-அவ்வை டி.கே.சண்முகம்
தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். நாடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல்ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சிலே வெளிவந்துள்ள நாடக நூல்களின் அளவைக் கொண்டு மட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. பரம்பரை பரம்பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின் வளர்ச்சியையும் அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராய வேண்டும்.

1. தமிழ் நாடக வரலாறு- அ
நம்முடைய தமிழ் நாட்டில் இன்று நாடகக் கலை நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. மற்ற மொழியாளர்களெல்லாம், பிற நாட்டினரெல்லாம் போற்றிப் புகழும் அளவுக்கு நாம் முன்னேறி வருகிறோம். உண்மைதான். ஆனால் இந்த முன்னேற்றம் நமக்கு எப்படிக் கிடைத்தது? நாடகக் கலை இன்றைய நிலையை அடைவதற்கு நமக்குதவிய பெரியவர்கள் யார்? அதற்காக நாம் எத்தனை ஆண்டுகள் சிரமப் பட்டோம்? நமது பாதையிலே எப்படிப்பட்ட கஷ்டங்களைத் தாங்கி முன்னேற வேண்டி வந்தது என்பதையெல்லாம் நம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. உண்மையை ஒளிக்காது சொல்ல வேண்டுமானால், சிறப்பாக, சென்றகால நாடக வரலாற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து நன்கறிந்து தெளிவு பெற்று முன்னேற வேண்டிய கடமையும் உரிமையுமுடைய நாடகக் கலைஞர்களும், நாடகத் துறையிலே நடமாடி இன்று திரைப்படத் துறையிலே இடம் பெற்றுள்ள திரைப்படக் கலைஞர்களும் கூட இதுபற்றி நன்றியுணர்ச்சியோடு சிந்திக்கிறார்களா என்று நாம் சந்தேகப்பட வேண்டி இருக்கிறது.
1918-ஆம் ஆண்டில் என் ஆறாவது வயதில் நான் நாடகத் துறையிலே சேர்க்கப் பெற்றேன். கடந்த 49 ஆண்டுகளும் நாடகத் துறையிலே என் வாழ்க்கை கழிந்தது. இடையிடையே சந்தர்ப்ப சூழ்நிலைகள் திரைப்படவுலகுக்கு என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கின்றன. 1935-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறேன். நானும் என் சகோதரர்களும் நடித்த ‘மேனகா’ என்னும் திரைப்படம் 1935 ஆம் ஆண்டின் சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது. 1953 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகர் தேர்வில் என்னைச் சிறந்த நடிகனெனத் தேர்ந்தெடுத்துப் பெருமைப் படுத்தினார்கள். அதன் பிறகு, 1960ல் தமிழ்நாடு சங்கீத நாடகச் சங்கத்தார், சிறந்த நாடக நடிகன் என என்னைப் பாராட்டிப் பரிசு வழங்கினார்கள். 1962இல் புதுடில்லி மத்திய சங்கீத நாடக அகாடமியின் சார்பில் சிறந்த நாடக நடிகன் எனும் விருதை நம் பாரதக் குடியரசுத் தலைவர் அவர்கள் எனக்கு வழங்கினார்.
இடையிடையே திரைப் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏற்று வந்துள்ள போதிலும், இன்னும் நான் நாடக மேடையில்தான் தொடர்ந்து பணி புரிந்துகொண்டு வருகிறேன். என்னை நாடக நடிகனென்றே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அப்படியே வாழ்ந்தும் வருகிறேன்.
1918 இல் தொடங்கிய என் நாடக வாழ்க்கை, நடிகனாகவும், நாடக ஆசிரியனாகவும், நாடகத் தயாரிப்பாளனாகவும் என்னை இதுவரை வளர்த்து வந்திருக்கிறது. இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.
அக்கால அவல நிலை
நான் நாடகத் துறையிலே இறங்கிய அந்த நாளில் நாடகக் கலைஞ்ர்கள் மிகவும் இழிவாகக் கருதப்பட்டு வந்தார்கள். கொலைகாரன், கொள்ளைக்காரன் முதலியவர்களைக் கண்டால் மக்கள் எப்படிப் பயந்து ஒதுங்கி வாழ்வார்களோ அதே நிலைதான் நாடகக்காரனுக்கும் இருந்து வந்தது. நாடகக்காரனென்றால் குடியிருக்க வீடு கொடுக்கக்கூட மக்கள் பயந்தார்கள். அனேக ஊர்களில் மயானக்கரைக்கு அருகே பேய்கள் வசிக்கும் வீடென்று ஒதுக்கப்பட்ட வீடுகளில்தான் அந்தக் காலங்களில் நாங்கள் குடியிருக்க நேர்ந்தது. ‘ஒரு தொழிலுமில்லாதார் நாடகக்காரானார்’ என்பது ஒரு பழமொழியாகக்கூட உருவாகி இருந்த காலம்.
அந்த அவல நிலையெல்லாம் மாறி இன்று நாடகக் கலைஞர்களைப் பாராட்டுகிறார்கள்; நாடகக் கலைஞர்களைச் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகக் கருதுகிறார்கள்; நாடகக்கலை வளர்ச்சியால் நாடு வளர்ச்சி பெறுமென்று நம்புகிறார்கள். நாடக வளர்ச்சிக்காக அரசியலாரே சங்கம் அமைத்திருக்கிறார்கள்; பட்டம் வழங்குகிறார்கள்; பரிசு கொடுக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள்; பல்கலைக் கழகத்திலே நாடகத்தைப்பற்றிப் பேச நாடகக்காரனுக்கு அழைப்பு விடக்கூடிய அளவுக்கு நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறதென்றால் அன்றும் இன்றும் வாழ்ந்திருக்கும் பேறு பெற்ற என் போன்றவர்களுக்கு வாழ்வில் இதைவிட மகிழ்ச்சியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இருக்க முடியாதல்லவா?
வளர்ச்சி வேகம்
சென்ற 40 ஆண்டுகளில் தமிழ் நாடக மேடை அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காணும் போது எனக்கே வியப்பாகத் தானிருக்கிறது. மூன்றே மூன்று ‘கியாஸ்’ லைட்டுகளை வைத்துக்கொண்டு நாடங்கள் நடைபெற்ற போதும் நான் நடித்தேன்; இன்று கண்ணைப் பறிக்கும் மின்சார வெளிச்சத்திலேயும் நடித்து வருகிறேன்.
எவ்வளவு பெரிய மாறுதல்கள்!… எவ்வளவு அருமையான சுவை மிகுந்த வரலாறு இது!! எண்ணிப் பாருங்கள்!
