நாடகக் கலை – 2 -அ

-அவ்வை டி.கே.சண்முகம்

நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக நடிக்கிறார்களே; இந்த நடிப்பையெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக நடிக்கிறார்கள்? 

2. நடிப்புக் கலை (அ)


நடிப்புக் கலை இயற்கையானது

நாடகம் பல உறுப்புகளைக் கொண்டது. கதை, பாத்திரப் படைப்பு, காட்சித் தொகுப்பு, உரையாடல், நடிப்பு, பாடல், வேடப் பொருத்தம், காட்சி ஜோடனை, நாடக அரங்கம், நாடக ரசிகர்கள் – இவ்வாறு பல்வேறு பிரிவுகளைக் கொண்ட நாடகத்தில், நடிப்பு ஒரு சிறப்பும் முதன்மையுமான பகுதி.

நடிப்புக் கலை இயற்கையாக எல்லோரிடமும் அமைந்து கிடக்கும் கலை. இந்த நடிப்புக் கலையைத் தேவைப்படும்போது வெளிப்படுத்திக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டுவதற்குப் பயிற்சி முறைகள் தேவை. நடிப்புக் கலை நமக்கு வராதென்று யாரும் தளர்ச்சி அடைய வேண்டியதில்லை.

பசி எப்படி மனிதனுக்கு இயற்கையாக உண்டாகிறதோ அதே போன்று விளையாட வேண்டும் என்ற உணர்ச்சியும் இயல்பாகவே உண்டாகிறது. இந்த விளையாட்டுகளிலே ஒருவரைப் போல மற்றொருவர் நடித்துக் காட்டுவது ஒரு அற்புதமான விளையாட்டல்லவா? எல்லா உயிரினங்களுக்கும் நடிப்பு உண்டு

இந்த விளையாட்டு உணர்ச்சி நம்மைப் போன்ற மனிதர்களுக்கு மட்டுமன்று; எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது. பறவைகளும், விலங்குகளும் கூட விளையாடி மகிழ்வதை நாம் பார்க்கிறோம். நம்முடைய வீட்டிலே நாய்க்குட்டி இருக்கிறது. அது நம்மோடு விளையாடுகிறது.
அப்போது நாயின் கூரிய பற்கள் நம் கையில் படுவதில்லை. கடிப்பது போல நடித்து விளையாடுகிறது. சீறிப் பிராண்டும் பூனைக் குட்டியோடு நம் குழந்தைகள் பயமின்றி விளையாடுகின்றன!… தனது கூரிய நகங்களை உள்ளடக்கிக் கொண்டு அது எவ்வளவு அற்புதமாக விளையாடுகிறது! அது நடிப்பல்லவா?

குழந்தைகளின் நடிப்பு

அது போகட்டும்; பெரியவர்கள் கல்யாணம் செய்து கொள்வதைப் பார்த்து நம் குழந்தைகள் மரப்பாச்சிக் கல்யாணம் செய்து விளையாடுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? தாய்மார்கள் சோறு சமைப்பதையும் பரிமாறுவதையும் பார்த்துக் குழந்தைகள் என்ன செய்கின்றன? விளையாட்டுச் சாமான்களை வைத்துக்கொண்டு புழுதி மண்ணை அள்ளிப் போட்டுச் சோறாக்கிப் பரிமாறிச் சாப்பிட்டு விளையாடுவதை நாம் எத்தனை தடவை பார்த்திருக்கிறோம்! அது என்ன? நடிப்புணர்ச்சிதானே?

‘டே கிட்டு, இங்கே பாருடா நம்ம நொண்டி வாத்தியாரு நடையை!’  நொண்டி நொண்டி நடிக்கிறான் சிறுவன்.

‘டே ராமா, நம்ம வாத்தியாரு பாடம் சொல்லும் போது அவர் மூஞ்சி போற போக்கை இங்கே பாரு!’ என்று முகத்தைக் கோணிக் கொண்டு வாத்தியாரைப் போல நடிக்கிறான் அவன். இப்படியெல்லாம் சிறு வயதில் நடிப்பைத் தவறான வழியில் எத்தனை பேர் பயன்படுத்தியிருக்கிறோம்?

பள்ளிக்கூடத்திற்கு  ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு, கெட்ட பிள்ளைகளோடு சேர்ந்து ஊர் சுற்றி விட்டு, வீட்டிற்கு வரும்போது ஒன்றுமறியாத ஒழுங்கான பிள்ளை போல் வந்து அப்பா அம்மாவை எத்தனை தடவை ஏமாற்றியிருக்கிறோம்?

