இளைய பாரதத்தின் சூரியன்

-எஸ்.ஆர்.செந்தில்குமார்

பத்திரிகையாளர் திரு. எஸ்.ஆர். செந்தில்குமாரின், சுவாமி விவேகானந்தர் குறித்த  சுருக்கமான, இனிய கட்டுரை இது...

பாரதம், உலகத்தின் பார்வையில் காட்டுமிராண்டிகளின் தேசம்… பாம்பாட்டிகள் வாழும் நாடு என்று கருதப்பட்ட காலத்தில், ‘‘இல்லை, இல்லவே இல்லை பாரதம் நாகரிகத்தின் தொட்டில். இது வேத பூமி. ஞான பூமி. ஐந்தாயிரம் ஆண்டுகால தொன்மையான உன்னத தேசம் பாரதம் என முதன்முதலாக கர்ஜித்த துறவிச் சிங்கம் சுவாமி விவேகானந்தர் தான். இது நிகழ்ந்தது 1893 ல். இவரது சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு பாரதத்தின் மீதான உலகின் பார்வை மாறியது.

விஸ்வநாத தத்தர்- புவனேஸ்வரி தம்பதிக்கு 12.01.1863-இல் பிறந்த  நரேந்திரன், ராமகிருஷ்ண பரமஹம்சரால் ஆட்கொள்ளப்பட்டு விவேகானந்தன் ஆனார். இவர் சாதாரண பூஜை, வழிபாடு, தியானம் என சொந்த விடுதலைக்காக அல்லாமல் ஒட்டுமொத்த மக்களின் விடுதலைக்காக, நல்வாழ்வுக்காக தவம் செய்தார்.

ஒரு சிவராத்திரியை ஒட்டி வந்த ராமகிருஷ்ணர் ஜெயந்தி நாளில் ராமகிருஷ்ணபரமஹம்சரின் ஐம்பது சீடர்களுக்கும் பூணூல் அணிவித்து, பாரதநாட்டில் பிறந்த அனைவரும் சமம். ஆம்! அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று சொன்னார்.

‘இந்தியர்கள் அனைவரும் சகோதரர்கள். அப்படியிருக்க உங்களைத் தொடமாட்டேன் என்று பிறரை சொல்லும் தேசம் சிறுமையின் விளிம்பில் தான் நிற்கும்’ என்று சாடினார்.

ஆட்டுக் கூட்டத்தில் குட்டி போட்டுவிட்டு தாய் சிங்கம் இறந்து விட, ஆடுகளோடு வளர்ந்த சிங்கக்குட்டி தம்மை ஆடாகவே எண்ணிக்கொண்டு புல் தின்று வாழ்ந்ததாம். இதைக் கண்ட மற்றொரு சிங்கம் ஆட்டுச் சிங்கத்தை அணுகி, நீ ஆடு இல்லை, சிங்கம் என சுயம் உணர்த்தியது போன்று தூங்கிக் கொண்டிருந்த இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பியவர் சுவாமி விவேகானந்தர்.

இவர் தனது சொந்த ஆன்ம விடுதலைக்காகவா பாடுபட்டாரா? இல்லை. தேச விடுதலைக்கான, அனைவரும் நன்மைக்காக பாடுபட்டார்.

‘‘மாத்ரு தேவோ பவ;
பித்ரு தேவோ பவ;
ஆசார்ய தேவோ பவ;
அதிதி தேவோ பவ.

-என்கிறது உபநிஷதம்.

ஈன்றெடுத்த பெற்றோரை தெய்வமாகப் போற்ற வேண்டும்,   ஆசிரியரை தெய்மாகப் போற்ற வேண்டும்,  இல்லம் நாடி வரும் விருந்தினரை தெய்வமாகப் போற்ற வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆனால் விவேகானந்தரோ,

தரித்ர தேவோ பவ;
துக்கி தேவோ பவ;
மூர்க்க தேவோ பவ.

-என ஏழையும், முட்டாளும், பாமரனும், துயரத்தில் உழல்பவரும் உனது தெய்வம் ஆக வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார். ஏனென்றால் இவர்களின் முகத்தில் பூக்கும் சிரிப்பில்தான் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்கிறார்.

இவர்களுக்கு ஆற்றும் சேவை தான் உயர்ந்த தர்மம் என்றும் சுவாமிஜி கூறுகிறார்.

சுவாமி விவேகானந்தர் இந்து தர்மத்தையும் இந்தியாவையும் காப்பாற்றியவர். துவண்டு கிடந்த இந்தியாவை வீறு கொள்ளச் செய்தவர்.  வாடிக் கிடக்கும் உள்ளத்திற்கு இவரது பெயர் மின்சாரம் பாய்ச்சும். அவரது வீர உரைகள் உற்சாகம் தரும். அதனால் தான் அவரது பிறந்த தினமான ஜனவரி- 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த துறவிச் சூரியனின் 151 வது ஜெயந்தி ஆண்டாகும்.

இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகனான இவரது அற்புத வரிகள், ‘‘ எழுமின்! விழிமின்! கருதிய காரியம் கைகூடும் வரை நில்லாது செல்மின்!!”

  • நன்றி: சண்டே தினகரன்  (12.1.2014 )

$$$

Leave a comment