இந்த வரலாற்றை நாம் ஆராய வேண்டியது அவசியமல்லவா?
தமிழ் நாடகக் கலையின் இன்றைய வளர்ச்சியிலே எத்தனையோ பெரியவர்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். நாடக இலக்கியம் என்பது படித்து மட்டும் வளரும் இலக்கியமல்ல; கண்களால் பார்த்தும் மகிழக்கூடிய இலக்கியமாகும். எனவே, அச்சிலே வெளிவந்துள்ள நாடக நூல்களின் அளவைக் கொண்டு மட்டும் அதன் வளர்ச்சியைக் கணக்கிட முடியாது. பரம்பரை பரம்பரையாக அரங்கிலே ஆடிவந்துள்ள நாடகங்களின் வளர்ச்சியையும் அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். இந்தக் கண்ணோட்டத்தோடுதான் தமிழ் நாடக வரலாற்றை நாம் ஆராய வேண்டும்.
நாடகம் என்றால் என்ன?
நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரிகக் கண்ணாடி; பாமரர்களின் பல்கலைக் கழகம். உணர்ச்சியைத் தூண்டி விட்டு, உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அன்பையும் அறிவையும் தூய்மையையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் மகத்தான கலை.
நாடகம் என்றால் என்னவென்பது உங்களுக்குத் தெரியும். உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். எனவே, நாடகக் கலை என்பதைப் பற்றி உங்களுக்கு விளக்குவதற்காக நான் இங்கே இலக்கிய ஆராய்ச்சி எதுவும் நடத்தப் போவதில்லை.
நாடு – அகம் = நாடகம், நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். அதாவது, நாட்டின் சென்ற காலத்தையும் நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடு – அகம் – நாடகம் என்று பெயர் பெற்றிருக்கிறது. நாடு – அகம். அதாவது, அகம் – நாடு; உன்னுள் நோக்கு; உன்னையுணர்; அகத்தை நாடு, என்றெல்லாம் பலவிதமாக அறிஞர்கள் இதற்குப் பொருள் கூறுவார்கள்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நாடகம் ‘உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி’ என்பது முற்றிலும் பொருந்தும் எனத் தோன்றியது
இந்த நாடகக் கலை ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது? எங்கிருந்து வந்தது? இதன் வரலாறு என்ன? என்பன போன்ற விஷயங்கள் எல்லாம் உங்களில் சிலருக்குத் தெரியாதிருக்கலாம். அவற்றைத் தான் இப்போது சொல்லப் போகிறேன்.
சாதாரணமாக நாம் வெளியே போகும்போது எத்தனையோ காட்சிகளைப் பார்க்கிறோம்; ரசிக்கிறோம். அப்படி நாம் பார்த்து மகிழ்ந்த காட்சிகளிற் சில மறக்க முடியாதபடி நம் மனத்திலும் பதிந்து விடுகின்றன. அவ்வாறு நம் மனத்தில் பதிந்துவிட்ட அந்த அழகான காட்சியை நல்ல ஓவியக் கலைஞன் ஒருவன் சித்திரத்திலே தீட்டிக்கொண்டு வருகிறான்; அந்தச் சித்திரத்தை நாம் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது? கண் முன்னால் கண்டு களித்த ஒரு பெரிய காட்சி முழுதும் சின்னஞ்சிறு சித்திரத்தில் ஒடுங்கி விட்டத்தைக் கண்டு ரசிக்கிறோம் அல்லவா?
உங்கள் தம்பி, தங்கை அல்லது பாப்பா தினமும் உங்கள் முன்னால் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்பா, அம்மா எல்லோரும் பார்க்கிறார்கள்; நீங்களும் பார்க்கிறீர்கள். மகிழ்ச்சி அடைகிறீர்கள். இல்லையா?…..அந்தத் தம்பியையோ தங்கையையோ அல்லது பாப்பாவையோ புகைப்படம் எடுத்து அந்தப் புகைப்படத்தைக் கையிலே வைத்துக்கொண்டு பார்க்கும்போது உங்களுக்கு எவ்வளவு ஆனந்தம் உண்டாகிறது?
இன்னொன்று பாருங்கள்; கடைவீதிகளில் பழக்கடைகளை அனேகர் பார்த்திருப்பீர்கள். வாழை, மா, மாதுளை, பலா முதலிய பலவகையான பழங்கள் கடைகளில் இருக்கும். அந்தப் பழங்களை யாரும் அதிசயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதில்லை. ஆனால் பழங்களைப் போல மண்ணாலோ, காகிதத்தாலோ செய்து வர்ணம் பூசிக் கடைகளில் வைத்திருக்கிறார்களே, அவற்றைப் பார்த்து அதிசயப்படுகிறோம். ’அடடா! மண்ணால் செய்தது மாம்பழம் போல் இருக்கிறதே’ என்று பார்த்துப் பார்த்துப் பரவசம் அடைகிறோம் அல்லவா?
இப்படி நேரில் கண்ட ஒரு அழகிய காட்சியைச் சித்திரத்திலே காணும்போதும், தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் நம் வீட்டிலுள்ள பாப்பாவைப் புகைப்படத்திலே பார்க்கும் போதும், உண்மையான பழங்களைப் பார்ப்பதைவிடப் பழங்கள் போலச் செய்தனவற்றைப் பார்க்கும் போதும் நமக்கு ஒரு தனி இன்பம், மகிழ்ச்சி ஏன் ஏற்படுகின்றது? இந்த உணர்ச்சிக்குக் காரணம் என்ன? அதே காரணத்தால்தான் நாடகமும் தோன்றியிருக்க வேண்டும். இதுவே அறிஞர்களின் கருத்து.
மனிதனுக்கு மூன்று உணர்ச்சிகள் உண்டாகின்றன. ஒன்று பசி உணர்ச்சி. இரண்டாவது ஆண் – பெண் – பால் உணர்ச்சி. மூன்றாவது விளையாட்டு உணர்ச்சி. இந்த உணர்ச்சிகள் இயல்பாகவே உண்டாகின்றன. விளையாட்டு உணர்ச்சிகளில் பிறர் செய்வதைப் போல் நாமும் செய்து காட்ட வேண்டுமென்ற உணர்ச்சி குழந்தைப் பருவம் முதலே நம்மிடம் இருந்து வருகிறது. இந்த விளையாட்டுணர்ச்சியிலிருந்து எழுந்ததுதான் நாடகம்.
