பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -1

-எஸ்.குருமூர்த்தி

பொது சிவில் சட்டத்தை எளிதாகக் கொண்டுவந்து விட முடியாது என்பது யதார்த்தம். இச்சட்டம் நிறைவேற வேண்டுமானால், 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம் காலாவதியாக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் அரங்கில்  உள்ள தலைவர்கள் பலரும் 1937இல் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் குறித்த எந்த ஒரு அடிப்படையான புரிதலும் இல்லாதவர்களாக, காற்றில் கத்தி வீசுகிறார்கள்.

              

காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உறுதி செய்வதற்காக பிகாரின் பாட்னாவில் கூடிய ஒரே வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி ஓர் அதிரடி விவாதத்தைத் தொடங்கி வைத்தார். பொது சிவில் சட்டம் என்ற அந்த விவாதம்,  ஓர் அரசியல்  வியூகம் மட்டுமல்ல, சித்தாந்தரீதியான சவாலும் கூட.               

                இந்த விவாதம் எதிர்பார்த்தது போலவே, பாட்னாவில் ஒன்றாகக் கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மூன்றாகப் பிரித்துவிட்டது. அதில் ஒரு குழுவினர் பொது சிவில் சட்டத்தை மூர்க்கமாக எதிர்க்கின்றனர்; மற்றொரு குழுவினர் ஆதரிக்கின்றனர்;  இன்னொரு குழுவினர் இதனை ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்ற குழப்பத்தில் தடுமாறுகின்றனர். மோடியின் பொது சிவில் சட்டம் குறித்த சிந்தனை,  எதிர்க்கட்சிக் கூட்டணியை எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது.

                பொது சிவில் சட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆதரிக்காமல் தவிர்ப்பது, ஆங்கிலேய அரசால் 1937இல் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டத்தை ஆதரிப்பதுதான் என்பது, பிரதமர் மோடிக்குத் தெரிந்திருக்கிறது. அதாவது, ஆங்கிலேயரின் சட்டத்தை ஆதரிப்பதா, சுதந்திர இந்தியா தனக்கான சட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா என்பதே, பிரதமர் முன்வைத்துள்ள நெருக்கடியான சவால்.

வரலாற்றுப் பின்னணி:

                பொது சிவில் சட்டத்தை எளிதாகக் கொண்டுவந்து விட முடியாது என்பது யதார்த்தம். இச்சட்டம் நிறைவேற வேண்டுமானால், 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம் காலாவதியாக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் அரங்கில்  உள்ள தலைவர்கள் பலரும் 1937இல் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் குறித்த எந்த ஒரு அடிப்படையான புரிதலும் இல்லாதவர்களாக, காற்றில் கத்தி வீசுகிறார்கள்.

                உண்மையில், மிகவும் இழிவான தந்திரத்துடன், ஆங்கிலேய அரசால்  ஷரீஅத் சட்டம் அப்போது கொண்டுவரப்பட்டது. அதன் மோசமான பின்னணியை அறிய,  பொது சிவில் சட்டத்துக்கான பிரதமர் மோடியின் தற்போதைய அழைப்பு  தூண்டி இருக்கிறது. இதிலிருந்து வெளியாகும் பல ரகசியங்கள் எதிர்க்கட்சிகளின் அறியாமையால் பிறக்கும் வாய்ச்சவடால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடும்.

                1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டத்தின் பின்புலக் கதையைத் தோண்டி எடுப்பது, தேசப் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது.  

