-சேக்கிழான்
ஆலய வழிபாட்டின் அருமை பெருமை உணர்ந்தவர்களுக்கு அர்ச்சகக் குடியின் சிரமங்கள் தெரியும்; அர்ச்சகர்களுக்கு அவர்களும் உடனிருந்து உதவுவார்கள். அதற்கு பழனி ஈசான சிவாசாரியார் போன்றவர்களின் சரிதங்கள் இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட வேண்டும். இவரைப் போன்றவர்களின் அரும் முயற்சியால்தான் அர்ச்சகக் குடிகளுக்குத் தேவையான சிவாகமப் பயிற்சியும் அதற்குத் தேவையான அச்சிட்ட நூல்களும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றன.

தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் அர்ச்சகக் குடிகளாக இருப்பவர்கள் சிவாச்சாரியார்கள் என்று அழைக்கப்படும் ஆதிசைவர்கள். பெருமாள் கோயில்களில் பட்டர்கள் இருப்பார்கள். இவர்கள் பல தலைமுறைகளாக, வழிவழியாக இந்த தெய்வீகக் கைங்கர்யத்தை செய்து வருகின்றனர். இதற்காக முற்காலத்தில் மன்னர்களாலும் சமுதாயத்தாலும் நிவந்தங்கள் அளிக்கப்பட்டன. ஆனால், காலப்போக்கில் தேவதான நிலங்கள், இறையிலி நிலங்கள் உள்ளிட்ட நிவந்தங்கள் பலவகைகளில் பயனிழந்தன.
கோயில்களின் சொத்துகளைக் காத்து, ஆலய மேம்பாட்டுக்கு அளிக்க வேண்டிய இந்து அறநிலையத் துறையோ, அவற்றைக் கொள்ளையடிப்பதில் தான் கவனமாக இருக்கிறது. பக்தர்களின் தட்டுக் காணிக்கையும் கட்டளைதாரர்களின் உதவியும் இல்லாது போனால், இன்று பல கோயில்களில் வழிபாடே நடத்த முடியாது. ஆனால், அர்ச்சகர்களின் தட்டுகளில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையையும் பறிக்கவே அறமற்ற துறை அதிகாரம் செலுத்துகிறது (அண்மையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலுள்ள வனபத்ரகாளியம்மன் கோயில் பூசாரிகள் நால்வர் மீது அரசு கைது நடவடிக்கை எடுத்தது இங்கு நினைவுக்கு வரலாம்)..
இதுபோன்ற மோசமான சூழலிலும், ஜாதிரீதியாக மறைமுக வெறுப்பை உமிழும் நாத்திக அரசாலும் திராவிடப் பதர்களாலும் பந்தாடப்படும் கையறு நிலையிலும் கூட, தங்கள் குடிக்கு விதிக்கப்பட்ட அர்ச்சகக் கடமையை எந்தப் பிரதிபலனும் பாராமல், இறைவனே துணையென்று செய்து வருபவர்கள் ஆதிசைவர்கள் மற்றும் பட்டர்கள். பக்தர்களின் இல்லங்களில் நிகழும் வாழ்வியல் சடங்குகளில் கிடைக்கும் சன்மானமே இவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆயினும், இறைப்பணியை விடாமல் பற்றியிருக்கும் இவர்களின் நம்பிக்கையே நமது ஆலயங்களைக் காத்து வருகிறது என்று சொன்னால் மிகையில்லை.
ஹிந்து சமயம் என்று இப்போது அழைக்கப்படும் நமது பாரம்பரிய சமய (ஷண்மத) நெறிகளையும் கோயில் வழிபாட்டையும் கண்ணும் கருத்துமாகக் காத்து நிற்பவர்கள் இவர்களே. துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தில் மட்டும், அர்ச்சகர்களின் அடிப்படை மறந்து, போலிப் பகுத்தறிவுவாதத்தால் முழங்கப்பட்ட “எல்லா ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற திராவிட இயக்கப் பிரசாரம், அதன் அடிப்படை நோக்கத்தை மறைத்து பேசுபொருளாகி இருக்கிறது.