மரப்பாவைக் கூத்து; பொம்மலாட்டம்
இவ்வாறு இயல்பாக எல்லோருக்கும் ஏற்படும் விளையாட்டுணர்ச்சி பண்டைக் காலத்தில் இருந்த நம்முடைய பெரியவர்களுக்கும் ஏற்பட்டது. முதலில் மரத்தால் செய்த பாவைகளை வைத்துக் கொண்டு ஓடியாடி விளையாடச் செய்தார்கள். அதற்கு ‘மரப்பாவைக் கூத்து’ என்று பெயர் வைத்தார்கள். பிறகு அதிலே கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டது. மண்ணாலும், துணியாலும் மனிதர்களைப் போல் அழகான பொம்மைகளைச் செய்து அந்தப் பொம்மைகளின் கை, கால், தலை முதலிய உறுப்புகளைக் கயிற்றால் கட்டிப் பின்னால் மறைவில் இருந்து கயிற்றை இழுத்து வெகு சாமர்த்தியமாகப் பொம்மைகளை ஆடவும், பாடவும் செய்து விளையாட்டுக் காட்டினார்கள். அதற்குப் ‘பொம்மலாட்டம்’ என்று பெயரும் வைத்தார்கள். பொருட் காட்சிகள் நடைபெறும் இடங்களில் இன்னும் நீங்கள் பொம்மலாட்டத்தைப் பார்க்கலாம்.
தோற்பாவைக் கூத்து; நிழற்பாவைக் கூத்து
இதே போன்று தோலினாலும் பொம்மைகளைச் செய்து விளையாடினார்கள். அதற்குத் ‘தோற்பாவைக் கூத்து’ என்று பெயர்.
முன்னால் வெள்ளைத் திரையைப் போட்டு அந்தத் திரைக்குப் பின்னால் ஒரு விளக்கை வைத்து இடையில் அட்டையினாலோ, காகிதத்தினாலோ, செய்த பொம்மைகளைக் காட்டி விளையாடினார்கள். அந்த விளையாட்டுக்கு ‘நிழற் பாவைக் கூத்து’ என்று பெயர். இந்த நிழற்பாவைக் கூத்து இப்போது நம் நாட்டில் அதிகமாக இல்லை. மலேயா, தாய்லாந்து பகுதிகளில் சாதாரணமாக நடைபெறுகின்றது.
நாங்கள் மலேயா சென்றிருந்தபோது இந்த நிழற்பாவைக் கூத்துகளைப் பார்த்தோம். இராமாயணம், மஹாபாரதம் ஆகிய கதைகளை இவர்கள் காட்டுகிறார்கள். இப்படிக் காட்டுபவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். கலைத்துறை மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இது காட்டுகிறதல்லவா?
நாடக விளையாட்டு
இவ்வாறு உயிரில்லாத பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவதை விட உயிருள்ள மனிதர்களையே வேஷம் போடச் செய்து ஆடிப் பாடி நடிக்க வைத்துப் பார்ப்பது மிகச் சிறந்த விளையாட்டல்லவா? இது யாரோ ஒரு பெரியவர் மூளையில் முதலில் தோன்றியிருக்கிறது. அதன் பயனாகத்தான் இந்த நாடக விளையாட்டு உண்டாகி இருக்கிறது. இன்னும் நாடகத்தை ‘விளையாட்டு’ என்று தமிழிலே சொல்லுவதுண்டு. ஆங்கிலத்தில் கூட ‘டிராமா’ என்பதோடு ‘பிளே’ (Play) என்றும் சொல்வதுண்டல்லவா?
இப்படி நம்முடைய முன்னோர்கள் மூளையிலே ஒரு காலத்தில் தோன்றிய இந்த நாடக விளையாட்டு, பாவைக்கூத்து முதல் பலவிதக் கூத்துகளாக முன்னேறி வளர்ந்து நாட்டியமாகி, நாட்டிய நாடகமாகி இன்று நாம் காணும் நவீன நாடக உலகத்திற்கு வந்த கதை மிகப் பெரிய வரலாறு.
நாடகமும் நாட்டியமும்
ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை நாடக மேடையிலே வெறும் ஆட்டமும், பாட்டும்தான் இருந்து வந்தன. பெரும்பாலும் பேச்சு இல்லை. முன்பெல்லாம் நாட்டியத்தையும், நாடகத்தையும் வேறாகக் கருதவில்லை எனத் தெரிகிறது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாட்டியமாடும் மாதவியை ‘நாடக மேத்தும் நாடகக் கணிகை’ என்றுதான் குறிப்பிடுகிறார். தனிப் பாடல்களுக்கு அபிநயம் பிடித்து ஆடுவதை ‘நாட்டியம்’ என்றும், ஏதேனும் ஒரு கதையைத் தழுவி வேடம் புனைந்து ஆடுவதை ‘நாடகம்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். இரண்டிற்குமுரிய பொதுப் பெயர் ‘கூத்து’ என்றே வழங்கப் பெற்று வந்திருக்கிறது.
வட இந்தியாவில் பெரும்பாலும் நாடகம் நடத்துவோர் நாடக வளர்ச்சிக்காகப் பாடுபடுவோர் ‘நாட்டிய சங்கம்’ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
சிலப்பதிகாரத்தில் அடியார்க்கு நல்லார் உரையில் பல விதமான கூத்து வகைகளைப் பற்றிச் சொல்லுகிறார். அவற்றையெல்லாம் நான் இங்கே விரித்துரைக்கப் போவதில்லை.
ஆட்டமும் பாட்டும்
ஆடலும் பாடலும்தான் நாடகமாக இருந்தது என்பதற்கு மட்டும் ஒரே சான்று கூறுகிறேன். நாடகக்கலை இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்ற பிறகும் கூடப் பழைய ‘ஆட்டம்’ என்ற பதம் வழக்கிலிருந்து வருகிறது பார்த்தீர்களா?
நாடகக் கொட்டகைக்குச் சிறிது நேரம் கழித்து வருகிறார் ஒருவர்; அனுமதிச் சீட்டு விற்பவரிடம் ‘ஏன் ஐயா, ஆட்டம் ஆரம்பிச்சாச்சா? எத்தனை காட்சிகள் போயிருக்கும்?’ என்று ஆவலோடு கேட்கிறார். அவர் நாடகத்தைப் பற்றித்தான் கேட்கிறார். ஆனால், நீண்ட கால வழக்கத்தின் காரணமாக நாடகம் ஆட்டமாக வெளிவருகிறது.