                இந்த நாடகத்தின் திருப்புமுனைக் காட்சியைப் பிறகு பார்க்கலாம். இதன் நெடுங்கதையை முதலில்  அறிவோம். 1937ஆம் ஆண்டுக்கு முன் பிளவுபடாத இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஷரீஅத் சட்டத்தை அல்ல, ஹிந்துக்களின் சட்டங்களையே பின்பற்றி வந்தனர் என்பதை, இப்போது பொது சிவில் சட்டத்தை  எதிர்த்துக் கூச்சலிடும் அரசியல் நாடக நடிகர்கள் அறிய மாட்டார்கள். அதுவரை  ஹிந்துக்களால் பின்பற்றப்பட்டுவந்த, எழுத்து வடிவில் சட்டமாக்கப்படாத ஹிந்து பாரம்பரிய சட்டங்களையே இந்தியாவில் வாழும் அனைத்துத் தரப்பு முஸ்லிம்களும் கடைப்பிடித்து வந்தார்கள்.

                விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தவும், விடுதலை இயக்கத்திலிருந்து முஸ்லிம் லீக் கட்சியைத் தனிமைப்படுத்தவும், ஆங்கிலேய அரசு கையாண்ட உத்தியே 1937இல்  கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம். இது விடுதலைப் போராட்டக் களத்தில் முஸ்லிம்களிடம் மகாத்மா காந்தி தலைமையிலான காங்கிரஸ் பெற்றிருந்த செல்வாக்கைக் குறைக்க,  முஸ்லிம் லீகும் ஆங்கிலேய அரசும் இணைந்து நடத்திய நாடகம்.

                இதன் முதல் நோக்கம், ஹிந்துக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து முஸ்லிம்களைத் துண்டிப்பது. அடுத்தது, ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இணக்கமான சூழலை மாற்றி, ஹிந்துக்களுடனான உறவை விரோதமாக மாற்றி, முஸ்லிம்களை தனித்தன்மை கொண்டவர்களாக முன்னிறுத்துவது. இவற்றால் தான் பின்னாளில்  முஸ்லிம்களுக்கென்று தனிநாடு கோரிக்கை எழுந்து, அது நிறைவேற்றப்பட்டது.

                முஸ்லிம் லீகின் மறைமுக இலக்கை ஆங்கிலேய அரசு தூண்டிவிட்டு, நாட்டு மக்களிடமிருந்து முஸ்லிம் மக்களைப் பிரித்தது. அதுமட்டுமல்ல, 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டத்துக்குப் பின்னால் வெளிவராத வேறு பல  ரகசியங்களும் புதைந்து கிடக்கின்றன.

                உண்மையில், இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்திற்கு மாறான பல அம்சங்களை 1937இல் ஆங்கிலேய அரசு நிறைவேற்றிய  ஷரீஅத் சட்டம் கொண்டிருக்கிறது. இது ஒருவகையில் முஸ்லிம் மக்களை ஏமாற்றும் சதியாகும். அது என்ன சதி?

                1937இல் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டமானது இஸ்லாமிய தனிநபர் சட்டமான ஷரீஅத்தில் கூறப்படும் பல அம்சங்களை மீறுவதாக இருக்கிறது. இந்த தகிடுதத்தத் திருத்தங்கள் முஸ்லிம் லீக் தலைவர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டவை. ஜின்னா உள்ளிட்ட முஸ்லிம் லீக் தலைவர்கள், லீகை ஆதரித்த பெரும் நிலக்கிழார்கள், ஜமீன்தார்களின் சொத்துகளைக் காப்பாற்ற, ஷரீஅத்தின் விதிகளைத் தளர்த்தி, அந்த விஷயங்களில் மட்டும் பெரும்பான்மை ஹிந்து மக்களின் பாரம்பரிய சட்ட நடைமுறையை புதிய சட்டத்தில் புகுத்திக் கொண்டனர்.

                இஸ்லாமின் தனித்தன்மையான ஷரீஅத் சட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டத்தில், ஹிந்துக்களின் சொத்துரிமை சட்டப் பிரிவுகளை மட்டும் சேர்த்துக் கொண்டனர். இது முஸ்லிம் லீகினரின் சொத்துகளைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சியே. இந்த இடத்தில்  1937க்கு முந்தைய இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை திருப்பிப் பார்ப்பது பயனளிக்கும். அது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நமக்கு அளிக்கும்.

