-ம.கொ.சி.ராஜேந்திரன்
விவேகானந்தம்150.காம் இணையதளத்தில் திரு. ம.கொ.சி.ராஜேந்திரன் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது....

மனிதன் – பரந்த விரிந்த இப்பிரபஞ்சத்தில் இறைவனால் படைக்கப்பட்ட மகத்தானதொரு ஜீவராசி, ஒரு உயிர்ப்பொருள்; இம்மண்ணில் வாழும் பலகோடி உயிர்களில் அளப்பரிய சக்தியால் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கின்ற ஆறறிவு கொண்ட உயர்திணை.
மண்ணில் தோன்றி காட்டுமிராண்டியாய்த் திரிந்து விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் முதல், விஞ்ஞானத்தால் வியத்தகு வளர்ச்சி கண்டு இயற்கையை வென்றுவிடத் துடிக்கும் இன்று வரை, மனிதனே உயிர்களின் படைப்புகளில் அதிகாரமுள்ளவனாகவும் ஆட்சி புரிபவனுமாகவும் திகழ்ந்திடத் துடிக்கிறான்.
ஒருபுறம் வளர்ச்சியின் அடையாளங்களாக விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் வெளிப்பட்டாலும், அவை தனக்குள் ஓர் எல்லை வகுத்துக்கொண்டு தான் வளர்கின்றன; அவை புறவளர்ச்சி – அதாவது மனிதனின் இப்பிரபஞ்சத்தின் மீதான ஆதிக்கத்தை அறிவிக்கும் வகையில் தான் அமைகின்றன. கருவிகளால், கண்டுபிடித்த இயந்திரங்களால், வானளாவிய வாகனங்களால், மனிதனின் புறத்தேவையினைப் பூர்த்தி செய்ய முற்படுகின்ற முயற்சிகளாகவே மாறுகின்றன. ஆனால் அவையும் முழுமையாய் முற்றுப் பெறாமல் தொடர்கின்றன.
மறுபுறம் – பரந்த பூமியில் வாழும் பல கோடி மக்கள் நாடுகளாய், மாநிலங்களாய், இனங்களாய் புற அடையாளங்களைத் தாங்கும் முயற்சியில் தங்களை வேறுபடுத்திக் கொண்டும், வேற்றுமைகளையே விரிவுபடுத்திக் கொண்டும் வாழ்வது நமக்கு உலகில் காணும் காட்சிகளாக விரிகிறது.
வேற்றுமைகளை வளர்க்கும் எண்ணங்களை விதைக்கும் செயல்களே, இவ்வுலகில் அதிகாரபூர்வமானவைகளாய் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஆண்டான்- அடிமையென்னும் போக்கினால், அதிகார போதைகளால், பொருள் முதல்வாதத்தால் நம்மிடையே அகவளர்ச்சி அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது.
புதுப் புது வார்த்தைகளால், மெருகூட்டும் வண்ண வண்ண அலங்கார சிந்தனைகளால், மனிதன் தன்னை அகவளர்ச்சிக்கு அப்பாற்பட்டு ஆடம்பரத்திற்கும், அதிகாரம், புகழ், பொருள் நுகர்வு கலாச்சாரத்திற்கும் அடிமையாகிக் கொண்டு இருப்பதைத் தான் வேதனையோடு காண முடிகிறது.
வளர்ந்த நாடுகள் உலகின் வளத்தை சுயநலமாய்க் கொள்ளையடிக்க, வளரும் நாடுகள் அப்பாவித்தனமாய் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலைதான். அன்பு இங்கு அடிமையாய் சேவகம் செய்கிறது; ஆணவம் அதிகார மமதையுடன் ஆளுமை புரிகிறது. மெய்ஞானம் மௌனமாய்ப் புன்னகை புரிகிறது; விஞ்ஞானம் மேதா விலாசத்துடன் மர்மமாய் நகர்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கும், கீழை நாடுகளுக்கும் செயற்கையான இடைவெளியை ஏற்படுத்தும் சந்தைப் பொருளாதாரத்தின் சாதகப் பயணங்களைத் தொடர்கிறது விஞ்ஞானம்.
வளர்ச்சியின் குறியீட்டை, வானத்தைக் கிழித்துக் கொண்டு பறக்கும் ஏவுகணைகளின் எண்ணிக்கையில் அளவிடுவதா? பிரமாண்டமான வானத்தை முட்டும் கோபுரங்களின் உயரங்களைக் கொண்டு அளவிடுவதா? சுனாமி எனும் ஆழிப் பேரலைச் சீற்றத்தாலும், பூகம்பம் என்னும் பூமி விடும் வெப்ப மூச்சாலும் தனது ஆக்ரோஷத்தைக் காட்டும் இயற்கையன்னையை ஆளவும் அடிமைப்படுத்தவும் முயல்வதா? எது உண்மையான வளர்ச்சி?
