-கிருஷ்ணா
சுவாமி விவேகானந்தர் குறித்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. கிருஷ்ணாவின் இனிய கட்டுரை இது…

“கலி என்கிற விருட்சத்தை வேரோடு வெட்டி வீழ்த்த வந்தவரே விவேகானந்தர்” என்று மகாகவி பாரதியார் பிரமிக்கிறார்.
விவேகானந்தர் நடைமுறை உலகைக் கண்டு மனம் வெதும்பியவராய் ஒரிடத்தில் மிகத் துல்லியமான பாரத தேசத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார்:
நான் தெருவில் போகிறவர்களையும், வருபவர்களையும், கடந்து செல்பவர்களையும் பேசுபவர்களையும் பார்க்கிறேன். ஏழ்மையும் சோம்பலும் சக்தியே இல்லாமல் சக்கையாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் தமோ குண விருத்தியைத் தான் காண்கிறேன். எங்கும் தமஸ்… தமஸ்… தமஸ் தான்.
நாங்கள் ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் என்று மட்டும் அவ்வப்போது ஜம்பம் அடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, செயல்முறையில் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உண்மையான மதம் என்கிற சக்திப் பாய்ச்சல் எவரிடத்திலும் இல்லை.
பஞ்சம், பட்டினி என்று அலைபவர்களிடம் போய் வேதாந்தம் பேசி என்ன பயன்? முதலில் அவர்களை உயிரோடு வாழவிட வேண்டும். அதற்குப் பிறகு தான் அவனிடத்தில் வேதாந்தத்தை போதிக்க வேண்டும். பிறகு மெல்ல மெல்ல இறைவனின் பாதையில் திருப்பி விட வேண்டும்.
உடல் வலிமையும் இல்லாமல், நெஞ்சுரம் இன்றியும் சொல்வதைச் செய்யும் ஆடுமாடுகளாகத் தான் திரிகிறார்கள். உங்களின் பழம் பெருமையைப்பற்றி பீற்றிக் கொள்வதில் ஏன் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்? அவர்கள் ஏற்றிய ஜோதியை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்து கொண்டு அப்போதெல்லாம் ஊரே வெளிச்சமாக இருந்ததாமே என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களிடத்தில் உண்மையான மதத்தின் தன்மை செயல்படவே இல்லை.
மகாசக்தியொன்று உள்ளுக்குள் இருக்கிறது. அது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. அதைத் தட்டி எழுப்புங்கள். செயலில் இறங்குங்கள். நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்த தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்…
-என்று கர்ஜித்தார். பாரத தேசத்தின் உண்மையான முகத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டும். இந்த உலகத்திற்கே வழி காட்டக் கூடிய தகுதி இந்த தேசத்திற்கு மட்டும் தான் உண்டு என்று தீக்கங்குகளாக அவரிடமிருந்து வார்த்தைகள் பீறிட்டன.
வயதானவர்களுக்குத்தான் ஆன்மிகமா? “யார் சொன்னது? இளைஞனே விழித்துக் கொள். உண்மையில் ஆன்மிகம் உனக்குத்தான் தேவை. ஆன்மிகம் என்றால் அமைதியாக ஓரமாக அமர்ந்து கொள்வதல்ல. அதிவேகமாக சுழலும் சக்கரம் போன்றது அது. சூறைக் காற்றின் வேகமும் தென்றலின் அமைதியும் சுகமும் கலந்ததே ஆன்மிகம். சோம்பியிருத்தல் அல்ல. உடலின் ஒவ்வொரு செல்லும் துடிப்போடு செயலாற்றும் புரட்சி தான் ஆன்மிகம். ரத்தம் கொதிக்கும் மூர்க்கத்தனத்தை நான் சொல்லவில்லை. விவேகமான வீரத்தைத் தான் ஆன்மிகம் என்கிறேன்” என்றார். நவீனமுறை கல்விமுறையை அவர் வரவேற்றார். அதேசமயம்,
“வேத இதிகாசங்களையும், சாஸ்திரங்களையும் வேதாந்தங்களையும், ராஜ யோகத்தைப்பற்றியும் ஒருவர் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், நீங்களோ மேனாட்டு அறிஞர்களின் ஆழமற்ற பேச்சை கேட்டு சிலாகிக்கிறீர்கள். ஆனால், நம் ரிஷிகள் சொன்ன அதி சூட்சுமமான விஷயங்களை காது கொடுத்துக் கேட்காமல் அதன் அருமை தெரியாமல் இருக்கிறீர்கள். இன்னும் சிலர் மூட நம்பிகைகளை சுமந்துகொண்டு இதுதான் சாஸ்திரம் என்று திரிகிறார்கள்.
இந்து மதம் எதிர்த்துக் கேள்விகளை கேட்கச் சொல்கிறது. யாக்ஞவல்கியரின் சபையில் கார்க்கி கேட்டதுபோல் கேட்கச் சொல்கிறது. ஏனெனில், எல்லாவற்றிற்கும் நம்முடைய ரிஷிகள் பதில்களை சொல்லியிருக்கிறார்கள்.