வாழ்க்கையில் நடிப்பு

நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக நடிக்கிறார்களே; இந்த நடிப்பையெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக நடிக்கிறார்கள்? பிச்சைக்காரர்களின் நடிப்பை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. தனிப் பெருங்கலை. நல்ல காலை முடமாக்கிக் காட்டுவார்கள்; நல்ல கண்ணைக் குருடாக்கி  கபோதியாகக் காட்சியளிப்பார்கள். பொன்னான உடம்பைப் புண்ணாக்கிக் காட்டுவார்கள்; இப்படி எத்தனை எத்தனையோ அருமையான நடிகர்களை நான் பார்த்திருக்கிறேன். எனவே, நடிப்பென்பது எல்லோரிடமும் இயல்பாகவே இருந்து வருகிறது. ஆனால், நாடக அரங்கில் அதை வெளிப்படுத்திக் காட்டுவதற்குத் தான் பயிற்சி வேண்டும்.

மொழிக்கு முன் தோன்றியது நடிப்பு

மனிதன் மொழியை உருவாக்கிப் பேசத் தொடங்குவதற்குமுன் நடிப்பின் மூலம் தானே தனது எண்ணங்களை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்?  இன்னும் கூட நமது தமிழ் மொழி தெரியாத பிரதேசத்தில் பிற மொழியாளருடன் பேச வேண்டிய நெருக்கடியேற்படும் சமயத்தில் நாம் என்ன செய்கிறோம்? நடிப்புத் தானே நம்மைக் காப்பாற்றி உதவி புரிகிறது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் மலேயாவுக்குச் சென்றிருந்தபோது, சீன மொழியாளர்களுடன் கடைவீதிகளில் பேரம் பேசி பல பொருட்களை வாங்கினோம். எப்படி? எல்லாம் நடிப்பின் மூலம்தான்.

நம்மிடம் இயல்பாக அடங்கி இருக்கும் இந்த நடிப்பைத் தக்க முறையில் வெளிக்கொண்டு வர முயல வேண்டும். அதுதான் கொஞ்சம் சிரமமானது.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாக நடிப்புக்குரிய பல செய்யுட்கள் இருக்கின்றன. உவகை, பெருமிதம், நகை, வெகுளி, வியப்பு, அவலம், அச்சம், வெறுப்பு, சமநிலை ஆகிய நவரச பாவங்களையும் எப்படி எப்படி வெளிப்படுத்த வேண்டுமென்பதற்குரிய குறிப்புக்கள் அதில் இருக்கின்றன. அவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அது நாம் பயிலும் நடிப்புக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை செய்யும். ஆனால், மேடையில் இன்றைய நாடகத்தில் அப்படியே பயன்படுத்த இயலாது.
காரணம்; அந்த அவிநய முறைகள் எல்லாம் நாட்டிய நாடகத்திற்காக எழுதப் பெற்றவை.  ‘கதகளி’ என்று சொல்லுகிறோமே அதைப் போன்ற ஆடலும் பாடலும் கொண்ட நாடகத்திற்கே உரியவை. இன்றைய நாடகத்தில் இயற்கை நடிப்பு வேண்டும்.

கை முத்திரைகளும், முக பாவங்களும் உடனுக்குடன் மாறிக் கொண்டிருக்கும் அந்த அவிநய முறை நடனத்திற்கே ஏற்றது. இன்று நாம் நடிக்கும் வளர்ச்சியடைந்துள்ள நாடகங்களில் அத்தகைய நடிப்பை நடித்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். இயற்கை நடிப்பு வேண்டும்.

நடிப்புக்குப் பயன் தரும் நூல்கள்:

காலஞ்சென்ற திருவாளர் வி.கோ.பரிதிமாற் கலைஞன் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியார் அவர்கள் தமது  ‘’நாடக இயல்’ என்னும் நூலில் அருமையான பல குறிப்புகளைத் தருகிறார். செய்யுள் நடையில் அமைந்த நூல் இது. இதுவும் நடிப்புக் கலை பயில்வோருக்குப் பயன்படும் ஒரு அருமையான நூல்.  

‘மதங்க சூளாமணி’ என்று ஒரு நூல் இருக்கிறது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்டது. நான் படித்திருக்கிறேன். அந்த நூல் இப்போது எங்கும் கிடைப்பதில்லை. இந்நூல் தவத்திரு விபுலானந்த அடிகளாரால் எழுதப்பட்ட ஒரு அற்புதமான ஆராய்ச்சி நூல். நடிப்புக்கலை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இந்நூல் பெரிதும் பயன்படும்.

‘பத்மபூஷணம்’  பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள்  ‘நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவதெப்படி?’ என்னும் ஒரு நூலை எழுதியிருக்கிறார். நடிப்புக் கலை பயிலும் மாணவர்க்கு இதுவும் உபயோகமான நல்ல நூல்.