நான் சில நாட்களுக்கு முன் கடற்கரையிலே உட்கார்ந்திருந்தேன். ஒரு நண்பர் வந்தார். நல்ல நாடக ரசிகர். ‘என்ன ஷண்முகம், ஒன்றரை ஆண்டுகளாக நாடகத்தை நிறுத்திவிட்டீர்களே, மறுபடியும் எப்போ ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். மற்றொரு சமயம் நான் வெளியூர் போயிருந்தேன். அங்கே என்னைச் சந்தித்த பழைய நண்பர் ஒருவர், ‘ஆஹா, இராஜராஜ சோழனைப் போல ஒரு ஆட்டத்தை நான் பார்த்ததேயில்லை’ என்று பாராட்டினார். இன்னும் ஒரு ரசிக நண்பர் ‘என்னவோ ஒரு ஆட்டம் போட்டீர்களே, சமூக நாடகம், அந்த ஆட்டம் மிக நன்றாயிருந்தது’ என்றார். நானும் விளையாட்டாக ‘நான் எங்கும் ஆட்டம் போடவில்லையே’ என்றேன். “அதுதான் ஐயா ‘வாழ்வில் இன்பம்’ என்று ஒரு ஆட்டம்”. ‘ஓ! நாடகமா?’என்றேன் நான்.
இப்படி நாடகத்திற்கு ஆட்டம் என்று சொல்வது இன்றும் சாதாரணமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இதிலிருந்தே ஆடிப்பாடி நடிப்பது தான் நாடகமாகக் கருதப் பெற்றது என்பது நமக்கு விளங்குகிறதல்லவா? இப்போதெல்லாம் நாடகங்களில் ஆட்டம், நாட்டியம் என்ற முறையில் தனியாக ஆடப்படுகிறதே தவிர எல்லாப் பாத்திரங்களும் ஆடுவதில்லை. அப்படி எல்லோரும் ஆடுவது ‘நடன நாடகம்’ என்று தனியாக நடத்தப் பெறுகிறது.
முத்தமிழ்
ஒரு மனிதன் தன்னுடைய எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிடும் ஒலிக்குத் தான் மொழி என்று பெயர். நம்முடைய தமிழ் மொழியில் இதை அருமையாக விளக்குவதற்குத்தான் ‘முத்தமிழ்’ என்று வகுத்தார்கள் நம்முடைய முன்னோர்கள். இப்போது நான் உங்களுக்கு நாடக வரலாற்றைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அல்லவா? இப்படி வார்த்தைகளால் விளக்குவது இயல்; இதையே,
நாட்டினிற் கணிகலம் நாடகக் கலையே
பாட்டும் இயலும் எழில் காட்டும் - நவ நிலையே (நா)
என்று பாட்டாகப் பாடினால் அது இசை; இதையே முக பாவங்களைக் காட்டிக் கை முத்திரைகளோடு விளக்குவது நாடகம். இயல், இசை, நாடகம் என வரிசைப்படுத்திப் பார்க்கும்போது நாடகம் மூன்றாவதாக இருந்தாலும் இயலும், இசையும், அதாவது பாட்டும், பேச்சும் இன்று நாடகத்திற்குள்ளேயே அடங்கிக் கிடப்பதால் நாம் நாடகத்தை முதன்மையாகக் கொள்வதில் தவறில்லை.
இந்த முதன்மையை எண்ணித்தான் நமது முன்னோர்கள் தமிழுக்கு இலக்கணம் கண்டபோதே நாடகத்தைத் தமிழிலிருந்து வேறுபடுத்த முடியாதபடி ‘இயலிசை நாடகமெனுந் தமிழ்’ என மொழியோடு நாடகத்தையும் இணைத்திருக்கிறார்கள். ஔவைப் பிராட்டியார் பாடுகிறார்;
‘பால், தேன், பாகு, பருப்பு இவை நான்கையும் நான் உனக்குத் தருகிறேன்; இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழையும் நீ எனக்குக் கொடு’ என்று இறைவனை வேண்டுகிறார்.
‘பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா’.
-இவ்வாறு பாடுகிறார் ஔவையார். எனவே, நாடகம் தமிழ் மொழியோடு இணைந்துவிட்ட ஒரு நற்கலை. தமிழ் என்று சொல்லும்போதே அது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைப் பகுதிகளையும் உள்ளடக்கி நிற்கின்றது. இப்படிப்பட்ட மூன்று பெரும் பிரிவுகளாக மொழியை வேறு யாரும் வகுத்ததில்லை. இது நமது தமிழ் மொழிக்கே உரிய தனிச் சிறப்பு.
இந்தத் தனிச் சிறப்பால் நாடகத்தை வாழ்வோடு ஒட்டிய கலையாகத் தமிழர்கள் போற்றி வளர்த்து வந்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.
நாடக இலக்கணம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறப்படும் தமிழ் நூல்களில் ‘முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல்’ முதலிய பல நாடக இலக்கண நூல்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
சிறந்த வரலாற்று நூலாகக் கருதப்படும் ‘சிலப்பதிகாரம்’ என்ற தமிழ்க் காப்பியத்தில் நாடகக் கலையைப் பற்றியும், காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்க அமைப்பைப் பற்றியும் விரிவாகக் கூறப் பெற்றிருக்கிறது. இந்தச் சிலப்பதிகார நூலுக்கு சிறந்த உரையெழுதிய அடியார்க்கு நல்லார் தமது குறிப்பில் நாடகத் தமிழைப் பற்றிக் கூறும் ‘பரதம்’, ‘அகத்தியம்’ என்னும் நூல்கள் இருந்தனவென்றும் அவை அழிந்து விட்டன என்றும் குறிப்பிடுகிறார்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெற்கே குமரி முனையையடுத்து இலெமூரியாக் கண்டம் என ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததாகவும் அங்கே பாண்டியர் அரசாட்சியில் சங்கம் அமைத்து மொழியாராய்ச்சி நடைபெற்றதாகவும் பெருங் கடல்கோளினால் அந்த நாடு நகரங்கள் அழிவுற்றபோது – நாடக, இசை, இலக்கண நூல்கள் பல அழிந்து போயினவென்றும் தமிழ் இலக்கியங்களில் பேசப்படுகின்றது.
அடியார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் பரதசேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலிய நாடக நூல்கள் இருந்தனவாகக் குறித்திருக்கிறார்.
மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூல் நிலையத்தின் வெளியீடாக 1944-இல் ‘பரத சேனாபதீயம்’ எனப் பழந்தமிழ் நூல் ஒன்று வெளிவந்திருக்கிறது. இந்த நூல் அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் பரதசேனாபதீயம் தானாவென்பது ஐயத்திற்குரியதாக இருக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் உரையில் எடுத்துக் காட்டியுள்ள பரதசேனாபதீயம் என்னும் நூலின் மேற்கோள் வெண்பாக்கள் இந்த நூலில் இல்லை.