ஆயிரம் ஆண்டுகளாக ஷரீஅத் இல்லை:

                ஏழாம் நூற்றாண்டில் அரேபிய வர்த்தகர்கள் மூலமாக இந்தியாவின் கேரள கடற்கரையில் இஸ்லாம் நுழைந்தது. பிறகு எட்டாம் நூற்றாண்டு முதல் வடமேற்கு எல்லையில் படையெடுத்து வந்த காசிம், கஜினி போன்றவர்களால், வாள்முனையில் இஸ்லாம் பரவியது. பத்தாம் நூற்றாண்டுக்குள்ளாகவே பாரதத்தின் பெரும்பகுதியில் இஸ்லாம் பரவிவிட்டது.

                ஆனால், இஸ்லாமியர்களின் தனிச்சட்டம் என்று முஸ்லிம்களால் இப்போது கூறப்படும் ஷரீஅத் சட்டம், முஸ்லிம்களாக மதம் மாறிய மக்களிடம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அது எப்போது இந்திய முஸ்லிம்களிடம் நடைமுறைப்படுத்தப்பட்டது என்று தெரியுமா?

                இச்சட்டம் 11ஆம் நூற்றாண்டிலோ, மொகலாயப் பேரரசு விஸ்தீரணமாக ஆண்ட அடுத்தடுத்த நூற்றாண்டுகளிலோ, அதன் இறுதிக்காலமான 17ஆம் நூற்றாண்டிலோ, இந்திய முஸ்லிம்களிடம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படவே இல்லை. 

                18ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களின் பிடி தளர்ந்து அந்த இடத்தை மராட்டிய ஹிந்துக்கள் கைப்பற்றத் தொடங்கினர். அதையடுத்து பிரிட்டீஷாரின் ஆட்சி இந்தியாவில் அமைந்துவிட்டது. ஆங்கிலேயர் அதீத பலத்துடன் ஆண்ட 19ஆம் நூற்றாண்டிலும் ஷரீஅத் சட்டம் நடைமுறையில் இருக்கவில்லை. அப்படியானால், இச்சட்டம் எப்போதுதான் இந்திய முஸ்லிம்களிடம் அறிமுகமானது?

                1937இல் தான் ஷரீஅத் சட்டம் இந்தியாவில் அறிமுகமானது. அதாவது, முஸ்லிம்களின்  போற்றுதலுக்குரிய மொகலாயப் பேரரசரான ஒüரங்கசீப் காலத்துக்குப் பிறகு சுமார் 230 ஆண்டுகள் கழித்து, இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆட்சி முடிந்து பல்லாண்டுகள் கழித்து, முஸ்லிம்களாக மதம் மாறியவர்களுக்காக 1937இல் ஷரீஅத் சட்டம் கொண்டுவரப்பட்டது.

                அதற்கு முன்னர் வரை, நாடு முழுவதிலும் பிரதேச வாரியாக வழக்கத்திலிருந்த ஹிந்து பாரம்பரிய சட்டங்களையே ஆங்கிலேய அரசு அனைத்து மக்களிடமும்  நடைமுறைப்படுத்தி வந்தது. பன்னெடுங்காலமாக இந்திய முஸ்லிம்கள் சொத்துரிமை விவகாரத்தில் கடைப்பிடித்து வந்த பாரம்பரிய சட்ட நெறிகளை வலுப்படுத்துவதாகவே 1937ஆம் வருடத்திய சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது என்கிறார்,   ‘முஸ்லிம் நனிநபர் சட்டம் உருவான வரலாறு’ என்ற நூலை எழுதிய கே.கே.அப்துல் ரஹ்மான் (1986).

***

இன்றைய விவாதப் பொருளான பொது சிவில் சட்டத்திற்கு வித்திட்டது, 1937இல் இந்திய முஸ்லிம்களுக்காக ஆங்கிலேய அரசால் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் தான். இதன் பின்னணியில் ஆங்கிலேய அரசின் மறைமுக அரசியல் திட்டமும், முஸ்லிம் லீக் தலைவர்களின் ரகசிய பொருளாதாரத் திட்டமும் இருந்தன.

