புத்தாண்டு வாழ்த்து

-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

சமய விற்பன்னரும் தமிழறிஞருமான  ‘கம்பவாரிதி’ திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள புத்தாண்டு வாழ்த்துப்பா நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

உலகமெலாம் ஒளிபெருகி உவப்பாய் மக்கள்
     உயரறத்தின் வழி நடந்து ஓங்கி வாழ 
நலமனதைத்தும் பெற்றுயிர்கள் நயந்தே எங்கும்
     நனிசிறந்து அமைதியுற நலங்கள் சேர 
தளமதனில் தீமையற தக்கோர் வாழ 
     தன்னிகரில் பெருமையுடன் தமிழர் வாழ்வு 
நிலமதெலாம் ஒளிபரப்பி நேர்மை காத்து 
     நிமிர்ந்திடுக! பிறக்கின்ற புதிய ஆண்டில்! 1

அறவொளியை ஏற்றிடுவோம் அன்பைப் பேணி
    அகிலமெலாம் நம் உறவு என்றே காப்போம்.  
உறமுடனே நம் பெரியோர் சொன்ன அந்த 
    உயர்கொள்கை அத்தனையும் பேணி வாழ்வோம் 
மறமதனை கண்டு மனம் சலியாதென்றும் 
    மல்லாடி அதைநீக்கி மகிழ்வு கொள்வோம். 
தரமுடனே நம் வாழ்வை தரணிக்காக்கி
    தலைநிமிர்ந்து புத்தாண்டில் பெருமை கொள்வோம்.  2 

தாய்மண்ணை விட்டோடி தரணியெங்கும்
    தமிழர் செலும் இழிவதனை நிறுத்தி வைப்போம். 
வாய்மணக்க நம் தமிழின் பெருமை சொல்லி 
    வற்றாத பற்றுடனே இனத்தின் மேன்மை 
மாய்ந்துடளம் வீழ்ந்தாலும் உயரச் செய்வேம். 
    மண்ணெல்லாம் நமதாக்கிப் பெருமை கொள்வோம்.
தீய்தமிழின் பெருமை சொலும் கலைகளெல்லாம் 
    திகழ்ந்திடவே புத்தாண்டில் அடிகள் வைப்போம். 3   

சுயநலத்து அரசியலால் இனத்தை வைத்துச் 
    சூதாடி இழிவு செய்யும் தலைவர் தம்மை 
பயமுறுத்தி எதிர்த்தே தான் நின்று எங்கள் 
    பழம்பெருமை தனைக் காப்போம்; பதவி மோகம் 
கயமையொடு பேணுகிற சிறியோர்தம்மை 
    கண்கானா தேசத்திற்கனுப்பி வைத்து
நயமுடைய நல்லோரைத் தேடிக் கண்டு 
    நம் தலைவர் என ஆக்கி  நலிவு தீர்ப்போம். 4

திகழுகிற புத்தாண்டில் தெளிந்த  நெஞ்சால் 
    தெய்வமதை மறவாது போற்றி நிற்போம் 
சகமனிதர் அனைவருமே உற்றார் என்று 
    சகமதனில் கைகோர்த்து மனிதம் காப்போம் 
வகைவகையாய் புத்தாடை உடுத்து நல்ல  
    வளமிகுந்த புத்தாண்டே வருக! என்போம்.
நிகரதிலா நல்வாழ்வு பெருகி மக்கள் 
    நேர்நின்று அறம்காத்து உயர்ந்து நிற்போம்! 5

$$$

Leave a comment