மாதம் வெறும் ஆயிரம் ரூபாய் கூட கிடைக்காத பல கோயில்கள் இன்றும் தமிழகத்தில் உண்டு. ஒருவேளை நைவேத்தியம் செய்யவும், ஒரு விளக்கு எரிக்கவும் கூட வசதியில்லாத கோயில்களும், மாபெரும் கோயில்கள் கொண்ட நமது மாநிலத்தில் இருக்கின்றன. ஆயினும், அங்கும் பிடிவாதமாக இறைப்பணி ஆற்றிவரும் அர்ச்சகக் குடிகளை கேவலப்படுத்துவதாகவே, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற துஷ் பிரசாரம் அமைந்திருக்கிறது.
இந்தப் பிரசாரத்தை முன்னெடுப்பவர்களுக்கு, அர்ச்சகக்குடிகளே ஹிந்து சமயத்தின் ஆதாரம் என்பது தெளிவாகப் புரிந்திருப்பதால் தான், அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது. கடவுள் நம்பிக்கையற்ற ஈனர்களுக்கு கோயில் வழிபாட்டில் யார் முன்னிலையில் இருந்தால் என்ன? இந்தக் கேள்வியை ஒட்டுமொத்த சமுதாயமும் கேட்கும் போதுதான் திராவிடப் புரட்டர்களின் அத்துமீறல்கள் முடிவுக்கு வரும்.
இந்த முன்கதைக்கு இப்போது தேவை என்ன என்ற கேள்வி எழலாம். ‘பழனி ஸ்ரீ ஈசான சிவாசாரிய சுவாமிகள் வாழ்வும் வாக்கும்’ என்ற இந்த நூலைப் படிக்கும்போது,, மேற்கண்ட சிந்தனைகள் அரும்பத் தொடங்கின.
ஆலய வழிபாட்டின் அருமை பெருமை உணர்ந்தவர்களுக்கு அர்ச்சகக் குடியின் சிரமங்கள் தெரியும்; அர்ச்சகர்களுக்கு அவர்களும் உடனிருந்து உதவுவார்கள். அதற்கு பழனி ஈசான சிவாசாரியார் போன்றவர்களின் சரிதங்கள், இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட வேண்டும். இவரைப் போன்றவர்களின் அரும் முயற்சியால்தான் அர்ச்சகக் குடிகளுக்குத் தேவையான சிவாகமப் பயிற்சியும் அதற்குத் தேவையான அச்சிட்ட நூல்களும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றன.
நூல் குறித்த விவரம்: பழனி ஸ்ரீ ஈசான சிவாசாரியார் சுவாமிகள் வாழ்வும் வாக்கும் தொகுப்பாசிரிரியர்: பா.ஸ்ரீராமகிருஷ்ணன் பதிப்பாசிரியர்: சிவ.மணிகண்டன் பக்கங்கள்: 318; விலை: ரூ. 500- முதல் பதிப்பு: டிசம்பர் 2023. வெளியீடு: குகபதி அச்சகம், 8/148, சந்தைத் தெரு, வடக்கத்தி அம்மன் கோயில் அருகில், கரிவலம் வந்த நல்லூர் (அஞ்சல்) சங்கரன்கோவில் (வட்டம்) தென்காசி (மாவட்டம்) அலைபேசி: 97870 19109.
தம்பிரான் தோழரான சுந்தரமூர்த்தி நாயனாரும், சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியும், கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாசாரியாரும், சந்தான குரவர்களுள் ஒருவரான அருணந்தி சிவாசாரியாரும் உதித்த குலம், ஆதிசைவகுலம். இக்குலத்தில் தோன்றியவர் தான், ஈசான சிவாசாரியார்.