இவை தவிர பரிதிமாற்கலைஞன் என்னும் திரு. வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார் ‘நாடக இயல்’ என்னும் ஒரு சிறந்த நூலை எழுதியிருக்கிறார். இதில் நாடகத்தைப் பற்றிய பல குறிப்புக்கள் விரிவாகச் சொல்லப் பெற்றிருக்கின்றன. நாடகம் என்றால் என்ன; அது எத்தனை வகைப்படும்; எப்படி எழுத வேண்டும்; நடிப்புக்குரிய இலக்கணங்கள் எவை; கதா நாயகர்களுக்குரிய இலக்கணங்கள் எவை என்பன எல்லாம் ஆராய்ச்சி முறையில் செய்யுள் வடிவில் எழுதப்பட்டிருக்கின்றன.
பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் அவர்களால் ‘மதங்க சூளாமணி’ என்னும் ஒரு தமிழ் நூல் வெளியிடப் பெற்றிருக்கிறது. இதுவும் நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூலாகும்.
பேராசிரியர் மறைமலையடிகளார் சாகுந்தல நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று வெளியிட்டிருக்கிறார். இதுவும் நன்கு பயன்தரக் கூடிய ஆராய்ச்சி என்பது அறிஞர்கள் கருத்து.
நாடகப் பேராசிரியர் பத்மபூஷணம் பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் பழம் பெரும் தமிழ் நூல்களையெல்லாம் ஆராய்ந்து ‘நாடகத் தமிழ்’ என்னும் ஒரு சிறந்த நூலை வெளியிட்டிருக்கிறார். இந்த நூலின் பிற்பகுதியில் தொழில் முறை நாடக சபைகளைப் பற்றிய செய்திகள் முழுதும் நன்கு ஆராய்ந்து சொல்லப்படவில்லையென்றாலும் நாடகத் தமிழைப் பற்றிய ஆராய்ச்சி நல்ல முறையில் செய்யப்பட்டிருக்கிறது.
ஆக, மறைந்தும் அழிந்தும் போன பழைய நூல்கள் போக, இப்போது நமது காலத்தில் இருந்து வரும் நாடக இலக்கண நூல்கள், நாடகவியல்,மதங்க சூளாமணி, சாகுந்தல ஆராய்ச்சி, நாடகத் தமிழ் ஆகிய நான்கு நூல்களாகும்.
இப்போது நான் பழைய நூல்கள் எனக் குறிப்பிட்டவையெல்லாம் நாடக இலக்கண நூல்களே ஒன்றுகூட இலக்கியம் அன்று.
காட்சி நூல்கள்
நான் முன்பு குறிப்பிட்டவாறு நாடக இலக்கியங்கள் படித்து மாத்திரம் மகிழும் இலக்கியங்கள் அல்ல; மேடையில் பார்த்து மகிழும் இலக்கியங்கள். படித்து மகிழும் இலக்கியத்தைக் கேள்வி நூலென்றும், பார்த்து மகிழும் இலக்கியத்தைக் காட்சி நூலென்றும் குறிப்பிடலாம். பார்த்து மகிழும் நாடகங்கள் இலக்கிய வடிவிலே – நூல் வடிவிலே இருந்தாலும்கூட அவற்றை ‘காட்சி நூற்கள்’ என்றே அறிஞர்கள் சொல்லுவார்கள்.
பழைய நூல்களில் காட்சி நூல் என்று சொல்வதற்கு நூல் வடிவில் நாடகம் எதுவும் நமக்குக் கிடைக்காவிட்டாலும், தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நாடகங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன.
நாடகங்களுக்கு மானியம்
இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் முதலிய மன்னர்கள் அந்த நாளில் நாடகம் நடிப்போர்க்கு மானியங்கள் கொடுத்திருக்கிறார்கள். அதற்கான குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப் பெறுகின்றன. இராஜராஜ சோழனின் வெற்றியைக் குறிப்பிடும் ‘இராஜராஜ விஜயம்’ என்னும் நாடகம் அவன் வாழ்ந்த காலத்திலேயே தஞ்சாவூர்க் கோயிலில் நடிக்கப் பெற்றதாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது.
நகரங்களிலும், சிற்றூர்களிலும் மன்னர் அரண்மனைகளிலும் ஆலயங்களிலும் தற்காலிகமாக மேடைகள் அமைக்கப்பட்டு திறந்தவெளிகளில் நாடகங்கள் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. இத்தகைய தெருக் கூத்துக்கள் இன்னும் தமிழகத்தின் சில சிற்றூர்களிலே நடைபெற்று வருகின்றன.
ஆலயங்கள் வளர்த்த அருங்கலை
சிற்பம், சித்திரம், இசை, நாட்டியம், நாடகம் ஆகிய நற்கலைகள் அனைத்தையும் ஆதரித்துப் போற்றி வளர்த்து வந்த பெருமை நம் நாட்டின் ஆலயங்களுக்கே தனி உரிமை. அந்த நாளில் கோயில் பெருவிழா தான் நகரத்தின் பெரிய திருவிழா. நாட்டின் நற்கலைஞர்களெல்லாம் கோயிலிலேதான் கூடுவார்கள். இயலும், இசையும், கூத்தும் அங்கேதான் நடைபெறும். அன்பு நெறியும், அறத்தின் சிறப்பும் அருளின் வலிமையும் நாடகங்களிலே நடமாடின. ஆலயப் பெருவெளிகளிலும் ஆலயத்தையடுத்த மதிற்புறங்களிலும் அரங்குகள் அமைக்கப் பெற்றன.
அங்கே முத்தமிழ்க் கலைஞர்கள் கலை வளர்த்தார்கள். இந்த உண்மையெல்லாம் இன்று நமக்குப் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன. வேத்தியல், பொதுவியல், என நாடகங்களை இரு வகைப்படுத்தி, வேத்தியல் அரசர்கள், பிரபுக்களுக்கென்றும், பொதுவியல் மக்களுக்கென்றும் ஆடப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
நூல் வடிவில் இதுவரை நமக்குக் கிடைத்திருக்கும் நாடகங்கள் எல்லாம் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவையென்றே சொல்ல வேண்டும். அந்த நாடங்கள் யாவும் பாடல்களாக அமைந்திருக்கின்றனவே தவிர உரை நாடகம் ஒன்றுகூட இல்லை. பழங்காலத் தமிழ் நாடகங்கள் யாவும் பாடல்களாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. ஹரிச்சந்திரா, இராமாயணம், மகாபாரதம், முதலிய நாடகங்கள் அனைத்தும் பாடல்களாகவே இருக்கின்றன.
