-பி.ஆர்.மகாதேவன்
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன....

1. மாண்பு மிகு கோச் அவர்களே!
மாண்பு மிகு கோச் அவர்களே,
ஒரு சின்னஞ்சிறிய தேக்கரண்டியில்
மிகப் பெரிய எலுமிச்சம் பழத்தை வைத்து
பத்திரமாகக் கொண்டுசென்று
வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடும்படி
தோளில் தட்டி ஆசீர்வதித்திருக்கிறீர்கள்.
நல்லது
எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும்
எங்களுக்குக் கொடுத்த வாய்ப்புக்கும் நன்றிகள் பல.
மைதானத்துக்கு ஓடோடி வந்து
உற்சாக கோஷங்கள் இட்டு
‘கமான் கமான்’ என்று கரகோஷம் எழுப்புகிறீர்கள்.
நல்லவேளை இம்முறை
யாரையும் முதுகில் தூக்கிக் கொள்ளச் சொல்லவில்லை.
போட்டி தொடங்கும் முன்
நீங்கள் தியாகம் குறித்து ஆற்றிய உரைகளையே
நான்கு குளுகோஸ் பாட்டில் குடித்ததுபோல நினைத்து
பலமேற்றிக் கொண்டிருக்கிறோம்
(எங்களுக்கு அது வெகு முன்பிருந்தே
பழகிப்போனதுதான்).
ஆனால்,
போட்டிக்கு முன்பாக எதிரிகள்
எங்கள் லேன் முழுவதும்
எண்ணெய்க் கொப்பரைகளைக் கொட்டியிருக்கிறார்கள்.
அதில் முள் கம்பிகளும்
கண்ணாடிச் சில்லுகளும்கூடப் போட்டிருக்கிறார்கள்.
அதைத் தடுக்க நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை.
எங்கள் கண்களில்
கறுப்புக் கண்ணாடியை அணிவித்திருக்கிறார்கள்.
(முள் கம்பிகள் எல்லாம் வெறும்
தட்டக் குச்சிகளைப்போல் தெரிகின்றன).
எல்லாவற்றுக்கும் மேலாக எதிரிகள்
குழிவான கரண்டியில் மிகச் சிறிய பழத்துடன்
வெற்றிக்கோட்டுக்கு
வெகு அருகில் இருந்து ஓடவிருக்கிறார்கள்.
இங்கு அவர்கள் வைப்பதே சட்டம்.
நீங்களுமே
அதை ஏற்றுக்கொண்டுதான் ஆடவே செய்கிறீர்கள்.
முயல் இப்படித்தான் ஒருமுறை…
ஆமை இப்படித்தான் ஒருமுறை… என்ற
நீதிபோதனைக் கதைகள்
எங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள்
கையில் ரத்தம் தோய்ந்த கத்திகளுடன்
களத்துக்கு வந்தார்கள்.
ஐந்து ஆண்டுக்கு முன்னால் அவர்கள்
நம்மை போட்டி மைதானம் பக்கமே வரவிடாமல்
துரத்தித் துரத்தி அடித்தார்கள்.
இப்போது போனால் போகிறதென,
ஓர் ஓரமாக ஓடித் தோற்றுக்கொள் என்று ஓட விட்டிருக்கிறார்கள்.
ஒரு கெளரவமான தோல்விக்கு
வழக்கம்போல் நீங்கள் தயாராகிவிட்டீர்கள்.
இருந்தும் எதையும் வெளிக்காட்டாமல்
வெற்றி வெற்றி என்று கூக்குரலிடுகிறீர்கள்.
ஒன் ஸ்டெப் அட் அ டைம்.
இப்போது கூட்டு வைப்பார்கள்.
நாளை சாதம் போடுவார்கள்.
அதற்கு மறு நாள் சாம்பார் ஊற்றுவார்கள்.
போட்டி வர்ணனையாளர்கள் எல்லாரும்
அவர்கள் எத்தனை மீட்டர் வித்தியாசத்தில்
வெற்றி பெறுவார்கள் என்று
மைக் முன்பாக நின்றுகொண்டு
வாதப்பிரதிவாதம் செய்துவருகிறார்கள்.
நீங்கள் எங்களுடைய கோச்தான் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை.
பல போட்டிகளில் அநாயாசமாக வெற்றிகளைக் குவித்திருக்கிறீர்கள்
என்பதிலும் சந்தேகமே இல்லை.
ஆனால்,
இந்தப் போட்டி மட்டும் ஏன்
இப்படியே ஆகிக் கொண்டிருக்கிறது?
நாங்கள் மட்டும் ஏன்
இப்படி ஆக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்?
தொடர்ந்து தோற்கும் அணியிலிருக்கும்
ஆரஞ்சு கேப் அணிந்த வீரனின்
கண்ணில் ஓர் ஓரமாகத் துளிர்த்ததை
அந்த ஆரஞ்சு கேப் கொண்டே மறைத்துக்கொள்கிறான்.
மைதானத்தின் பிரமாண்ட
ஒளித்திரையில் பார்த்திருப்பீர்கள்தானே?
அது எங்களுடைய கண்ணீர்தான்.
அந்த வீரன் நாங்கள்தான்.
உங்களுக்கு இந்த வெற்றி அவ்வளவாகத் தேவையில்லை.
ஆனால்,
எங்களுக்கு இந்த வெற்றிதானே எல்லாமுமே.
மன்னிக்கவும் மாண்பு மிகு கோச் அவர்களே,
சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
நீங்கள் எங்கள் வெற்றியில் காட்டும் அக்கறையைவிட
நாங்கள்
உங்கள் வெற்றியில் காட்டும் அக்கறை மிக மிக அதிகம்.
இதுவும் எங்களுக்குப் பழகிப் போன ஒன்றுதான்.
இறுதியாக,
எதிரிகளுக்கும் சேர்த்து ஒன்றைச் சொல்கிறோம்…
வேண்டா வெறுப்பாக வாங்கப்பட்ட வீரர்
வெற்றியைக் குவிக்கும் காலம் இது.
நாங்கள் அவனே…
இந்த முறை ஆடிக் காட்டுகிறோம்.
- குறிப்பு: தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்கு இரு நாட்கள் முன்னர் எழுதப்பட்ட கவிதை இது…
$$$