-மகாகவி பாரதி
சுவாமி விவேகானந்தரின் திவ்ய சரிதத்தை, தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘சக்ரவர்த்தினி’ என்ற மகளிருக்கான மாத இதழில் தொடராக எழுத முற்பட்டார் மகாகவி பாரதி. அந்த மகத்தான சரிதம் முற்றுப் பெறாமல் இரு அத்தியாயங்களுடன் நின்றுவிட்டது. அந்தத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் இது...

தமது சற்குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமாதி நிலையடைந்தவுடனே விவேகாநந்தரும் மற்றுமுள்ள சீடர்களும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பத்ததி’ (Shree Ramakrishna’s Mission) என ஒன்று ஏற்பாடு செய்துகொண்டு ஊரூராகச் சென்று ஜனங்களுக்கு ஞானமார்க்க போதனை செய்து வந்தார்கள். இந்தச் சீடர்கள் இருபது பேரிலே நமது விவேகாநந்தரே தலைவராகி விளங்கினார்.
விவேகாநந்தர் வட இந்தியாவில் பல இடங்களில் யாத்திரை புரிந்து ஹிமயமலைக்குச் சென்று, அங்கே 6 வருஷ காலம் வாசம் புரிந்தார். மேற்படி 6 வருஷமும் இவர் சரீர சுகங்களெவற்றையும் கவனியாமல் ஞான வாழ்க்கையை சிறப்புற்றதென எண்ணி வாழ்ந்தனர். இதற்கப்பால் லோகோபகாரம் செய்ய வேண்டுமென்ற திருவருள் இவருக்குண்டாய் விட்டது.
‘இந்தியா தேசத்திலே ஆண்களெல்லாம் பெண்பிள்ளைகளைப் போலாகி சரீரபலம், மனோபலம், ஞானபலம் என்ற மூன்றுமில்லாது அற்ப வாழ்க்கை வாழ்கிறார்கள். மஹா புண்ணிய பூமியாகிய பாரத நாட்டை விட்டு நாம் கண்ணை மூடிக்கொண்டிருப்பது நியாயமன்று’ என்று விவேகாநந்தர் கருதி விட்டார். அதன் பேரில் ஹிமயமலைச் சாரல்களிலிருந்தும், இந்த மகரிஷி இறங்கி வந்து, தென்முகமாக யாத்திரை புரிந்து ராஜ புதனத்தை அடைந்தார்.
ராஜபுதனத்திலே கேத்ரி ராஜா இவரது சீடராயினர். அங்கிருந்து பம்பாய், புனா, ஹைதராபாத் முதலிய இடங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, நமது சென்னை மாகாணத்தைப் புனிதம் செய்ய வேண்டுமென்ற திருவுளம் பற்றினார். இங்கே கன்னியாகுமரி, புதுச்சேரி முதலிய பல இடங்களில் சுற்றிவிட்டு சென்னை நகரத்திற்கு வந்து சேர்ந்தார்.
அப்போது அமெரிகா கண்டத்திலேயுள்ள சிகாகோ (Chicago) நகரில் ‘சர்வ சமயப் பிரதிநிதி ஸமாஜம்’ ஒன்று ஏற்படுத்தி, அதிலே உலகத்திலுள்ள எல்லா மார்க்கங்களின் பெருமைகளைப் பற்றி அவ்வம் மார்க்கத்தைச் சேர்ந்த பிரபல பண்டிதர்களைக் கொண்டு உபந்நியாசம் செய்யச் சொல்லிக் கேட்க வேண்டுமென்பதாக ஓர் ஏற்பாடு நடந்து வந்தது. அதற்கு யாரை அனுப்பலாமென்று சென்னை நகரத்தார் ஆலோசனை செய்துகொண்டிருந்த காலத்திலே, விவேகாநந்தரும் இங்கு வந்திருந்தார்.
ஹிந்து மத உபதேசர்களுக்குள்ளே இவர் போன்ற சாமர்த்தியமுடையோர்களை சென்னைவாசிகள் எப்போதும் பார்த்ததே கிடையாது. அதன் பேரில், இவரையே அனுப்ப வேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டது.
இவரிடம் மிகுந்த அன்பும், பக்தியும் மேலிட்டவர்களாகி சென்னையிலே பல மாணாக்கர்களும், மற்றும் முக்கியப் பிரபுக்களும் வேண்டிய அளவு பணம் சேகரித்துக் கொடுத்து, விவேகாநந்தரை அமெரிகாவுக்கு அனுப்பினார்கள்.

சர்வசமயப் பிரதிநிதி ஸமாஜம் (Parliament of Religions)
அமெரிகாவுக்கு ஸ்வாமிகள் போகும்போதே ஜப்பான் மார்க்கமாகச் சென்றார். அமெரிகாவிலே இவரைக் கண்டவுடன் எல்லோரும் மயங்கினார்கள்.
புருஷ சிங்கமாகிய விவேகாநந்தர் தமது தலையிலே பாகை தரித்து, கையிலே தண்டமேந்தி, ஞானகாந்தி வீசும் முகத்துடன் நிற்பதைப் பார்த்தால் கல்லாலடித்த சிலைகள் கூட அவருடைய திருவடியில் வீழ்ந்து வணங்குமல்லவா?