பழங்கால நாடக வசனங்களைப் பெரும்பாலும் கட்டியக்காரன் வந்து பொது வசனமாகப் பேசுவான். அந்த வசனம் நாடகத்தின் ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் தொடர்பு ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
‘அகோ கேளுங்கள் சபையோர்களே! இப்படியாகத் தானே அரிச்சந்திர மகாராஜனாகப் பட்டவன் நாடு நகர முதலானதுகளை விசுவாமித்திர முனியிடம் கொடுத்துவிட்டுக் காசிக்கு வரும் வழியில் அனேக துயரை யடைந்து காசிநகர்க் கோபுரந் தோன்றக் கண்டு தன் பத்தினிக்குத் தெரிவித்துக் கரங் கூப்பித் தொழுகிற விதங் காண்பீர்கள் கனவான்களே!…..”
இதுதான் பழங்கால நாடக வசனம். இதற்குப் பொது வசனம் என்று பெயர். நாடக விளக்கத்துக்காகக் கட்டியக்காரன் இதைப் பேசுவான். இவ்வாறு பேசப்படும் நீண்ட பொது வசனங்களைத் தவிர, பெரும்பாலும் பாடல்கள்தான். பண்டைக் காலந்தொட்டு நாடகத் தமிழ் இசைத் தமிழோடு சேர்ந்தே வளர்ந்து வந்திருக்கிறது.
அபூர்வமாகச் சில இடங்களில் பாடலின் கருத்தையொட்டி வசனமாகவும் சில வரிகள் பேசுவதுண்டு.
‘கேளாய் பெண்ணே சந்திரமதி! லோகத்திலுள்ளவர்கள் செய்யும்படியான சகல பாவங்களையும் போக்கத் தக்கதாகிய திவ்ய மகிமை பூண்ட இந்தக் காசி நாடு வந்தோம் பாராய் பெண்ணே!’
அவ்வளவுதான். உடனே, ‘கரங்குவிப்பாய் மயிலே, இதோ காசி காணுது பார் குயிலே’ என்று மீண்டும் பாடத் தொடங்கி விடுவான் அரிச்சந்திரன்.
சீர்காழி அருணாசலக் கவிராயர் அவர்களால் எழுதப் பெற்ற இராம நாடகம், அசோமுகி நாடகம் ஆகியவை கட்டியக்காரன் வசனத்தோடு முழுதும் பாடல்களால் அமைந்தன. இவருடைய காலம் 1712 முதல் 1799 வரை.
நொண்டி நாடகங்கள்
பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 1695 முதல் சில நொண்டி நாடகங்கள் இருந்திருக்கின்றன. திருக்கச்சூர் நொண்டி நாடகம், பழனி நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் இவ்வாறு பலவகைப்பட்ட நொண்டி நாடகங்கள். பெரும்பாலும் இந்த நொண்டி நாடகத்திற்குரிய கதை-
‘கதாநாயகன் தீயவனாக இருந்து காமுகன் வலையில் சிக்கி, பிறகு தண்டனைக்குட்பட்டு அவயவங்களை இழந்தவனாகி, நொண்டியாய் ஒரு தெய்வத்தை வேண்டி வழிபட, இழந்த அவயவங்களை மீண்டும் பெறுகிறான்’ என்பதே. ஏறக்குறைய எல்லா நொண்டி நாடகங்களும் இம்மாதிரியாகவே இருக்கும்.
கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையைப் பற்றி நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். அவை நாடக மேடையில் பல நடிகர்களால் பாடப் பெற்றவை. இன்னும் கதா காலட்சேபங்களில் பாடப்பெற்று வருபவை. ஹிரண்ய சம்ஹார நாடகம், உத்தர ராமாயண நாடகம், கந்தர்வ நாடகம், காத்தவராயன் நாடகம், பாண்டவர் சூதாட்ட நாடகம், வள்ளியம்மை நாடகம், சிறுத்தொண்டர் நாடகம் – இவ்வாறு பல்வேறு நாடகங்கள் பெரும்பாலும் பாடல்களாகவும், ஒரு சிறிது கட்டியக்காரன் வசனத்தோடு கூடியதாகவும் அமைந்திருக்கின்றன.
இத்தகைய நாடக காலத்திற்குப் பிறகு நாடகத்திற்கு ‘விலாசம்’ என்று பெயரிட்டுப் பல விலாசங்கள் தமிழகத்தில் நடைபெற்று வந்திருக்கின்றன. பாரத விலாசம், சகுந்தலை விலாசம், மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம், மதுரை வீரன் விலாசம், சித்திராங்கி விலாசம், அரிச்சந்திர விலாசம், தேசிங்குராஜ விலாசம், மன்மத விலாசம், இவ்வாறு பல விலாசங்கள். இந்த ‘விலாசம்’ என்ற பெயர் நாடகத்திற்கு ஏன் வந்தது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
‘விலாசம்’ என்ற பெயருக்கு ஆதி காரணமாக விளங்கியது ஏழாம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் எழுதிய ‘மத்த விலாசம்’ என்னும் நாடகம் என்று கருதலாம். ‘விலாசம்’ என்ற பெயரால் நாடகம் நடைபெற்றபோதுதான், நடிகர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சொந்தமாகவே வசனம் பேசவும் தொடங்கினார்கள்.
சமுதாய நாடகத் தோற்றம்
சமுதாய சம்பந்தமான நாடகங்கள் சமீப காலத்தில்தான் தோன்றியனவாகக் சிலர் எண்ணுகிறார்கள். அது தவறு. பல ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய நாடகங்களும் நடந்திருக்கின்றன. முதன்முதலாக மேடையில் நடிக்கப்பட்ட சமுதாய நாடகம் ‘டம்பாச்சாரி விலாசம்’ என்பதாகும். இந் நாடகத்தை எழுதியவர் திரு. காசிவிசுவநாத முதலியார் என்பவர். இந்த நாடகக்கதை கூடக் கற்பனையன்று. , சிந்தாதிரிப்பேட்டையில் வாழ்ந்து மறைந்த ஒரு தனவந்தரைப் பற்றிய கதை. இந்த நாடகாசிரியராலேயே பிரம்ம சமாஜ நாடகம், தாசில்தார் நாடகம் என்னும் வேறிரண்டு நாடகங்கள் சமுதாயச் சீர்திருத்த முறையில் எழுதப் பெற்றுள்ளன.