                இந்தச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய அவசரத் தேவை அப்போது எப்படி வந்தது? முஸ்லிமாக மாறியவர்கள் ஆயிரம் ஆண்டுகளாக ஷரீஅத் சட்டம் பற்றிக் கவலைப்படாத நிலையில்,  இச்சட்டம் வேண்டுமென்று 1937இல் அவர்களே கோரினார்களா? அல்லது இருநூறு ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் திடீரென ஞானோதயம் ஏற்பட்டு ஷரீஅத்தைக் கொண்டுவந்தார்களா?

                இக்கேள்விகளுக்கான பதில்களில், ஆங்கிலேயருக்கும் முஸ்லிம் லீகிற்கும் இடையிலான பேரங்களே காரணமாக இருந்ததை அறிய முடியும். இந்த பேரங்களையே பெருவாரியான இஸ்லாமிய மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.

                முதலாவதாக, ஷரீஅத் சட்டம் வேண்டுமென்று முஸ்லிமாக மதம் மாறிவர்கள் எவரும் கேட்கவில்லை. இந்தியாவில் தங்கள் ஆட்சி நிலைத்திருக்க விரும்பிய ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவே இச்சட்டம் என்பதுதான் உண்மை. ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்திருக்கக் கூடாது என்ற அவர்களது திட்டமே, முஸ்லிம் லீகைத் தூண்டிவிட்டது.

                தனிநாடு என்ற மறைமுகத் திட்டத்தைக் கொண்டிருந்த முஸ்லிம் லீகினருக்கு ஷரீஅத் சட்டம் தேவை. அதேசமயம், தங்கள் சொத்துரிமையைக் காக்கும் ஹிந்து சட்டங்களை மட்டும் புதிய சட்டத்தில் புகுத்தியாக வேண்டியிருந்தது. அதன்படியே 1937இல் சட்டமும் இயற்றப்பட்டது.

                1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டத்தைப் பரிசீலிப்பவர்களுக்கு அது இஸ்மாம் மார்க்கத்தில் கூறப்படும் முழுமையான ஷரீஅத் அல்ல என்பது எளிதாக விளங்கும். அச்சட்டம், ஹிந்து சட்டங்களில் தங்களுக்குத் தேவையான பிரிவுகளை மட்டும் கடத்தி வைத்துக்கொண்டு கலவையாகத் தயாரித்த முஸ்லிம் சட்டம் மட்டுமே.

                அதாவது முஸ்லிம் லீகினர் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்தினார்கள். முதலாவதாக, ஹிந்துக்களுடன் பரஸ்பர நல்லுறவு கொண்டிருந்த முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி, ஹிந்து பழக்க வழக்கங்களில் இருந்து அவர்களை விலக்கிவைத்து, பின்னாளில் தேசப்பிரிவினைக்குத் தயார்ப்படுத்தியது லீக். இரண்டாவதாக, முழுமையான ஷரீஅத் சட்டத்தை நிறைவேற்றாமல், தங்கள் சொத்துகளைக் காப்பாற்றும் ஹிந்து சட்டங்களை தோதான இடங்களில் மட்டும் பயன்படுத்திக்கொண்டு புதிய சட்டத்தை உருவாக்கி, பணக்கார லீக் தலைவர்களின் சொத்துரிமை காப்பாற்றப்பட்டது.

                இது உண்மையில், இந்தியாவுக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரான சதி மட்டுமல்ல, ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிரானது.

கடத்தப்பட்ட ஹிந்து சட்டங்கள்:

                1937இல் நிறைவேற்றப்பட்ட ஷரீஅத் சட்டத்தின் முக்கியமான பகுதி கொண்டிருப்பது வெறும் 92 வார்த்தைகள் மட்டுமே. அது, அந்நாள் வரை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வந்த ஹிந்து பாம்ரபரிய சட்ட நெறிகளிலிருந்து அவர்களை விலக்கிவைத்து, இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் பல பிரிவுகளைத் திணிப்பதாக அமைந்தது. இந்த 92 வார்த்தைகள் கொண்ட சட்டத்தைத் தான் மாற்ற இயலாத புனிதம் மிக்கது என்று முஸ்லிம்களில் பலர் இப்போது வாதிடுகிறார்கள்.