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே’

என நன்னூற் சூத்திரத்தில் பவணந்தி முனிவர் இறுதியாகக் கூறியிருக்கிறார். எனவே, முற்கால நடிப்பிலக்கண விதிகள் மாறுவதும், புதிய நடிப்பிலக்கண விதிகள் புகுவதும் குற்றமல்லவென நமது பெரியோர்களே வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். காலத்திற்கேற்ப இவை மாறத்தான் செய்யும்; மாறத்தான் வேண்டும்.

இனி, இன்றைய நாடகத்திற்குத் தேவையான நடிப்புக்கலையைப் பற்றி நாம் ஆராய்வோம்.

ஒரு பாத்திரத்தை ஏற்கும் நடிகனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்னென்ன?

  • நல்ல உடல்நலம்
  • குரல் வளம்
  • பேச்சுத் தெளிவு
  • நினைவாற்றல்
  • தோற்றப் பொலிவு

இவற்றோடு இசைஞானமும் நடனப் பயிற்சியும் ஓரளவு இருந்தால் நல்லது. இவையெல்லாம் நடிப்புக் கலையிலே ஈடுபடுவோனுக்கு இருக்க வேண்டிய அம்சங்கள். அக்கலையிலே ஓரளவு வெற்றி பெற இவை துணை செய்யும். பொதுவாக எல்லாவிதமான அங்க அசைவுகளிலும் நடிப்பு உணர்ச்சி வெளியாகும். உடல், கை கால் அசைவுகளை விட முகத்தின் பாவம் முக்கியம். அந்த முகத்திலே முக்கியமானவை கண்கள்.

“அச்சுவைகளில் எண்ணம் வந்தால்
தோற்றும் உடம்பில்;
உடம்பின் மிகத் தோற்றும் முகத்து;
முகத்தில் மிகத் தோற்றும் கண்ணில்;
கண்ணின் மிகத்தோற்றும்
கண்ணின் கடையது"

-என்னும் பழம் பாடல் ஒன்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

நடிகனுடைய கண்கள்தாம் மற்ற உறுப்புகளைவிட மிகவும் முதன்மையானவை. கண்கள் இருளிலே ஒளியாக, நடிப்பிலே உயிராக விளங்குகின்றனவென்று சொல்லலாம். சபையிலிருக்கும் ரசிகப் பெருமக்கள் நடிகனின் கண்களைத் தான் நன்கு கவனிக்கிறார்கள். அவைகளின் மூலம்தான் பாத்திரத்தின் தன்மையைப் புரிந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு நடிகனும் பேசும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

‘கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில’

என வள்ளுவர் பெருமான் கூறுகிறார்.

எனவே கண்கள் நடிகனின் முதல் கருத்தாக இருக்க வேண்டும்.

மேடையில் நின்று நடிக்கும்போது ஒரு நடிகன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது வேறு எங்காவது சுழலவிட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டுவிடும்.

‘அந்த நடிகன் ஏன் இவன் சொல்லுவதைக் கவனிக்கவில்லை? சபையில் யாரையோ பார்க்கிறானே!… ஓ! அந்த அழகியைப் பார்க்கிறான் போலிருக்கிறது. இல்லை, இல்லை, அமைச்சர் எப்படி ரசிக்கிறாரென்று பார்க்கிறான்.’

இப்படியெல்லாம் சபையோர் எண்ணத் தொடங்கினால் நாடகத்தின் நிலையென்ன? அந்தப் பாத்திரத்தின் கதியென்ன?

சில நடிகர்களுக்குப் பேச்சுத் தெளிவு பிரமாதமாக இருக்கும், தோற்றமெல்லாம் அபாரமாக இருக்கும். பேச்சிலே உணர்ச்சியும் இருக்கும். ஆனால், கண்களில் மாத்திரம் எந்தவிதமான பாவமும் இராது. கோபம், சோகம், சிரிப்பு, வெறுப்பு எல்லாம் குரலில் தெரியும்; கண்கள் மாத்திரம் திருதிருவென்று விழித்தபடியேயிருக்கும். என்ன செய்வது?

‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்’

என்றார் வள்ளுவப் பெருமான். எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்; அதில் முக்கிய உறுப்பு கண். நடிப்பில் உயிர் வேண்டுமா? பாவம்
கண்ணில் தெரிய வேண்டும். நான் முன்பு சொன்னபடி கண்களும் பேச வேண்டும். விருப்பையும், வெறுப்பையும் கண்களே காட்டிவிடும்.

‘பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்’

என்று வள்ளுவர் பெருந்தகை எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார். அவர் எதைத் தான் சொல்லவில்லை! கண்களில் பாவம் காட்டாமல் நடிப்பது மகாபாவம். அந்த நடிகனைப் பார்க்க சபையோருக்கும் பாவமாய்த் தானிருக்கும். நடிகருக்கு அழகுணர்வு வேண்டும்

நாடக நடிகன் தன் மெய்ப்பாட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்தப் பயிலும்பொழுது முக்கியமான ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எந்தச் சுவையை அல்லது பாவத்தைக் காண்பித்தாலும், மேடையில் அந்த பாவம் அழகாக வெளிப்பட வேண்டும்.