திருமதி. பாலாமணி அம்மையார் அவர்கள் டம்பாச்சாரி நாடகத்தை நடித்தபோது நான் புதுவையில் 1922-இல் பார்த்திருக்கிறேன். காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் திரு. சி.எஸ்.சாமண்ணா ஐயர் அவர்கள் டம்பாச்சாரி நாடகத்தில் பதினோரு வேடங்கள் தாங்கி அற்புதமாக நடிப்பார். அப்போது நான் சிறுவன் என்றாலும் நன்றாக நினைவிருக்கிறது.
டம்பாச்சாரி நாடகம் எழுதப்பட்ட பிறகு 1877-இல் பிரதாப சந்திர விலாசம் என்னும் ஒரு நாடகம் எழுதப் பெற்றது. இந்த நாடகத்தை எழுதியவர் திரு. ராமசாமி ராஜா என்பவர். இதுவும் டம்பாச்சாரி நாடக அமைப்பைப் பின்பற்றியே எழுதப்பட்டது. இந்த பிரதாப சந்திரன் நாடகத்தை நாங்கள் எங்கள் குழுவில் 1926-இல் பல முறை நடித்திருக்கிறோம். நானே பிரதாப சந்திரனாகவும், சில நாடகங்களில் விசுவாச காதகன் என்ற தீயோனாகவும் நடித்திருக்கிறேன்.
இந்தக் காலத்தையொட்டி சத்தியபாஷா அரிச்சந்திர விலாசம் என்ற நாடகத்தை பெங்களூர் திரு. அப்பாவுப் பிள்ளை என்பவர் எழுதியிருக்கிறார். இதுவரை அரிச்சந்திர நாடகத்தில் எந்த நாடக மேடையிலும் தெருக்கூத்து மேடையிலும் இவரது பாடல்களே பாடப்பெற்று வருகின்றன.
குறவஞ்சி நாடகம்.
குறவஞ்சி நாடகம் என்னும் ஒருவகை நாடகம் தமிழ் நாட்டியக் கலைஞர்களிடையே வளர்ந்து வந்தது. இந்தக் கதை, ஓர் அரசன் அல்லது தெய்வம் பவனி வரும்போது அவரைக் கண்ட ஒரு பெண்மணி காதல் கொண்டு வருந்துவாள். குறத்தி வந்து குறி பார்த்து ‘நீ அவரையே மணப்பாய்’ என்று ஆறுதல் கூறுவாள். பிறகு அந்தப் பெண்மணி தான் காதல் கொண்டவரை அவ்வாறே மணம் புரிவாள். அப்புறம், காணாமற் போன குறத்தியைத் தேடி அவள் கணவனான குறவன் வருவான். இருவரும் ஆடிப்பாடிச் செல்வார்கள். அநேகமாக எல்லாக் குறவஞ்சி நாடகங்களிலும் இதுவேதான் கதை. குற்றாலக் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகிய, இவ்வாறு எழுதப் பெற்றுள்ள பல குறவஞ்சி நாடகங்களில் சிறப்பு வாய்ந்த பாடல்களைக் கொண்ட இலக்கியமாகக் கருதப்படுவது திருக்குற்றாலக் குறவஞ்சியாகும். இதனை ஆடலும், பாடலும் கொண்ட நாட்டிய நாடகமாகவே நமது நடனமணிகள் ஆடி வருகிறார்கள். இந்தப் பெருமைக்குரிய குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்பக் கவிராயர்.
இன்னும், நாடக அலங்காரம், வாசகப்பா, சபா, பள்ளு முதலான பெயர்களிலும் நாடகங்கள் இருந்தனவென்று தெரிகிறது.
1891-இல் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் ‘மனோன்மணீயம்’ என்னும் அற்புதமான நாடகத்தை அகவற்பாவால் எழுதியிருக்கிறார். இது தமிழ்ப் புலவர்களாலும் அறிஞர்களாலும் போற்றப்பெற்ற ஒரு சிறந்த தமிழ் நாடகம். இந்நாடகத்தை இதுவரை நானறிந்த வரையில் யாரும் நடித்ததில்லை. ‘இது நடிப்பதற்காக எழுதப்பட்டதன்று’ என ஆசிரியரே குறிப்பிட்டிருக்கிறார். இப் பெரியாரைப் பின்பற்றிப் பல ஆசிரியர்கள் அகவற்பா நடையில் நாடகங்களை எழுதியிருக்கிறார்கள்.
‘நாடக இயல்’ என்னும் இலக்கண நூலை எழுதிய பரிதிமாற் கலைஞன் அவர்கள் ரூபாவதி, கலாவதி என்னும் இரு நாடகங்களை உரைநடையிலும், மானவிஜயம் என்னும் நாடகத்தை அகவற்பா நடையிலும் எழுதியிருக்கிறார்.
பண்டைக்கால நாடகப் பாடல்கள், வெண்பா, கலித்துறை, விருத்தம், தோடையம், திபதைகள், தருக்கள், கொச்சகம், தாழிசை, அகவல், கண்ணிகள், சிந்துகள் முதலிய பல விதமான பாவினங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.
புதிய பாதை கண்டோர்
இவ்வாறு ஆடப்பட்டு வந்த நாடகத்தை ஒழுங்குபடுத்தி இன்று நாம் காணும்படியான நாடக மேடை அமைப்புக்குக் கொண்டு வந்தவர் தஞ்சை
நவாப் கோவிந்தசாமி ராவ் என, பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் தமது ‘நாடகத் தமிழ்’ என்னும் நூலிலே குறிப்பிட்டுள்ளார்.
நானறிந்த வரையில் இதே காலத்தில் கும்பகோணம் திரு. நடேச தீட்சிதர் அவர்களால் துவக்கப்பட்ட திரு. கல்யாணராமய்யர் நாடகக் குழுவினரும் நாடகத் துறையில் புதிய பாதை கண்டவர்கள் எனத் தெரிகிறது.
தமிழ் நாடகக் கலைக்கு மகத்தான பணி புரிந்த தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இந்த கல்யாண ராமையர் நாடகக் குழுவில் நடிகராகவும் நாடக ஆசிரியராகவும் இருந்தார்.
நாடகத்தைத் தொழிலாகக் கொண்ட தமிழ்நாட்டு நாடக சபைகள் அனைத்திலும் பெரும்பாலும் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களையே நடித்து வந்தார்கள் என்று கூற வேண்டும்.
நவாப் கோவிந்தசாமி ராவ், கல்யாணராமையர், சங்கரதாஸ் சுவாமிகள் ஆகியோர் நாடகத் துறையில் புகுந்த காலத்தையொட்டி நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியாரவர்கள் ‘சுகுண விலாச சபை’ என்னும் ஒரு (அமெச்சூர்) பயில்முறை சபையை 1891-இல் சென்னையில் தோற்றுவித்தார்.
