பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -2

-எஸ்.குருமூர்த்தி

பொது சிவில் சட்டத்தால் மக்கள் பிளவுபடுகிறார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் அளிக்கும் பதில், "நமது அரசியல் சாசனத்திலேயே பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறது" என்பதுதான். அவர்களது பதில் உறுதியானதாக இல்லை. அவர்கள் பொது சிவில் சட்டத்தின் வரலாற்று அடிப்படையை இன்னமும் ஆழமாகப் புரிந்துகொள்வது நல்லது. 

பகுதி-1

                சுதந்திரத்தின் போது நிகழ்ந்த தேசப் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிலுள்ள ஹிந்துக்கள், முஸ்லிம்களிடையே ஏற்பட்ட பிளவு இன்னமும் அகலவில்லை. அதற்குக் காரணமாக இருப்பது 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம் தான். இந்தப் பிளவை சரிசெய்வதற்கான முயற்சியே பொது சிவில் சட்டம். ஆனால், இதனை பாஜக தலைவர்களுக்குத் தெளிவாகக் கூறத் தெரியவில்லை.

                பொது சிவில் சட்டத்தால் மக்கள் பிளவுபடுகிறார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் அளிக்கும் பதில், “நமது அரசியல் சாசனத்திலேயே பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறது” என்பதுதான். அவர்களது பதில் உறுதியானதாக இல்லை. அவர்கள் பொது சிவில் சட்டத்தின் வரலாற்று அடிப்படையை இன்னமும் ஆழமாகப் புரிந்துகொள்வது நல்லது. 

                இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த சிற்பிகள், பொது சிவில் சட்டம் குறித்து தீவிரமாக விவாதித்தது ஏன்?  ஏனெனில் 1937இல் கொண்டுவரப்பட்டிருந்த ஷரீஅத் சட்டம் அதற்குத் தடையாக இருந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இல்லாமல் இருந்திருந்தால், அரசியல் சாசன சபையில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதமே நிகழ்ந்திருக்காது.

அரசியல் சட்டத்தின் 44வது பிரிவு சொல்வது என்ன?

                இந்த நாட்டின் பிரிவினைக்குக் காரணமான மத அடிப்படையிலான இச்சட்டம் தொடர்வதை அரசில் சாசன சபையால் அங்கீகரிக்க முடியவில்லை. எனவேதான், வருங்காலத்தில் பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்ற வேண்டும் என, வழிகாட்டும் நெறிமுறைகளில் குறிப்பிடும் 44வது பிரிவு நமது அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது.

                அரசியல் சாசனத்தை வடிவமைத்த நமது முன்னோர், பின்னாளில் வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதா, வேண்டாமா என்று தீர்மானிக்கும் விருப்புரிமை அதிகாரத்தை  வழங்கவில்லை. மாறாக, அதனை வழிகாட்டும் நெறிமுறைகளில் சேர்த்து கட்டாயமாக்கி உள்ளனர்; இதனை அவர்களது அரசியல் சாசனக் கடமையாக்கிச் சென்றுள்ளனர்.

                இதனைத்தான் பாஜக தலைவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும். தேசப்பிரிவினைக்குக் காரணமான 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டத்தின் அபாயத்தை விளக்கி, அரசியல் சாசன சபையின் வழிகாட்டும் நெறிமுறையான பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது அத்தியாவசியக் கடமை என்று அவர்கள் விளக்கமாகக் கூற வேண்டும். அதுவே மக்களை மீண்டும் ஒன்றுபடுத்தும் என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்.

                பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் இந்த நாட்டை சுமார் 70 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வியை அக்கட்சியினர் கேட்க வேண்டும். தனிப்பட்ட ஷரீஅத் சட்டத்தால் இந்நாட்டில் மதச்சார்பற்ற இந்தியா மேம்படவில்லை என்பதையும், ஹிந்து} முஸ்லிம் ஒற்றுமை சிறக்கவில்லை என்பதையும் ஆதாரங்களுடன் பாஜக அம்பலப்படுத்த வேண்டும்.

                பொது சிவில் சட்டத்தின் தேவையை, வரலாற்றுக் காரணமான 1937ஆம் வருடத்திய ஷரீஅத்துடன் இணைத்து பாஜக விளக்க வேண்டும். இல்லாவிடில், நாட்டில் பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது பொது சிவில் சட்டம் இப்போது எதற்கு என்று இதனை எதிர்ப்பவர்கள் கதைகட்டிக் கொண்டிருப்பார்கள்.

முஸ்லிம் லீகிற்கு அம்பேத்கரின் சவால்:

                அரசியல் சாசன நிர்ணய சபையில் பொது சிவில் சட்டத்திற்காக கடுமையாக வாதிட்ட ஒரே தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மட்டுமே. பொது சிவில் சட்டத்துக்கு எதிராக சபையில் பேசிய முஸ்லிம் லீக் உறுப்பினர்களை அம்பேத்கர் கடுமையாக விமர்சித்தார்.  மாற்றப்பட்ட இயலாத புனிதமான சட்டம் ஷரீஅத் என்ற முஸ்லிம் லீகினரின் பேச்சை அவர் நிராகரித்தார்.

                அப்போது அவர், 1935ஆம் வருடத்திற்கு முன் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (இன்றைய பாகிஸ்தான்) ஹிந்து சட்டங்கள் } ஷரீஅத் அல்ல } பின்பற்றப்பட்டு வந்தன என்பதை சுட்டிக்காட்டினார். ஐக்கிய மாகாணத்திலும் (இன்றைய உ.பி., பிகார்), மத்திய மாகாணத்திலும் (இன்றைய ம.பி.), மும்பையிலும், பெரும்பாலான முஸ்லிம்கள் வாரிசுரிமையைப் பொருத்த வரை ஹிந்து சட்டங்களையே பின்பற்றி வந்தனர் என்பதையும் அவர் குறிப்பிட்டு, இதனை முஸ்லிம் லீகால் மறுக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.

                வடக்கு மலபாரில் (கேரளம்) வாழும் முஸ்லிம்கள் அங்கு பாரம்பரியமாகப் பின்பற்றப்படும் ஹிந்து வாழ்வியல் முறையான மருமக்கள்தாயம் (தாய்வழி சொத்துரிமை மாற்றம்) என்ற சட்டத்தைப் பின்பற்றி வந்ததையும் அம்பேத்கர் எடுத்துக்காட்டினார்.

                பொது சிவில் சட்டம் என்ற கருதுகோளை முன்வைக்கும் அரசியல் நிர்ணய சபை இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது என முஸ்லிம் ஒருவராலும் கூற இயலாது என்று அவர் தனது வாதத்தை நிறைவு செய்தார். ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவாக நடைமுறையில் உள்ள உரிமைச் சட்டங்கள் சிலவற்றை அம்பேத்கர் அப்போது விரிவாக எடுத்துக் கூறினார். அவை என்னவென்று காண்போமா?

1937 வரையிலும் பின்பற்றப்பட்ட பொதுவான சட்டங்கள்:

                1937ஆம் வருடத்துக்கு முன்னர் வரையிலும், நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகள் பல மன்னர்களின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதும், கேரளம் முதல் உ.பி. வரை, ஹிந்து மன்னரின் ஆட்சியிலிருந்த அஜ்மீர்- மேவாரா முதல் முஸ்லிம் நவாபின் ஆட்சியிலிருந்த அவத் (அயோத்தி) வரை, வங்காளம் முதல் வடமேற்கு மாகாணம் வரை, நடைமுறையிலிருந்த உரிமையியல் (சிவில்) சட்டங்கள் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பொதுவானவையாகவே இருந்தன.

                பரம்பரை உரிமை, வாரிசுரிமை, தத்தெடுக்கும் உரிமை, உயில் எழுதும் உரிமை ஆகியவற்றில் ஹிந்து சட்டங்களே அனைவராலும் ஏற்கப்பட்டு வந்தன. அவற்றை வரிசையாகக் காணலாம்:

                கேரளத்தில் நடைமுறையிலிருந்த தாய்வழி சொத்துரிமை முறையான மருமக்கள்தாயத்தையே மாப்ளா முஸ்லிம்கள் கடைப்பிடித்து வந்தனர், ஷரீஅத்தை அல்ல. கேரளத்தின் மலபார் பகுதியிலுள்ள தரவாடுகளில் (முதன்மைக் குடும்பம்) முஸ்லிம் குடும்பங்களின் வாரிசுரிமை விவகாரங்களில் ஷரீஅத் பின்பற்றப்படவில்லை; மாறாக ஹிந்து பாரம்பரிய வழக்கங்களே பின்பற்றப்பட்டன.

                பஞ்சாபிலும், வடமேற்கு மாகாணத்திலும் உள்ளூர் ஹிந்து சட்டங்களே நடப்பில் இருந்தன. (இப்பகுதிகள் தற்போது பாகிஸ்தானாக உள்ளன). குறிப்பாக கணவனை இழந்த பெண்களுக்கு கூட்டு சொத்துரிமை ஹிந்து சட்டப்படி வழங்கப்பட்டது. அது ஷரீஅத்தில் இல்லாதது. அதேபோல  விவாகரத்து ஆன முஸ்லிம் பெண்ணுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலக் காத்திருப்புக் காலமான   ‘இத்தா’வின்போது பெண்ணுக்கு பராமரிப்புத் தொகையை மூன்று மாதங்களுக்கு மட்டும் அளித்தால் போதும் என்ற ஷரீஅத் சட்ட விதியை கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாபில் நடைமுறையிலிருந்த ஹிந்து சட்டங்கள் ஏற்கவில்லை. அதாவது அங்கிருந்த முஸ்லிம் மக்களே ஏற்கவில்லை.

                1856 வரை முஸ்லிம் நவாப் ஆட்சிக்கு உட்பட்டிருந்த அவத் (அயோத்தி) பிரதேசத்தில் கணவனை இழந்த முஸ்லிம் பெண்களுக்கு ஹிந்து சட்டப்படி கூட்டு சொத்துரிமைப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.  அங்கு ஷரீஅத் செயல்பாட்டில் இருக்கவில்லை. அதனால் முஸ்லிம் பெண்களுக்கு சொத்தில் நியாயமான  பங்கு கிடைத்தது.

                கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாபில் வாழ்ந்த முஸ்லிம்கள் தத்தெடுத்துக் கொள்வதை  ஹிந்து வழக்கப்படியே மேற்கொண்டனர். உயிலெழுதும் வழக்கமும் அவ்வாறே பஞ்சாப் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த வழக்குகள் வந்தபோது,  முஸ்லிம்கள் பின்பற்றிய தத்தெடுக்கும் உரிமையும், உயில் எழுதும் உரிமையும் நீதிமன்றங்களால் ஏற்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு பஞ்சாபில் வழக்கத்திலிருந்த சட்ட நடைமுறைகளே, ஷரீஅத்தை விட மேலானவையாக அறிவிக்கப்பட்டன.

                இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட அவுத் நில உரிமை சட்டம், ஷரீஅத்திலிருந்து முஸ்லிம் மக்களுக்கு விலக்கு அளித்தது! கிழக்கு பஞ்சாபில் அறிவிக்கப்பட்டது போலவே அவுத் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் நில உரிமையில் ஷரீஅத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை; உள்ளூர் சட்டங்களே போதுமானவை என்று நவாப் அறிவித்தார். இதேபோன்ற முடிவுகள் அஜ்மீர்-மேவாரா பிரதேசத்திலும் எடுக்கப்பட்டன. மத்திய பிரதேசத்திலும் ஷரீஅத்துடன் முரண்பட்ட உள்ளூர் சட்டங்களே  ஏற்கப்பட்டன.

                கிழக்கு பஞ்சாபிலுள்ள மலேர்கோட்டா சமஸ்தானத்தை காம்போஜிகள் ஆண்டனர். அங்குள்ள பெரும்பாலான நிலப்பகுதி விவசாய நிலமாகும். அங்கு நிலத்தின் வாரிசுரிமை  ஹிந்து பரம்பரை வழக்கப்படி ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. அங்கும் ஷரீஅத் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

                வடமேற்கு இந்தியாவில் பெரும் பகுதியினர் முஸ்லிம்களாக மதம் மாறியபோதும், கட்ச் மேமன்கள், கோஜாஸ் போன்ற முஸ்லிம் பிரிவினர்  ஹிந்து பாரம்பரிய சட்டங்ளையே கடைப்பிடித்து வந்துள்ளனர். இதனையே குஜராத்திலுள்ள ஷன்னி போஹ்ராக்களும் கிரிஸியாஸ்களும், ஹலாய் மேமன்களும் பயன்படுத்தியுள்ளனர்.

                ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்களின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நடைமுறைக்கு எதிரான வழக்கு மதராஸ் மாகாணத்தில் வந்தபோது, நீதிமன்றம் ஷரீஅத்தை நிராகரித்துள்ளது. கல்கத்தா, பம்பாய், மதராஸ் மாகாணங்களில் ஷரீஅத்திற்குப் பதிலாக ஹிந்து பாரம்பரிய சட்டங்களே நீதிமன்றங்களால் ஏற்கப்பட்டுள்ளன. மதராஸ் மாகாணத்தின் ஊரகப்பகுதிகளிலும் இதுவே நிலைமை.

                நம்பினால் நம்புங்கள்… ஆங்கிலேய அரசால் 1937இல் ஷரீஅத் சட்டம் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டபோதும், மேற்கு வங்கத்திலுள்ள கூச்பிகார் பகுதியில் வாழும் முஸ்லிம்களுக்கு இச்சட்டம் 1981 ஜூலை 1இல் தான் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. அதுவரை அங்கிருந்த ஹிந்துக்களின் பாரம்பரிய சட்டங்களையே அவர்கள் கடைபிடித்து வந்தனர். 1981இல் தான் கூச்பிகாரில்  ஷரீஅத் நடைமுறைக்கு வருவதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது!

                ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்கும் இடையில் நிலவிவந்த தொப்புள்கொடி உறவைத் துண்டிக்கவே 1937இல் ஷரீஅத் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை, இப்போதேனும் யாராவது மறுக்கத் துணிவார்களா?

***

                பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தில் முக்கியமாகக் குறிப்பிடப்படுவது, 1937இல் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் . இச்சட்டம் நிறைவேறிய காலம் வரை,

உள்ளூரில் வாழ்ந்த ஹிந்துக்களுக்கும் முஸ்லிமாக மாறியவர்களுக்கும் பொதுவான தன்மைகளும் பொருளாதார உறவுகளும் நிலவின. அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருந்தனர். அதனை உடைப்பதே 1937ஆம் வருடத்திய ஷரீஅத்தின் இலக்காக இருந்தது.

                இஸ்லாமிய ஷரீஅத்தைப் பொருத்த வரை இரு பெரும் அம்சங்களைக் கொண்டது. அவை மதம் மற்றும் கலாசார ரீதியான நெறிகளும், பொருளாதாரம் சார்ந்த நெறிகளும் ஆகும். முஸ்லிமாக மாறியவரைப் பொருத்த வரை கலாச்சார அம்சங்களில் திருமணம், விவகாரத்து போன்ற சமூகம் சார்ந்த நடைமுறைகளில் 1937க்கு முன்னிருந்தே ஷரீஅத் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. அப்போதைய கலாச்சாரப் பன்முகத்தன்மை, மதம் மாறிய முஸ்லிம்கள் தங்கள் சுய அடையாளங்களுடன் இருப்பதை அங்கீகரித்திருந்தது.

                அதேசமயம், ஷரீஅத்தின் பொருளாதார அம்சம் என்பது, முஸ்லிம்களின் சொத்துரிமை மற்றும் பரம்பரை உரிமை தொடர்பானதாகும். இவற்றைப் பொருத்த வரையில், நாடு முழுவதிலும் நடைமுறையிலிருந்த ஹிந்து சட்ட நடைமுûறைகளே ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் 1937 வரை பொதுவாக இருந்தன. இதுவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான பூர்விகப் பிணைப்பை உறுதிப்படுத்தி வந்தது.

                1937இல் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டத்தின் நோக்கம்,  முஸ்லிம்களை ஒட்டுமொத்த சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதும், அவர்களது தனித்த மத அடையாளத்தைப் பேணுவதும்,  சொத்துரிமை விவகாரங்களில் ஹிந்து  பாரம்பரியப் பிணைப்பைத் துண்டிப்பதும் தான். அதன்படியே,  பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றாக இருந்த சகோதரர்களை பத்தாண்டுகளுக்குள் நிரந்தர எதிரிகளாக்கிவிட்டது ஷரீஅத் சட்டம். 

சகோதரர்கள் பகைவர்களான கதை:

                முகமது அலி ஜின்னா கோஜா என்ற முஸ்லிம் சமுதாயத்தைச் சாந்தவர். அவர்கள் இஸ்மாயிலி என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த கோஜாக்களைப் பற்றி அறிந்தால் வியந்து போவீர்கள்.

                ஜின்னாவால் இருதேசக் கொள்கை முன்வைக்கப்படும் வரையிலும்,  கோஜா முஸ்லிம்களின் புனிதநூலாக இருந்தது, திருக்குர்ஆன் அல்ல, “தசாவதாரா’ என்ற நூல் தான். இந்நூலில் கூறப்பட்டுள்ள கடவுளின் ஒன்பது அவதாரங்கள் ஹிந்துக்களின் பாகவத புராணத்தில் உள்ளவையே. அதன் பத்தாவது அவதாரம் தான் ஹிந்துக்களிலிருந்து மாறுபடுகிறது.

                ஹிந்துக்கள் தசாவதாரத்தின் பத்தாவது அவதாரமாக கல்கி அவதாரத்தைக் கருதுகின்றனர். மாறாக, கோஜா முஸ்லிம்களைப் பொருத்த வரை பத்தாவது அவதாரம் அலி அவார். அவர் இஸ்லாமியர்களின் புனித இறைத்தூதரான நபிகள் நாயகத்தின் மருமகன் ஆவார்.

                 ‘தசாவதாரா’ நூலில் உள்ள இஸ்மாயிலி பக்திப் பாடல்கள்  ‘ஜினன்’ என்று அழைக்கப்படுகின்றன. அவை, அலி அவர்களின் வழித்தோன்றலான  பிர் சத்ருதீனால் இயற்றப்பட்டவை. அவரே கோஜா சமுதாயத்தின் நிறுவனர் ஆவார். கோஜாக்கள் ஒட்டுமொத்தமாக முஸ்லிமாக மதம் மாறிய சமுதாயத்தினர். அவர்கள் ஹிந்து வாரிசுரிமை சட்டங்களையே பின்பற்றி வந்தனர்,  ஷரீஅத் சட்டத்தை அல்ல.

                ஆகா கான் வழக்கு: காலனி இந்தியாவில் மத அடையாளங்கள் (2001) என்ற நூலில், அதனை எழுதிய புரோஹித்தும் டினாவும்,  இதனை உறுதிப்படுத்துகின்றனர். ஆகா கான் சொத்துரிமை வழக்கு பம்பாய் நீதிமன்றத்தில் 1866இல் நடைபெற்றபோது, அலி பிர் சத்ருதீன் வழியில் இறைத்தூதர் நபிகளுடனான அவரது தொடர்பு நினைவு கூரப்பட்டது. அப்போது திருக்குர்ஆன் கோஜாக்களின் புனித நூலல்ல என்று பம்பாய் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களது புனித நூல்  ‘தசாவதாரா’ என்று உறுதிப்படுத்தப்பட்டது.

                இத்தீர்ப்பு வெளியானதற்கு பத்தாண்டுகள் கழித்துப் பிறந்தவர் தான் முகமது அலி ஜின்னா (1876} 1948). அவர் தனது இளமைப்பருவத்தில் திருக்குர்ஆனைப் படிக்காமல் இருந்திருக்கலாம். ஏனெனில் கோஜாக்களின் புனித நூலாக அப்போது   ‘தசாவதாரா’ தான் இருந்தது. அவரும் 1937 வரை ஹிந்து பாரம்பரிய சட்டங்களையே பின்பற்றி வந்தார்.

                ஜின்னாவின் முயற்சியால் முஸ்லிம்களுக்கென தனித்த ஷரீஅத் சட்டம் கொண்டுவரப்பட்டதது. எனினும், அதில் உயில் எழுதுவது உள்ளிட்ட ஹிந்து பாரம்பரிய சட்டப் பிரிவுகளைக் கைவிடாமல் அவர் சேர்த்துக் கொண்டார். அவரேதான், 1946இல் நேரடி நடவடிக்கை என்ற பெயரில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு,  தேசத்தைத் துண்டாடினார்.

                ஜின்னாவைப் போலவே, ஆகா கானின் பேரனான மூன்றாவது ஆகா கானும் முஸ்லிம் லீகின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியதுடன், பாகிஸ்தான் உருவாக்கத்தில் பிரதான இடம் வகித்தார்.

                கோஜாக்களைப் போலவே ஒட்டுமொத்த சமுதாயமும் முஸ்லிமாக மாறியவர்கள் தான் கட்ச் மேமன்கள். அவர்களும் ஹிந்து பாரம்பரிய சட்டங்களையே வழக்கத்தில் அனுசரித்து வந்தனர். இந்த சமுதாயத்தில் பிறந்த டைகர் மேமனும் யாகூப் மேமனும் 1993இல் மும்பையில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களுக்குக் காரணமானார்கள். அந்தக் கொடிய நிகழ்வுகளில் 900 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; 2,000 பேர் படுகாயம் அடைந்தனர்.

                1937இல் தூண்டிவிடப்பட்டசிறு பொறி, ஒரு  சமுதாயத்தில் இணக்கமாக வாழ்ந்த இரு தரப்பினரை கடும் பகையாளி ஆக்கியிருக்கிறது என்பதற்கு இவையே உதாரணங்கள்.

                தேசப் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகையுணர்வு வளர்ந்ததற்கு 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டமே காரணமானது என்பதால் தான்,  நமது அரசியல் சாசனத்தை வடிவமைத்த மூத்த தலைவர்கள், சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

                அரசியல் சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைக்கு மாறாக, சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும், நெடுங்காலமாக பொது சிவில் சட்டம் குறித்து விவாதம் கூட நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.

                பாரத நாடு இந்தியா, பாகிஸ்தான் என இருகூறாகப் பிளக்கப்படக் காரணமான ஒரு சட்டம், சுதந்திர இந்தியாவில் மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகளால் புனிதமாகப் போற்றப்படுவது அபத்தம்.

                அரசியல் சாசனத்தின் சிற்பிகள் ஷரீஅத்  சட்டத்தை நிறுத்திவைத்து அனைவருக்குமான பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பிய நிலையில், அதற்கு மாறாக, ஷரீஅத் சட்டத்தை இந்திய முஸ்லிம்களின் மத உரிமையாக மதச்சார்பின்மை பேசுவோர் முன்னிறுத்தி வாதிடுவது கேலிக்கூத்து. இது உண்மையில் அவர்களது வக்கிர மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.

                ஆங்கிலேயர்களால் 1937ஆம் ஆண்டு திணிக்கப்பட்ட ஷரீஅத் சட்டம் இந்திய மக்களைப் பிளவுபடுத்திவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. பொது சிவில் சட்டம் என்பது, வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட தவறைச் சரிசெய்வதற்கான வாய்ப்பாகும். இது ஏற்கனவே மிகவும் தாமதமாகிவிட்டது.

                1937க்கு முன் நமது நாட்டில் நிலவிய பாரம்பரிய சட்ட நடைமுறைகளைப் பரிசீலித்து நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான தருணம் இது. தற்போதைய மத்திய அரசு கொண்டுவர உத்தேசிக்கும் பொது சிவில் சட்டம், நம்மை மீண்டும் ஒன்றுபடுத்துமா?

(நிறைவு)

காண்க:

  1. 1937 Shariat Act – For Muslims or for Jinnah and the Zamindars?
  2. The 1937 Act divided India. Will UCC integrate it?
  • தமிழில்: சேக்கிழான்

$$$

One thought on “பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -2

Leave a comment