அழும் போதும் அழகாக அழப் பயில வேண்டும். கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப்பட வேண்டும். எந்த வகையிலும் தன் முகத்தை விகாரப்படுத்திக் கொள்ளக் கூடாது நடிகன்.

சிலபேர் சிரித்தால் அவர்கள் முகம் அழுவது போல இருக்கும். அழுதால் சிரிப்பது போல இருக்கும். இவற்றையெல்லாம் கண்ணாடியின் முன் நின்று நடித்துப் பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டும்.  ‘ஔவையார்’ நாடகத்தின்போது ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஔவையாரில் ஒரு காட்சி; ஔவையார் மழையில் நனைந்து குளிர் பொறுக்க முடியாது வருந்துகிறார். அந்த இடத்தில் வள்ளல் பாரியின் மகளிரான அங்கவையும் சங்கவையும் அவரிடம் பரிவுகாட்டி நனைந்த உடையை மாற்றி நீலச்சிற்றாடையைக் கொடுத்து உதவுகிறார்கள். அன்பு காட்டி அமுதூட்டுகிறார்கள். ஔவையார் வறுமை நிலையிலிருந்த வள்ளலின் மகளிரை  பாரி மகளிர் என அறிந்ததும் பாரியின் மரணச் செய்தியையும் அவர்களின் கதியற்ற நிலையையும் கேட்டுப் பரிவு காட்டுகிறார்.

இந்தக் காட்சியில் அங்கவையாக எங்கள் குழுவில் நடித்த பெண் உண்மையிலேயே நன்றாக நடிக்கக் கூடியவள். ஆனால் ஒரே ஒரு குறை. அவள் அழுவது மாத்திரம் சிரிப்பதுபோல இருக்கும். அங்கவை தன் நிலையைச் சொல்லி அழும்போது அவள் சிரித்ததாகவே சபையோரில் பலர் எண்ணிக் கொண்டார்கள்.

மறுநாள் நாடகத்தைப் பற்றி விமர்சனம் செய்த ஒரு பத்திரிகையாளர்,  ‘இந்த உணர்ச்சியான கட்டத்தில் அங்கவை சிரித்தது உணர்ச்சியையே கெடுத்துவிட்டது. அதுவும் ஆசிரியராகிய ஷண்முகமே ஔவையாராக நிற்கும்பொழுது சிறிதும் லட்சியமின்றி இந்தப் பெண் சிரித்தது மன்னிக்க முடியாதது’  என்று எழுதிவிட்டார்.

நான் அவரை நேரில் சந்தித்து அந்தப் பெண்ணின் இயற்கைத் தன்மையைப் பற்றிச் சொன்னேன். பிறகு அவள் படிப்படியாக அந்தத் தவறைத் திருத்திக் கொண்டாள். அப்புறம் தொடர்ந்து நடந்த நாடகங்களில் நேராக சபையைப் பார்த்து அழாமல் ஒரு பக்கமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு ஏதோ ஒருவகையாகச் சமாளித்தாள்.

எனவே, இது போன்ற குற்றங்களை நடிப்புக் கலை பயிலும் மாணவர்கள் தொடக்கத்திலேயே, பயிலும் போதே நன்கு கவனித்துத் திருத்திக் கொள்ள வேண்டும்.

குரல் பயிற்சி மிக முக்கியமான ஒன்று. குரல்வளமாக இருந்தால் மேடைக்கு நன்றாக இருக்கும். பேசும்போது மென்மையாகப் பேச வேண்டிய வார்த்தைகள் உண்டு; வன்மையாகப் பேசவேண்டிய வார்த்தைகளும் உண்டு.  வார்த்தைகளிலே ஏற்றத் தாழ்வு இருக்க வேண்டும். குழைவு இருக்க வேண்டும். அன்பு காட்டிப் பேசுவதும் ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே தெரிய வேண்டும். இவ்விதக் குரல் பயிற்சியில்லாதவர்கள் சிறந்த நடிகர்களாக இருந்தும் கூட வானொலி நாடகங்களிலே படுதோல்வி அடைகிறார்கள். கேட்கும் நாடகமாக இருப்பதால் வானொலி இப்படிப்பட்டவர்களை மிக எளிதாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. எனவே, பல்வேறுபட்ட உணர்ச்சிகளை எளிதாகக் காட்டக் குரல் பயிற்சி மிகவும் முக்கியம்.