                ஆனால், 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம், இஸ்லாம் மார்க்கம் கூறும்  அளவிற்கு இந்திய முஸ்லிம்களுக்கு புனிதமானதா? இல்லை என்பதே சரியான பதில். சொல்லப்போனால், இது இஸ்லாமிய ஷரீஅத் நெறிகளுக்கு முரணான மூன்று அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

                முதலாவது, இஸ்லாமிய ஷரீஅத், சொத்துகளுக்கு உயில் எழுதுவதை ஏற்பதில்லை. ஆனால், 1937இல் உருவாக்கப்பட்ட ஷரீஅத் சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு தங்கள் விருப்பப்படி உயில் எழுதும் உரிமையை அளிக்கிறது. இது ஹிந்துக்களின் பாரம்பரியச் சட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாகும்.

                இரண்டாவது, விவசாய நிலங்கள் தொடர்பான சொத்துரிமையில் பெண்களுக்கு விலக்கு அளிப்பதாகும். அதிக மதிப்புள்ள செல்வமாக அன்றும் இன்றும் இருப்பது விவசாய நிலமே. எனவே இவ்விஷயத்தில் அப்போதைய ஹிந்து சட்ட நடைமுறைகளை புதிய ஷரீஅத் சட்டம் ஏற்றுக் கொண்டது.

                மூன்றாவதாக, குழந்தை இல்லாத முஸ்லிம்கள் தத்து எடுத்துக் கொள்வதை இஸ்லாமிய ஷரீஅத் ஏற்பதில்லை. நபிகள் நாயகமே அதனை தடை செய்திருக்கிறார். ஆனால், 1937இல் உருவாக்கப்பட்ட இந்திய ஷரீஅத் சட்டம்,  குழந்தை இல்லாத முஸ்லிம் தம்பதி தத்தெடுப்பதை அனுமதிக்கிறது.

                நிதர்சனத்தில், இந்த ஷரீஅத் சட்டமே இஸ்லாமிய நம்பிக்கைப்படி மதநிந்தனைக்கு உரியதாகும். ஹிந்து சட்டங்களின் பிரிவுகளை தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் தந்திர உபாயமே,  புதிய ஷரீஅத் சட்டத்தில் பிரதிபலிக்கிறது.

ஜின்னாவுக்காகவே இந்த மாற்றம்:

                ஷரீஅத்தில் ஏற்கப்பட்டாத உயில் எழுதும் உரிமை, ஹிந்து பாரம்பரிய சட்டத்தில் உள்ளது. அதனை 1937 சட்டத்தில் புகுத்தியது, முகமது அலி ஜின்னாவின் தனிப்பட்ட லாபத்துக்காகவே. ஜின்னாவுக்கு மும்பையிலிருந்த தனது மாபெரும் எஸ்டேட்டை உயில் எழுதாமல் கைவிட மனமில்லை. அதேசமயம், அவரது மகள் ஒரு பார்சியை திருமணம் செய்துகொண்டவுடன்,  தனது சொத்தில் ஒரு பகுதியும் மகளுக்குக் கிடையாது என்று மரபுரிமையை நீக்கி உயில் எழுதிவைத்தார் ஜின்னா. முழுமையான ஷரீஅத் நடைமுறையில் இருந்திருந்தால், ஜின்னாவின் மகளுக்கு மரபுரிமையாக அந்தச் சொத்து கிடைத்திருக்கும்.

