-அவ்வை டி.கே.சண்முகம்
சென்ற நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகக் கலையை வளர்த்த பெருமகன்களின் முதன்மையானவர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது ‘நாடக கலை’ நூல் நமது கருவூலத்தில் இடம் பெறுகிறது...

நன்றி:
‘நாடகக் கலை’ (1967)
அவ்வை டி.கே.சண்முகம்
தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் உதவியுடன் வெளியிடப்பட்டது
இரண்டாம் பதிப்பு: 1967 - விலை ரூபாய் 2.25
வெளியீடு: சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம்
மீனாட்சி கலா நிலையம், சென்னை-14
***
அணிந்துரை
–சிலம்புச் செல்வர். ம.பொ.சிவஞானம், எம்.எல்.ஏ. அவர்கள்
‘அனுபவ ஞானம்’ என்பது எளிதிற் பெற இயலாத அரும்பெரும் சொத்தாகும். இதனை, ஒரு துறையில் ஒருவர் பெற்றிருக்கிறார் என்றால், அதற்குள் அவர் முதுமையையும் அடைந்திருப்பார். அதனாற்றான், ‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்ற பொன்மொழி தோன்றியது.
நாடகக் கலைத் துறையில் ஔவை தி.க.சண்முகம் அனுபவ ஞானத்தை முழுமையாகப் பெற்றுள்ளார். ஆறு வயதிலேயே நாடக மேடையில் நடிக்கத் தொடங்கி, இன்றுள்ள ஐம்பத்தாறு வயது வரைத் தொடர்ந்து அரை நூற்றாண்டு காலமாக நடித்து வருகின்றார்.கலைஞர் தி.க.சண்முகத்திற்கு நடிப்புக்கலை தந்தையிடமிருந்து பெற்ற பிதிரார்ஜித சொத்து. அவர் மட்டுமின்றி, அவருடைய முத்தண்ணாக்களான தி.க.சங்கரன், தி.க.முத்துசாமி ஆகியோரும் இளவலான தி.க.பகவதியும் நடிகர்களாவர். ‘மனோன்மணீயம்’ என்னும் உயர்ந்த நாடக நூலை இயற்றிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தி.க.சண்முகத்திற்கு மாமனார் முறையாவார்.
ஆம். கலைஞர் தி.க.சண்முகம் பல தலைமுறைகளாக நாடகக் கலைத் துறையில் ஈடுபட்டுள்ள குடும்பத்தைச் சார்ந்தவராதலால், அத்துறையில் அவர் பரிபூரண அனுபவம் பெற முடிந்திருக்கிறது. நடிப்பதனை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல் பெருந்தொண்டாகவும் கருதும் பண்பினை கலைஞர் சண்முகம் சகோதரர்களிடம் காணலாம்.
கலைஞர் தி.க.சண்முகம், நாடகக் கலையில் பெற்றுள்ள திறமையை மெச்சியும், அக்கலையின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றி வந்துள்ள தொண்டினைப் பாராட்டியும் மாநில சங்கீத நாடகச் சங்கமும், மத்திய சங்கீத நாடக அகாதெமியும் அவருக்குப் பரிசுகள் வழங்கியுள்ளன. அந்த இரு சங்கங்களில் அங்கம் வகிக்கும் பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இத்தகு சிறப்புக்களையெல்லாம் பெற்ற ஒரு நடிகர் ‘நாடகக்கலை’ பற்றி நூல் எழுதுகிறாரென்றால், அது முழுமை பெற்றதாக, தமிழ் இலக்கியக் களஞ்சியத்திற்கு ஒரு புது வரவாக இருக்குமென்பதில் ஐயமில்லையல்லவா?
‘நாடகக்கலை’ என்ற இந்நூல், கலைஞர் சண்முகம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பொழிவாகும். பட்டம் பெறாத ஒருவரை இதுபோன்ற வகுப்பறைச் சொற்பொழிவுக்கு அழைக்கும் மரபு நம் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகம் எதனிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. பல்கலைக் கழகங்கள் தான் அறிஞர்களைத் தோற்றுவிக்க முடியுமென்பது விதி. அதனை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், எதிலும் விதிக்கு விலக்கு உண்டல்லவா? அதுபோல, விதிக்கு விலக்காகவேனும் பல்கலைக் கழகத்திற்கு வெளியேயும் அறிஞர்கள் தோன்ற முடியும் என்பதனை சிண்டிகேட்டுகளும், செனட்டுகளும், துணை வேந்தர்களும் ஒப்புக் கொள்வதில்லை. நல்ல வேளையாக, நாடகத் துறையில் அனுபவம் பெற்ற முதியவர்களிலே பட்டதாரிகளாக இருப்பவர்கள் அரிதாதலால் தனது மரபுக்கு மாறாக கலைஞர் சண்முகத்தை அழைத்து ‘நாடகக் கலை’ பற்றிப் பேசச் செய்திருக்கிறது அண்ணாமலைப் பல்கலைக் கழகம். அதற்கொரு கும்பிடு!
நாடகக் கலையின் ஒரு நூற்றாண்டு வரலாறாக அமைந்துள்ளது இந்நூல். கலைஞர் சண்முகம் வரலாற்று ஆசிரியரல்ல. ஆயினும் ஒரு வரலாற்று ஆசிரியருக்கு இருக்க வேண்டிய விவேகமும் விசாலமான மனதும், விருப்பு வெறுப்பற்று விமர்சிக்கும் பண்பும், சுவையற்றதையும் சுவையுடையதாக்கும் எழுத்தாற்றலும் அவரிடம் இருப்பதனை இந்நூலில் கண்டு என் இதயம் பூரிப்படைகின்றது. அவர் என்னுடைய நண்பரல்லவா!