அதிலும் சிறப்பாக, ரகசியம் பேசுவதற்குக் குரல் பயிற்சி மேடைக்கு மிகவும் தேவை. சில நேரங்களில் நடிகர் சபைக்குக் கேட்கும்படியாகவே ரகசியம் பேச வேண்டியிருக்கும்.  ‘மனோகரன்’ நாடகத்தில் அந்த மாதிரி பல கட்டங்கள் உண்டு. சபைக்கும் கேட்க வேண்டும்; அதுவே ரகசியமாகச் சொல்லுவது போலவும் இருக்க வேண்டும். இதற்குக் குரல் பயிற்சி இல்லாவிட்டால் முடியாது.

தெளிவான பேச்சு

அடுத்தபடியாக பேச்சிலே தெளிவு இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலே பிறந்தவர்களுக்கும் ஒவ்வொருவிதமான பேச்சு இருக்கிறது. இதை ஒழுங்கு செய்துகொள்ள வேண்டியது அவசியம். இல்லையானால் உணர்ச்சி, நடிப்புத் திறமை, குரல்வளம் எல்லாவற்றையும் இந்தத் தெளிவு இல்லாத பேச்சு கெடுத்துவிடும். உணர்ச்சி பாவத்தோடு அற்புதமாக நடிப்பான் ஒரு நடிகன்; ஆனால் வார்த்தைகளைக் கொலை செய்வான்!

‘என்ன சொன்னாய்?’ என்பதை எண்ண சொண்ணாய்? என்பான்.  ‘கண்ணே என்னோடு பேச மாட்டாயா?’ என்றிருக்கும். இவன்  ‘கன்னே எண்ணோடு பேச மாட்டாயா?’ என்பான். மழையை  ‘மலை’யென்பான். கலையைக் ‘களை’யென் பான். இந்தத் தமிழ்க்கொலையைச் சபையோர் எப்படிப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்?

இடமறிந்து பேச வேண்டும்

பேச்சிலே தெளிவு என்னும்போது மற்றொரு கருத்தையும் குறிப்பிட வேண்டும். ஒரு பாத்திரத்தை நெட்டுருப் போடும்போது வார்த்தைகளை நன்றாகக் கவனிக்க வேண்டும். எந்தெந்த இடத்தில் தெளிவும் அழுத்தமும் வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். ஒரு நடிகனின் பேச்சிலிருந்து மற்றொரு நடிகனுக்குப் பேச்சுத் தொடங்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில் அழுத்தமாகச் சொல்லாவிட்டால் மக்களுக்குப் புரியாது.

‘இரத்த பாசம்’ ஒரு சமுதாய நாடகம். அதில் ஒரு கட்டம். ராஜாவும், ராணியும் சந்திக்கும் காதல் காட்சி. காட்சி முடியும் சமயம் ராணி  ‘நான் வருகிறேன்’ என்கிறாள். மற்ற சமயங்களில் சாதாரணமாக இப்படிச் சொல்வது சபையோருக்குக் கேட்காவிட்டாலும் பாதகமில்லை. ஆனால், இங்கே அவள்,  ‘வருகிறேன்’ என்று சொன்னவுடனே  ‘வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகிறாயே?’ என்று சுவையோடு சொல்லுகிறான் ராஜா. இப்பொழுது இந்த இடத்தில் வருகிறேன் என்பதை எவ்வளவு அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாள்  ‘இரத்த பாசம்’  நாடகத்தில் ராணி வேடம் போட்டவள் மறதியாக  ‘ராஜா நான் போய் வருகிறேன்’  என்றாள். நான் ராஜாவாக நின்றேன். என்ன சொல்வது?  ‘நான் வருகிறேன்’ என்று சொன்னால் உடனே  ‘வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போகிறாயே?” என்று சொல்லலாம். அவள் அவசரத்தில்  ‘நான் போய் வருகிறேன்’  என்றாள். நான் என்ன செய்வது?  ‘போய் வா’ என்று ஆசி கூறி வழியனுப்பினேன்.

வார்த்தைகளைத் தெளிவாகவும், அழுத்தமாகவும் பேசுவதற்கு உதாரணமாக மற்றொரு காட்சி;  ‘தமிழ்ச் செல்வம்’ நாடகத்தில்  ‘காதல்’ என்னும் பகுதி, நல்ல சுவையான காட்சி. வார்த்தைகளிலேயே பன்னிப் பன்னிப் பேசுகிறாள் காதலி. அந்த உரையாடலைப் பாருங்கள்!…

தலைவன்: ஆருயிரே, என் மீது வீணாகக் குற்றம் சொல்லாதே. நான் எந்தப் பெண்ணையும் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. பிரிந்தது முதல் இது வரை உன்னையே நினைத்துக் கொண்டு ஓடோடி வந்திருக்கிறேன் கண்ணே.

தலைவி: என்ன! என்ன! என்னை நினைத்துக் கொண்டு வந்தீர்களா?

தலைவன்: என்ன இது! மீண்டும் அழுகிறாயே?