                ஜின்னாவின் நண்பரும் பிரபல நீதிபதியுமான முகமது கரீம் சாக்ளா, முகமது அலி ஜின்னா தனது மகள் டினாவுக்குக் கிடைக்க வேண்டிய மரபுரிமை பாத்தியதையை ரத்து செய்யத் துடித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்ல, சொந்த சகோதரியையே தனது சொத்துகளின் காப்பாளராகவும் நியமித்தார். மும்பை, மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள 2.5 ஏக்கர் பரப்புள்ள மாபெரும் பங்களாவும் பிற சொத்துகளும் அவ்வாறு கைமாறின. அவற்றின் இப்போதைய மதிப்பு ரூ. ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும்.

                தனது சொத்துகளிலிருந்து பல அறக்கட்டளைகளைச் செயல்படுத்த நிதி ஒதுக்கிய ஜின்னா, தனது மகளுக்கு மிகவும் குறைந்த வருடாந்திரத் தொகையை மட்டுமே உயிலில் வழங்கினார். காரணம், தனது விருப்பத்திற்கு மாறாக வேற்று மதத்தவரை அவர் திருமணம் செய்துகொண்டார் என்ற கோபமே. இதில் ஆச்சரியம் என்னவென்றால், டினா பிறந்ததே, ஜின்னா மதம் மாற்றித் திருமணம் புரிந்துகொண்ட பார்சி பெண்ணுக்குத் தான்.

                உயில் எழுதுவதை புதிய ஷரீஅத்தில் புகுத்தியதற்கு ஜின்னாவின் சுயநலம் காரணம் என்பது போலவே, விவசாய நிலங்களின் சொத்துரிமையில் பெண்களுக்கு விலக்கு அளித்ததும், தத்தெடுக்கும் உரிமை அளித்ததும், முஸ்லிம் லீகின் செல்வாக்கான ஆதரவாளர்களான ஜமீன்தார்களுக்கு உதவுவதற்காகவே.

                விவசாய நிலங்களைப் பொருத்த வரை ஹிந்து சட்டத்தில் ஆண்களுக்கு மட்டுமே உரிமை இருந்தது; பெண்குழந்தைகள் அதில் உரிமை கோர முடியாது. ஆனால் இஸ்லாமிய ஷரீஅத்தின்படி விவசாய நிலத்தில் பெண்களுக்கும் பங்குண்டு. ஆனால், பெரும் நிலக்கிழார்களைக் காப்பாற்றுவதற்காக, புதிய ஷரீஅத் சட்டத்தில் இதில் ஹிந்து சட்டம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

                இஸ்லாமிய ஷரீஅத்தின் படி ஆண் குழந்தைகளை முஸ்லிம் ஒருவர் தத்தெடுத்தாலும், அக்குழந்தைக்கு சொத்தில் உரிமை கிடையாது. இதிலும், குழந்தை இல்லாத முஸ்லிம் ஜமீன்தார்களின் நலனுக்காக, ஹிந்து சட்டப்பிரிவு புதிய ஷரீஅத்தில் ஏற்கப்பட்டது.

இஸ்லாமுக்கு எதிரான சட்டம் இதுவே:

                இஸ்லாமிய ஷரீஅத்துக்கு முரணான ஹிந்து சட்டப் பிரிவுகளை 1937ஆம் வருடத்திய புதிய ஷரீஅத் சட்டத்தில் கொண்டு வந்தவர்கள் யார்? அதற்கு வித்திட்டவர்கள் யார்? நிச்சயமாக ஆங்கிலேயர்களாக இருக்க வாய்ப்பில்லை. இதற்கான தேவைகள் அவர்களுக்கு இல்லவே இல்லை. இவற்றைக் கொண்டுவந்தவர்கள் முஸ்லிம் லீக் தலைவர்களே. இது ஆங்கிலேய அரசுடன் மறைமுக உடன்பாடு கொண்டிருந்த முஸ்லிம் லீகினரின் விருப்பத்திற்காக வளைத்து உருவாக்கப்பட்ட சட்டம் என்பது  சொல்லாமலே விளங்கும்.