‘சர்வே பவந்து சுகின: ‘ , ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ – பாரத தேசத்தின் முத்திரை வார்த்தைகள் – மந்திர சக்தி படைத்தவையாய் நம் ரிஷிகளின் சிந்தனைகளிலிருந்து வெளிப்பட்டவை அல்லவா?
புறவளர்ச்சி – உலகாயத வாதத்தைச் சார்ந்தது; அகவளர்ச்சி – மனதை, மெய்ஞானத்தைச் சார்ந்தது; பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றிய மனிதன், பஞ்ச பூதங்களையே தெய்வமாக வணங்கிட வேண்டியவன் அல்லவா? பஞ்சங்களையும், பகட்டுத்தன்மைகளையும் பேராசை நெருப்புகளால் வளர்த்ததை அணைக்க அல்லவோ நாம் முயல வேண்டும்?
இதோ! உலகிற்கு பாரத தேசம் அறைகூவல் விடுக்கிறது- சுவாமி விவேகானந்தரின் பெயரால்.
தனது ஆன்மிக ஒளியினால், இருண்டு வரும் உலகத்தின் துயர்களை, மனித உள்ளங்களின் அறியாமையை, ஆணவப் போக்கை விரட்டிய தனது ஆயிரமாயிரம் ஒளிக்கிரணங்களால் பிரகாசம் தர உலக மக்களை வாஞ்சையுடன் மீண்டும் அணைக்கிறது பாரதம்.
சுவாமி விவேகானந்தர்…
கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நமது புனிதமான பாரத தேசத்தின் கோடிக் கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் மந்திர பெயர்ச்சொல்!
பண்டைய கால ரிஷிகள் புகட்டிய உன்னதக் கருத்துக்களை நமது உள்ளங்களில் – ஏன், உலகெங்கும் வாழும் மக்களின் சிந்தனைகளை தன் வாழ்க்கையால் செதுக்கிய சிற்பி!
பழமையும், புதுமையும் இணைத்து பாரதத்திற்கு புதிய வலிமையூட்டிய நவீன சீர்திருத்தத் துறவி!
இருண்டு கிடந்த தேசத்தைத் தட்டி எழுப்பி எங்கும் ஒளிக்கீற்றுக்களைப் பரப்பி புத்துணர்வு பாய்ச்சிய இளைய சூரியன்!
இத்தகைய பெருமைகளை தனக்குள் கொண்டு கம்பீரமாய் நம்முன் நினைவுக்கு வருபவர் சுவாமி விவேகானந்தர்.
காலமகள் தன்னுள் பலகோடி உயிர்களை – ஜீவ ராசிகளைத் தோற்றுவித்து, வாழவைத்து, பின்னர் மடியவைக்கும் பெரும் பணியைச் செய்கிறாள். இருந்தாலும் சில பேரைத் தான் தனது வரலாற்றில் பதிவு செய்து கொள்கிறாள். அப்படிப்பட்ட பதிவால் நிறைவும் அடைகிறாள். வாழ்வாங்கு வாழ்ந்த அத்தகையவர்களை உலகிற்கு மகான்களாகவும் அடையாளம் காட்டுகிறாள். அந்த மகான்களே பின்னர் தாங்கள் பிறந்த மண்ணிற்கு வழிகாட்டிகளாகவும் அடையாளங்களாகவும் மக்கள் மனதில் என்றும் நிலைபெற்று வாழ்கிறார்கள்.
இந்த வரலாற்று நாயகர்களின் வரிசைகளில், நம் தேசத்து மக்களிடையே வீரத்திற்கும் தேசத்திற்கும் அடையாளமாகிப் போனவர்களில் தலையாயவர்; ஆன்மிகத்தையும் அறிவியலையும் இணைத்து புதிய பரிமாணத்தை கொடுத்த புரட்சியாளர்; இனிவரும் காலங்களில் நாம் வணங்கும் தெய்வங்களாக தரித்திர நாராயணர்களை வழிபடச் செய்த சமுக சீர்திருத்தவாதி; சோர்ந்து கிடந்த சமுதாயத்தை தனது மொழிகளால், சிந்தனைகளால், தனது வாழ்க்கையால் தட்டி எழுப்பிய தேசபக்த துறவி…
தான் செல்லும் இடங்களில் எல்லாம் நம் மண்ணின் பெருமை மிகு பண்பாட்டைப் பதிவு செய்து நம் பாரம்பரியத்தைப் பற்றிய பெருமித உணர்வை வளர்த்த தேசபக்தர்; மோட்சத்தை அடைவதையே நோக்கமாக கொண்ட மத சிந்தனையை மாற்றி மக்கள் சேவைப் பணி மூலம் இறைவனை அடைய வழிகாட்டிய நவீன புருஷர். குறைந்த காலங்களில் வாழ்ந்து, நிறைந்த வாழ்க்கைக்கான நெறிகளால் புதுமைகளைப் புகுத்திய புதுமைவாதி…
– இவ்வாறெல்லாம் வெறும் வார்த்தைகளால் சுவாமிஜியின் பெருமைகளை, அசாத்தியமான செயல்களை சொல்லிவிடத் தான் முடியாது. எனினும், அத்தகு நம் வரலாற்று நாயகனை, வீரத்துறவியை எண்ணுவதன் மூலம் நமக்கு உத்வேகமும் உற்சாகமும் ஏற்படும் என்றால் மகிழ்ச்சி தானே?
