-பி.ஆர்.மகாதேவன்
அகல்விளக்குகள் அருகில் கொண்டு செல்லப்பட்டபோது காற்றின் அசைவினால் ஆடிய சுடரொளியில் சிலை உயிர்பெற்று ஆடியது போன்ற பிரமை! பிரமையா நிஜமா...? வீசும் காற்றும் அவனருளால்... எரியும் சுடரும் அவனருளால்... சிற்பியும் அவனருளால்... சிற்பி வடித்த சிலையும் அவனருளால்... அவனருளாலே அவன்தாள் பணிந்து உருவாக்கிய அவனது சிலை! உயிர்கொடுத்து உயிர்பெற்று அம்பலத்தில் ஆடும் ஆடலரசன்... சர்வேஸ்வரன்... தில்லையம்பதி!

-5-
ஆடல் வல்லான்
சிற்பி, தில்லையம்பல நடராஜனின் திரு உருவை வடிக்கப் போகிறார் என்பது தெரிந்ததும் நந்தன் சிற்பக்கூடத்துக்கு ஓடோடிச் சென்றான்.
வாசலில் சிற்பத்தை வடிக்கச் சொன்ன தனவான் பரபரப்புடன் காத்திருந்தார். அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார். ஆண்குழந்தை தான் பிறக்கும் என்பதில் உறுதியாக இருந்தார். தன்னிடம் இருந்தவற்றிலேயே மிகவும் விலை உயர்ந்த தங்கக் காசுமாலைகள் நான்கை சிலைசெய்ய மனப்பூர்வமாகக் கொடுத்து அனுப்பயிருந்தார். வெண்கலச் சிலையின் மேல்பூச்சாக அந்தத் தங்கமாலைகள் உருக்கிப் பூசப்படும். எம்பெருமானின் திருஉருவ சிலை பொன்னிற சூரியபம்பம் போல மின்னும். பிறக்கவிருக்கும் குழந்தையின் வாழ்க்கையும் அது போலவே மின்னும்.
ஓடி வந்த நந்தனும் சிற்பக்கூட வாசலில் தனவானுக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டார். தனவானுடன் வந்திருந்த அந்தணரும் அங்கேயே அமர்ந்துகொண்டார். சிற்பக் கூடத்தில் சிற்பியே அரசன். அவர் அனுமதிக்கும் நேரத்தில் அனுமதிக்கும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கும் எல்லை வரை வந்துபோக முடியும். சிற்பி வடிக்கும் வரையில் சிலையின் கருவறை சிற்ப மண்டபம். அதனுள் சிற்பிக்கு மட்டுமே சென்று வர உரிமை. மண்டபத்தின் நான்கு பக்கமும் மஞ்சள் துணி கட்டப்பட்டிருந்தது.
சிற்பி உள்ளே மந்திர உச்சாடனம் செய்யத் தொடங்கியதும் அவரது கம்பீரமான குரல் அந்த அறை முழுவதும் அதிர்வலைகளை எழுப்பத் தொடங்கியது. தரையில் கால்மடக்கி அமர்ந்திருந்தவர் இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்திருந்தார். அகலமாக விரித்திருந்த கையில் படித்திருந்த வெண்ணிறப் பூணூலின் ஒரு முனை தனது கறுத்த இடது தோளில் படும்படியும் மறுமுனை வலது இடைப்பக்கம் செல்லும்படியும் அணிந்து கொண்டார். வேறு இரண்டு பூணூல் பிரிகள் அவருடைய கால்தொடைகளில் நீள்வசத்தில் இருந்தன. சற்று குனிந்து உத்திரிணியில் சிறிது நீர் எடுத்து வலது கையில் ஊற்றிக் கொண்டார். மந்திரங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. தொடையில் இருந்த இரண்டு பூணூல் பிரிகளையும் அது போலவே அணிந்து கொண்டார்.