நாயன்மார்களுள் இடம்பெற்ற மூன்று பெண்மணிகளுள் ஒருவரும், சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னையுமான இசைஞானியார் வம்சத்தில், சுப்பிரமணிய குருக்கள்- பாகீரதி அம்மாளின் புதல்வனாக, சென்னிமலை அருகிலுள்ள சிவன்மலையில், 1906 ஜூன் 16இல் பிறந்தார், சுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட ஈசான சிவாசாரியார். பூர்விகமான திருக்கடையூரிலிருந்து பணி நிமித்தமாக சென்னிமலை வந்த குடும்பம்.
இளமையிலேயே சென்னிமலையில் அர்ச்சகப் பணிக்குரிய அனைத்து நூல்களும் கற்றுத் தேர்ந்த ஈசான சிவாசாரியார், தனது இயல்பான தலைமைப் பண்பால், மிக விரைவில் அர்ச்சகர்களுக்கு வழிகாட்டுபவராக உயர்ந்தார். இவர் நடத்திய சரவண முனிவர் வேதாகமப் பாடசாலை பல இளம் அர்ச்சகர்களுக்கு துணை புரிந்தது.
ஆலயத்தில் தேவைப்படும் வைதிக அர்ச்சகப் பணியை ஆற்றியதுடன், வேதாகமங்களில் கரைகண்ட பண்டிதராக அவர் விளங்கியதால், இவரை நாடி பலரும் வந்து சென்றனர். இனிய இல்லற வாழ்வில் ஈடுபட்டவாறே ஆன்மிகப் பணிகளையும் தடையின்றி செய்து வந்தார். இவரது விடாமுயற்சியால் சென்னிமலை தலபுராணம் 1923இல் அச்சேறி, 1966இல் மீள்பதிப்பானது. அதேபோல, கூனம்பட்டி ஆதீன வரலாற்றையும் எழுதி வெளியிட்டார்.
திருவாவினன்குடி என்றழைக்கப்படும் பழனியில் இவரது சிவப்பணி தொடர்ந்தது. அங்கு 1941இல் பழனியில் இவர் தொடங்கிய வேதாகமப் பாடசாலை பல திறமையான அர்ச்சகர்களை உருவாக்கியது. அங்கு ‘பழனி ஆண்டவர்’ என்ற திங்கள் இதழையும் இவர் நடத்தினார். அதன் காரணமாகவே, அவரது பெயருடன் பழனி சேர்ந்துகொண்டது.
மேலும் அக்காலத்தில் வெளியான பல பத்திரிகைகளில் சைவ சமயம், வேதாகமம் தொடர்பான கட்டுரைகளை எழுதி, சமய விழிப்புணர்வுப் பணிகளையும் இவர் மேற்கொண்டார்.
தனது இடையறாத பணிகளால் அர்ச்சகக் குடியினருக்கு வழிகாட்டியதுடன், ஆலய வழிபாட்டின் சிறப்பை அனைத்து சமுதாய மக்களிடமும் நிலைநிறுத்தியவர் பழனி ஈசான சிவாசாரியார். இவரது சீடர்களாக தமிழகம் முழுவதும் புகழ் பெற்ற பல ஆன்மிகப் பெரியவர்கள் உருவானார்கள். உலகம் முழுவதிலும் பிரபலமான காங்கேயநல்லூர் கிருபானந்த வாரியார் சுவாமிகள், பழனி ஈசான சிவாசாரியாரின் சீடரே. இவருக்கு 1940-இல் குருநாதர் இட்ட தீட்சாநாமம்: வாமதேவசிவம் என்பதாகும். (இதுதொடர்பாக வாரியார் சுவாமிகள் எழுதிய தனிக் கட்டுரை இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது).