தலைவி: என்னை  ‘நினைத்தேன்’ என்றால் என்ன பொருள்? நினைவு என்பது எப்பொழுது வரும்? மறந்த பிறகுதானே? நீங்கள் என்னை மறந்து விடுவீர்கள்; அப்புறம் திடீர் திடீரென்று நினைப்பு வரும். அப்படித்தானே? மறக்காமலிருந்தால் நினைப்புக்கே இடமில்லையே? என்னை மறந்த சமயத்தில் யாரை நினைத்தீர்களோ?

தலைவன்: அடி அன்னமே! உன்னை மறப்பதா? அது என் உயிரையே மறப்பது போலல்லவா? உலகில் உன்னையே நான் அதிகமாக நேசிக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா?

தலைவி: உன்னையே அதிகமாக நேசிக்கிறேன் என்றால் கொஞ்சமாக நேசிப்பது யாரையோ? அவர்கள் எத்தனை பேரோ? எங்கிருக்கிறார்களோ?

தலைவன்: தங்கமே! இப்படிக் குற்றம் கண்டுபிடித்தால் நான் என்ன செய்வது? என் உள்ளத்தில் உன் ஒருத்திக்குத் தானே இடமுண்டு. இந்த உடலில் உயிர் இருக்கிற வரையில் இந்தப் பிறவியில் நான் உன்னைக் கைவிட மாட்டேன்.

தலைவி: கண்ணாளா, இந்தப் பிறவியில் என்னைக் கைவிடுவதில்லை என்று சொன்னீர்களே! அப்படியானால் அடுத்த பிறவியில் யாரை அடையத் தவம் செய்கிறீர்களோ?

இந்த உரையாடல் திருக்குறள் காமத்துப்பாலிலுள்ள மூன்று குறட்பாக்களை அடிப்படையாக வைத்து எழுதப் பெற்றது.

இதிலுள்ள ‘பெரிய எழுத்தில்’ குறிப்பிட்ட வார்த்தைகளை அழுத்தமாகச் சொல்லாவிட்டால் என்ன சுவையிருக்கும் எண்ணிப் பாருங்கள். ஆகவே கதைப் போக்கையும் உரையாடலையும் நன்கு தெரிந்து கொண்டு வார்த்தைகளை இடமறிந்து கருத்தறிந்து பாத்திரத்தின் பண்பறிந்து அழுத்தமாகவும் மென்மையாகவும் பேச வேண்டியது அவசியமாகும்.

மற்றொன்று: வார்த்தைகளை எப்போதும் தெளிவாகச் சொல்ல வேண்டும். அவலச்சுவை தோன்ற நடிக்கும் போது சில நடிகையர் உண்மையாகவே அழுது விடுவார்கள். அழுதால் பேச்சு தெளிவாக வராது; அதுவே இயற்கை. ஆனால், மேடையில் பொய்யாகத் தான் அழவேண்டும். அழுகை, நடிப்பாக இருந்தால்தான் பேச்சும் தெளிவாக இருக்கும். கோபம், ஆவேசம் எந்த உணர்ச்சியிலும் வார்த்தை தெளிவாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் கதைப்போக்கு புரியாது போக நேரலாம்.

அடுத்தபடியாக நினைவாற்றல்: இங்கேதான் சற்று விரிவாக விளக்க வேண்டியது என் கடமை. இப்போது உங்களுக்கு நல்ல நாடகக் காட்சி ஒன்றைக் காண்பிக்கப் போகிறேன்.

ஒரு தேயிலைத் தோட்டம். கோடை வெயில் கொளுத்துகிறது. தொழிலாளர்கள் பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களிடையே நாடகத்தின் கதாநாயகன்; அவனும் இப்போது ஒரு தொழிலாளி. நல்ல சீமானாக வாழ்ந்தவன். நடத்தை தவறியதன் விளைவு, நாடு விட்டுப் பெண்டு பிள்ளைகளைப் பிரிந்து இறுதியில் தோட்டத் தொழிலாளியாக வந்து நிற்கிறான். அவன் கைகளிலே மண்வெட்டி; கண்கள் நீரைச் சொரிகின்றன. வாழ்ந்த வாழ்வை எண்ணுகிறான். வழி தவறிச் சென்ற தனது மந்தமதியையும் நொந்து கொள்ளுகிறான்.

இந்த நிலையிலே வருகிறான் கண்காணிக்கும் மேஸ்திரி. பார்க்கிறான் அழுது கொண்டிருக்கும் தொழிலாளியை. வந்து விட்டது கோபம்!…. கையிலிருந்த சாட்டையால் கதாநாயகனைக் கண் மூக்குத் தெரியாமல் அடிக்கிறான். வீறிட்டலறுகிறான் கதாநாயகன். வெறி கொண்டவன்போல மேலும் வீசுகிறான் சாட்டையை, கண்காணிப்பவன். இந்தச் சந்தர்ப்பத்தில் பழைய செருப்பொன்று பறந்து வந்து கண்காணிப்பவரின் முகத்திலே விளையாடி விழுகிறது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் கண்காணி. எதிரே சபையில் சலசலப்பு!- கம்பீரமான ஒரு குரல் ‘நிறுத்துட அயோக்கியப் பயலே’ என்றது.