கண்களை மூடி தமது குலத்தின் முதுமுதல்வரும் தேவசிற்பயுமான விஸ்வகர்மாவை மனதில் தியானித்தார். களிமண் கலத்தில் இருந்து எழுந்த குங்கிலியப் புகை காற்றில் கலந்தது. சிற்பி கண்களைத் திறந்து தன் மகனிடம் தேன்மெழுகை ஊற்றும்படி சைகையால் சொன்னார். சூட்டில் உருகிய பொன்னிற மெழுகு அடர்ந்தநிற குங்கிலியத்துடன் கலந்தது. கலவை சரியான விகிதத்தில் வருவதற்காக மேலும் சிறிது மெழுகைச் சேர்த்தார். சிலையின் உடல்பாகத்தை இன்று வடிவமைத்தாக வேண்டும்.
கொதிக்கும் கலவையைக் கண்ணால் பார்த்தே, பக்குவநிலையை அடைந்துவிட்டதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க அவரால் முடியும். குடத்தில் குளிர்ந்தநீரைக் கொண்டுவரச் சொன்னார். கொதிக்கும் கலவைநீரில் மூழ்கடிக்கப்பட்டது. பெரும் சப்தத்துடன் கொதிகலவை இறுகியது. சரியாக வந்திருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கவா என்று கேட்கும் தொனியில் சிற்பியின் மகன் அவரைப் பார்த்தான். ‘வேண்டாம்’ என்பதுபோல் சிற்பி தலையை இடவலமாக அசைத்தார்.
நல்ல நேரம் நெருங் கிவிட்டது. தூயநீர் ஒரு பெரிய பானையில் கொதிக்க வைக்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட மெழுகுக்கலவை அதனுள் போடப்பட்டு மெள்ளப் பசைபோல இளகத் தொடங்கியது. சிற்பி கண்களை மூடியபடி பாடினார்:
ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே!*
ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே!
பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே!
ஆகாச மாம்உடல் அங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகண்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடஞ்செய்கின் றானே!
அப்படியாக ஆனந்தக் கூத்தனின் ஆடலே அனைத்திலும் வெளிப்படுகிறது.
இதுவே சிவ தாண்டவம். அண்ட வெளியில் நடக்கும் இந்தப் பெரு நடனமே நம் உடம்பிலும் மனத்திலும் நடக்கிறது.
சிற்பி சொல்லச் சொல்ல நந்தனும் மனக்கண்ணில் அனைத்தையும் கண்டு, காலைத் தூக்கி நின்று ஆடத் தொடங்குகிறான். புன்முறுவல் பூத்தபடியே உயர்ந்த மண்டபத்தில் அமர்ந்துகொண்டு அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி சிற்பி சிலை வடிக்கிறார்.
ஆடிய காலும் அதிற்சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடியு ளேகண்டு தீர்ந்தற்ற வாறே!
இளகிய மெழுகை சிற்பியின் கைகள் வெளியே எடுத்தன. தான் உருவாக்கப்போகும் சிவபெருமானின் திருஉருவம் சிற்பியின் முன்னே கரிக் கோடுகளால் வரையப்பட்டிருந்தது.
ஜடைமுடிகள் காற்றில் பின்பக்க ம்அலைபாய, மேல்கரங்கள் பக்கவாட்டில் நீண்டுநிற்க, ஒரு கரத்தில் உடுக்கையும் மறுகரத்தில் அக்னிக் கலசமும் ஏந்தி நிற்கும் முக்கண் முதல்வன். இடதுகாலைத் தூக்கி நின்று அவர் ஆட, கீழ்கரங்கள் அவற்றுக்கான முத்திரைகளுடன் விரிந்தன. இடதுகரம் யானைத் தும்பிக்கைபோல கஜமுத்திரை காட்டுகிறது.
