இதயம்  கூடவா இல்லை?

-ச.சண்முகநாதன்

13 வயது சிறுமி அவள். அவளைச் சுற்றியிருந்த கொடூர மனிதர்களுக்கு  மத வெறியுடன் காமவெறியும் சேர்ந்து கொண்டது. அந்த 13 வயது சிறுமியை கடத்திச் சென்று 22 நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்திருக்கின்றனர். இறுதியில் அவளை நடுத்தெருவில் விட்டுச் செல்கின்றனர். மதவெறி பிடித்த காவலர்களோ அந்த மதவெறி பிடித்த கயவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இறுதியில்.  25,000 ரூபாய் கொடுத்து அந்தக் குடும்பத்தின் வாயை அடைத்துவிட்டனர் மதவெறியினர்.  அவளது எதிர்காலத்தின் விலை இருபத்தைந்தாயிரம். பயத்தால் அச்சடிக்கப்பட்ட இருபத்தைந்தாயிரம்.

இப்படி எத்தனை சிறுமிகள்,  எத்தனை குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தை அவர்களின் மதவெறிக்காக பலி  கொடுத்துவிட்டு தவிக்கின்றன!

“எங்களால் இங்கே ஒன்று சேர்ந்து வாழ முடியாது” என்று கூறி, தனிநாடு கேட்டு வாங்கிச்சென்ற பின், இங்கேயே தங்கிவிட்டவர் பலர், அவர்களை வியந்து வாழ்த்தி பல முறை பேசும் பொழுது, அங்கேயே, நிர்பந்தத்தினாலோ, இயலாமையினாலோ தங்கிவிட்ட வேற்று மதக்காரர்களுக்கு கொஞ்சமும் இரக்கப்படாமல் பேசுவதுதான் இன்றைய மேட்டிமைத்தனம் போல.

ஹிந்துக்களாய், கிறிஸ்தவர்களாய், சீக்கியர்களாய் தனக்குப் பிடித்த வழியில் பயணிப்பது என்று முடிவெடுத்தது தவறா? அந்த பச்சிளம் குழந்தைகளைக் கற்பழித்து, திருமணம் செய்து மதம் மாற்றிக்கொள்வது  என்ன நியாயம்? 

பட்டாம்பூச்சிகளாய் வாழ விருப்பப்பட்டவர்கள் அந்த தேசத்தில் வசிக்கும் மற்ற மதத்தைச் சேர்ந்த இளம் பிஞ்சுக் குழந்தைகள். அந்த இளம் பட்டுப்பூச்சிகளை  ஒரே நாளில் கருப்புக் கூட்டுக்குள் நசித்து நகரும் நத்தைகளாய் மாற்றுகிறது அந்த தேசத்து  மதவெறி.

இது பொறுக்க முடியாமல் பாரதத்தை நோக்கி  ‘இணைக்கை கோர்த்து’   “அபயம் அபயம், உனக்கு அபயம். எனைக் காத்தருள்வாய்” என்று கதறும் பொழுது CAA எனும் விரைவுக் கரம் நீட்டுகிறது  பாரதம். மனிதத்தின் உச்சம் இல்லையா இது? 

இந்த அபலைகளுக்கு விரைந்து அடைக்கலம் கொடுப்பதல்லவா சமூக நீதி  வேண்டுவோர் செய்ய வேண்டும்? இவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சமூக நீதியின் அங்கம் இல்லையென்றால் இவர்களின் சமூக நீதி அங்கஹீனம் உடையதல்லவா? 

ஏன்  ‘அவர்களை’ மட்டும் சேர்க்கவில்லை?  என்ற கேள்விக்கு பல பதில்கள் ன  ‘அவர்கள்’ இன்றும் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்கிறது சட்டம், ஆனால் விரைவு வழியில் இல்லை. ஏனென்றால் அது மத ரீதியான துன்புறுத்தல் இல்லை என்கிறது சட்டம். Fair  enough!

1960, 70களில் தமிழ்நாட்டில் பிராமணர்களை தங்கள் விருப்பம் போல வாழவிடவில்லை  தி.க. அவர்கள் பூணூல்  அணிந்தால் அதை  கிலோ கணக்கில் அறுத்துக் கொண்டுவர ஆணையிடுகிறார் ஈவேரா. குடுமி வைத்துக்கொள்ள விடவில்லை. ஆனால் அந்தச் சமூகம் இதற்காக எந்த நாட்டின் கதவையும் சென்று தட்டவில்லை, அபயம் தேடி. தகுதியை வளர்த்துக்கொண்டு கண்ணியத்துடன் வாழ்ந்தனர்.  உள்நாட்டு ரவுடிகளை அவர்களுக்குத் தெரிந்த வகையில் கையாண்டு வென்றிருக்கின்றனர். இது உள்நாட்டு விவகாரம்.

உள்நாட்டு விவகாரத்தை அவர்களே தீர்க்க வேண்டும், குறைந்த பட்சம்.   வெளிநாட்டு அகதிகளுக்கு பாரதம், தகுதி அடிப்படையில், குடியுரிமை வழங்கும், அனால் விரைவு வழியில் இல்லை. 

CAA, மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களை விரைவுக்கரம் நீட்டி ஆறுதல் தருகிறது. ஏனென்றால் மத ரீதியான துன்புறுத்தல், மானமுள்ள மனிதரின்  கால்களில் தார் ஊற்றுவது போல. எங்கும் நகர விடாது, எதையும் விருப்பத்துக்கு செய்ய விடாது. அதற்கு ஆறுதல் தரும் மருந்து CAA.

இதை  ‘தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என்று சூளுரைப்பவர்களும்   ‘முதல்வர் இதனை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது’ என்று கோரிக்கை வைப்போருக்கும் தலையில் தான் ஒன்றும் இல்லை.

இதயம் கூடவா இல்லை?

$$$

Leave a comment