நந்தனார் சரிதம் – 6

-பி.ஆர்.மகாதேவன்

எம்பெருமான் வந்துவிட்டார். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இருந்து இரண்டு பக்கமிருந்தும் நான்கு கரங்கள் முளைத்து நந்தனைத் தூக்கிப்பிடித்தன. நந்தனுக்குள் ஒரு புது உத்வேகம் எழுந்தது. ஊராரின் பஞ்சாட்சர கோஷம் அவனுக்குள் ஆவேசத்தைத்  தூண்டியது. நிமிர்ந்து பார்த்தபோது தென்பட்ட திரிசூல மின்னல் அவன் கண்கள் வழி பாய்ந்ததுபோல நிலை குத்திய கண்களுடன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய உடல் இப்போது விறைத்து எழுந்திருந்தது. கால் நடுக்கம் மறைந்திருந்தது. ஒவ்வொரு அடியாக அவன் அழுந்த எடுத்து வைக்க வைக்க நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.

-6-

பஞ்சாட்சரமும் பறையொலியும்

சிற்பியின் கைவண்ணத்தில் உருவான அம்பலத்தானின் அழகு மெய் சிலிர்க்கச் செய்கிறது. நந்தன் வைத்த கண் எடுக்காமல், நீர் வழியக் கண்டுகொண்டிருக்கிறான்….

நான்கு வர்ணங்களின் அதிபதி, நான்கு கரங்கள் கொண்டு விளங்குகிறார். அள்ளி முடிந்த தலைமுடி அலங்காரமாக மின்னுகிறது. கேசத்தின் நுனிகள் காற்றில் விரிந்து பறக்கின்றன. தலைமுடியில் ஒரு நாகம் சுருண்டு கிடக்கிறது. மண்டையோடு, கங்கை, பிறைச்சந்திரன், கொன்றைப் பூச்சரம் எல்லாம் அணிந்திருக்கிறார். வலது காதில் ஆண்களுக்கான கடுக்கண் அணிந்திருக்கிறார். இடது காதில் பெண்களின் தோடு அணிந்திருக்கிறார்.

கழுத்தில் ஆரங்கள், நகைகள், அணிந்திருக்கிறார். கைகளில் காப்புகள் அணிந்திருக்கிறார். இடுப்பில் நவரத்தின வளையம். காலில் தண்டை, கைகளில் மோதிரங்கள், காலில் மெட்டிகள் அணிந்திருக்கிறார். உடலோடு ஒட்டிய இறுக்கமான ஆடை முழங்கால் வரையில் அணிந்திருக்கிறார். பூணூலும் மார்பில் நெளிந்தாடுகிறது.

ஒரு வலக்கையில் உடுக்கை; இன்னொரு வலக்கை  ‘யாருக்கும் அஞ்சாதே’ என்று அபய முத்திரை காட்டுகிறது. இடது கரங்களில் ஒன்று அக்னிக் கலசம் ஏந்தியிருக்கிறது. இன்னொரு இடக்கை காலடியில் விழுந்து கிடக்கும் முயலகனைச் சுட்டிக்காட்டுகிறது. கரங்களில் ஒரு நாகமும் நெளிந்து ஆடுகிறது. இடது காலைத் தூக்கி நின்று ஆடுகிறார். தாமரைப் பீடத்தில் இவை அனைத்தும் நிலைகொண்டிருக்கின்றன. தீப்பிழம்புகள் சுற்றிலும் எரிகின்றன.

நந்தன் மந்திரித்துவிட்டவன் போல வீடு திரும்புகிறான்.

கண்ணை மூடினாலும் எம்பெருமானின் திரு நடனமே அவன் கண்களில் தெரிகிறது. காதை மூடினாலும் ஆடலரசனின் கால் சலங்கைகளே ஒலிக்கின்றன. உதடுகள் மூடினாலும் உள்ளம்  ‘ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய’ என்று ஓங்காரமிடுகிறது.

மும்மலத்தை அழிக்கும் ஆன்ம ஞானிகள் தமது சுய போதத்தையும் அழித்து விடுகிறார்கள். இப்போது அவர்கள் தமக்குள் பரம்பொருளை உணர்கிறார்கள். பேரானந்த நிலையில் இருக்கிறார்கள். அம்பலத்து ஆடலரசனின் ஆனந்த நடனத்தைக் கண் முன் காணும் பாக்கியம் பெறுகிறார்கள்

நந்தன் அந்தப் பெரும் பேற்றைத் தன் எளிய பக்தியின் மூலமே எட்டிக் கொண்டிருக்கிறான்.