சுகுண விலாச சபையின் தோற்றமும், பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் அச்சபைக்காக எழுதிய பல்வேறு வகைப்பட்ட நாடகங்களும் தமிழ்நாட்டில் பல அமெச்சூர் நாடக சபைகளைத் தோற்றுவித்தன. தொழில் முறை நாடக சபைகளும் ஏற்று நடித்து வளர்ச்சி பெறுவதற்கு பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்கள் வாய்ப்பளித்தனவென்பதை நன்றியோடு குறிப்பிட வேண்டும்.
‘ஒரு நாடகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் அந்த நாடகத்தில் பங்கு கொள்ளும் நடிகர்களிடையே ஒழுங்கும், நியதியும், கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.’
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடக மேடை சீர்குலைந்திருந்த அந்த நாளிலே, இப்படிக் குரல் கொடுத்தார் ஒரு பெரியார். அந்தப் பெரியார் தாம் தமிழ் நாடகத் தலைமையாசிரியர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். அந்த நாளில் ‘சுவாமிகள்’ என்றாலே போதும்; அந்தச் சொல் அவர் ஒருவரைத் தான் குறிக்கும். அவருடைய நாடக அமைப்புத் திறன்; அந்த அமைப்பிலே காணப்படும் நுணுக்கம், நாடகப் போக்கிலே நாம் காணும் அழகு; நாடக பாத்திரங்களின் வாயிலாகப் பாடல்களிலும் உரையாடல்களிலும் அவர் வெளியிட்ட கருத்துக்கள்; அந்தக் கருத்துகளால் நாடகம் பார்ப்பவர்கள் அடைந்த பயன், இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது சுவாமிகளின் நாடக நல்லிசைப் புலமை நமக்கு நன்றாகத் தெரிகிறது.
சுவாமிகள் தந்த நாடகச் செல்வம்.
சுவாமிகள் சுமார் நாற்பது நாடகங்கள் எழுதியிருக்கிறார். நாடகத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட கதைகள் பெரும்பாலும் அம்மானைப் பாடல்களாக நம்முடைய தாய்மார்கள் சுவையோடு படித்து வந்த பழங்கதைகள் தாம்.
அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சீமந்தனி, சதியநுசூயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, சுலோசனா சதி இப்படி எல்லாம் நமக்குத் தெரிந்த நாடகங்கள். இவைகளைத் தவிர வடமொழி நாடகமாகிய மிருச்சகடியையும், ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியத், சிம்பலைன் ஆகிய நாடகங்களையும், மணிமேகலை, பிரபுலிங்கலீலை ஆகிய தமிழ்க் காப்பியக் கதைகளையும் சுவாமிகள் நாடகமாக்கி இருக்கிறார்.
சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் அரங்கில் ஆயிரக்கணக்கில் நடிக்கப் பெற்றவையென்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பாடல் வகைகள்
சுவாமிகளின் நாடகங்களில் வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், சிந்து, வண்ணம், ஓரடி, கும்மி, கலிவெண்பா, தாழிசை, கீர்த்தனை இப்படிப் பலவகைப்பட்ட பாடல்களும் சிறு பகுதி உரையாடல்களும் நிறைந்திருக்கும். அப்போது உரைநடை அதிகமாக வராத காலமாதலால், பெரும் பகுதி பாடல்களாகவே யிருக்கும்.
இப்பொழுதெல்லாம் அந்த நாடகங்களை நீங்கள் பார்க்க தேர்ந்தால், ‘என்னையா! எடுத்ததற்கெல்லாம் பாட்டுத்தானா?’ என்று கேட்பீர்கள். நாடகங்களில் பாட்டு மிகக் குறைவாக இருக்க வேண்டுமென்று கருதப்பெறும் காலம் இது. நாங்கள் நாடகத் துறையில் புகுந்த காலத்தில் அப்படியெல்லாம் இல்லை. ஒரு நாடகத்தில் குறைந்தது நூறு பாடல்களாவது இருக்கும். தர்க்கப் பாடல்கள் மிக அதிகம். இந்த நாள் நாடகங்களைப் போல் மேடையில் நடிப்பவர்க்காக மறைவில் இன்னொருவர் இருந்து பாடும் ‘இரவல் குரல்’ வழக்கம் எல்லாம் இல்லை. சுவாமிகளின் நாடகப் பாடல்களை நாங்களேதான் பாடுவோம்.
சிரித்தாலும் பாட்டு, அழுதாலும் பாட்டு, கோபித்தாலும் பாட்டு, சண்டை போட்டாலும் பாட்டு, ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் எல்லாம் பாட்டு மயந்தான். உரையாடல்கள் பெரும்பாலும் பாட்டின் பொருளை விளக்குவதாகவே யிருக்கும். எங்காவது ஒரு சில இடங்களில் நீண்ட வசனங்கள் பேசப்படும்.
அந்நாளில் நடைபெற்ற வேறு சில நாடகங்களில் நான் பார்த்திருக்கிறேன்: ஒருவருக்கும் தெரியாமல் ஒளிந்து மறைந்து கொள்ளையடிக்க வரும்
திருடன் கூடக் காலில் சலங்கை கட்டிக்கொண்டு, ஆடிப் பாடி, ஆர்ப்பாட்டத்தோடு வருவான்! சதாரம், அதிரூப அமராவதி ஆகிய நாடகங்களில் திருடன் வேடத்திற்கென்றே சில நட்சத்திர நடிகர்கள் இருந்தார்கள். அவர்கள் நடிக்கிறார்கள் என்றால் அந்தக் காலத்தில் அபாரமான வசூலும் ஆதரவும் இருந்தன. அவர்களில் பிரசித்தி பெற்றவர் திரு. நடராஜ ஆச்சாரி என்பவர். அவருக்குப் போட்டியாகத் திரு. தங்கவேலுப் பிள்ளை என்று ஒருவர் இருந்திருக்கிறார். இந்தத் திருட வேடதாரிகளுக்குள் போட்டா போட்டி வைத்து சதாரம் நாடகம் நடைபெறும். இந்தப் போட்டி ஆட்டத்தைப் பார்க்க மக்கள் ஆயிரக் கணக்கில் கூடுவார்கள். சில சமயங்களில் பெண்களும் திருடர்களாக நடிப்பது உண்டு.
(தொடர்கிறது)
$$$
One thought on “நாடகக் கலை -1 (அ)”