ஏன், என் குருநாதர் இந்த நூற்றாண்டில் இல்லையா? அவர் என்ன படித்தார்? எந்தக் கல்லூரிக்குச் சென்றார்? ஒருமுறை அவர் பெயரை அவரே எழுதும்போது மூன்று நான்கு தவறுகளைப் பார்த்தேன். ஆனால், அப்பேர்ப்பட்டவரிடம் தான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வந்து சந்தேகம் தெளிந்து சென்றார்கள். அவர் எதை அறிய வேண்டுமோ அதை அறிந்திருந்தார். அதை அறியவும் வைத்தார்.
அறிய வேண்டியதை அறிந்து கொள்ளாமல் புத்தகங்களுக்குள்ளேயே முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தால் அனுபவ அறிவும் பேரறிவும் எப்படி சித்திக்கும்? அக அறிவும், அக விழிப்பும் இல்லாமற்போனால் வெறும் புத்தகங்களால் என்ன புண்ணியம்?”
– என்று பல்வேறு குண்டுகளை வீசினார். மேலை நாகரிகம் என்கிறீர்கள். கீழை நாட்டில் தான் நாகரிகம் என்கிற வார்த்தைக்கு விளக்கமாக மக்கள் திகழ்ந்தார்கள். குரு -சிஷ்யன் எனும் மரபு கீழை நாட்டிற்கே… அதிலும் இந்த பாரத தேசத்திற்குத் தான் உண்டு. பணிவு, விநயம், அடக்கம், கற்றுக் கொள்ளும் ஆர்வம் போன்றவை அனைத்துமே கீழைநாட்டிலிருந்து தான் பல்வேறு தேசங்களுக்கு ஏற்றுமதியானது.
நம் வேதங்களை நாம் மறந்து விட்டோம். ஆனால், அதைத் தூசு தட்டி ஜெர்மனியிலும் இங்கிலாந்திலும் ஆராய்கின்றனர். வேதங்கள் கூறும் வாழ்க்கை முறையில் இப்போது வாழ்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், அப்பேர்ப்பட்ட வாழ்க்கையை பாரத தேசத்தில் நம் முன்னோர்கள் சர்வ சாதாரணமாக வாழ்ந்தனர் என்று அவர் அதிசயிக்கிறார்.
விவேகானந்தர் முற்றிலும் ஆச்சரியமான அவதாரம். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அருள் வேகம் அவருக்குள் பாய்ந்த விதத்தை அவரின் தடையற்ற பேச்சுக்களில் காணலாம். அந்த எழுத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும் சக்தி, படிக்கும் நமக்குள்ளும் வந்து அமர்வதை உணரலாம். குருவருள் மழையாகப் பொழிவதை அறிந்து கொள்ளலாம்.
வாழ்விலிருந்து தப்பித்து ஓடுவதை ஒருநாளும் விவேகானந்தர் ஊக்குவிக்கவில்லை. வாழ்வை எதிர்கொண்டு போராடி வெற்றி பெறுதலைத் தான் அவர் வற்புறுத்தினார்.
கட்டுப்பாடற்ற வாழ்க்கையை அவர் ஒருபோதும் போதித்ததில்லை. சுதந்திரம் என்பதற்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னதில்லை. ஆத்மாவை அறிதலைத் தான் பூரண சுதந்திரம் என்றார்.
வீரம் என்பதே அகங்காரம் களைதல் என்றும் கூறியிருக்கிறார். ஜீவன் முக்தி ஒன்றுதான் எல்லோருடைய இலக்காகவும் இருக்க வேண்டுமென்றார். ஆனால், ஜீவன் உள்ளபோதே பற்றற்று சமூகத்திற்குச் செய்ய வேண்டியதை செய்து தான் தீர வேண்டும் அதுதான் நிஷ்காம்ய கர்மம் என்றார்.
“கண் முன்னால் பசித்திருக்கும் ஒருவரை ஏளனமாக எப்படி உங்களால் பார்க்க முடிகிறது? எந்தக் குற்ற உணர்வும் இல்லாது எப்படி ஒரு பிச்சைக்காரரை கடந்து செல்ல முடிகிறது? அன்பு… அன்பு… கருணை என்று உருகி உருகிப் பேசுகிறீர்கள். ஏன் நடைமுறை வாழ்வில் மனிதர்களிடத்தில் கலக்கவில்லை? நீங்கள் குடும்பஸ்தராகக் கூட இருங்கள். பயம் கொள்ளாதீர்கள். அந்த தெய்வீகத்தின் சிறு திவலையும் நீங்கள் தான். அதை அறிந்து கொள்ளுங்கள்” என்றார்.
உள்ளுக்குள் சாம்பல் மூடியிருக்கும் சக்தியை அவரது உபதேசங்கள் தட்டித் தூர எறியும்.