தூக்கிய பாதத்தை நோக்கி விரல்கள் நளினமாக கீழ்நோக்கிக் காட்டுகின்றன. தடைகளையும் எதிர்ப்புகளையும் அப்புறப்படுத்த வல்ல அம்பலத்தரசனின் கருணையைப் பறைசாற்றும் வண்ணம் வலது திருக்கரம் அபயஹஸ்த முத்திரை காட்டுகிறது.
விரல்கள் மேல்நோக்கிய நிலையில், உள்ளங்கை பக்தனைப் பார்க்கும் வகையில் விரிந்து, ‘யாமிருக்க பயமேன்?’ என்று பக்தருக்கு இறைவன் சொல்லும் முத்திரை.
திருஉருவத்தின் ஒளிவட்டம் கண்முன் களிநடனம் புரிந்து கொண்டிருந்த அக்னி ஜ்வாலையில் பிரதிபலித்ததுபோலஅவர் முகம் பிரகாசித்தது. இறைவனின் நாபிக்கமலத்தில் இருந்து பேரொளி கிளம்ப அந்த அறை முழுவதையும் பிரகாசத்தால் நிரப்பியது போல இருந்தது. மெழுகை வார்க்கத் தொடங்கியபோது ஆடலரசனின் கால்தண்டைகள் எழுப்பும் ஒலியும் உடுக்கையின் இன்னொலியும் அவர் காதுகளில் எதிரொலித்தன.
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக சற்று பின்னோக்கிச் சென்று அந்தத் திருமேனியைப் பார்த்தார். காலம் காலமாக அவருடைய முன்னோர்கள் கைமாற்றித் தந்த ஞானத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறோம் என்ற மனநிறைவு அவரைச் சூழ்ந்தது. பரம்பரை பரம்பரையாக குலவழி நீடித்த கலைஞானம் அவர் கைகள்வழி வெளிப்பட்டிருக்கிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகச் சேகரமான செய்நேர்த்தி அவர் ரத்தத்தில் ஓடி வந்திருக்கிறது. அவர் உருவாக்கிய சிலைகளிலேயே இதுதான் ஆகச் சிறந்தது. அவர் அதில் தனது பங்காக, சில நுட்பமான அம்சங்களைச் சேர்த்து தனித்தன்மை மிகுந்ததாக ஆக்கப் போகிறார். அதற்கு வேறுவிதமான கலவை தேவை. ஒரு பங்கு குங்குலியத்துக்கு ஒன்றரை பங்கு மெழுகு என்ற விகிதத்தில் மகனிடம் மேலும் சேர்க்கச் சொல்கிறார்.
முதலில் சிற்பி நடராஜ பிரதிமையின் மெழுகுவார்ப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். அதனுள்தான் உருகிய உலோகத்தை ஊற்ற வேண்டும்.
பத்து நாட்கள் கழித்து குறிப்பட்ட நல்ல நேரத்தில் சிற்ப கிருஹத்துக்கு அனைவரும் வந்துசேர, திருஉருவச் சிலையானது உயரமான பீடமொன்றில் வைக்கப்பட்டது.
அகல்விளக்குகள் அருகில் கொண்டு செல்லப்பட்டபோது காற்றின் அசைவினால் ஆடிய சுடரொளியில் சிலை உயிர்பெற்று ஆடியது போன்ற பிரமை! பிரமையா நிஜமா…? வீசும் காற்றும் அவனருளால்… எரியும் சுடரும் அவனருளால்… சிற்பியும் அவனருளால்… சிற்பி வடித்த சிலையும் அவனருளால்… அவனருளாலே அவன்தாள் பணிந்து உருவாக்கிய அவனது சிலை! உயிர்கொடுத்து உயிர்பெற்று அம்பலத்தில் ஆடும் ஆடலரசன்… சர்வேஸ்வரன்… தில்லையம்பதி!
சிற்பி மகனுக்குச் சொல்பவை நந்தன் காதிலும் விழுகின்றன…
“இந்த நடனம் சிருஷ்டி (படைப்பு, பரிணாமம்), ஸ்திதி (நிலைத்திருக்கச் செய்தல், காத்தல்) சம்ஹாரம் (அழித்தல், பரிணாமம்), திரபவம் (திரையிட்டு மறைத்தல், மாயை, ஓய்வு நிலை) அனுக்ரஹம் (முக்தி தருதல், கருணை) என சிவ பெருமானின் ஐந்து செயல்களைக் குறிக்கின்றன. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஷ்வரர், சதாசிவம் என ஐந்து தெய்வங்களால் மேற்கொள்ளப்படுபவையாகவும் இந்தச் செயல்கள் இருக்கின்றன….
“உடுக்கை ஏந்திய தமருகக் கரம் தேவலோகத்தையும், மற்ற உலகங்களையும் எண்ணற்ற உயிர்களையும் சிருஷ்டி செய்கிறது. அபய ஹஸ்த பொற்கரம் உயிருள்ளவை- உயிரற்றவை அனைத்தையும் காக்கிறது. அக்னிக் கலசம் ஏந்திய கரம் அனைத்தையும் மாற்றி அமைக்கிறது. ஊன்றிய பாதம் லெளகிக விஷயங்களில் உழலும் உயிர்களுக்கு இடமளிக்கிறது. தூக்கிய திருவடியாகிய குஞ்சித பாதம் நாடிவருபவர்களுக்கு நற்கதி அளிக்கிறது. இந்த ஐந்துமே சர்வேஸ்வரனின் மெய்த்தொழில்களாகத் திகழ்கின்றன…
“சிவபெருமானின் நடனம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. பிரபஞ்சத்தினுள் நடக்கும் அனைத்துச் செயல்களும் அவருடைய திருவிளையாடலே என்பதைக் குறிப்பால் உணர்த்தும் பிம்பம் அது. பிரபஞ்சமானது திருவாசியாக (வட்ட வடிவ வில்லையாக) சித்திரிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் எண்ணற்ற ஆன்மாக்களை மாயையில் இருந்து விடுவித்து முக்தி அடையச் செய்வதே எம்பெருமானின் திரு நடனத்தின் நோக்கம்.
மூன்றாவதாக, இந்த நடனம் நடக்கும் இடமான சிதம்பரமே இந்த உலகின் மையம். அது ஒவ்வொரு ஆன்மாவின் இதயத்திலும் உள்ளது….”
சிதம்பரம் என்ற பெயரைக் கேட்டதும் நந்தனுக்கு உடல் சிலிர்க்கிறது. ‘ஓம் நமசிவாய’ என்று கயிலைக்கே கேட்கும்படியாக கோஷமிடுகிறான்.
சிற்பி தொடர்கிறார்: “சிவபெருமான் அழிவின் கடவுள்.”
“மயான ருத்ரனைப் போலவா?”
“ஆமாம். எரியும் சுடுகாட்டை விரும்புபவர். ஆனால் எதை அவர் அழிக்கிறார்? விண்ணையும் மண்ணையும் யுக முடிவில் அழிப்பது மட்டுமல்ல; ஒவ்வொரு தனியான ஆன்மாவையும் பிணைத்திருக்கும் விலங்குகளையும் அழிக்கிறார்….
“சுடுகாடு என்பதை எதைக் குறிக்கிறது? அது எங்கே இருக்கிறது? பூத உடல்கள் எரிக்கப்படும் மயானம் அல்ல; பக்தர்களின் மனம் மயானம் போல வெறுமையாக ஆக்கப்படவேண்டுமென்பதைக் குறிக்கிறது. ஒரு மனிதரின் சுய போதம் அழிக்கப்பட வேண்டும்; மாயையும் கர்ம வினைகளும் அங்கு எரியூட்டப்படுகின்றன. அந்த மயானத்தில்தான் ஸ்ரீ நடராஜர் திரு நடனம் ஆடுகிறார். சுடலையாண்டி என்பது சிவ பெருமானின் இன்னொரு பெயர். மயான ருத்ரன் இன்னொரு பெயர். அவரின் புன்னகையில், தில்லை நடராஜரின் பொன்னம்பல நடனத்தின் நளினத்துக்கும் சுடுகாட்டில் ஆடும் ஆனந்தக் கூத்துக்கும் இடையிலான பந்தம் மிளிர்கிறது…”
தில்லையம்பதியின் ஒரு அம்சமே தமது குல தெய்வமான மயான ருத்ரன் என்பதைக் கேட்டதும் நந்தன் ஆன்மிகப் பேரின்ப நிலையில் ஆழ்கிறான்.
சிற்பி தொடர்கிறார்:
“துடியை அசைத்துப் பக்குவமடைந்த ஆன்மாவின் உணர்விலிருந்து மாயையை விலக்குகிறார். ஹோம அக்னியை ஏந்தியுள்ள கை அந்த ஆன்மாவின் தொல்வினைகளை முளைக்காதபடி அழிக்கும். ஊன்றும் திருவடியானது ஆணவம், மலம், அவித்யா ஆகியவற்றை அழிக்கும். தூக்கிய திருவடி ஆன்மாவை ஆனந்த நிலைக்கு இட்டுச் செல்லும். இந்தத் திருநடனத்தைத் தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியே கிடையாது….
“அழிவு, அழிவு, அழிவு. உள்ளுக்குள் இருப்பவற்றை, தன்னகங்காரத்தை அழிப்பது, சுற்றி இருப்பவற்றை அழிப்பது. உங்களுக்கும் பிற உயிர்களுக்கும் அன்புடன் இடம் தர வேண்டும். அழிவு மிகவும் அவசியம். ஏனென்றால் அதற்குப் பின்னரே சிருஷ்டி சாத்தியமாகும். உலகில் உருவாக்கப்படுபவை எல்லாமே ஏற்கெனவே இருந்தவற்றின் சிதிலங்களில் இருந்து உருவானவையே. இந்த உலகில் புதியதென்று எதுவுமே இல்லை. வடிவம் மட்டுமே மாறுகிறது. அந்த வடிவங்களும் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்….
“பிரம்மாவின் இரவில் இயற்கை செயலற்ற நிலையில் இருக்கிறது. சிவபெருமான் விரும்பாத வரையில் இயற்கையின் உயிர்ப்பு (நடனம்) நடைபெற வாய்ப்பு இல்லை. சிவன் தன் செயலற்ற நிலையில் இருந்து பெரும் பரவசத்துடன் கிளர்ந்தெழுந்து நடனமாடத் தொடங்குகிறார். உறைந்த நிலையில் இருக்கும் பருப் பொருட்களினூடாக நடன அதிர்வுகளும் (உடுக்கையின்) ஒலி அலைகளும் ஊடுருவுகின்றன. இயற்கையும் (உயிர்களும்) எழுந்து அவரைச் சுற்றியே ஆடத் தொடங்குகின்றன (சிருஷ்டி). பெரு நடனத்தின் அத்தனை அம்சங்களையும் அவரே நிலைநிறுத்துகிறார்….
“ஒரு யுகம் முடியும் நிலையில், நடனமாடிக் கொண்டேயிருப்பவர், அனைத்து வடிவங்களையும் உருவங்களையும் பெயர்களையும் நெருப்புக் கொண்டு அழித்து புதிய செயலற்ற நிலையை (யுக முடிவு) உருவாக்குகிறார்!”
சிற்பி சொல்லி முடிக்கவும் எங்கிருந்தோ வீசிய காற்று மஞ்சள் படுதாவை மெள்ள விலக்குகிறது.
நந்தனுக்குக் காணக் கிடைக்கிறது அந்தத் திருக் காட்சி.
.
குறிப்பு:
* திருமந்திரப் பாடல்கள் (ஒன்பதாவது தந்திரம்- 2726, 2727, 2730, 2774, 2760) இவை...
(தொடர்கிறது)
$$$
2 thoughts on “நந்தனார் சரிதம் – 5”