அதற்கேற்ற வகையில் தமிழகமெங்கும் மட்டுமல்லாது நாடெங்கும் பயணித்து, யாகசாலை வழிபாடு, திருக்கோயில் குடமுழுக்கு, உபந்யாசம், சமய மாநாடு, சைவதீட்சை வழங்குதல் உள்ளிட்ட தெய்வீகப் பணிகளை சிறப்புறச் செய்து வந்தார். இத்தகைய ஆன்மிக வாழ்க்கைக்கு இலக்கணமான ஈசான சிவாசாரியார், 1963 ஏப்ரல் 10இல் சிவனடி சேர்ந்தார்.
ஆன்மிகப் பணியையே தனது குலத்தொழிலாகவும், பிறருக்கு வழித்துணையாகவும் கொண்டு வாழ்ந்த பெருந்தகையான பழனி ஈசான சிவாசாரியார் குறித்த தகவல்கள் (வாழ்வு), அவரைப் பற்றிய ஆன்றோர் பெருமக்களின் கருத்துகள், அக்காலத்தில் வெளியான பத்திரிகைச் செய்திகள், அவர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் (வாக்குகள்) ஆகியவற்றின் இனிய தொகுப்பு இந்த நூல். இந்நூலின் தொகுப்பாசிரியரான ‘திருக்கருவாபுரிச் சிறுவன்’ என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பா.ஸ்ரீராமகிருஷ்ணனும், அவருடன் தோள்சேர்ந்து பணிபுரியும் பதிப்பாசிரியரான சிவ.மணிகண்டனும் பாராட்டுக்குரியவர்கள்.
ஆதிசைவர் பெருமை, ஆதிசைவ குலமான்மியம், சீடர்களின் துதிப்பாக்கள், யாகசாலை தத்துவங்கள், பல நூல்களில் பெரியவர் எழுதிய அணிந்துரைகள், அவரே எழுதிய முக்கியமான கட்டுரைகள், சமகாலத்தில் ஆன்மிகப் பணியாற்றிய பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையின் நூல்களுக்கு எழுதிய ஆசியுரைகள், மாநாடுகளில் நிகழ்த்திய உரைகளின் தொகுப்பு, புகைப்படப் பதிவுகள் ஆகியவற்றால் தொடுத்த மணம்மிகு மாலையாக இந்நூல் திகழ்கிறது. இந்நூல் வெளியிட உதவிய ஆர்வலர்களும் நமது நன்றிக்குரியவர்கள்.
நமது பாரம்பரியத்தைக் காக்கவும் மீட்கவும் பாடுபட்ட பெரியோர் ஒவ்வொருவர் குறித்தும் இதுபோன்ற வரலாற்றுப் பதிவுகள் தொகுக்கப்படுவது இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகும்.
நிறைவாக, பழனி ஈசான சிவாசாரியாரின் மறைவின்போது பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளையவர்கள் எழுதிய 10 பத்திகள் கொண்ட அஞ்சலிக் கவிதையிலிருந்து எடுத்தாண்ட இரு பத்திகளுடன் நமது இந்தப் பதிவை நிறைவு செய்வோம்:
இமயமுதற் குமரிவரை யீசாந
சற்குரு நீ இயங்கிச் சைவ
சமயபரி பாலனார்த்தஞ் சாத்திரங்கள்
பலதிரட்டித் தந்து வைத்தாய்!
யமயமவை வெளியாகி அடியேன்கண்
விளங்குமுனீ அகல லாமோ?
நமவெனநின் னடிபோற்று நாயேனப்
பேறுநுகர் நாடான் என்றோ.
சென்னிமலை அவதரித்தாய் திருப்பழனி
சென்றுறைந்தாய், சிவாக மங்க
ணன்னருப தேசித்தாய் நாடெங்கும்
சிவசமய நலமே தந்தாய்!
இன்னினிய தவப்பயனே யெங்குற்றாய்
இனியெவ்வா(று) எளியேன் உய்வேன்?
னின்னருளம் மையையிழந்த விளங்குழவி
எனவேங்கி இருகின் றேனே!
-பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்தி பிள்ளை
$$$