நடந்தது இதுதான்.  கதைப் போக்கிலும் உயர்ந்த நடிப்பிலும் உள்ளத்தைப் பறிகொடுத்துத் தன்னை மறந்திருந்த ஒரு பெரிய மனிதர் மேடையில் நடப்பதை நாடகமாக எண்ணவில்லை. கதாநாயகன் மேல் அநுதாபங் கொண்டார். தன் காற்செருப்பைக் கழற்றி வீசினார் கண்காணி மேல்.

அருகிலிருந்த நண்பர்கள் அந்தப் பெரிய மனிதருக்கு உண்மையை உணர்த்தினார்கள். நடிகனிடம் பெரு மதிப்புக் கொண்ட வேறு சிலர் அவரது தவற்றைக் கண்டிக்க முற்பட்டார்கள். உடனே மேடைமீது கண்காணியாக நடித்த நடிகர் பணிவோடும் புன்னகையோடும்,….  “நண்பர்களே, நான் பல ஆண்டுகளாக நடித்து வந்ததன் பயனை இன்றே பெற்றேன். என் முகத்திலே அந்தப் பெரியவர் வீசிய செருப்பு வெறும் பழஞ்செருப்பன்று; என் நடிப்புத் திறமைக்கு அவர் தந்த மகத்தான பரிசு. இது வரை நான் பெற்ற வெள்ளி, தங்கம், வைரங்களான பரிசுகளை விட, இது நூறு மடங்கு சிறந்த பெரும் பரிசு. நான் பெரும் பாக்கியசாலி” என்று கூறி, பெரியவரை வணங்கினார். இதுதான் நடிப்பின் வெற்றி.

கதாநாயகன் மேல் ஒரு அடிகூடப் படவில்லை. அத்தனையும் நடிப்புத்தான். கண்காணி காட்டிய வெறி; கதாநாயகன் கதறிப் புலம்பிய கோலம்; இருவரும் காட்டிய மெய்ப்பாட்டுணர்ச்சி; எல்லாம் காட்சியை உண்மை போல் காட்டின. அதன் விளைவு சபையில் இருந்த ஒரு நல்ல ரசிகர் தன்னை மறந்தார். இதை நடிப்பின் வெற்றி என்று சொன்னேனல்லவா? இதோ பாருங்கள் மற்றொரு காட்சியை!

பழைய நாடகந்தான்;  ‘பக்த பிரகலாதன்’ கடைசிக் காட்சி;  ‘இறைவன் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான்!’  என்று சொல்லுகிறான் பிரகலாதன். ஆவேசங் கொண்ட இரணியன் ‘இந்தத் தூணிலிருப்பானா?’ என்கிறான்.  ‘எங்குமிருப்பான். அவனில்லாத இடமேயில்லை’ என்கிறான் பிரகலாதன். தூணை எட்டி உதைக்கிறான் இரணியன். தூண் இரண்டாகப் பிளக்கிறது. பயங்கரச் சிரிப்போடு நரசிம்ம மூர்த்தி வெளிப்படுகிறார். இரணியனுக்கும் நரசிம்ம மூர்த்திக்கும் பலத்த சண்டை; நரசிம்மம் இரணியனை மடியில் தூக்கி வைத்துத் தமது கூரிய நகங்களால் மார்பைக் கிழிக்கிறார். சபையோர் உணர்ச்சியோடு இந்தக் கட்டத்தை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்பாராத விதமாகத் திடீரென்று இரணியன்  ‘ஐயோ கொல்றானே’ என்று அலறிய வண்ணம் எழுந்து ஓடத் தொடங்குகிறான். நரசிம்மர் விடாமல் துரத்துகிறார். இப்போது இருவருக்கும் உண்மைப் போர் தொடங்கிவிட்டது. நரசிம்ம வேடதாரியின் தலையை மறைத்திருந்த சிங்கமுகம் எங்கோ போய்விட்டது. ஆனாலும் விடவில்லை அவர். கடைசியாக இரணியன் சபையோரிடம் அடைக்கலம் புகுந்தான். நரசிம்ம நடிகரை நாலுபேர் பிடித்து அடக்க வேண்டிய நிலையேற்பட்டது. விஷயம் என்னவென்று புரிகிறதல்லவா? நரசிம்ம வேடதாரி அதிக உணர்ச்சியுள்ளவர். நடிப்பின் ஆவேசத்தில் தன்னை மறந்தார். இரணியனின் மார்பைக் கிழிக்கத் தொடங்கியதும் வெள்ளியால் செய்யப்பட்ட அவரது கூரிய பொய் நகங்கள் இரணியனின் மேலங்கியைக் கிழித்துக் கொண்டு உள்ளே போய் மார்பையும் தீண்டிவிட்டன. அவ்வளவுதான் அப்புறம் இரணியன் கதி என்ன ஆவது!

