சுவாமிஜியின் சுதந்திர தாகம்!

-நெல்லை விவேகநந்தா

பத்திரிகையாளர் திரு. நெல்லை விவேகநந்தா, சுவாமி விவேகானந்தர் குறித்து 2014இல்  எழுதிய  கட்டுரை இது...

சிகாகோ சர்வ சமய மாநாட்டின் மூலம் உலக அளவில் இந்து மதம் பிரபலமாகக் காரணமாக இருந்த பெருமைக்கு உரியவர் சுவாமி விவேகானந்தர். இந்து மதத்தின் விடிவெள்ளியாகத் திகழும் அவரின் காலத்தில் தானே சுதந்திரப் போராட்டமும் நடந்தது? அப்போது,  நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அவர் எந்தவிதமான முயற்சிகளை மேற்கொண்டார்?

இதோ, ஒரு சிறப்புப் பார்வை…

கொல்கத்தாவின் பேலூர் ராமகிருஷ்ண மடத்தில்,  தனது வாழ்நாளின் இறுதி நாட்களை சுவாமி விவேகானந்தர் கழித்துக் கொண்டிருந்த நேரம் (1900- 1902) நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. விவேகானந்தரும், இந்தியா சுதந்திரம் பெற வேண்டும்; இந்திய மக்கள் முழுமையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனாலும், அரசியல் மற்றும் அது சார்ந்த இயக்கங்களில் இருந்து விலகியே இருந்தார்.

‘எங்கள் நாட்டை எங்களிடம் திரும்பக் கொடுத்து விடுங்கள்’ என்று ஆங்கிலேயர்களைப் பார்த்துக் கேட்பது பிச்சை கேட்பது போல உள்ளது என்று அவர் கருதினார்.

இதனால், சுவாமியின் போக்கை காங்கிரஸார் பொதுவாகவே விரும்பவில்லை. அதேநேரம், எப்படிப்பட்ட சுதந்திரம் வேண்டும்? என்ற அவரது கருத்தை பாலகங்காதர திலகர் போன்ற சில தலைவர்கள் வரவேற்காமலும் இல்லை.

வெள்ளையர்களுக்கு எதிராக சுவாமி விவேகானந்தர் நேரடியாக களம் இறங்காவிட்டாலும், மறைமுகமாக சுதந்திர தாகத்தை இந்திய இளைஞர்களிடம் ஏற்படுத்திக்கொண்டு தான் இருந்தார்.

தான் எதிர்பார்த்த இந்திய இளைஞர்கள் பற்றி சுவாமி இப்படி கூறினார்…

இந்தியாவில் சொற்பொழிவுகளால் எந்தப் பயனும் இல்லை. நமது படித்த மனிதர்கள் சொற்பொழிவுகளைக் கேட்பார்கள். மிஞ்சிப் போனால் கைத்தட்டுவார்கள். ஆஹாபிரமாதம் என்பார்கள். பின்னர், வீட்டிற்குச் சென்று சாப்பிடும்போதேகேட்டவை அனைத்தையும் ஜீரணித்து விடுவார்கள். இந்தியாவுக்கு இப்போதைய தேவை, சொந்த நாட்டிற்காக அனைத்தையும் துறக்கக் கூடியதங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யக் கூடிய சில இளைஞர்கள் மட்டுமே! அப்படிப்பட்ட சில இளைஞர்களை உருவாக்க முடியுமானால்சில பணிகள் நடக்கும் என்று உண்மையிலேயே எதிர்பார்க்கலாம்…” என்றார் அவர்.

மேலும், இந்தியாவின் எழுச்சி இளைஞர்கள் கையில் தான் இருக்கிறது என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். திறமை வாய்ந்த 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று சொன்னவர் அல்லவா அவர்?

அதன் தொடர்ச்சியாக உருவானது தான் எழுமின், விழிமின், உழையுமின்! (எழுந்திருங்கள், விழித்திருங்கள், உழைத்திடுங்கள்!) என்கிற அவரது எழுச்சி மந்திரம். எடுத்த காரியம் நிறைவேறும் வரை ஓயாமல் விழிப்போடு உழைக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

சாலையோரம் மயங்கிக் கிடக்கும் ஒருவரது மயக்கத்தைத் தான் முதலில் சரிசெய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு அவரது உடைமைகளை முதலில் சரிசெய்வதில் எந்தப் பயனும் இல்லை என்பது விவேகானந்தரின் கணிப்பாக இருந்தது.