இன்று உலகம் ஒருபுறம் அசுர வேகத்துடன் விஞ்ஞானத்தால் வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதே சமயம் இன்னொரு புறம், உலகில் உள்ள மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சக்திகள், வேற்றுமை வளர்க்கும் அமைப்புகளால் அதே அசுர வேகத்துடன் நாம் அழிவையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதன் முடிவுதான் என்ன? விடிவுதான் என்ன?
இருட்டைப் போக்கும் ஒரு ஒளிக்கீற்று, அதுவும் நம் முன் தோன்றுகிறது. தன்னுள் அணைக்க முடியாத வீரத்துடன் புறத்தில் பொலிவுடனும், தேஜஸு டனும் கம்பீரமாய் காட்சி அளிக்கும் சுவாமி விவேகானந்தர் தான் அந்த நம்பிக்கை ஒளி ஊட்டும் நட்சத்திரம்…
தான் பிறந்த பாரதத்திற்கு ஒளியூட்டி, நம் தர்மத்திற்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய மகான் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டு ஜனவரி 12- 2013 துவங்குவதும், நாம் இக்காலகட்டத்தில் வாழ்வதும் நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயம் அல்லவா?
சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க சிஷ்யை சகோதரி கிறிஸ்டி இப்படி சொன்னார் :
“சுவாமியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் கடவுளால் ஒருமுறை அருளாசி பெற்றவர்கள்; அவருடன் பழகியவர்கள் கடவுளால் இருமுறை அருளாசி பெற்றவர்கள்; அவருடன் சேர்ந்து அவரது பணிகளை செய்தவர்கள் கடவுளால் மூன்று முறை அருளாசி பெற்றவர்கள்”.
– இந்த நிதர்சனமான, சத்தியமான வார்த்தையை நிஜமாக்கும் வாய்ப்பு நமக்கு கடவுள் அருளால் வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர் யுவசக்தி தனது வலிமையால் ஒன்றுகூடி பாரத தேசத்தை உயர்த்த தனது தோள் தரட்டும்!
மகளிர் சக்தி தனது பொறுமையால், தாய்மையால் நம் தேசத்தின் பண்பாட்டைக் காத்திட தனது கரங்களைத் தரட்டும்!
அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் தங்கள் ஆக்கபூர்வமான எண்ணங்களால், எழுத்துக்களால் இப்புண்ணிய பூமியின் பெருமைகளை உணர்ந்திட, தங்கள் உள்ளங்களை சமர்ப்பணமாக்கட்டும்!
இந்த மண்ணின் இதயம் கிராமங்கள். கிராம மக்கள் நமது பாரம்பரிய மரபுகளைக் காப்பதோடு, என்றும் அழியாத நம் தேசத்தின் வேர்களுக்கு நீர் ஊற்ற முன்வரட்டும்!
வனவாசி என்று அழைக்கப்படும் மலைகளின் மைந்தர்கள், விட்டுவிடாது தொடரும் பெருமைமிகு நமது கலாச்சார விழுமியங்களுடன் நம் தர்மத்தைக் காக்கும் வேடர்களாகச் செயல் புரியட்டும்!
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த தின ஆண்டுவிழாவை ஒட்டி ‘தேசிய சிந்தனைக் கழகம்’ இந்த இணையதளத்தைத் துவங்கியுள்ளதன் நோக்கம் இதுவே. இந்த ஆண்டு முழுவதும் நிகழும் விழா கொண்டாட்டங்களுக்கு ஒரு பதிவகமாகவும், மக்கள் சிந்தனையின் தொகுப்பாகவும் இத்தளம் செயல்படும்.
எந்த ஒரு செயலும் கூட்டு முயற்சியால் தான் வெற்றி பெறுகிறது. இந்தத் தளம், சுவாமி விவேகானந்தர் அமர்ந்துள்ள திருத்தேர். தமிழக ரத வீதிகளில் இதை அற்புதத் தேரோட்ட விழாவாக மாற்றுவது நம் அனைவரின் பொறுப்பு.
150 ஆண்டுகளுக்கு முன்னர் பாரதத்தில் உதித்த அந்த ஒளிக்கீற்று, உலகுக்கு வழிகாட்ட மீண்டும் சுடர் விடுகிறது. அந்தச் சுடரை நாடெங்கும் ஏற்றுவோம். உலகை சுத்திகரிக்கும் பணி நம்மிடமிருந்து துவங்கட்டும்!
குறிப்பு:
திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், பூர்வ சைனிக் சேவா பரிஷத்தின் மாநில அமைப்பாளர்; சமூக சேவகர்.
$$$