இதைக்கூட நடிப்பின் வெற்றி என்று சொல்லுவார்கள். ஆனால் இது நடிப்பின் தோல்வி; மகத்தான தோல்வி.

நான் முதலில் சொன்ன நாடகக் காட்சியில் நடிகர்கள் தங்களை மறக்கவில்லை. சபையிலிருந்த ரசிகர் தம்மை மறக்கும்படி செய்தார்கள். சிறப்பாக நடித்தார்கள். அது நடிப்பின் வெற்றி. இரண்டாவது நாடகக் காட்சியில் சபையோர் தங்களை மறக்கவில்லை.

நடிகர் தம்மை மறந்து உணர்ச்சி வசப்பட்டார். இது நடிப்பின் தோல்வி. நடிப்பிலே வெற்றி எது,  தோல்வி எது? என்பதை விளக்கவே இந்த இரண்டு காட்சிகளையும் குறிப்பிட்டேன்.

நடிகன் தன்னை மறக்காமல் சபையோரைத் தன்வயப்படுத்தி விடுவது நடிப்பின் வெற்றி. நடிகன் தன்னை மறந்து பாத்திரத்தில் ஒன்றி உணர்ச்சி வசப்பட்டு சபையோரைத் திகைக்க வைப்பது நடிப்பின் தோல்வி.

நடிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் நடிகன் அந்தப் பாத்திரமாகவே மாறிவிட வேண்டும், பாத்திரத்தோடு ஒன்றிவிட வேண்டும், அப்போதுதான் நடிப்பிலே வெற்றி பெற முடியும் எனப் பலரும் சொல்லுவதைக் கேட்கிறோம். உண்மைதான்!…

கடுமையான வெயில்; காலில் மிதியடியும் இல்லை; நடந்து வருகிறார் ஒரு நண்பர். வீட்டிற்குள் நுழைந்ததும்  ‘அப்பா மண்டை பிளந்து விட்டது; கால் கொப்பளித்து விட்டது’ என்கிறார். நமக்குத் தெரியும், நண்பருடைய மண்டையும் பிளக்கவில்லை; காலும் கொப்பளிக்கவில்லை என்று. வெயிலின் வேகத்தை அவ்வாறு குறிப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொள்ளுகிறோம்.

ஒரு நல்ல நடிகனைப் பற்றிக் குறிப்பிடும்போது  ‘அவர் நடிக்கவில்லை; அந்தப் பாத்திரமாகவே மாறி விட்டார்’ என்று சொல்கிறார்களல்லவா? அதுவும் இப்படித்தான். நடிகனின் திறமையைத் தான் அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். உண்மையில் நடிகன் பாத்திரமாகத் தன்னை எண்ணிக் கொள்ளுகிறானே தவிர, பாத்திரமாக மாறிவிடுவதில்லை. அப்படி மாறிவிடவும் கூடாது.

நடிகன் மேடையில் நடிப்பதையே மறந்து, தான் புனைந்துள்ள பாத்திரமாகவே மாறிவிடும் போதுதான் முழு வெற்றி பெறுகிறான் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மை அப்படியன்று. பாத்திரமாக மாறுவது என்பதெல்லாம்  ‘வெயிலில் மண்டை பிளந்து விட்டது’  என்று சொல்லுவது போல வெறும் வார்த்தை மயக்கமே தவிர வேறொன்றுமில்லை….

நடிகன் பாத்திரத்தின் குண இயல்புகளை நன்றாகத் தெரிந்துகொண்டு பாத்திரத்துடன் ஒன்றி நடிக்க வேண்டும். ஆனால்,  ‘நாம் நடிக்கிறோம்’ என்ற உணர்வு – நினைவு ஒவ்வொரு விநாடியும் நடிகனின் கவனத்தில் இருக்கவும் வேண்டும். அப்போதுதான் அவன் தன் நடிப்பிலே வெற்றி பெறுவான். தன்னை மறவாமல் பாத்திரத்தோடு இணைந்து நடிக்கும் வரையில்தான் அதை நடிப்பு என்று சொல்ல முடியும். தன்னை மறந்த நிலையில் உணர்ச்சி வசப்பட்டுப் பாத்திரமாகவே மாறி நினைவிழந்து நிற்கும் நிலையை நடிப்பு என்று சொல்ல முடியாது.

(தொடர்கிறது)

$$$

One thought on “நாடகக் கலை – 2 -அ

Leave a comment