நடைபிணங்களாக நடந்து கொண்டிருந்தவர்களுக்குள் கேள்வி தீ சுடர்விட்டு எரியும்.
எங்கேயோ மூடப்பட்டிருந்த ஊற்றொன்று சட்டென்று பிளந்துகொண்டு நமக்குள் பொங்குவது போலிருக்கும்.
மனதைத் தேற்றும் வெறும் தன்னம்பிக்கைக் கட்டுரை அல்ல அவர் பேசுவது. விவேகானந்தம் என்கிற ஆத்ம சக்தியின் அபாரச் செயல்.
விவேகானந்தரை சமூகப் புரட்சியாளர், ஜாதியை ஒழிப்பதற்காக வந்தவர் என்று கூறுங்கள். அது சரி தான். ஆனால், அடி ஆழத்தில் சகலரும் பிரம்மத்தை அறிந்து கொள்ள வேண்டும். அந்த பிரம்மத்தை அறிந்து கொள்வது தான் பிராமணத்துவம். பிரம்மத்திலேயே நிற்பவன்தான் பிராமணன். எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஏனெனில், எல்லோருமே பிரம்ம மயமானவர்கள் தான் என்று ஞானத்தின் உயர்ந்த படியாகவே பிராமணத்துவத்தை போதித்தார்.
ஜாதி அபிமானம் கொண்டவர்களையும், ஜாதி துவேஷம் உடையவர்களையும் தாண்டி அவர் பேசினார். இவர்கள் இருவரையுமே மேலோட்டமானவர்களாகவே அவர் கருதினார்.
எதனால் ஜாதி உருவாக்கப்பட்டது? மனு கூறியதன் அடிப்படை விஷயமென்ன? என்று ஆழ்ந்து சென்று அலசினார். விவேகானந்தர் வேதத்தின் உச்சியில் விளங்கும் வேதாந்தம் கூறும் சத்தியத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென எப்போதும் கூறுவார். நமது மதமே வேதாந்தத்தில்தான் உள்ளது என்பார். வேதாந்தத்தைப் புரிய வைப்பதிலேயே தீவிர கவனத்தோடு இருந்தார்.
அவர் ஒருபோதும் இந்த உலகம் மட்டுமே சத்தியம் என்று கூறவில்லை. இங்கிருப்பது அங்கு செல்லத்தானே தவிர வேறொன்றுமில்லை. ‘‘நான் என் வேலையை முடித்தவுடன் இந்த உடலை வீசியெறிந்து விட்டுச் செல்வேன்’’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். அவரின் முக்கியப் பணி வேதாந்தம் கூறும் ஞானத்தை ஸ்தாபித்தலே ஆகும். அதை நாம் விட்டு விடுவது என்பது தும்பியை விட்டு வாலைப் பிடிப்பது போலாகும்.
மிகக் குறுகிய காலத்தில் எப்படி உலகத்தினரையே அவரால் தன் பக்கம் திருப்ப முடிந்தது? காரணம் ஒன்று தான். அதுவே குரு… குரு… குரு… ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்கிற மகத்தான குரு. குரு- சீடன் என்கிற சநாதன தர்மத்தின் அடிவேரை இவர் மூலமாக உலகோர் கண்டு வியந்தனர்.
விவேகானந்தரின் பேச்சுக்கள், எழுத்துக்கள், உரையாடல்களை படிக்கும்போது வியந்து வியந்து உள்ளுக்குள் சக்தியொன்று தளும்பி நிற்பதை நமக்குள் நாமே உணரலாம். விவேகானந்தரே ஒருமுறை, ‘‘நான் பேசியதில் ஏதேனும் சாரம் இருக்குமென்றால் அது என் குருநாதரால் அளிக்கப்பட்டது. தவறு இருந்தால் அது என்னுடையது’’ என்றார்.
நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வமுடையவர்கள் விவேகானந்தரின் நூல்களையும், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகளையும் அவர்களின் திவ்ய சரிதங்களையும் நிச்சயம் படிக்க வேண்டும். அதற்குப்பிறகு ‘நான் ஏன் இத்தனை வருடங்களாக படிக்காமல் இருந்து விட்டேனே’ என்று கண்டிப்பாக வருந்துவர்.
அதற்குப் பிறகு படிப்போரின் வாழ்க்கை வேறுவிதமாக மாறும்; எங்கேயோ இலக்கின்றி நகரும் சிற்றோடை இனி கங்கையோடு கலக்கும்.
குறிப்பு:
திரு. கிருஷ்ணா, தினகரன்- ஆன்மிக மலரில் பணிபுரிபவர்; எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். சூரியன் பதிப்பகத்தின் வெளியீடான ஸ்ரீமத் பாகவதம், சதுரகிரி யாத்திரை ஆகிய நூல்களை எழுதி இருக்கிறார்.
2014-இல் விவேகானந்தம்150.காம் இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரை இது...
$$$