‘நாடகத்தில் பிரசாரம்’ என்ற பகுதியில் ‘கலை கலைக்காகவே’ என்ற கோஷத்திலுள்ள குறைபாட்டினை தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டி, கலை மக்களை வாழ்விக்கவும் பயன்பட வேண்டும், என்பதனை வலியுறுத்தி, நாடகத்திலே பிரசாரமும் கலந்தால்தான் அது சாத்தியமாகுமென்று கூறுகின்றார்.
நாடகக் கலையை, நடிப்பு, நாடக எழுத்து, பயிற்றுவிக்கும் ஆசிரியத் தன்மை, நடத்திவைக்கும் அமைப்பு (கம்பெனி) ஆகிய பல்வேறு கோணங்களில் நின்று விமர்சிக்கிறார் ஆசிரியர். அதனால், அளவால் சுருங்கியதாயினும், நாடகக் கலையை விமரிசிப்பதிலே முழுமை பெற்றதாக விளங்குகிறது இந்நூல்.
நாடகக் கலையின் சிறப்பை, அதனால் விளைந்து வரும் நற்பயன்களை எடுத்துரைக்கும் ஆசிரியர் ஆங்காங்கே தம்முடைய- தம் சகோதரர்களுடைய- தம் நடிகக் குழுவினருடைய-அனுபவங்களையும் வழங்கியுள்ளார்.
முன் தலைமுறையில் வாழ்ந்து மறைந்த, தன் தலைமுறையில் தம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நடிக நடிகையர்களின் பெயர்களையும்- அவர்கள் வாழ்க்கையில் சுவையுள்ள நிகழ்ச்சிகளையும் இந்நூலில் சேர்த்து, வருங்காலத் தலைமுறை நடிக- நடிகையர் அவர்களை மறந்துவிடாதிருக்க வழி செய்திருக்கிறார் ஆசிரியர் சண்முகம். இது, வளர்ந்து விட்டவர்களிடம் எளிதில் காண முடியாத உயர்ந்த பண்பாடு.
பொதுவாக, இந்நூல் நாடகக் கலையின் சரித்திர சாஸனம் எனலாம். பல்கலைக்கழகமொன்றில் நிகழ்த்திய சொற்பொழிவாக அமைந்திருக்கும் இந்நூலை, கல்லூரிகளில் பாடமாக்கினால், மாணவர்கள் பயன் பெறுவர். இது இலக்கியங்களோடு சேர்த்து எண்ணத்தக்க சிறந்த நூல் என்பதில் ஐயமில்லை.
இவ்வளவு சிறந்த ஒரு நூலில் என் பெயரும் இடம்பெறும் அளவில் நான் ஒரு நடிகனாக இல்லாமற் போனதற்கு ஏங்குகின்றேன். இந்நூலாசிரியர் இன்னும் பல நூல்களை எழுதி மேலும் மேலும் புகழ் பெறுவாராக!
ம.பொ.சிவஞானம்.
சென்னை-5.
(25-8-1967)
***
முன்னுரை
–தெ.பொ.மீனாட்சிசுந்தரன்
திரு. டி.கே.சண்முகம் அவர்கள் தமிழ்நாட்டில் தலைசிறந்த நடிகர்; இலக்கிய அறிவும் பெற்றவர். எனவே, இலக்கிய ஆராய்ச்சிக் கண்கொண்டும் நாடக அனுபவக் கண்கொண்டும் வரலாற்றுக் கண்கொண்டும் தமிழ் நாடகத்தைக் காணும் வாய்ப்பு அவருக்கு உண்டு. ஆதலால், நாடகக் கலையினைப் பற்றிச் சென்ற ஆண்டே சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவரை அழைத்திருந்தது. உடல் நலம் இன்மையால் அந்த ஆண்டே அவர் வரமுடியாமல் போய்விட்டது. காலம் தாழ்த்ததில் ஆழ்ந்து எண்ணவும், பரந்து ஆராயவும் இடம் ஏற்பட்டது எனலாம்.
அவர் இந்த ஆண்டு அக்டோபர் திங்கள் 27, 28, 29-ஆம் நாட்களில் திரு. சீநிவாச சாத்திரியார் மண்டபத்தில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றினார். எல்லோரும் அச்சொற்பொழிவுகளில் ஈடுபட்டுப் பாராட்டினர். தமிழ் இலக்கிய வரலாற்றுக்குப் பெரிதும் உதவும் என்ற கருத்தில் இச்சொற்பொழிவுகளைப் பல்கலைக் கழகம் வெளியிடுகிறது. இத்தகைய நூல் தமிழில் இல்லாத குறையை இவ்வெளியீடு போக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க சண்முகனார்! வாழ்க நாடகம்! வாழ்க தமிழ்!
தெ.பொ.மீனாட்சிசுந்தரன்,
தமிழ் கலைத் துறைத் தலைவர்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,
14-12-1959.
.
(தொடர்கிறது)
$$$
2 thoughts on “நாடகக் கலை – அணிந்துரையும் முன்னுரையும்”