இதுபோன்ற விவேகானந்தரின் கருத்துக்கள்,  பிரிவினைவாதத்தால் பிரிந்து கிடந்த- சிதறிப்போய்க் கிடந்த இந்தியர்களுக்கு உற்சாக ‘டானிக்’ ஆக அமைந்தன. இளைஞர்கள் பலர் சுதந்திர தாகம் கொண்டு வெகுண்டு எழுந்தனர்.

நமது சுதந்திரப் போராட்ட வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால், அதில் பலதரப்பினர் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி,  கோபாலகிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்கள் மிதவாதிகளாக இருந்தனர். பேச்சுவார்த்தைகள் மூலமும்,  அகிம்சை வழியின் மூலமுமே இந்திய சுதந்திரத்தைப் பெற முடியும் என்று நம்பினர்.

ஆனால், பாலகங்காதர திலகர்,  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றோர் அவர்களது கொள்கைகளுக்கு நேர் எதிராக இருந்தனர். ஆயுதங்களைத் தூக்கினால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

இந்த சுதந்திரப் போராட்ட தலைவர்கள் தங்களுக்குரிய வழிகளில் சுதந்திரத்தைத் தேடிப் பயணப்பட்டாலும்,  சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களையும் முக்கியமாக எடுத்துக் கொண்டனர்.

விவேகானந்தரின் இலக்கியத்தை நான் மிகவும் ஆழ்ந்து படித்தேன். அவரது படைப்புகளைப் படித்த பிறகு தான் எனக்கு என் தாய்நாட்டின் மீதுள்ள பற்று ஆயிரம் மடங்கு பெருகியுள்ளது…”  என்று,  நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி கூறியதில் இருந்தே, சுவாமியின் கருத்துக்கள் எந்த அளவுக்கு சுதந்திர தாகத்தை ஏற்படுத்தின என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு கூறும்போது, சாதாரணமாக நாம் எடுத்துக்கொள்ளும் பொருளில் உள்ள ஒரு அரசியல்வாதி அல்ல விவேகானந்தர். ஆனால், புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் அவரும் ஒருவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை…” என்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,  சுவாமி பற்றி குறிப்பிடும்போது சற்று உணர்ச்சிவசப்பட்டே பேசுகிறார்…

சுவாமி விவேகானந்தர் பற்றி நான் எழுதும்போது ஆனந்தப் பரவசங்களில் ஆழ்கிறேன். அதைத் தடுக்க முடியாது. அவரது ஆளுமை பொலிவு மிக்கதுஆழமானதுஅதேநேரம்பின்னலானது. நமது உலகில் அவர் அபூர்வமானவர். நாடி நரம்புகளில் ரத்தம் கொதித்துப் பாய்கின்ற ஆண்மகன் அவர். எதற்கும் விட்டுக்கொடுக்காமல்சளைக்காமல் போராடுகின்ற போராளி அவர். நாட்டு மக்களை முன்னேற்றுவதற்காக வேதாந்தத்திற்குச் செயல்முறை வடிவம் கொடுத்தவர் அவர்.

இப்படி அவரைப் பற்றி நான் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும்அதன்மூலம் அவரைப் பற்றி நான் ஏதாவது விளக்கி இருப்பேனா என்றால்இல்லை என்பது தான் பதிலாக இருக்கும். அதில் நான் தோல்வியே கண்டிருப்பேன். அவர் அவ்வளவு மகிமை வாய்ந்தவர்…” என்று புகழ்கிறார் நேதாஜி.

இப்படி, நாட்டு தலைவர்களுக்கும், மக்களுக்கும் புதிய உத்வேகத்தைக் கொடுத்த விவேகானந்தர், ஏன் சுதந்திரப் போராட்டங்களில் நேரடியாகப் பங்குகொள்ளவில்லை என்ற கேள்வி நிச்சயம் எழும்.

பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவுக்கு,  திடீரென்று சுதந்திரம் வழங்கிவிட்டு, அவர்கள் வெளியேறிவிட்டால்,  நாடே பல துண்டுகளாகிவிடும். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்த முக்கிய காரணமே, இந்தியா முழுவதும் பரவிக்கிடந்த பிரிவினைவாதம் தான் (இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 565 சுதேச சமஸ்தானங்கள் சுயாட்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றில் பல இந்தியாவுடன் உடனே இணைந்தாலும்,  காஷ்மீர்,  ஜூனாகத், திருவாங்கூர் போன்ற சமஸ்தானங்கள் தனித்து இயங்கவே ஆசைப்பட்டன. ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேலின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் அவை இந்தியாவுடன் இணைக்கப்பட்டன).