சிவ சிந்தனை அல்லாமல் பிற சிந்தனைகள் அனைத்தையும் மனத்தில் இருந்து அகற்றிவிட வேண்டும். உள்ளத்திலும் உடம்பிலும் சிவ நடனமே நடக்கும் வண்ணம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுவே பந்த பாசங்களில் இருந்து விடுபட ஒரே வழி. நந்தன் வழி.

அன்றிரவு அவன் கனவில் எம்பெருமான் தோன்றுகிறார்.  ”நாளை நாளை என்று நாட்களைக் கடத்திக் கொண்டேயிருக்கிறாயே… உண்மையிலேயே என்னைப் பார்க்க உனக்கு ஆசை இருக்கிறதா இல்லையா…?” என்று செல்லமாகச் சீண்டுகிறார் எம்பெருமான்.

“ஐயனே… என்ன இது கேள்வி… இந்த ஜென்மம் நான் எடுத்ததே அதற்குத்தானே…?”

“சும்மா சொல்கிறாய்… அப்படியானால் இதுவரை என்னை ஏன் பார்க்க வரவே இல்லை?”

“நீ என்றைக்கு வரச் சொல்வாய் என்று காத்திருக்கிறேன். என்னை உன்னுடனே அழைத்துக் கொண்டுவிடுகிறாயா?”

“எதற்கு?”

“உன்னை என்றைக்கு நான் பார்க்கிறேனோ அதன் பின் இந்தக் கண்கள் வேறு எதையும் பார்க்கக் கூடாது.  என்றைக்கு உன் குரல் என் காதில் விழுகிறதோ,  அதன் பின் இந்தக் காதுகள் வேறு எதையும் கேட்கக் கூடாது. என்று  என் கைகள் உன்னை ஸ்பரிசிக்கிறதோ அதன் பின்  வேறெதையும் தொடக் கூடாது. என்று உந்தன் தோளில் ஆடும் மாலைகளின் நறுமணம் என் நாசியை நிறைக்கிறதோ அதன் பின் வேறெதையும் நுகரக் கூடாது…”

“ஏன்?”

“உள்ளிருக்கும் விதை முளைத்தபின் ஓட்டுக்கு என்ன வேலை? உன்னை தரிசித்த பின் இந்த உடம்புக்கு என்ன வேலை? உன்னைப் பார்க்க, உந்தன் அழைப்பு கிடைக்கக் காத்திருக்கிறேன்.”

“அப்படியா… நல்லது!  நாளை என்னைப் பார்க்கப் புறப்பட்டு வா…”

“ஐயனே… நாளையா… இதோ இப்போதே புறப்படுகிறேன்” என்று பாயில் இருந்து துள்ளிக் குதித்து எழுகிறான் நந்தன்.

மறு நாள் காலையில் தில்லை வாழ் அந்தணர்கள் நந்தனை இந்தப் பிறவியிலேயே எம் பெருமானின் ஆலயத்தினுள் நுழைய ஒரு வழி இருக்கிறது என்று சொன்ன செய்தியும் வந்து சேருகிறது.

அதைக் கேட்டதும் நந்தன் ஆனந்த வெள்ளத்தில் மூழ்குகிறான். தன் கனவில் வந்த எம்பெருமான் அந்தணர் வாக்கிலும் வெளிப்பட்டிருப்பதைக் கேட்டு உள்ளம் பூரிக்கிறான்.

“எம் பெருமான் என்னை அழைத்துவிட்டார். நேற்று என் கனவில் வந்தார். இந்த ஜென்மத்தில் எனக்கு காட்சி தருவேன் என்று அவர் எனக்குச் செய்து தந்த சத்தியத்தை நிறைவேற்றிவிட்டார். அவரைக் கண்டபின் வேறெதையும் பார்க்க மாட்டேன் என்று நான் அவருக்குச் செய்து தந்த சத்தியத்தை நிறைவேற்றப் போகிறேன்” என்று ஆனந்த நடனம் ஆடுகிறான்.

தன் உடுக்கை ஒலியின் ஓங்காரத்தின் மூலம் சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தையும் அதன் இறுதியைச் சுட்டிக்காட்டும் ஊழிப் பெருந்தீயையும் இரு கரங்களில் ஏந்தியபடி, மறு கரங்களில் காத்தலுக்கான அபயஹஸ்த முத்திரையையும் காட்டி நிற்கும் எம்பெருமானின் திருநடனம் நடந்த ஸ்தலத்தில் அந்த எம்பெருமானை தரிசிக்க வழி பிறந்துவிட்டதா… திருப்புன்கூரில் நந்தியை விலகி நிற்கச் சொல்லியது போல, அந்த தில்லையிலும் நந்தியை விலகச் சொல்லி அம்பலவாணன் உத்தரவு தந்துவிட்டாரா…?

இந்த நொடியே செல்கிறேன். ஏழு பிறவிகளை மாய்த்துக் கொள்ளும்படியான நெருப்புக் குண்டம் அமைக்கிறேன். ஒவ்வொரு பிறவியையும் அந்த எம்பெருமானின் பஞ்சாட்சர நாமத்தையே ஜெபித்தபடி கழித்து, ஏழாம் பிறவியெடுத்து இறைவனடி சேரப் போகிறேன்…

காற்று வேகத்தில்,  மனோ வேகத்தில் தில்லையை அடைகிறான் நந்தன். அதன் திருவெல்லையினைப் பணிந்து வணங்குகிறான்.

***

அந்தணர் வளர்த்த வேள்விக் குண்டத்தில் இருந்து எழுந்த செந்தீயானது முற்பகல் சூரியனின் வெண்ணிறத்தையும் அதிகாலைச் செந்நிறமாக ஆக்கியிருந்தது. நெய்யில் தோய்த்த சமித்துகள் சில நேரங்களில் புகையும்போது எழும் ஹோமப் புகையானது வானில் மிதக்கும் மேகக்கூட்டத்தையும் மறைத்தபடி எழுந்து கொண்டிருந்தது. வீடுகள்தோறும் வீதிகள்தோறும் ஓங்கி ஒலிக்கும் வேத கோஷங்கள் தில்லை மாநகரையே வேதபூமியாக்கி இருந்தன.

நந்தன் காலடி எடுத்துவைத்ததும் அவன் உடம்பெல்லாம் ஆயிரம் பறைகள் ஒருசேர அதிர்ந்ததுபோல உணர்ந்தான். ஏதோ அவன் வருகைக்காகத் தான் அனைவரும் காத்திருந்ததுபோல இருந்தது.

இப்பிறவியிலேயே நான் எம் பெருமானைத் தரிசிக்க இப்படி ஓர் எளிய வழி இருக்கிறதென்றால் முன்பே ஏன் சொல்லவில்லை மூவாயிரத்தோரே?

திருச்சிற்றம்பலத்துள் நடமிடும் பூங்கழல்களைப் போற்றிப் பணிந்து வாழும் தில்லைவாழ் அந்தணர்காள்… காலையில் அரும்பி மாலையில் வாடும் பூவைப் போன்ற புலைப் பிறவி நீங்கிப் புண்ணியம் சேர்த்துக்கொள்ள இப்படி ஓர் எளிய வழி இருப்பதை ஏன் சொல்லவில்லை முன்னமே…?

மங்கலத்தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் அங்கணர் கோயில் உள்ள அகம்படித் தொண்டு செய்வோரே… பிறப்பின் வழிக் கிடைத்த பெரிய பாக்கியத்தின்படி முக்கால அக்னி வளர்த்து தருமமே பொருளாகக் கொண்டு அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று திருநடம்புரிவார்க்கு அடியாளாகி திருவினால் சிறந்த சீரோரே,  சீக்கிரமே இந்த வழியை சிறியவன் எனக்குக் காட்டியிருக்கக் கூடாதா?அந்த ஆலகாலமுண்டவன் தான் என்னை இத்தனை நாட்கள் அலைக்கழித்தானென்றால் நீங்களுமா இப்படி விளையாடுவது?

மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டோரே; அறுதொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளீர். கிடைப்பதெல்லாம் திருநீற்றின் அருள் எனக் கொளும் உள்ளம் கொண்டோருக்கே சிவன்பால்அன்பெனும் பெரும் பேறு பெற முடியும்;பெருகி வாழ முடியும் என்று உலகுக்கு எடுத்துக்காட்டும் உத்தமர்களே… தானத்திலும் தவத்திலும் வல்லவர்களே…செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனோரே…

மும்மை ஆயிரவர்களே தாங்கள் பெறுவதற்கான பேறு என்று எதுவும் இனியும் இந்த உலகில் இருக்கிறதா என்ன..? உமக்கு நிகர் நீங்களே எனும் உன்னத நிலையை எம்பெருமானால் எட்டவைக்கப்பட்டவர்களே… இந்த எளியேன் எனக்கும் இரங்கி இப்படி ஓர் வழி காட்டியமைக்கு என்ன கைம்மாறு செய்துவிட என்னால் முடியும்?

அந்தணரே… அரு மறையோரே… இதோ நீவிர் காட்டிய வழியில் நெடுந்தீ மூட்டுகிறேன். ஏழு பிறவிகள் எடுத்து எம்பெருமானின் முன் சென்று சேர்கிறேன். இதோ இப்போதே வெட்டுகிறேன் என் மோக்ஷத்துக்கான அக்னிக் குண்டம்!”

– என்று சொல்லியபடி பூத கணங்கள் எல்லாம் உடம்புக்குள் புகுந்து கொண்டதுபோல வெட்டுகிறார். அசுரகணங்கள் எல்லாம் அசந்து போகும் அளவுக்கு விறகுகள் கொண்டுவந்து அடுக்குகிறார். எம்பெருமானே ஏற்றிய தீபம் போல, கதிரவனின் கிரணம் பட்டு கிளர்ந்தெழுகிறது தீ.

அரையாடையை இறுகக் கட்டிக் கொண்டு இரு கையைத் தலைமேல் கூப்பியபடி நந்தன் அந்த நெருப்புக்குள் இறங்குகிறான்.

ஏழு பிறவிகளுக்குமாக ஏழு இடைவெளிகள் விட்டு நீண்ட நெருப்புக் குண்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பிறவியாக கழற்றிப் போட்டபடி முன்னகர்கிறான் நந்தன்.

ஒரு பிறவி உடல் கழற்றப்பட்டதும், கழிந்த பிறவிக்கான சாந்தி மந்திரங்களைச் சொல்லி ரிஷப உத்ஸர்ஜனம் செய்வித்து புதிய பிறவிக்கான நாமகரணங்களையும் வேதியர்கள் உரக்க ஒலிக்கிறார்கள்.

மக்கள் கூட்டம் இந்த அதிசயத்தைக் காண கூடி நிற்கிறது. முதல் பிறவி முடிந்ததும் நந்தன் உற்சாகக் களிப்பில் இரண்டாம் எரியில் புகுகிறான். முதல் பிறவிப் பயணத்தில் கால்கள் சூடேற ஆரம்பித்திருந்தன. இரண்டாம் பிறவி நெருப்பில் உடல் தோல் கருக ஆரம்பித்தன.

மூன்றாம் பிறவி நெருப்பில் மென் சதைகள் எரிய ஆரம்பித்தன. நந்தனின் நடை தளரத் தொடங்கியிருந்தது. அவனுடைய குலத்தினரின் ஆரவாரம் மெள்ள ஸ்ருதி குறையத் தொடங்கியது.

நான்காம் பிறவி நெருப்பை அவனுடைய உடல் கடந்தபோது அவன் உடல் பற்றி விறகு ஒன்று எரிவதுபோல எரியத் தொடங்கியிருந்தது.

அவனுடைய குலத்தினர்  ‘நந்தா வந்துவிடு போதும்… உன்னைக் கொல்லச் செய்த சதிபோல் இருக்கிறது. வெளியே வந்துவிடு… போதும் எல்லை தாண்டும் எண்ணம் யாருக்குமே வரக் கூடாதென்று விரித்த வலை இது’ என்று கூக்குரலிடுகிறார்கள்.

நந்தன் தளரவில்லை. வேத கோஷங்கள் உரக்க ஒலிக்கின்றன. ஜனன மரண மந்திரங்கள் விண்ணை முட்டுகின்றன.

ஐந்தாம் பிறவியையும் கடந்து வெளியேறுகிறான் நந்தன். அவன் கண்கள் புகை மூடி இருள்கின்றன. கால்கள் தடுமாறுகின்றன. கைகள் காற்றில் அலைபாய்கின்றன.

மெள்ள ஆறாம் பிறவிக்குள் நுழைகிறான். இந்த நெருப்புக் குண்டத்தைக் கடந்து அவன் வர வாய்ப்பே இல்லை என்பதுபோல அவனுடைய கால்கள் தளர்ந்து மெள்ள, மிக மெள்ள ஒவ்வொரு அடியாக எடுத்துவைக்கிறான். நின்ற இடத்திலேயே நடப்பதுபோல மிக நீண்ட பிறவியாக அது ஆகிறது. நந்தனின் உடல் குறுகுகிறது.இனி நான்கு கால்களால்தான் நடக்க முடியும் என்பதுபோல ஒடுங்குகிறான்.

ஒருவழியாக ஆறாம் பிறவி நெருப்பைக் கடந்து வெளியே வருகிறான். இனிமேல் ஒரு அடி கூட அவனால் எடுத்து வைக்க முடியாது என்பதுபோல தளர்ந்து கீழே விழப்போகிறான்.

அப்போது திடீரென்று வானம் இருள்கிறது. சூறைக் காற்று வீசுகிறது. இடி மின்னல் வெட்டுகிறது. பூமியே நடுங்குவதுபோல அதிர்கிறது. விண்ணில் வெட்டிய மின்னல் எப்போதும் இல்லாத அதிசயமாக திரிசூல வடிவில் வெட்டியதைக் கண்டு ஊர் இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறது.

எம்பெருமான் வந்துவிட்டார். கொழுந்து விட்டெரியும் நெருப்பில் இருந்து இரண்டு பக்கமிருந்தும் நான்கு கரங்கள் முளைத்து நந்தனைத் தூக்கிப்பிடித்தன. நந்தனுக்குள் ஒரு புது உத்வேகம் எழுந்தது. ஊராரின் பஞ்சாட்சர கோஷம் அவனுக்குள் ஆவேசத்தைத்  தூண்டியது. நிமிர்ந்து பார்த்தபோது தென்பட்ட திரிசூல மின்னல் அவன் கண்கள் வழி பாய்ந்ததுபோல நிலை குத்திய கண்களுடன் நிமிர்ந்து நிற்கிறான். அவனுடைய உடல் இப்போது விறைத்து எழுந்திருந்தது. கால் நடுக்கம் மறைந்திருந்தது. ஒவ்வொரு அடியாக அவன் அழுந்த எடுத்து வைக்க வைக்க நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.

சுற்றியுள்ள அத்தனை பேரும் கற்சிலையாகச் சமைந்தனர். விண் முட்ட ஒலித்த சப்தங்கள் போன இடம் தெரியாமல் மறைந்திருந்தன. இவன் ஒவ்வொரு காலடி எடுத்து வைக்க வைக்க, பூமியே அவன் உருவாக்கிய பேரிகை போல முழங்கியது. நெருப்புப் பொறிகள் பறந்தன. சுடுகாட்டுச் சித்தன் போல, மயான ருத்ரன் போல உடம்பெல்லாம் கரிபூசி வெண் சாம்பல் புரி நூலாக மார்பில் தவழ, நெருப்புக் கங்குகள் மணியாரமாக மின்ன, கண்கள் செவ்வரளி மலர் போல ஒளிர, நந்தன் நந்தனாராக வெளியே வந்தார்.

மூவாயிரவர் தம்மையும் அறியாமல் கை கூப்பித் தொழுதனர். ஏழு பிறவி நெருப்பிலும் உடலைப் புனிதப்படுத்தி இறைச் சிந்தையுடன் மீண்டுவந்த நந்தன் அவருடைய ஆலயத்துக்குள் காலடி எடுத்துவைத்தார். அருகமைந்த மரங்கள் மலர் மாரி பொழிந்தன. பிரகாரத்துக் கற்சிலைகள் எல்லாம் கடந்து சென்றவரின் ஒளிபட்டு உயிர் பெற்றதுபோல மிளிர்ந்தன.

நெருப்பில் கருகிய நந்தனாரின் கால்தடங்களுக்கு இணையாக இன்னொரு இணை கால் தடங்களும் உடன் செல்கின்றன.

கொடிமரம் தாண்டி, நந்திகேஸ்வரர் கடந்து கருவறை ஏறி  கால் தடங்கள் புறப்பட்ட இடம் சென்று சேர்கின்றன. 

தெய்வமும் பக்தனும் தம் திருவிளையாடலை நிகழ்த்தி முடித்த மன நிறைவில், தில்லையம்பலம் பேரமைதி கொள்கிறது.

திருநாளைப்போவார் இன்று தில்லையிலேயே ஒடுங்கிவிட்டார்! நந்தனின் உறவுகள் எக்காளமிடுகின்றனர்.

தில்லைவாழ் அந்தணர்களின் கரங்கள் குவிகின்றன. எங்கும் பஞ்சாட்சர முழக்கம் சூழ்கிறது.

அதனுடன் இயைந்து ஒலிக்கிறது, நந்தன் செய்தளித்த பறையின் ஓங்கார ஒலி!

திருச்சிற்றம்பலம்!

(நிறைவு)

$$$

One thought on “நந்தனார் சரிதம் – 6

Leave a comment