-சேக்கிழான்
கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர். தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

கருணைமிகு திருக்கருவையம்பதி
தொகுப்பாசிரியர்: பா.ஸ்ரீராமகிருஷ்ணன்
பதிப்பாசிரியர்: சிவ.மணிகண்டன்
பக்கங்கள்: 72, விலை: ரூ. 80-
முதல் பதிப்பு: டிசம்பர் 2023.
வெளியீடு:
குகபதி பதிப்பகம்,
கரிவலம்வந்தநல்லூர்- 627 753
சங்கரன்கோவில் (வட்டம்)
தென்காசி (மாவட்டம்).
நூல் கிடைக்குமிடம்: அபிராமி மெஸ், கரிவலம்வந்தநல்லூர்.
தொடர்புக்கு: 97512 61921, 97872 37800, 97870 19109.
ஆன்மிகமும் பக்தியும் செழித்து வளர்ந்த நன்னிலம் நமது தமிழகம். பாரத நாட்டில் அதிக எண்ணிக்கையிலான ஆலயங்கள் இருப்பதும் இந்த மண்ணில்தான். இங்குள்ள ஒவ்வொரு ஊரும் ஆலயங்களின் சிறப்பால் பொலிவு பெற்றவை. சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் ஜாதிதுவேஷ அடிப்படையில் பரவிய நாத்திக நச்சுக் கருத்துகளால் இந்தப் பழம்பெருமை சிறிதுகாலம் மறக்கப்பட்டுவிட்டது. ஆனால், கனலை மூடிய சாம்பலை ஊதித் தள்ளும் வகையில் ஆன்மிக அன்பர்கள் ஆங்காங்கே தங்கள் தெய்வீக அரும்பணியால் நமது மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பாரம்பரியச் சிறப்பை இளம் தலைமுறைக்கு நினைவுபடுத்தி வருகின்றனர். அந்தவகையில் வெளியாகி இருப்பதுதான் இந்த நூல்.
தமிழகத்தில் உள்ள பஞ்சபூதத் தலங்களை நாம் அறிவோம். (ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தியும் ஒரு காலத்தில் தமிழக எல்லைக்குள் இருந்ததுதான்). காஞ்சிபுரம் (மண்), திருவானைக்கா (நீர்) திருவண்ணாமலை (தீ), திருக்காளத்தி (காற்று), சிதம்பரம் (ஆகாயம்) ஆகியவையே பஞ்சபூதத் தலங்களாகப் போற்றப்படுகின்றன.
அதுபோலவே, தென்தமிழகத்திலும் பக்தர்களால் போற்றப்படும் தென்தமிழக பஞ்சபூதத் தலங்கள் அமைந்துள்ளன. அவை: சங்கரன்கோவில் (மண்), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (தீ), தென்மலை (காற்று), தேவதானம் (ஆகாயம்) ஆகியவை.
இவற்றில் அக்னித்தலமான கரிவலம்வந்தநல்லூரில் பால்வண்ணநாதர் என்ற பெயரில் ஈசன் அருள்பாலிக்கிறார். ஒப்பனையம்பாள் உடனுறைந்து ஆட்சி புரிகிறார். தென்காசிப் பாண்டியர்களில் ஒருவரான வரதுங்கராமப் பாண்டிய மன்னனால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் இது. நைடதத்தை தமிழில் வழங்கியவரும் வெற்றிவேற்கை என்ற நீதிநூலை அளித்தவருமான சடையவர்மன் அதிவீரராம பாண்டியனின் இளவலான இவரும் ஒரு தமிழ்ப் புலவர். நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இவரது ஆட்சிக்காலம்: பொ.யு. 1588 – 1612.
இந்த ஆலயம் குறித்தும், கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகளையும், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்தும் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர்.
இந்நூலை அரிதின் முயன்று தொகுத்திருப்பவர் திரு. பா.ஸ்ரீராமகிருஷ்ணன். இந்நூலின் பதிப்பாசிரியர்: திரு. சிவ.மணிகண்டன். தாங்கள் வாழும் ஊரின் தொன்மைச் சிறப்பையும் ஆன்மிகப் பெருமையையும் நூலாகப் பதிவு செய்துள்ள இவர்களின் பக்திப் பேருணர்வு பாராட்டிற்குரியது. 72 பக்கங்களிலான சிறிய நூல் எனினும், இந்நூலின் கருப்பொருள் மிகவும் பெரிது.
இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள பல பாடல்களில் மாதிரிக்கு ஒன்று கிழே…
பாடுவதுன் திருநாமம்; நாள்தோறும் பத்திசெய்து
சூடுவதுன் பொற்திருவடித் தாமரை தொண்டுசெய்து
சூடுவதுன் அடியார் திருக்கூட்டம் கூட்டத்துடன்
நாடுவதுன் நிலைகாண் கருவாபுரி நாயகனே!