அதனால் தான், சுவாமி விவேகானந்தர் இந்திய சுதந்திரத்தை முக்கியமான ஒன்றாகக் கருதவில்லை. சுதந்திரம் பெறுவது எவ்வளவு முக்கியமோ,  அதைவிட முக்கியம்,  பெற்ற சுதந்திரத்தைக் கட்டிக் காப்பது என்று கருதினார் அவர்.

சுதந்திரம் வேண்டும் என்றால், அதை இரண்டு நாளில் கொண்டு வந்துவிட என்னால் முடியும். ஆனால், பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க மனிதர்கள் எங்கே?” என்று கேட்டார் சுவாமி.

அதனால் தான், இந்தியாவை வழிநடத்திச் செல்லத் தகுதி வாய்ந்த மனிதர்களை-  இளைய சமுதாயத்தை உருவாக்க முயன்றார். அதற்கு கல்வி மிக முக்கியம் என்று நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார்.

கல்வி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது சுவாமியின் தனிக் கனவாகவே இருந்தது.

சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்கு தயார் செய்யாத கல்விஒழுக்க வலிமையைத் தராத கல்விபிறர் நலம் நாடுகின்ற உணர்வை தராத கல்விசிங்கம் போன்ற தைரியத்தைக் கொடுக்காத கல்வி இப்படிப்பட்ட ஒரு கல்வியை கல்வி என்று சொல்ல முடியுமா?”  என்று,  கல்வி பற்றி கேள்விக் கேட்ட விவேகானந்தர்.

ஒருவனை, அவனது சொந்தக் காலில் நிற்கும்படி செய்வதே உண்மையான கல்வி. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இப்போது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் கல்வி, உங்கள் இனத்தையே தீராத அஜீரண நோயாளிகளாக மாற்றிவிட்டது. நீங்கள் வெறும் இயந்திரங்கள் போலவே பிறக்கிறீர்கள், வாழ்கிறீர்கள், சாகிறீர்கள், அவ்வளவு தான்! என்று,  அன்றைய கல்வி முறையைச் சாடுகிறார்.

இந்திய சுதந்திரத்தை காட்டிக் காக்கத் தேவையான கல்வி பல்கலைக்கழக கல்வி அல்ல; மனிதனை உருவாக்கும் கல்வியே தேவை என்பது சுவாமியின் உறுதியான கருத்தாக இருந்தது. இதற்காகப் பாமரர்கள் வரையிலும் கல்வியைப் பரப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சேவை செய்ய வேண்டும்.  ஏழைகள்பாமரர்களின் நிலை உயர வேண்டும். எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் இவற்றுக்கு எல்லாம் மதம் உதவி செய்ய வேண்டும்…”  என்ற சுவாமியின் கருத்தில் இருந்தே,  இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக விவேகானந்தர் எதை விரும்பினார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இப்போது, நமக்குள் ஒரு கேள்வி…

விவேகானந்தர் நினைத்தது எல்லாம் நடந்ததா? அல்லது, நடக்கத் தான் ஒத்துழைத்தோமா? சிந்திப்போம்…

குறிப்பு:

திரு. நெல்லை விவேகநந்தா, பத்திரிகையாளர்;  இயற்பெயர் எம்.ஜெயமுருகானந்தம். சுவாமி விவேகானந்தரின் வீர வரலாற்றை தினத்தந்தி- ஆன்மிகமலரில் 47 வாரங்களுக்குத் தொடராக எழுதியபோது, சுவாமி விவேகானந்தர் மீது இவருக்கு மிகுந்த பற்றுதல் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடாக ‘நெல்லை விவேகநந்தா’ என்ற புனைப்பெயரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இதுவரை (2014) 6 புத்தகங்கள் எழுதி இருக்கிறார். அதில் ஒன்று,  ‘இந்தியாவின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்’. இதில்,  வீரத் துறவி விவேகானந்தரின் விரிவான வரலாற்றை மிக எளிய நடையில் தந்திருக்கிறார்.

$$$

Leave a comment