                இப்போது பொது சிவில் சட்டத்துக்கு எதிராகவும், 1937இல் நிறைவேற்றப்பட்ட ஷரீஅத் சட்டத்துக்கு ஆதரவாகவும் மேடைகளில் முழங்குவோர் பலரும், இந்திய நாடாளுமன்றத்திற்கும் கூட இதனை மாற்ற உரிமையில்லை என்று பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் அறியாதது, 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டமே ஒரு கலப்படம் என்பதுதான். தங்கள் வசதிக்கேற்ப ஹிந்து பாரம்பரிய சட்டப் பிரிவுகளை ஏற்றுக் கொண்ட ஷரீஅத் சட்டமே இப்போது நடைமுறையில் இருக்கிறது.

                ஆங்கிலேய அரசுடன் உடன்பாடு கொண்டிருந்த முஸ்லிம் லீகர்களால்  உருவாக்கப்பட்ட இந்த கலப்படச் சட்டம், முஸ்லிம்களிடையே மதரீதியான உணர்வைப் பரப்பி, சமுதாயத்தில் பிளவை உருவாக்கியது. அதற்கடுத்த பத்தே ஆண்டுகளில், 1947இல்,  மதஅடிப்படையில் இந்த நாடு இரண்டாகப் பிளக்கப்பட்டது.

                1937 வரையிலும் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணக்கமாக வாழ்ந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்த புதிய ஷரீஅத் சட்டம், சமுதாயரீதியாக அவர்களை இருகூறாகப் பிளவுபடுத்தியது. முஸ்லிம்களை மதரீதியாக  ஒருங்கிணைத்து, 1940இல் தனிநாடு கோரிக்கைத் தீர்மானம் கொண்டுவர வழிவகுத்தது. 1947இல் பாகிஸ்தான் என்ற நாடு உருவாகவும் அதுவே கருவானது.

                1937 வரையிலும் நாடு முழுவதிலும் செல்வாக்குப் பெற்ற கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருந்தது. அதில் முஸ்லிம்களும் அங்கத்தினர்களாக இருந்தனர். மகாத்மா காந்தி நாட்டின் தன்னிகரற்ற தலைவராக இருந்தார். 1937இல் ஷரீஅத் சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன், இந்திய முஸ்லிம்களிடையே முஸ்லிம் லீகிற்கு மரியாதை ஏற்பட்டது. விரைவிலேயே முஸ்லிம்களின் தனிப்பெரும் கட்சி என்ற நிலையை முஸ்லிம் லீக் எட்டிவிட்டது.

                காங்கிரஸில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் பலரும் முஸ்லிம் லீகிற்கு இடம் பெயர்ந்தனர். ஆங்கிலேய அரசுடன் இணக்கமாக இருந்த முஸ்லிம் லீகின் செல்வாக்கு வளர்ந்தது. இந்த அதிரடி வளர்ச்சியை முஸ்லிம் லீகே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. 1940 வரையிலும், ஹிந்துக்களும் முஸ்லிம்களும் பரஸ்பரப் புரிந்துணர்வுடனும் தனிப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய கூட்டாட்சியில் காங்கிரஸுடன் இணைந்து பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது முஸ்லிம் லீக். தங்கள் கட்சிக்குக் கிடைத்த அபரிமித ஆதரவால் அக்கட்சி தேசப்பிரிவினை என்ற இலக்கை நோக்கி முன்னேறத் தொடங்கியது.

                1937 அக்டோபரில் ஷரீஅத் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதையடுத்த இரண்டரை ஆண்டுகளில், 1940 மார்ச்சில், முஸ்லிம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைத் தீர்மானத்தை லாகூரில்  நிறைவேற்றினார் முகமது அலி ஜின்னா.

(பகுதி-2…)

காண்க:

  1. 1937 Shariat Act – For Muslims or for Jinnah and the Zamindars?
  2. The 1937 Act divided India. Will UCC integrate it?

$$$

One thought on “பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -1

Leave a comment