-திருக்கருவை கலித்துறை அந்தாதி-57
நூலின் சிறப்புகள்:
கரிவலம்வந்தநல்லூரின் தலபுராண துதிப்பாக்கள், தலத்தின் பெயர்க்காரணம், இறைவன் மற்றும் இறைவியின் திருநாமங்கள், சூழ்ந்துள்ள பிற ஆலயங்கள், தலச் சிறப்புகள், திருத்தலம் தொடர்பான நூல்களின் பட்டியல், நூல்கள் வெளியான வரலாறு, தலத்தைப் பாடிய புலவர் பெருமக்கள், தொல்லியல் செய்திகள், பூஜை விவரங்கள், கோயிலின் அமைப்பு, ஆலய நிர்வாகம், விழாக்கள், ஆலயத்தின் வழிபாட்டுக் கட்டளைதாரர்கள் என, தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள், நூலின் சிறப்பை வெளிப்படுத்த இங்கே தரப்படுகின்றன…
- இத்தலம் மதுரையில் இருந்து திருநெல்வேலி செல்லும் நெடுஞ்சாலையில், சங்கரன்கோவிலுக்கு வடக்கே 10.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ரயிலில் வர விரும்புவோர் சங்கரன்கோவில் வந்து, அங்கிருந்து கரிவலம்வந்தநல்லூர் செல்லலாம்.
- தேவலோக ராஜா இந்திரனின் வாகனமான ஐராவதம் சாபவிமோசனம் பெற, இத்தலத்தில் பிறந்து இறைவனை வலம் வந்து ஈசன் அருள் பெற்ற தலம் என்பதால், இத்தலத்துக்கு ‘கரிவலம்வந்தநல்லூர்’ என்ற காரணப் பெயர் உண்டாயிற்று.
- இத்தலத்தின் பிற பன்னிரு பெயர்கள்: அநாதிபுரம், பாபநாசம், சித்துருவம், ஞானபாசுரம், அமுதாசலம்,சிவசக்திபுரம், ஜீவன்முக்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பாபுரம், களாவனம், கருவையம்பதி.
- இத்தலத்தின் தல விருட்சம்: களா மரம். இம்மரம் பூ பூக்கும்; ஆனால் காய்ப்பதில்லை.
- இத்தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனின் வடமொழிப் பெயர்: ஷீரவர்ணேஸ்வரர்; தமிழ்மொழி நாமம்: பால்வண்ணநாதர். பிற பெயர்கள்: முகலிங்க நாதர், கருவை நாயகன், களாவனத்தான், திருக்களாவுடையான்.
- இத்தலத்தில் ஈசனுடன் உறைந்திருக்கும் அம்பாளின் வடமொழிப் பெயர்: அதுல சௌந்தர்யம்பாள்; தமிழ்மொழி நாமம்: ஒப்பனையம்மை. பிற பெயர்கள்: ஒப்பிலாவல்லி, ஒப்பிலாநாயகி, ஒப்பிலாபூரணி.
- இத்தலம் தொடர்பான நூல்கள்: திருக்கருவை கலித்துறை அந்தாதி, திருக்கருவை வெண்பா அந்தாதி, திருக்கருவை பதிற்றுப்பத்து அந்தாதி (மூன்றும் வரதுங்க பாண்டியரால் எழுதப்பட்டவை), திருக்கருவை வெண் செந்துறைப் பாமாலை, திருக்கருவை சந்தப்பா, திருக்கருவை தலபுராணம் ஆகியவை.
- திருக்கருவையம்பதியைப் பாடிய பிற பெருமக்கள்: காஞ்சிபுரம் சிதம்பரநாத முனிவர், கவி களமேகம், கல்லல் மணிவாசக சரணாலய சுவாமிகள், அ.பிச்சையா நாவலர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மு.ரா.அருணாசலக் கவிராயர், அண்ணாமலைக் கவிராயர், நமசிவாயப் புலவர், சி.ஆ.ராமசாமி பிள்ளை (இவர் இயற்றிய முகலிங்க வெண்பா அந்தாதி, பால்வண்ணத்தந்தாதி, பால்வண்னர் பத்து, ஒப்பனையம்பாள் வருகை பத்து உள்ளிட்ட பல நூல்கள் கால ஓட்டத்தில் மறைந்துவிட்டன), திருநெல்வேலி நாடராஜ கவிராயர், யாழ்ப்பாணம் ஐயாப் பிள்ளை உள்ளிட்டோர். (இவர்கள் இயற்றிய பாடல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன).
‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்ற பழமொழிக்குச் சான்றாக இந்நூல் பொலிகிறது. ஆன்மிகத் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அடியார் பெருமக்கள் தங்கள் சொந்த ஊர்த் திருத்தலங்கள் குறித்து தொகுத்து வெளியிடுவதற்கான ஒரு முன்மாதிரியை இந்நூல் கொண்டிலங்குகிறது.
இந்நூல் போலவே, தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பாரம்பரிய திருக்கோயில்கள் குறித்த விவரங்கள் தொகுக்கப்பட வேண்டும். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழியைக் கொண்ட ஆன்மிக பூமி தமிழகம். இதன் ஆன்மிகச் சிறப்புகள் ஊர்கள் தோறும் பதிவு செய்யப்படுகையில், நாம் இடைக்காலத்தே இழந்த பழம்பெருமைமிகு வரலாறு, எதிர்காலத் தலைமுறைக்குக் கிடைக்கும்.
$$$
One thought on “கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு”