)….

மூன்றாவது முறையும் நரேந்திர மோதியே இந்த தேசத்தை ஆள வேண்டும் என்பதற்கான இன்னொரு முக்கியமான காரணம்: வந்தே பாரத்.

இந்தத் திட்டத்தின் தலைமை அதிகாரியாக இருந்த சுதான்ஷு மணி இந்தத் திட்டம் மற்றும் அவருடைய ரயில்வே துறை அனுபவம் சார்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார்.

35 வருடங்கள் ரயில்வே துறையில் இயந்திரப் பொறியியல் அதிகாரியாகப் பணியாற்றியவர்; அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐ.சி.எஃப்பின் பொது மேலாளரானார். இரண்டு வருடங்களில் பணி ஓய்வும் பெற்றார். ஆனால், அந்த கடைசி இரண்டு ஆண்டுகளில்தான், இந்த வந்தே பாரத் திட்டம் திட்டமிடப்பட்டுச் செய்து முடிக்கப்பட்டிருக்கிறது.

யதா ராஜா… ததா அதிகாரி.

நம் தேசத்தின் அனைத்து மாநிலத்தினரின் அற்புதமான பங்களிப்புடன் உருவாகியிருக்கும் இந்த வந்தே பாரத், ஒன்றுபட்ட தேசத்தின் வலிமைக்கு மிகச் சிறந்ததோர் எடுத்துக்காட்டும் கூட.

வந்தே பாரத் ரயிலைப் போல மோதியின் ஆட்சியும் அலுங்காமல் குலுங்காமல் அதி வேகத்தில் தேசத்தை ஒன்றிணைத்தபடி தன் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றாக வேண்டும்.

ஜெய் வந்தே பாரத்.

ஜெய் ஹிந்த்.

***

நூல் விவரம்:

எனது டிரெயின் - 18
வந்தே பாரத்  வரலாறு

ஆசிரியர்: சுதான்ஷு மணி
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

292 பக்கங்கள், விலை: ரூ. 350-

வெளியீடு: 
அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு: +91-928 928 1314

$$$

Leave a comment