கீழ்த்தேசத்திலிருந்து வந்த குருக்களெல்லோரைக் காட்டிலும் விவேகாநந்தரிடத்திலேதான் அமெரிக ஜனங்களுக்கு உடனே பாசமேற்பட்டுவிட்டது. புத்த மார்க்கஸ்தர், மகமதிய மார்க்கஸ்தர், ஜெயின மார்க்கஸ்தர், ஷின்டோ மார்க்கஸ்தர், கன்பூஷியஸ் மார்க்கஸ்தர் முதலிய எத்தனையோ பேர்கள் வந்திருந்தார்கள். ஆனால், இரும்புத் துண்டுகளைக் காந்தமொன்றே இழுப்பது போல, விவேகாநந்தர் ஒருவரே சங்கத்திலுள்ள ஆண்- பெண் அனைவோர்களின், கண்ணுக்கும் கருத்துக்கும் பேரிலக்காகி விளங்கி நின்றார்.
அவர் சர்வ சமய சமாஜத்தின் முன்பாகச் செய்த முதல் பிரசங்கத்தைக் கேட்டவுடனே அந்த ஜனங்களுக்கேற்பட்ட மனோற்சாகத்தை அளந்து கூற முடியாது. அவரை மிகுந்த ஆவலுடன் வரவேற்றதற்காக சபையாருக்கு நன்றி கூறப்புகுந்த ஸ்வாமிகள், அப்பொழுதே ஹிந்து மார்க்கத்தின் பெருமைகளனைத்தையும் தேன்மாரி சொரிவதுபோல் கேட்போர் செவியும் மனமும் குளிரும் வண்ணம் சொரிந்துவிட்டார்.
இங்கிலீஷ் பாஷை பேசும் திறமையை மட்டும் எடுத்துக்கொண்ட போதிலும் இவருக்குச் சமானமானவர்கள் அந்தச் சங்கத்தில் மிகச் சிலரே யிருந்தனர். எங்கே பார்த்தாலும், கல்விகற்ற ஜனங்களெல்லாம் விவேகாநந்தரைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். பத்திரிகைகளெல்லாம் அவரது புகழைப் பற்றியே முழக்கம் புரிந்தன. கல்வி முதிர்ச்சியும் அறிவு முதிர்ச்சியும் பெற்ற எத்தனையோ ஆண்களும் பெண்களும் ஸ்வாமியின் தொண்டராயினார்கள்.
அரசனைப் பற்றிச் செல்லும் குடிகளைப் போல இவர் போன இடமெல்லாம் ஜனங்கள் கூடவே போனார்கள். இடைவிடாமல் ஜனங்களுக்கு உபந்நியாசம் செய்வதும், போதனை புரிவதும், கடிதங்களெழுவதும் என இந்த வேலைகளைச் சதா காலமும் செய்துகொண்டிருந்த சிரமத்தை இவருடைய சரீரம் எப்படித் தாங்கிற்றோ தெரியவில்லை.
ஆனால் மனுஷ்ய வர்க்கத்தினிடத்திலே வரம்பில்லாத பிரேமையும், மஹா தீரத்துவமும் கொண்ட விவேகாநந்தர் சொந்த சுகபோகாதிகளை வெறுத்துத் தள்ளிக் கடமையைச் செய்யவேண்டுமென்ற சநாதன தர்மத்தைக் கைக் கொண்டவரல்லவா?
முதல் வருஷ முடிவிற்குள்ளாகவே இவருக்கு முக்கியத் தொண்டராக இருவர் ஏற்பட்டிருந்தார்கள். ஒருவர் பெயர் கிருபா நந்தர். இவர் நியூயார்க் நகரத்திலே முக்கியமான பத்திரிகையொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஸ்வாமி அபயாநந்தர் என்று பெயர் வைத்துக்கொண்டு வேறோர் பிரென்ச் பெண்மணியும் ஸ்வாமியின் திருவடி நிழலைத் துணையாகப் பற்றினாள்.
(இன்னும் வரும்)*
- சக்ரவர்த்தினி (ஏப்ரல் 1906) இதழில் வெளியான பகுதி.
குறிப்பு:
* மகாகவி பாரதி ‘சக்ரவர்த்தினி’ பத்திரிகையில் எழுதிய சுவாமி விவேகானந்தர் சரிதம் இந்த இரு அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டு விட்டது. வாசகி ஒருவரது வேண்டுகோளுக்கிணங்க தொடர் நிறுத்தப்பட்டதாக, பாரதியே, ‘சக்கரவர்த்தினி’ 1906 மே இதழில் ஒரு குறிப்பு வரைந்திருக்கிறார். அதன் பிறகு அவரது அரசியல் வாழ்க்கையில் அடித்த புயலால் இத்தொடரை அவரால் முடிக்கவே இயலாமல் போயிற்று.
ஆதாரம்: மகாகவி பாரதியின் ‘சக்ரவர்த்தினி’ கட்டுரைகள்- ப.ஆ.: சீனி விசுவநாதன், டி.வி.எஸ்.மணி, வானவில் பிரசுரம்- 197; பக்: 54- 67.
$$$
One thought on “ஸ்ரீமத் ஸ்வாமி விவேகாநந்த பரமஹம்சர்- 2”