-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #10

10. ஆடுகள் ஓநாயாக முடியாது!
யார் வேண்டுமானாலும் முதலாளியாகலாம்
ஆனால், முதலாளியாகவே ஒடுக்கியாக வேண்டும்.
லாபத்தில் ஐம்பது சதவிகிதத்தைத்
தொழிலாளிக்குக் கொடு என்று
தொழிலாளியாக இருந்து பிடித்த கொடியை –
கவட்டைக்கு இடையில் ஒளித்துக் கொண்டுவிட வேண்டும்.
வேண்டுமானால் நாய்க்கு
நான்கு பிஸ்கெட்கள் கூடுதலாகப் போடலாம்…
கட்டிப்போடும் சங்கிலியின் நீளத்தை அதிகரிக்கலாம்…
அருகருகே அமர்ந்து சாப்பிடக்கூடச் செய்யலாம்…
(அவரவர் தட்டுகளில்தான்)
அதற்கு மேல் ஏதேனும் கேட்டால்
அடித்துத் துரத்திவிட வேண்டும்.
இப்போது நீ முதலாளி!
முதலாளியாகவே நடந்து கொண்டாக வேண்டும்.
அவன் தொழிலாளி!
அப்படித்தான் நடத்தவும் பட வேண்டும்.
*
கார் ஓட்டும் டிரைவனுக்கு
காரைச் சொந்தமாகக் கொடுத்துவிட முடியுமா என்ன?
டிரைவன் என்னிக்குமே
டிரைவன் சீட்லதான் உட்காரணும்.
டிரைவன் சொந்த கார் வாங்கி முதலாளியானால்
இன்னொருத்தனைத் தேடிப் பிடித்து
டிரைவனாக்கிவிட வேண்டும்.
உலகில் டிரைவன்கள் இருந்தே தீர வேண்டும்.
டிரைவனைப் பின் சீட்டில் உட்கார வைத்து
முதலாளி ஓட்டக் கூடாது.
ஆயிரத்துல ஒருத்தனை மேல வரவிட்டு
மீதி 999 பேரையும் கீழயே இருக்க வைக்கணும்
ஆகப் பெரிய சமத்துவமெல்லாம்
அளவோடுதான் இருக்கணும்.
கொடி பிடித்துத் தான் ஆகணும்னா
போட்டி கம்பெனில கோத்துவிடறேன்.
டபுள் சம்பளம் வாங்கிக்கோ…
குழிச்சு மூடிட்டு வா…
கூடுதலா கூட்டிக் கொடுக்கறேன்.
இங்க இருக்கறவரை
நம்ம மொதலாளி
நல்ல மொதலாளின்னு மட்டும்தான் பாடோணும்.
*
யார் வேண்டுமானாலும் கிறிஸ்தவராகலாம்
ஆனால், கிறிஸ்தவர்கள் யாராகவும் ஆக முடியாது.
மதம் மாறி கிறிஸ்தவரானால் போதாது
மதம் மாற்றும் கிறிஸ்தவராகியாக வேண்டும்.
நீ மட்டும் ஜாம்பியானால் போதாது.
அடுத்தவரையும் ஜாம்பியாக்கியாக வேண்டும்.
எம்மதமும் சம்மதம்னு
அங்கிருந்து சொல்லலாம்
இங்கு வந்தால்
என் மதம் மட்டுமே சம்மதம்னு சொல்லணும்.
*
கர்த்தன் தன் விகாரமான
முகத்திலிருந்து கள்ளப் பாதிரிகளை ஜனிப்பித்தான்.
தோள்களில் இருந்து சர்வாதிகாரிகளை ஜனிப்பித்தான்.
தொடையிலிருந்து காலனிய கம்பெனிகளை ஜனிப்பித்தான்.
காலிலிருந்து மூன்றாம் உலகை ஜனிப்பித்தான்.
கால் தூசியாக பழங்குடிகளை ஜனிப்பித்தான்.
கள்ளப் பாதிரிகள் சொல்வதே உலக வேதாகமம்.
சர்வாதிகாரிகள் சொல்வதே உலகச் சட்டம்.
கொள்ளை கார்ப்பரேட்கள் செய்வதே உலக வணிகம்.
மூன்றாம் உலகம் முழுமனதுடன் சேவை செய்ய வேண்டும்.
உலக தலித்கள் பற்றி அதிக கவலை இல்லை.
பெரும்பான்மையை அழித்தாயிற்று.
எஞ்சியவற்றுக்கு வேலியிடப்பட்ட சேரிகள் கட்டித் தந்தாயிற்று.
சுதந்தர தினத்தன்று
அழிக்கப்பட்ட கலாசார, பண்பாட்டு அம்சங்களை
அலங்கார ஊர்தி அணிவரிசையில் ஆடிப் பாடியபடி
தெவசம் கொண்டாடிக் கொள்ளலாம்.
*
அமெரிக்காவில்
பாதிரியைத் திட்டலாம்…
ஜனாதிபதியைத் திட்டலாம்…
கார்ப்பரேட்டைத் திட்டலாம்…
ஜனநாயகமோ ஜனநாயகம்!
கருத்து சுதந்தரமோ சுதந்தரம்!
அமெரிக்கா உடைய வேண்டும் என்று
ஆர்ப்பரித்துப் பார்…
சுதந்தர தேவி
சுயரூபத்துடன் அரக்கியாக வெளிப்படுவாள்.
அமெரிக்காவை நீ காப்பாற்றினால்தான்
அமெரிக்கா உன்னைக் காப்பாற்றும்.
*
ஓநாய் அதன் வலிமையினால்
ஆடுகளின் ராஜாவாக இருக்கிறது.
ஆடுகளாகப் பிறப்பவை
ஆடுகளாகவே வளர வேண்டும் (100 %)
ஆடுகளாகவே மேய வேண்டும் (98 %)
ஆடுகளுக்குள்ளே புணர வேண்டும் (98 %)
ஆடுகளாகவே அறுபட வேண்டும் (100 %)
ஆடுகளுக்குள்ளே அரசன் இருக்கலாம்
ஆனால்,
ஆடுகளுக்கான அரசனாக மட்டுமே இருக்க வேண்டும்.
தப்பித் தவறி
ஓநாய்க் கூட்டத்துக்கு
மிக மிக அரிதாக அரசனாகலாம்
ஆனால்
ஓநாயாகவே ஊளையிட்டாக வேண்டும்.
$$$